எங்கள் ஊர் திருவிழா
1/09/2010 | Author: ஜெயந்தி
திண்டுக்கல்லில் மாசி மாதம் மாரியம்மன் திருவிழா வரும். அந்த ஊரின் பெரிய திருவிழா. திருவிழா சாட்டிவிட்டார்கள் என்றால் ஊரே மகிழ்ச்சியாகிவிடும். பூச்சொறிதலுடன் திருவிழா தொடங்கும். பூச்சொறிதல் என்றால் பூக்களாலேயே அலங்கரிக்கப்பட்ட தேர் வரும். அன்று பல வண்ண பூக்கள் உதறியாக கவர்களில் அடைக்கப்பட்டு விற்கும். மக்கள் ஒவ்வொருவரும் அதை வாங்கி தேரின் பின்னால் வரும் லாரியில் போடுவார்கள். அன்று மாலை கோவிலுக்குச் சென்றால் மூலஷ்தானத்தில் அம்மன் சிலையின் கழுத்து பாகம் வரை பூ கொட்டப்பட்டிருக்கும். கோவிலுக்குச் செல்வோர் அனைவருக்கும் பூ கொடுப்பார்கள்.




கோவிலின் முன்னால் பெரிய மைதானம் இருக்கும். திருவிழா காலங்களில் அந்த மைதானத்தில் மனித தலைகாளாகவே இருக்கும். கோவிலைச் சுற்றி வளையல், பாசிமணி கடைகள், பொம்மைக்கடைகள் என்று ஏகப்பட்ட கடைகள் போடப்பட்டிருக்கும். ஜெயின்ட் வீல் போன்ற ராட்டினங்களும் இருக்கும்.

திருவிழாவிற்கு தினமும் ஒரு கலை நிகழ்ச்சி இருக்கும். எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டுக் கச்சேரி அவசியம் இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் கச்சேரியும் சில சமயம் இருக்கும். எல்.ஆர் ஈஸ்வரி தனியாக நடத்தும் கச்சேரிகளில் ஆடிக்கொண்டே பாடுவார். எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் பாடும்போது அமைதியாக பாடுவார். மனோரமா, அவரது மகன் பூபதி கூட ஒருமுறை நிகழ்ச்சி வழங்கினார்கள்.
தேர் அலங்காரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் மண்டகப்படி நடக்கும். கடைசி நாளுக்கு முந்தைய நாள் அங்குவிலாஸ் மண்டகப்படி நடக்கும். அன்று தேர் அலங்காரம் மிகவும் பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக இருக்கும். அதைப்பார்க்க சுற்றி உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் சாப்பாடு கட்டிக்கொண்டு, வண்டி கட்டிக்கொண்டு வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள். அன்று இரவெல்லாம் மக்கள் தேர் எந்தத் தெருவில் வருகிறது என்று விசாரிப்பதும் அந்த தெருவை நோக்கிச் செல்வதும் நடக்கும்.

ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் சாட்டு மாவிளக்கு போட வேண்டும். அந்த மாவிளக்கை தேங்காயுடன் சாப்பிட தனி ருசியாக இருக்கும். திருவிழாவில் மணி, வளையல் எல்லாம் எங்களுக்கு வாங்கித் தரப்படும். எங்கள் வீடும் எங்கள் பின்புறம் உள்ள குடும்பமும் சேர்ந்துதான் திருவிழாவிற்குச் செல்வோம். அந்த வீட்டில் உள்ள லட்சுமி என் தோழி. அவளுக்கு அந்த ஜெயின்ட் வீலில் சுற்றுவதென்றால் மிகவும் பிடிக்கும். எனக்கோ அதைப்பார்த்தாலே தலைசுற்றும். லட்சுமியின் அம்மா, அப்பா பக்கத்தில் உள்ள கிராமத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டு அங்கேயே இருந்தார்கள். அதனால் லட்சுமி திணடுக்கல்லில் அண்ணன் வீட்டில் இருந்து படித்து வந்தாள். திருவிழாவிற்குச் சென்றால் அவசியம் ஜெயின்ட் வீலில் லட்சுமிக்கு ஏற வேண்டும். என்னிடம் மெல்ல ஆரம்பிப்பால், "ஜெயந்தி ஜெயின்ட் வீலில் சுற்றலாம்."

நான்: "அய்யய்யோ. நான் வர மாட்டேன்பா. எனக்கு பயம்."
லட்சுமி: "நான் உன்னய கெட்டியா புடிச்சுக்கறேன். நீ என் மடியில படுத்துக்கோ"
நான்: "நான் வரல"
லட்சுமி: "ப்ளீஸ்ப்பா, நீ வந்தாத்தான் என் அண்ணி என்னைய அனுப்புவாங்க. வாப்பா"

அதுக்கப்புறம் மறுக்க முடியாது. சுற்றிவிட்டு கீழே இறங்கியவுடன்

நான்: "இங்க பாரு என் கைய நடுங்குது. நெஞ்சு பாரு எப்புடி அடிக்குதுன்னு. அடுத்த வருஷம் நான் வர மாட்டேன். என்னைய கூப்புடாத"
லட்சுமி: "சரி!"
ஒவ்வொரு வருடம் திருவிழாவிலுல் இதே டயலாக் பேசப்படும்.