புத்தாண்டு வாழ்துக்கள்!
12/31/2009 | Author: ஜெயந்தி
உலக மக்கள் அனைவருக்கும் வரும் ஆண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்.











வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு விஞ்ஞானி.பரம்பரை நோய்களையும் தீர்க்கக்கூடிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர். இவரைப் பற்றி ஆனந்த விகடனில் போட்டிருந்த செய்தி 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் அநாதைகளான  முஸ்லிம் சிறுவர்களில் சிலரை நண்பர்களின் உதவியுடன் படிக்க வைத்துக்கொண்டிருப்பதாக படித்தபோது அவர் மீதான மரியாதை கூடியது. அவர் நோபல் பரிசை அறிவித்தவுடன் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், 'என்னைப்போலவே இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனக்கு தந்தது ஆச்சரியமாக இருக்கிறது' என்று அவர் தன்னடக்கத்துடன் சொன்னதைக் கேட்டபோது மரியாதை ஏற்பட்டது.





இப்போது சென்னை வந்திருந்தபோது அரசாங்கம் அழைத்தால் இங்குள்ள மாணவர்களுக்கு நான் பாடம் எடுக்கத்தயார் என்று கூறுவதை டிவியில் பார்த்தேன்.

இங்குள்ளவர்கள் அவரைப்பற்றி என்னென்ன திட்டினார்கள்? அவர் இந்தியரா? அவர் தமிழரா? அவர் மனிதரா? நமக்கு திட்டுவதற்கு யாராவது கிடைத்தால் போதும் நாமெல்லாம் அடுத்தவரைத் திட்டுவதற்காகவே பிறந்ததுபோல் திட்டித்தீர்ப்போம்.

நோபல் பரிசு அறிவித்தவுடன் மெயில் நிறைய வந்ததால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை அவர் கூறியவுடன் நமக்கெல்லாம் கோபம் வந்துவிட்டது. உண்மையை ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கானவர்களில் ஆயிரக்கணக்கில் கூட வேணாம், நூற்றுக்கணக்கானவர்கள் மெயில் பண்ணியிருந்தாலும் போதும். என்ன நடந்திருக்கும்? ஒரு மனிதன் அந்த மெயில்களால் தனக்கு நேர்ந்த கஷ்டத்தைக்கூட சொல்லக்கூடாது. அவரைப் பொறுத்தவரை ஸ்டெயிட் பார்வேர்ட் ஆன ஆள். மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிடுபவர். நோபல் பரிசுக்காக ஆராய்ச்சிப் படிப்புக்கு வராதீங்க! சயின்சில் ஆர்வம் இருந்தால் வாங்க என்று இளைஞர்களை அவர் அழைத்துள்ளார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
கோயம்புத்தூர் பயணம்
12/23/2009 | Author: ஜெயந்தி
ஏனுங் என்னய தொலாவுனீங்களா?

நான் வந்துட்டேனுங்.



அப்பா மூணு நாளு சூறாவளி சுற்றுப்பயணம் மாதிரி சுத்தியாச்சு. பனிக்காத்துல சுத்துனதுனால இங்க வந்தவுடனே ஜுரத்திலயிலும் விழுந்து எந்திரிச்சாச்சு. போன திங்கள் செவ்வாய் சென்னையில் நல்ல மழை என்று பிள்ளைகள் போனில் சொன்னார்கள். கோவை வெறும் மேக மூட்டம் மட்டுமே.



கோவையில் ஒரு நாள் பொள்ளாச்சி பக்கத்தில் கிராமங்களில் இரண்டு நாள். கணவரது உறவுகள். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை போகிற ரோடில் இருக்கும் சில கிராமங்களுக்கு சென்று வந்தோம். எங்களைப் பார்த்ததும் அந்த மக்கள் கண்களில்தான் எவ்வளவு சந்தோஷம். ரெண்டு ஏக்கர் மூணு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு நிலத்திற்கு நடுவில் வீடு கட்டிக்கொண்டு வருஷமெல்லாம் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த தலைமுறையில்தான் ஒன்றிரண்டு பிள்ளைகள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு மற்ற ஊர்களுக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார்கள்.



அந்த கிராமங்களில் வெயில் காலத்தில்கூட வேர்க்காது. காற்று வேறு அடித்துக்கொண்டே இருக்கும். இப்போது ஊருக்குப் போனபோது சுஸ்லான் காற்றாலைகளை பார்க்க முடிந்தது.



இந்த கிராமத்திற்குச் செல்வதென்றாலே சந்தோஷமாகிவிடும். முக்கால்வாசி தென்னந்தோப்பு. கொஞ்சம் மற்ற பயிர்களும் வைத்திருப்பார்கள். உறவினர் ஒருவரின் தயவில் காரிலேயே எல்லா ஊர்களுக்கும் சென்று திரும்பும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இல்லாவிட்டால் எல்லோரையும் பார்ப்பது மிகவும் சிரமமாகியிருக்கும். என்ன சொல்ல கோயமுத்தூர் பயபுள்ளைகளும் பாசக்கார பயபுள்ளைங்கதான்.



ஒரு ஊருக்குச் செல்லும்போது இரவு நேரம். தோட்டத்திற்கு நடுவில் வீடுகட்டிக்கொண்டு இருப்பதால் தெரு விளக்கு இருக்காது. நடு ரோட்டில் ஒரு ஆந்தை கார் வெளிச்சத்தைப் பார்த்து செய்வதறியாமல் அமர்ந்திருந்தது. உடனே காரை நிறுத்திவிட்டு லைட்டை ஆப் பண்ணி போட்டவுடன் அந்த ஆந்தையைக் காணவில்லை.



ஒரு வீட்டிற்குச் செல்லும் போது வரப்பில் புல் பிடுங்கி ஒரு ஓரம் கிடந்தது. அதன் அருகிலேயே கடப்பாரை ஒன்று மண்ணில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டிற்குச் சென்றவுடன் அவர்கள் கேட்ட கேள்வி "ஏனுங் வழியில ஆணி கெடந்துச்சுங்" "ஆணியெல்லாம் ஒன்னுமில்ல. ஒரு கடப்பாரைதான் இருந்துச்சு" "சின்ன ஆணிகூட கெடந்துச்சுங் அதுலதான் மாடு கட்டி வச்சிருந்தோம் " ஆணியில மாடு கட்டுறதா? என்னான்னு பார்த்தா அது கடப்பாரையில பாதியளவு இருக்கு. கடப்பாரை ஆணின்னா, ஆணிய என்னான்னு சொல்லுவாங்க.
தமிழ் மணம் அவார்ட்
12/11/2009 | Author: ஜெயந்தி

தமிழ் மணம் விருதுகளுக்கு எனது படைப்புகளை பரிந்துரை செய்திருக்கிறேன். எவ்வளவு தைரியம் உனக்கு, என்ன கிழித்துவிட்டாய் என்று பரிந்துரை செய்திருக்கிறாய் என்று கேட்கிறீர்களா?

ஏங்க இப்டியெல்லாம் யோசித்திருந்தா நானெல்லாம் ப்ளாக்கே ஆரம்பித்திருக்க கூடாதே. சரி விடுங்க ஏதோ அசட்டு தைரியம்.

மத்தவங்கள்ளாம் ரஜனி, கமல்-ன்னா நான் ஒரு சிம்பு, தனுஷ் அப்படிப் பார்க்காதீங்க, சரி சரி ஒரு ஜே.கே.ரித்தீஷ் மாதிரி இருந்துவிட்டுப் போகிறேனே. விட்டுட்டுப் போவீங்களா அதுக்குன்னு ஒரு பச்சப் புள்ளயப் போயி இப்டி ஆளாளுக்கு பேசுனா எப்புடி.

XXXXXXXXXXXXXX

நாளை கணவரும் நானும் கோவை செல்ல இருக்கிறோம். அதன் காரணமாக கம்பேனிக்கு அடுத்தவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஏம்மா எப்போ பாத்தாலும் ஒரே மாதிரி சமையல் பண்ணுறியே கொஞ்சம் மாத்தி ஏதாவது பண்ணேன்" என்ற பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு எடுத்த அதிரடி முயற்சி. டிவியில் தான் எல்லாச் சேனலிலும் சமையல் சொல்லித்தருகிறார்களே. ஒரு ஞாயிற்றுக்கிழமை சிக்கன் மஞ்சூரியன் செய்வது என்று கம்பேனியில் முடிவானது. அடுத்து அதற்கு தேவையான பொருட்களை சேகரிக்கும் பணி. அது என்ன பொருட்களை சேகரிக்கும் பணி என்று தனியாக ஒரு வேலை போல் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? நம்மூர் சமையலுக்கு அதிகபட்சமாக இஞ்சி, புதினா, கறிவேப்பிளை கொத்தமல்லி போன்றவைதான் உடனடித்தேவையாக இருக்கும். சிக்கன் மஞ்சூரியனுக்கு நாம் சும்மா வேடிக்கை மட்டுமே பார்க்கும் குடை மிளகாய், வெங்காயத் தாள் போன்றவை. இன்னும் கேள்வியே பட்டிறாத சோயா சாஸ் போன்றவை. ஓரளவு எல்லாவற்றையும் சேகரித்தாகிவிட்டது. இந்த சோயா சாஸ் மட்டும் பக்கத்துக்கடையில் கிடைக்கவில்லை. கணவர் மெயின் ரோடுக்கு அனுப்பப்பட்டார். இரண்டு மூன்று கடைகளில் தேடிவிட்டு போன் வந்தது சோயா சாஸ் கிடைக்கவில்லை என்று. "இங்க பாருங்க அது இல்லாம இந்த டிஷ் நல்லா இருக்காது" போனிலேயே முகமும் தெரிந்துவிட்டது போலும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கடைசியாக நீல்கிரீஸ் கடையில் இருந்து அப்படா என்று வாங்கி வந்தார்.

அது எந்த அளவில் கிடைக்கும் என்று தெரியாததால் சின்ன அளவில் கிடைப்பதை வாங்கி வரும்படி சொல்லி அனுப்பினேன். வாங்கி வந்த பாட்டில் பெரிதாக இருந்தது. (350 மிலி)

"சின்னதுதான வாங்கிட்டு வரச்சொன்னேன்".
"இதுதான் சின்னதாம்".
"எத்தனை ரூபா"
"நாப்பது ரூபா". பக்கத்தில் அம்மா பார்ப்பது தெரிந்தது. நாம ஏன் அந்தப் பக்கம் திரும்பப் போறோம். நமக்குத்தான் தெரியுமே அதன் அர்த்தம் 'இவ்வளவு காசு குடுத்து அத வாங்கனுமா?' என்று.

ஒருவழியாக சமையல் செய்து முடித்து சாப்பிட அமர்ந்தோம்.
"எப்டி இருக்கு?" - நான்
".........." கணவர் (எதுக்கு வம்பு)
"ம் இருக்கு. இதுல சிக்கன் போடம காய் போட்டுருந்தா நல்லாயிருக்கும்" -அம்மா
"நல்லா இருக்கு" -பிள்ளைகள்
பிள்ளைகள் கடையில் இதெல்லாம் சாப்பிடுவார்கள் என்பதால் நம் அடுத்த கேள்வி
"கடையில மாதிரியே இருக்கா?"
"ம் கடையில மாதிரிதான் இருக்கு" -பிள்ளைகள்
நல்ல வேளை சமையல் செஞ்சவங்களையே யாரும் கேட்க மாட்டாங்களே? நாம் தப்பித்தோம். அந்த குடை மிளகாய் வாடை சிக்கன் சாப்பிடும் திருப்தியையே தரவில்லலை. தேவையில்லாமல் எப்போதும் செய்யும் சிக்கன் வறுவல், பெப்பர் ப்ரை, சிக்கன் 65 எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.

சரி இந்த சோயா சாஸ் பாட்டிலில் அப்படியே இருக்கிறதே? சிக்கன் மஞ்சூரியனுக்கு இரண்டு ஸ்பூன்தான் செலவாகியது. அடுத்து வெஜிடபிள் ப்ஃரைடு ரைஸ் செய்வது என்று கம்பேனியில் (வேறு யார் நான் மட்டும்தான்) முடிவு செய்யப்பட்டது. ப்ஃரைடு ரைஸ்சை சாப்பிடும் போது இந்த முறை நினைவிற்கு வந்தது வெஜிடபிள் பிரியாணி, தேங்காய்பால் சாதம் with மட்டன் or சிக்கன் குழம்பு. இதற்கும் இரண்டு ஸ்பூன் மட்டுமே செலவானது.

சோயா சாஸ் பாட்டிலை பார்க்கும்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் தோன்றும். முதலாவது பாட்டிலில் மீதம் இருப்பதை என்ன செய்வது? நம்மூர் சமையலில் இதை உபயோகிக்க முடியுமா? யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் ப்ளீஸ் சொல்லுங்கள். இரண்டாவது அம்மாவிடமிருந்து இன்னும் கொஞ்சம் நாட்களில் வரப்போகும் வசனம் "சாப்புட வேண்டியதுதான், நான் வேண்டாம்னு சொல்லல. ஒவ்வொரு காசையும் எப்டி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். இப்புடி வீணாக்கணுமா?"

டிஸ்கி: எழுதி முடிச்சுட்டு பார்த்தா சேம் சைடு கோல் போல தெரியுது. இதுதான் சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிறதா?
போபால்
12/04/2009 | Author: ஜெயந்தி

நேற்று போபால் விஷ வாயு தாக்கிய நாள். ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான நாள். லட்சக்கணக்கான மக்கள் இன்னும் அதன் பாதிப்புகளுடனேயே வாழ்கிறார்களாம். குழந்தைகளும் ஊனத்துடனேயே பிறக்கிறதாம். அங்குள்ள நிலத்தடி நீர் மாசுபட்டுவிட்டது. இதற்கான வழக்கு இன்னும் நடக்கிறதாம். அப்படியே நிதியுதவி கிடைத்தாலும் 1200 ரூபாய் மட்டுமே கிடைக்குமாம். விஷ வாயு தாக்கியதில் இருந்து அனைத்து தேசியக் கட்சிகளும் ஆட்சி செய்துவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர. அந்த மக்கள் இந்த நிதியையும் ஆண்ட தேசியக்கட்சிகள் அனைத்திற்கும் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். அவர்கள் அப்போதாவது வெட்கப்படுவார்களா என்று தெரியவில்லை?

இதெல்லாம் நம் நாட்டிற்குள்ளேதான் நடந்தது. இன்னும் அதற்கான தீர்வு கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளும் அரசியல் நடத்திக்கொண்தான் இருக்கிறார்கள். யாருக்காக நடத்துகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. உள் நாட்டுக்குள்ளேயே இந்த நிலை. இதில் பக்கத்து நாட்டில் வாழும் நம் இன மக்களை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நாம் நினைப்பது...

XXXXXXXXXX

மழை

உழவன் முதல் கிழவன் வரை திட்டியதால்
கோபம் கொண்டு பெய்து தீர்த்தது
ஊரே வெள்ளக் காடாய் மாறியது.

பெரிசு முதல் சிரிசு வரை திட்டியதால்
மறுபடியும் கோபம் கொண்டு
நான்கு வருடத்திற்கு வரவேயில்லை.

எப்படி அழைத்தால் இந்த மழை
தேவையான அளவிற்கு மட்டுமே பெய்யும்!

இதை கவிதை என்று நீங்கள் நினைத்துக்கொண்டு படித்தால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல.
ரங்கமணியின் அட்டூழியம்
12/02/2009 | Author: ஜெயந்தி

எதிர் பதிவு
பொதுவா எங்க வீட்டுல ஆட்டோவுல வெளிய போற பழக்கமில்லை. மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே ஆட்டோ பயணம் மேற்கொள்ளப்படும். அந்த அவசியம் தீபாவளிக்கு முன் ஏற்பட்டது. பையனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. கூடவே உடல் வலியும். கணவரை ஆட்டோவை அழைத்துவர அனுப்பினேன். அவரும் அழைத்து வந்தார். எங்கள் வீட்டில் இருந்து கிளினிக் செல்ல 20 ரூபாய் ஆகும். அடித்துப் பேசும் ஆட்டோ டிரைவர்களிடம் மாட்டினால் 25, 30 வரை கொண்டுபோய்விடுவார்கள்.

"எவ்வளவு ஆட்டோவுக்கு பேசியிருக்கீங்க?"
"ஐம்பது ரூபா"
"என்னது ஐம்பது ரூபாயா? என்னங்க முப்பது ரூபாகூட ஆகாது. நீங்க என்ன ஐம்பது ரூபாக்கு பேசியிருக்கீங்க"
"அவன் ரோட்டுல இருந்து வந்ததுக்கும் சேர்த்து கேட்குறான்."


எனக்குத் தெரிஞ்சு எங்காவது லாங்கா போகும்போதுதான் ஆட்டோ டிரைவருங்க ரிட்டன் வரும் போது சவாரி கிடைக்கலேன்னா என்ன பண்றதுன்னு கூடுதலாக கேட்பார்கள்.

அடுத்த வாரம் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதோடு ஒவ்வொரு ஜாயிண்டுக்கும் சொல்ல முடியாத வலி. கிளினிக்குக்கு நடந்து போகவே முடியாது. வேறு வழியே இல்லை கணவரை ஆட்டோ அழைத்துவர அனுப்பினேன். முப்பது ரூபாதான் இங்கயிருந்து என்று சொல்லி அனுப்பினேன்.

ஆட்டோ வந்தது. "எவ்வளவு பேசியிருக்கீங்க?"
"ஐம்பது ரூபா"

ஜுர வேகம் ஒருபுறம் வலி ஒருபுறம் சண்டைபோடும் நிலையில் இல்லை. ஜுரம் மட்டும் இரண்டு டிகிரி அதிகமாகிவிட்டது.

இரண்டு வாரம் கழித்து அம்மாவுக்கு ஜுரம் வந்துவிட்டது (தொடர் பதிவு மாதிரி, இது தொடர் ஜுரம்). இப்போது ஆட்டோ அழைக்க நானே சென்றுவிட்டேன். இப்போதுதான் கிளைமாக்ஸ்.

ஆட்டோ டிரைவரிடம் "ஏங்க மோகன் டாக்டர் கிளினிக்கு போகனும் எவ்வளவு?"
"ஐம்பது ரூபாங்க" இது ஆட்டோ டிரைவர்.
"என்னங்க இங்கயிருந்து இருபது ரூபாதான நீங்க என்ன ஐம்பது ரூபா கேக்குறீங்க?"
"ஏங்க நீங்களே ஐம்பது ரூபா குடுத்து வந்திருக்கீங்களே? இப்ப இப்டி கேக்குறீங்க?"
ஆஹா அவனா நீயி?
"ஏங்க எங்க வீட்டுக்காரர் அவசரத்துல கூட்டிட்டு வந்துட்டாரு."
"அவருக்குத்தான் எங்க கஷ்டம் தெரியுது"
"இப்ப முப்பது ரூபாய்க்கு வர முடியுமா? முடியாதா?"
"சரி வாங்க" என்றவாறே ஆட்டோவை கிளப்பினார்.