ரத்னா ஸ்டோர்சும் நானும்
4/27/2011 | Author: ஜெயந்தி

நேற்று தனியாக டிநகர் சென்றிருந்தேன். எப்போதும் வீட்டிலிருந்து யாராவது உடன் வருவார்கள். நேற்று அனைவருக்கும் ஏதோ காரணத்திற்காக வரமுடியாத சூழ்நிலை. சரி நம்மளே போயிட்டு வந்திரலாம்னு போயிட்டேன்.

வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள் கொஞ்சம் வாங்க வேண்டி இருந்தது. ரங்கநாதன் தெருவில் உள்ள ரத்னா ஸ்டோருக்குச் சென்றேன். நாங்க எப்பவும் அங்கேதான் பாத்திரங்கள் வாங்குவோம். கையில் ஒரு கட்டை பேக். வாங்க வேண்டியசாமான்களுக்கான லிஸ்ட். மணிபர்ஸ் எல்லாம் இருந்தன. லிஸ்ட்டைப் பார்த்து ஒவ்வொரு சாமானாக பார்த்து எடுத்துக்கொண்டிருந்தேன். தேவையான அளவு, பார்க்க நன்றாக இருக்கிறதா என்று தேடித்தேடி வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு கடையில் உள்ள ஒரு பெரியவர் உதவி செய்தார். அவரும் நானுமாக தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி முடித்தாயிற்று. இன்னொரு பொருள் நான்காவது மாடியில்தான் இருக்கிறது என்றார். நானும் நான்காவது மாடிக்குச் சென்றேன். அங்கே பொருளை வாங்கிவிட்டு பர்சைப் பார்த்தேன். கையில் பர்ஸ் இல்லை.

எங்கேயோ விட்டுவிட்டேன் என்பது புரிந்தது. பாத்திரங்கள் வாங்கிய இடத்தில்தான் விட்டிருக்க வேண்டும். நான்காவது மாடிக்கு வரும்போதே கையில் பர்ஸ் இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே கீழ் தளத்திற்குச் சென்றேன். அந்தப் பெரியவரைப் பார்த்து என்னுடைய பர்ஸ் தொலைந்துவிட்டது என்றேன். அவரும் நானும் நாங்கள் பாத்திரங்கள் எடுத்த இடத்தில் எல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. பெரியவர் தேடும்போதே சொல்லிக்கொண்டே வந்தார் "ஏம்மா பர்செல்லாம் பத்திரமா வச்சிக்க வேண்டாமா? இங்க எவ்வளவுபேர் வந்துபோற எடம். எங்கயாவது விழுந்திருந்தா யார் எடுத்தாங்கன்னு தெரியும். இவ்வளவு பேர் வந்துபோற எடத்துல பர்ஸ் விழுந்திருந்தா அங்கயே இருக்குமா? பாத்து வச்சுக்க வேண்டாமா" என்று திட்டிக்கொண்டே வந்தார்.



அவர் சொல்வது உண்மைதானே. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். தவறு என்னுடையதே. பர்சைத் தொலைத்த குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், வாங்கிய பாத்திரங்களுக்கு கொடுக்க காசு இல்லை. இதை வாங்க இன்னொரு முறை வரவேண்டும் என்றெல்லாம் மனதில் ஓடியது. இதையெல்லாம்விட முக்கிய பிரச்சனை பஸ்சுக்கு கையில் காசு இல்லை. சரி ஒரு ஆட்டோ பிடித்துப் போய் வீட்டில் இருந்து காசு எடுத்துக்கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். பர்சு தொலைத்தது ஒரு பக்கமுன்னா ஆட்டோ செலவு ஒரு பக்கமான்னு ஓடியது. சரி என்ன பண்றது தப்பு பண்ணியாச்சு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும்.

திரும்பவும் அடுத்த ரவுண்டு வரத் துவங்கினோம். பில்லை வாங்கிக்கொண்டு பாத்திரங்கள் கொடுக்கும் பகுதியில் இருந்த ஒருவரிடமும் பர்சு தொலைந்த விஷயத்தை சொன்னோம். அவர் அங்கு வேலை செய்யும் மற்றவர்களிடமும் கேட்கச் சொன்னார். இன்னும் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து தேடினார். அங்குள்ளவர்களிடமும் கேட்டுக்கொண்டே தேடினோம். ம்ஹும் எங்கும் இல்லை. பெரியவர் சொன்னார் நாலாவது மாடியில ஒருமுறை பாத்திருங்க என்றார். சரி அங்க ஒருமுறை பாத்துட்டு வீடுபோய்ச் சேர வேண்டியதுதான்னு கெளம்பி லிஃப்டு இருக்கும் இடத்தின் அருகே சென்றேன். "இங்க வாங்க"  என்று பெரியவர் அழைத்தார். "கேஷ் கவுண்டர்ல ஒரு பர்சு இருக்காம். உங்களுதா பாருங்க"  என்றார். கேஷ் கவுண்டர் சென்றேன். அங்கே இருந்தவர் உங்க பர்சு அடையாளம் சொல்லுங்க என்றார். என் பர்சு அடையாளத்தைச் சொன்னதும் என் பர்சை எடுத்து என் கையில் கொடுத்தார். அந்த நிமிடம் எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கள். என் கண்களில் கண்ணீர் அது பாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது. வாய் அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தது. எங்க கடையில வேலை பாக்குறவங்க கையில கெடச்சா கஷ்டமருக்கு கெடச்சுரும். வேற யாராவது எடுத்துருந்தா எங்களால ஒன்னும் செய்ய முடியாது என்றார் பெரியவர். அங்காடித் தெரு படத்தில் வரும் ஒரு வசனம் ஞாபத்திற்கு வந்தது யானை இருக்கும் காட்டில்தான் எறும்பும் இருக்கிறது. ஊழல் பேர்வழிகள் இருக்கும் நாட்டில்தான் இவர்களைப்போன்றவர்களும் இருக்கிறார்கள்.

கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை எடுத்து தன் பையில் போட்டுக்கொள்வதையே பார்த்துப்பார்த்து நொந்து போயிந்து கண்களுக்கு இந்த மனிதர்களைப் பார்த்ததும் கண்கணில் தாரைதாரையாக நீர் ஓடியது. அடுத்த நாள் செலவுகளை சமாளிக்க அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் போராட்டம் நடந்துகொண்டு இருக்கும். ஆனாலும் அடுத்தவர்கள் காசுக்கு ஆசைப்படாமல் இருக்கும் இந்த மனிதர்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இது நடந்தவுடன் இன்னொரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. நாங்கள் சென்னை வந்த புதிது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரும் எங்கள் குடும்பத்தினரும் கோல்டன் பீச் சென்றோம். அங்கே ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் ஊஞ்சள் இருந்தது. பிள்ளைகள் ஆடத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம். பிள்ளைகள் விளையாடி முடித்ததும் கிளம்பிவிட்டோம். தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்த இடத்திலேயே பர்சை வைத்துவிட்டு வந்துவிட்டார். நாங்கள் ஒரு பத்து நிமிடநேரம் நடந்திருப்போம். அவருக்கு பர்ஸ் மிஸ்சானது தெரிந்துவிட்டது. வந்தவழியே திரும்பி பார்த்துக்கொண்டே சென்றோம். எங்கே அவர் பர்சை வைத்தாரோ அதே இடத்தில் அப்படியே இருந்து. எவ்வளவுபேர் வந்துபோகின்ற இடம்.

நேற்று இன்னொரு சந்தோஷமான நிகழ்ச்சி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு வேலூர் கலைச்செல்வியைப் பார்த்தேன். அவங்க பர்சேஸ் முடித்து திரும்பிக்கொண்டிருந்தார்கள். நான் அப்போதுதான் உள்ளே நுழைந்தேன். எதிர் எதிரே பார்த்துக்கொண்டதும் சந்தோஷம் பொங்கியது. ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். 7ம் தேதி திவ்யா கல்யாணத்துல மீதிய பேசலாம்னு சொன்னார். கல்யாணத்துக்கு ஆனந்த், பப்லு எல்லாம் வர்ராங்களாம் என்றார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அறிவொளி இயக்கம் டீம் ஒன்னு கூடப்போகுதுன்னு நினைக்கிறேன்.