சந்தன முல்லை என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்த தலைப்பு இது.

5-ம் வகுப்பு வரை படித்தது திண்டுக்கல் பக்கத்தில் கிராமம். அங்க எப்படின்னா ஐந்து வகுப்புக்கும் சேர்த்து 2 ஆசிரியரே இருப்பார். 1, 2, 3 வகுப்புக்கு ஒரு வாத்தியார். 4, 5ம் வகுப்புக்கு ஒரு வாத்தியார். ஏன்னா இது பெரிய கிளாஸ்னால பாடம் அதிகமா இருக்கும்னு ரெண்டு வகுப்பு. 1,2,3 வகுப்புப் பக்கம் ஒரே போர்க்களம் மாதிரி ஹோன்னு சத்தம் கேட்கும். சின்ன வகுப்புன்றதால பிள்ளங்க அடங்க மாட்டாங்க. 4,5 பிள்ளைங்க வாத்தியார் இருந்தா அமைதியா இருப்பாங்க.

5-ம் வகுப்பு முடிச்சுட்டா பக்கத்து ஊருல ஹை-ஸ்கூல் இருக்கும். ஒரு 4,5 கிலோ மீட்டர் நடந்து போய் படிக்கணும். பெரும்பாலும் பெண் பிள்ளைகள் 5ம் வகுப்போடு நிறுத்தப்படுவார்கள். நான் 5ம் வகுப்பு முடித்தவுடன் குடும்பச் சூழல் காரணமா திண்டுக்கல் இடம் பெயர்ந்தோம். அங்க சென்-ஜோசப்ஸ் ஸ்கூல்ல எங்க மாமா என்ன சேத்துவிட்டுட்டாரு. காதல் படத்துல வருமே ஒரு ஸ்கூல் அதுதான். மதுரைன்னு சொல்லிக்கிட்டு திண்டுக்கல்லதான் எடுத்திருக்காங்க.

ஒரு வாரம் லேட்டாக சேர்க்கப்பட்டேன். அன்று வகுப்பிற்கு போய் முதல் பீரியடோ இரண்டாவது பீரியடோ இங்கிலீஸ். அங்க போயித்தான் பீரியட்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இங்கிலீஸ்ல ஏ,பி,சி,டி மட்டுமே தெரியும். அதுவும் கேப்பிடல் மட்டும். தமிழ் படிக்கத் தெரியும் (எங்க அம்மா புண்ணியத்தில்)



ஒரு வாரத்துல ஒரு பாடம் இங்கிலீசுல நடத்திட்டாங்க போல. அன்னிக்கி டிக்டேசன் நடக்குது. எல்லாரும் டீச்சர் சொல்லச் சொல்ல அந்த வார்த்தைகள எழுதறாங்க. நான் மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்குறேன். எனக்கு வலது பக்கம் உள்ள பெண் என்னை இடித்து சைகையால் எனக்கு இடது பக்கம் எழுதும் பெண்ணை பார்த்து எழுதச் சொல்கிறாள். ஏன்னா அவளும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருந்தாள். நானும் திரும்பிப் பார்த்தேன். அவள் எழுதியிருக்கும் எழுத்து எந்த லாங்குவேஜ்ன்னே தெரியல. அவ ஸ்மால் ஏ,பி,சி,டி-யில் எழுதிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த எழுத்தையே பார்க்கிறேன். என்னால் பார்த்துக்கூட எழுத முடியவில்லை. கடைசி வரை ஒரு வார்த்தைகூட எழுதல.

அடுத்த அதிர்ச்சி இங்கிலீஸ் புத்தகம் கிட்டத்தட்ட 8-10 பாடம் + போயம் + கிராமர்னு புத்தகம் ஒரு நாவல் சைஸ்ல இருக்கு. ஏ,பி,சி,டி மட்டுமே தெரிந்த எனக்கு அந்த புத்தகத்த எப்படி படிக்க முடியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எனக்கு இன்னிக்கும் ஒரு வரி இங்கிலீஸ்ல ஏதாவது மெயிலோ ஏதோ வந்துருச்சுன்னா பயந்துருவேன். தமிழ் படிச்சு எப்படியும் பாஸ் பண்ணிருவேன். அது எப்படின்னே தெரியல இந்த கணக்கு மட்டும் எனக்கு கொஞ்சம் வந்துருச்சு. இந்த கணம், அல்ஜீப்ரா, க்ராப் எல்லாம் ஓரளவுக்கு வரும் அதைத் தவிர மீதி சப்ஜெக்ட் எல்லாம் கண்டிப்பா பெயில்தான். எப்பவாவது வரலாறு பாஸ் பண்ணுவேன்.

எனக்கு இந்த ஸ்கூல் போறது மாதிரி உலகத்துலயே பிடிக்காத விஷயம் வேற எதுவுமே இல்ல. ஏன்னா நாம மக்குன்னு மனசுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துருதே. நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற எண்ணங்களும் வரும்.

இப்படியே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினேன். எப்படியும் பெயில்தான ஆகப்போறம்றதுல எந்த சந்தேகமும் இல்லையே. ஆனா அங்கதான் ஒரு டுவிஸ்ட் இன்னைக்கி வரைக்கும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் புரியாத விஷயம் நான் 10-ம் வகுப்பு பாஸ். பாஸானது ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் இன்னொரு பக்கம் +2 சேத்துவிட்டுருவாங்களோன்னு பயம். நல்ல வேலை அந்த தப்ப எங்க வீட்டுல செய்யல.

நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்.

ஆண்டு விழான்னா எங்க பள்ளியில நிகழ்ச்சிங்க தொடங்கறதுக்கு முன்னால ஸ்கூல்ல உள்ள பிள்ளைகள் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு எக்ஸசைஸ் மாதிரி பண்ணுவோம். பெரிய கிரவுண்ட் அந்த கிரவுண்ட் முழுக்க நிறைந்திருப்போம். இசைக்கு ஏற்ப நாங்கள் அனைவரும் எக்சசைஸ் பண்ணுவோம். அது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். அதில் நான் இருப்பேன். அப்புறம் சுதந்திர தினம் வந்தா திண்டுக்கல்ல இருக்க எல்லா பள்ளிகளும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணுவாங்க. முன்னால ஒரு லாரியோ வண்டியோ போகும் அதில் பாரதமாதா போல நேதாஜி, காந்தி, பகத்சிங் போல எல்லாம் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள். பின்னால் அந்த பள்ளியின் பிள்ளைகள் மார்ச் பாஸ்ட் செய்து நடந்து செல்வார்கள். அவர்களுக்கு அடுத்து இன்னொரு பள்ளியின் வண்டி அதன் அந்தப் பள்ளியின் பிள்ளைகள் என அனைத்துப் பள்ளிகளும் கலந்துகொள்வார்கள். அதில் சிறந்த முறையில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுமாம். இதிலும் நான் பங்கேற்பேன் (இங்க பாருங்க இப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது). எல்லாரும் காந்தி மைதானத்துக்கு போனபின் பூந்திப் பொட்டலம் கொடுப்பார்கள். அப்புறம் அவங்கவங்க வீட்டுக்கு அவரக்காயும் சோத்துக்கு.

நாங்க சென்னை வந்த பின்னர் நான் தீக்கதிரில் வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டரையே அப்போதான் பார்த்தேன். ரொம்ப சீக்கிரம் வேலை கற்றுக்கொண்டு தினசரி செய்தித்தாள் லே-அவுட் டிசைனிங் செய்வேன், விளம்பரம் செய்வேன், புக் ஒர்க் செய்வேன். அந்த நாளிதழின் தவிர்க்க முடியாத ஆழுமையாக நான் இருந்தேன். ம் ஜெயந்தி வந்துருச்சு, இன்னிக்கு பக்கம் பிரச்சனையில்லாம போயிரும்னு ஆசிரியர்ல இருந்து எல்லாரும் நினைப்பாங்க. எனக்கு முன்னால் வேலை கற்றவர்களையும் என்னைவிட அதிகம் படித்தவர்களையும் விட நான் நன்றாக வேலை செய்தேன். இது சுயவிளம்பரத்திற்காக சொல்லவில்லை. நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்தேனே நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. நம் கல்வி முறையில் உள்ளது. என்போல் கோடிக்கணக்கான பேர் தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறார்கள். இதற்கு யார் காரணம்?

அரசாங்கப் பள்ளிகளின் கட்டிடங்கள் சரியில்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைக்கு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நன்றாக சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி இருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் அந்த நெருக்கடி இல்லாததால் ஆசிரியர்களும் ஏனோ தானோவென்று பாடம் சொல்லித் தருகிறார்கள். இப்போது சில அரசாங்கப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான இடங்களைப் பெறுவதைப் பார்க்கும்போது கடமையை உணர்ந்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகள் ஓரளவுக்கு பரவாயில்லை. அரசாங்கம் அனைத்துப் பள்ளிகளையும் (தனியார் பள்ளிகள் உட்பட) இதேபோல் எய்டட் பள்ளிகளாக மாற்றி அந்தப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து பிள்ளைகள் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணம். அனைவராலும் சிரமமில்லாமல் படிக்க வைக்க முடியும். கல்வியின் தரமும் மேம்படுத்தினால் பிள்ளைகளின் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.
ஒரு காதல் கதை
10/19/2010 | Author: ஜெயந்தி
அமமாவும் நானும் அமர்ந்திருந்தோம். அம்மாவின் பலமான யோசனை ஏதோ பழைய ஊர் ஞாபகம் உள்ளுக்குள் ஓடுவதாக தோன்றியது. நான் நினைத்தது சரிதான்.

"இந்த முத்தம்மா மக சந்திரா தெரியும்ல" என்று ஆரம்பித்தார்கள்.

"ஏதோ நிழலாட்டம் ஞாபகம் இருக்கு" என்றேன்.

"சந்திரா வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மனுசங்க. கடுமையா உழைப்பாங்க. யாருகிட்டயும் எதுக்கும் கையேந்த மாட்டாங்க. யாரையும் ஒரு வார்த்தை கடிஞ்சு பேச மாட்டாங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. வெளியிலயும் கூலி வேலைக்குப் போவாங்க. அவங்க உண்டு அவங்க வீடு உண்டுன்னு இருப்பாங்க. அதுவும் இந்த சந்திரா ரொம்ப தைரியசாலி. ஒரு ஆம்பள அவகிட்ட தப்பான நோக்கத்துல பேச முடியாது. ஆம்பளங்களே பயப்படுவாங்க."

35, 40 வருஷத்துக்கு முந்தைய சம்பவம் கண் முன் விரியத் தொடங்கியது.

"பெருமாள் வீட்டு தோட்டம் காடு எல்லாத்துக்கும் சந்திராதான் வேலைக்கு ஆள் கூட்டிட்டுப்போறது, முன்னால நின்னு வேலை செய்றதுன்னு இருந்தா. அவ தலைமையிலதான் பெருமாள் நிலத்துல வேலை நடக்கும். இப்பிடியே இருந்தப்ப ஊருல எல்லாரும் பெருமாளயும் சந்திராவையும் பத்திஒரு மாதிரியா பேசத் தொடங்குனாங்க. அவங்க ரெண்டு பேரும் அந்தப் பேச்சப்பத்தி கவலப்படல. இந்த நெலமையில சந்திரா வீட்டுல மாப்பிள்ள பாக்கத் தொடங்குனாங்க. அவ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒரே பிடியா நின்னா. ஆனா அவங்க வீட்டுல என்ன பேசுனாங்களோ தெரியல ஒரு மாப்பிள்ளய பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பெருமாள் வீட்டுலயும் ஒரு பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க."



"ஏன் அவங்கதான் லவ் பண்றாங்கள்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல?"

"கிராமத்துல அதெல்லாம் நடக்காது. அதுவும் ரெண்டு பேரும் வேறவேற ஜாதி வேற"

"சந்திராவுக்கு பாத்த மாப்பிள்ளயோட ஊரு பஸ்ச விட்டு எறங்கி 6, 7 மைல் நடக்கணுமாம். இவ ஊருக்கு வரக்கூடாதுன்னு வேணும்னே அப்டி பார்த்தாங்களா இல்ல இவ விஷயம் தெரிஞ்சு வேற எங்கயும் அமையலயான்னு தெரியல. மாப்பிள்ளையும் நல்லாவே இருக்க மாட்டான். கல்யாணம் பண்ணி அனுப்புச்சாங்க மூணாவது நாள் மறுவீட்டுக்கு வந்தவ திரும்ப போகவே மாட்டேன்னு சொல்லிட்டா. அப்பற என்ன பண்ணுறது. இங்கயே ஒரு வீட்டுல ரெண்டு பேரையும் தனிக்குடித்தனமா வச்சாங்க. வீடுன்னா சின்ன குடிசை. ஒரு சின்ன ரூம், ஒரு தடுப்பு வச்ச சமையல்கட்டு. ரெண்டு பேரும் கூலி வேல செஞ்சுக்கிட்டு இருந்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா சந்திரா புருஷன் கூட ஒரு வார்த்த கூட பேச மாட்டா. அவனும் கொஞ்ச நாள் இருந்து பாத்துட்டு அவங்க ஊருக்கே ஓடிட்டான். அவ அந்த குடிசையிலேயே இருந்துட்டா."

"இந்த நேரத்துல பெருமாளு பொண்டாட்டி பிரசவத்துக்கு போனவ பிரசவத்துல செத்துப்போயிட்டா. பெறந்த கொழந்தய அவங்க மாமனார் வீட்டுலயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. இவனும் அதுக்கப்பறம் வேற கல்யாணம் பண்ணிக்கல."

"ரெண்டு பேரும் எங்க பாத்துக்கறாங்க எப்படி பேசிக்கறாங்கன்னெல்லாம் யாருக்கும் தெரியாது."

"அப்போ ஊருலயெல்லாம் உண்டாகிட்டா கொறத்திய கூப்புடுவாங்க. அவ வந்து குச்சி வப்பா"

"கொறத்தின்னா நரிக்கொறத்தியா?"

"இல்ல. இவங்க பன்னி மேய்க்கறவங்க. ஊருக்குள்ளயே இருப்பாங்க. கொறவர்ன்னு சொல்வாங்க"

"சரி இந்த குச்சி வைக்கறதுன்னா என்ன?"

"எருக்கஞ்செடி இருக்குல்ல அதுதான் இந்த வினாயகர் சதுர்த்திக்குக்கூட எருக்கம்பூ மாலை போடுவாங்களே அந்தச்செடி."

"ம் தெரியும்."

"அதோட எல நல்லா பழுத்த எல. அந்தா அந்தப் பாய் இருக்கு பாரு அந்த மாதிரி மஞ்சக் கலர்ல இருக்கும். அந்த எலைய எடுத்து அது நடுவுல இருக்க காம்பு குச்சிய ஒரு ரெண்டு இஞ்சு நீளத்துக்கு எடுத்துக்குவாங்க. ஒருமுனையில ஒரு துணிய கட்டிருவாங்க. இன்னொரு முனையில ஏதோ மருந்து வைப்பாங்களாம். இந்த குச்சிய துணி வெளியில தொங்குற மாதிரி வச்சுருவாங்க. தீட்டு படத் தொடங்குன ஒடனே அந்த துணிய பிடிச்சு குச்சிய இழுத்துவிட்டுறனும். குச்சி உள்ள போயிருச்சுன்னா அவ்வளவுதான். துணியிலயிருந்து குச்சி கழன்றுகிட்டு உள்ளே போயிருச்சுன்னாலும் அவ்வளவுதான். உயிருக்கே ஆபத்து. யாராலும் காப்பாத்த முடியாது."

"கொறத்தி இருக்காளே அவ என்ன ஆளு தெரியுமா? அவ நைசா இதுக்கு காரணம் யாருன்னு சொல்லு அப்பத்தான் மருந்து பலிக்கும்னு சொல்லி உண்மைய வாங்கிக்குவா? ஆனா யாரு கேட்டாலும் அவ சொல்லவே மாட்டா. யாரும் கேட்க மாட்டாங்க. அதுதான் எல்லாருக்கும் தெரியுமே."

பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ யோசித்த அம்மாவின் வாயிலிருந்து "எவ்வளவு பாவம்ல அந்த சந்திரா" என்ற வார்த்தைகள் வந்தன.

"இப்டியே இருந்தாங்க. அப்பறம் கொஞ்ச நாள்ல நாங்க திண்டுக்கல் வந்துட்டம். அதுப்பறம் எங்க ஊரு தொடர்பே விட்டுப்போச்சு. அப்பறம் என்னாச்சுன்னு தெரியல."

"இந்தா பாரு ஒரு கதை சொன்னா முடிவ சொல்லனும். இப்படி முடிவு கிழிஞ்சுபோன நாவல்மாதிரி கதை சொன்னா என்ன அர்த்தம்"

"நான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும்தான சொல்ல முடியும். ஊருக்கு போனா தெரியும். என்ன அப்டியேதான் இன்னும் இருப்பாங்க இல்லன்னா ஒரே வீட்டுல இருப்பாங்க. ஏன்னா இப்போ அவங்களுக்கு வயசாகியிருக்கும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல. சொன்னாலும் அவங்களுக்கு கவலையில்லை இல்ல. இல்ல ஊருக்கு பயந்துக்கிட்டு இன்னும் தனித்தனியாத்தான் இருகாங்களோ தெரியல."
பிறந்த நாள்
10/16/2010 | Author: ஜெயந்தி


இந்த போட்டோவுல இருக்கவங்களுக்கு இன்னிக்கு பொறந்த நாளாம். அவங்களுக்கு சுய தம்பட்டம் பிடிக்காதாம். அதுனால என்கிட்ட போட்டோவ குடுத்து போடச்சொன்னாங்க.

அவங்க பிறந்த தேதி சரியாத் தெரியாதாம். ஏன்னா அவங்க அம்மா தமிழ் மாசம் தமிழ் தேதிய மட்டும்தான் ஞாபகத்துல வச்சிருந்தாங்க. ஆனா அவங்க கொடுத்த ஒரு க்ளூ என்னன்னா இவங்க பொறந்த நாள் அன்னிக்கித்தான் சரஸ்வதி பூஜை கொண்டாடிக்கிட்டிருந்தாங்களாம். எல்லாரும் சாமி கும்பிட்டு பொரியெல்லாம் சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்களாம். அன்னிக்கி சாயங்காலம் 7 மணிக்கு நீ பொறந்தன்னு சொன்னதால இவங்க ஒவ்வொரு வருஷமும் சரஸ்வதி பூஜை அன்னிக்கே தன்னோட பொறந்த நாளா வச்சுக்கிட்டாங்களாம். அவங்களுக்கு ஒரு சந்தோஷம் படிப்பக் கும்புடுற நாள் அன்னிக்கி பொறந்ததுதான். (யாருப்பா அது அன்னிக்குத்தான் ஆயுதத்துக்கெல்லாம் பூஜை போடுவாங்கன்னு சொல்றது)

அப்புறம் என்னோட வயசு 30 முடிஞ்சு 29 நடக்குது. அது கொஞ்ச வருஷமா அப்படித்தான் போயிட்டிருக்கு. (எந்த வருஷத்துல இருந்து இப்படி போகுதுன்னு கேட்கறது யாருப்பா? நம்ம சிரிப்பு போலீஸ்தான. அப்புறம் கவனிச்சுக்கறேன்.)

என் ப்ளாக்குக்கும் முதல் பிறந்த நாள்

நான் இதை ஆலோசிச்செல்லாம் துவங்கல. இது ஒரு கோ-இன்சிடென்ட்ன்னு சொல்லலாம். என்னோட கணவர் என் மகனிடம் தனக்கு ஒரு வலைப்பூ ஆரம்பித்துக்கொடுக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார். அவன் அவருக்கு ஒன்று ஆரம்பித்துக்கொடுத்துவிட்டு நீயும் ஒன்னு ஆரம்பிக்கிறயான்னு கேட்டான்.

அவன் கிண்டலாக கேட்கிறான்னு நெனச்சுக்கிட்டு, ஏய் நானென்ன இலக்கியவாதியான்னு கேட்டேன். அதுக்கு அவன் அப்படி இல்லம்மா இது வந்து ஒரு டைரி எழுதற மாதிரி யாரு வேணும்னாலும் எழுதலாம், என்ன டைரிய யாரும் படிக்க மாட்டாங்க. ப்ளாக்க கொஞ்ச பேரு படிப்பாங்கன்னு சொன்னான். சரி எனக்கு நாலு வார்த்தை சேர்ந்தாப்போல பேசவே தெரியாதே நான் என்னத்த எழுதப்போறேன்னு கேட்டேன். அதுக்கு அவன் உனக்கு தோணுறத எழுதுன்னு சொல்லிட்டுப்போயிட்டான்.

எனக்கு ப்ளாக்குன்னு ஒன்னு இருக்கறதே அப்பத்தான் தெரியும். எனக்கு ஆதி மூல கிருஷ்ணன் ப்ளாக் எப்படியோ படிக்கக் கிடைத்தது. அதில் குருவி பட விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது. பிறகு அவர் எழுதி தங்கமணி இடுகைகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பிறகு ஒரு பெண் பதிவரின் இடுகை படிக்கக் கிடைத்தது. அதில் அவர் கிள்ளிப்போட்ட சாம்பார் கதையை எழுதியிருந்தார். (அவர் பெயரை மறந்துவிட்டேன் மன்னிக்கவும்)அதைப் படித்தவுடன் நமக்குத்தான் இது போல கதையெல்லாம் நல்லாத் தெரியுமேன்னு நாமளும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சா என்னன்னு தோணுச்சு. ஒரு மூணு இடுகைக்கான மேட்டரை டைப் பண்ணி என் மகனிடம் காட்டினேன். நல்லாயிருந்தா நான் ப்ளாக் ஆரம்பிக்கிறேன். இல்லன்னு சொன்னேன்னா ப்ளாக்கே வேணாம். அவனும் படிச்சுட்டு நல்லாயிருக்கு. உனக்கு ப்ளாக் ஆரம்பிக்க எல்லாத் தகுதியும் இருக்குன்னு சர்ட்டிபிகேட் கொடுத்துட்டான். உடனே ஒரு ப்ளாக்கும் ஆரம்பிச்சுக் கொடுத்துட்டான். இதெல்லாம் ஒரு பத்து நாட்களுக்குள் நடந்தது. என் ப்ளாக் அக்டோபர் 20ம் தேதி துவங்கியுள்ளேன். இன்னும் நாலு நாள் இருக்கு. அட்வான்ஸ் பிறந்த நாள்.

அப்பறம் ஒருஒரு இடுகையையும் போட்டுவிட்டு யாராவது படிப்பார்களா என்று எதிர்பார்ப்பதெல்லாம் உங்கள் அனைவருக்கும் நேர்ந்த கதையாகத்தான் இருக்கும். பிறகு அடுத்தவருக்கு நாம் ஓட்டும் பின்னூட்டமும் போட்டால்தான் நமக்கும் அது கிடைக்கும் என்ற ப்ளாக் உலக அரசியல் எல்லாம் என் மகன்தான் எனக்கு சொல்லித்தந்தான்.

அப்பறம் காட்சியில இருந்து அஞ்சல் தலை பகுதிக்கு எழுதுமாறு கேட்டார்கள். நானும் எழுதி அனுப்பினேன். போடுவார்களோ என்னமோன்னு தயக்கத்தோடேயே அனுப்பினேன். அவர்கள் இரண்டு நாட்களில் போடுவதாக மெயில் அனுப்பியிருந்தார்கள். பிறகு பார்த்தால் அடுத்த நாளே போட்டுவிட்டார்கள். தந்தையர் தினம் என்பதால் என் கடிதம் பொருத்தமாக அமைந்ததால் போட்டுவிட்டார்கள் போலும். பிறகு பெண்ணியம் ப்ளாக்கிலும் என் இடுகைகளை எடுத்துப்போட்டார்கள். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. நம்மளாலயும் எழுத முடியும்னு இதுக்கு முன்னால நான் நெனச்சதே இல்ல. பெண்ணியத்தில் நிறைய திறமைசாளிகளின் படைப்புகளை போடுகிறார்கள். அதில் என்னுடையதும் வந்தது எனக்கு அளவில்லா சந்தோஷத்தைக் கொடுத்தது. அவர்கள் இருவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னை ஓட்டுப்போட்டு பின்னூட்டம்போட்டு ஊக்குவிக்கும் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிவுலக சண்டைகள் விளைவு
10/14/2010 | Author: ஜெயந்தி

மக்களே இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்டது.





டாக்டர்: என்னாச்சு
பெண்: டாக்டர் கம்ப்யூட்டர்ல ஏதோ ப்ளாக்காம் அதுல ஏதோ சண்டை நடந்துக்கிட்டிருந்துச்சாம். அதைப் படிச்சதலிருந்து இப்படி பித்து பிடிச்ச மாதிரி ஆகிட்டாரு டாக்டர்.


---------------------


பிரபல பதிவர்: இங்க பாருங்க நீங்க புது பதிவரா இருக்கலாம். புதுசுன்றதால நடக்குற சண்டையோட லிங்குங்க சரியா புரிய மாட்டேங்குது. அதுனால தினமும் எனக்கு கொஞ்சம் சண்ட நடக்குற லிங்குகள என்னோட மெயிலுக்கு அனுப்புங்கன்னு சொல்றது கொஞ்சம்கூட நல்லாயில்ல சொல்லிட்டேன்.



----------------------



வக்கீல்:
ஏங்க உங்க மனைவிய டைவர்ஸ் பண்ணனும்னு சொல்றீங்க?
ஆண்: பின்ன என்னங்க கம்ப்யூட்டர் முன்னால உங்காந்தவ எந்திரிச்சே வர மாட்டேங்கறா. ப்ளாக்ல ஏதோ சண்டையாம். அது இப்ப முடிஞ்சுரும் அது முடிஞ்சவுடனே வந்து சாப்பாடு போடறேன்னு சொல்றா.
வக்கீல்: ஏங்க ஒரு நாளைக்கு கொஞ்சம் லேட்டா சாப்பிட்டாத்தான் என்ன?
ஆண்: நீங்க வேற சார். அவ ஒரு மாசமா கம்ப்யூட்டர் முன்னாலேயேதான் உட்காந்திருக்கா. நான் வீட்டுல சாப்பிட்டு ஒரு மாசமாச்சு.



----------------------

கூகுல் மேனேஜர்: நல்லாத்தான போய்க்கிட்டிருந்துச்சு. திடீர்னு ஏன் தமிழ்நாட்டுல ஒட்டுமொத்தமா எல்லாரும் சாட் பண்ணறதையே நிறுத்திட்டாங்க?
என்ஜினியர்: ஏதோ ப்ளாக்குல சண்டையாம் சார். அதுனால எல்லா சாட்டையும் பப்ளிக்கா ப்ளாக்ல போட்டுட்டாங்களாம். அதுனால யாருமே சாட் பண்றதில்ல. இ மெயில் அனுப்பறதுகூட குறைஞ்சுக்கிட்டே வருது சார்.
மேனேஜர்: நீ உடனே போயி எப்டியாவது சண்டைய நிறுத்திட்டுவா. உனக்கு ப்ரமோஷனும் இன்கிரிமென்டும் தர்றேன்.
என்ஜினியர்: சண்டைக்கு உள்ள போனே வெளியவே வர முடியாது. இந்த வேலையே எனக்கு வேண்டாம் சார் வேலைய ரிசைன் பண்றேன்.



-------------------

-------------------------

டிஸ்கி: மக்களே திரும்பவும் சொல்கிறேன். இது வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே எழுதப்பட்ட பதிவு. இங்கே நான் யாருக்கும் ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எழுதவில்லை. நான் எல்லோரையும் நண்பர்களாகவே நினைக்கிறேன். எனது நினைப்பு எப்படியாவது இந்த சண்டை நிற்காதா என்பது மட்டுமே.

தோள்ல கை போடுறாங்கடா, அப்புறம் ஏதோ கடாமுடா நடக்குது. அப்புறம் குழந்தை பொறக்குது.
8ம் வகுப்பு அல்லது 9ம் வகுப்பு படிப்பார்கள் அந்தச் சிறுவர்கள் பேசிக்கொண்டே என்னை தாண்டி சென்றுவிட்டனர். இந்த வயதில் எல்லோருக்கும் வரும் இயல்பான சந்தேகங்கள். ஆண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசிக்கொள்வார்கள். பெண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசுவது இல்லை.

புதிய பொருளாதாரக்கொள்கை என்ற பூதம் உள்நுழைவதற்கு முன்பு செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்வதற்கு செக்ஸ் புத்தகங்கள் மற்றும் பிட்டு படம்ன்னு சொல்வாங்களே (பிட்டு படம் என்பது கூட இப்போது அனைத்து படங்களிலும் பேசப்படுவதால் தெரிகிறது) அதுமட்டும்தான்னு நெனைக்கிறேன். அதுவும் தேடிப்போக வேண்டும். எனவே அதிக முனைப்புள்ள பிள்ளைகள் மட்டுமே அதைத்தேடிப் போவார்கள். சில பிள்ளைகள் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற நினைப்போடு இருப்பார்கள். அவர்கள் இந்தப்பக்கமே போக மாட்டார்கள். சில பிள்ளைகள் இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று தடுமாடுவார்கள். அவர்களைத்தான் இரண்டும்கெட்டான் என்பது. இவர்கள் எந்தப்பிள்ளைகளுடன் சேர்கிறார்களோ அதைப்பொருத்தே இவர்கள் பழக்க வழக்கம் அமையும். அதனால் பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை கண்கொத்திப்பாம்பாக கண்காணிப்பார்கள். இதெல்லாம் அந்தக்காலம்.

இப்போது நம் வீட்டு நடுக்கூடத்திற்கே டிவி மூலமாக அனைத்தும் வந்துவிழுகிறது. இன்டர்நெட்டைத் திறந்தால் கேட்கவே வேண்டாம். இப்போ உள்ள குழந்தைகளை தரம் பிரிக்க முடியுமா? அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் முன்னே வந்து விழுகிறது. உண்மையிலேயே அவர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

எல்லாம் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னால் நெசவாளிகள் கஞ்சித் தொட்டி வைத்து கஞ்சி வாங்கிக்குடிக்கும் நிலைமைக்கு ஆளானார்கள். தேயிலைத் தொழிலாளர்கள் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், எலிக்கறி தின்றதும். இப்போது நாம் அனைத்தையும் மறந்துவிட்டோம். நமக்குத்தான் வரிசையில் நின்று மொட்டைபோட்டுக்கொள்ளுவதும் படத்தை பார்ப்பதும் என்று மிகப்பெரிய பொருப்புகள் இருக்கிறதே.

அதனால் விளைந்த நன்மைகள்னு பாத்தா சில லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதுவும் அவர்களின் வால்களாக பின்னாலேயே வந்துள்ளவர்கள் அவர்கள் சம்பளத்தையும் பிடிங்கிக்கொள்வார்கள். எப்படின்னு கேட்குறீங்களா? ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் நன்றாக டிரஸ் செய்து கொள்ள வேண்டும் அல்லவா அதற்காக பன்னாட்டுக்கம்பெனிகள் துணிக்கடைகளை இங்கே திறந்துள்ளன அல்லவா? அவற்றில் ஒரு சட்டையின் விலை 2000. வாட்ச் 4000, 5000 இன்னும் அதிகமாகவும் உள்ளது. நான் சொல்வது மீடியம் விலைகள். ஷீ போட்டுக்கொள்ள வேண்டும் அல்லவா? அதுவும் 4000, 5000. அப்புறம் ஆக்சி சென்ட் இந்த மாதிரி சில சில்லறைகள். அப்புறம் சாப்பிட ஃபீஸா. ஒரு வேலை சாப்பாடே 500, 1000ன்னு ஓடும். அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை எப்படி அவர்களே பிடுங்கிக்கொள்கிறார்கள் பார்த்தீர்களா?

அப்புறம் சென்னை போன்ற பெருநகரங்களில்தான் சாஃப்ட்வேர் கம்பெனிகள் இருப்பதால் அவர்கள் வீட்டைவிட்டு இங்கே வந்து இருக்க வேண்டும். அவர்களுக்கு சம்பளம் அதிகம் என்றவுடன் வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள் வாடகையை கன்னாபின்னாவென்று ஏற்றிவிடுகின்றனர். இதெல்லாம்போக அவர்கள் வீட்டு கமிட்மென்டுக்கு பணம் அனுப்ப வேண்டும்.

இதற்கு நடுவில் ரியல் எஸ்டேட்காரர்கள் இந்தியாவையே சாஃப்ட்வேர் மக்கள்தான் வாங்கிக்கொள்வதுபோலவும் மற்றவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும் போலவும் நிலத்தின் மதிப்பை தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றிக்கொண்டனர்.

பன்னாட்டு கம்பெனிக்காரன் சொல்லிக்கொடுப்பதுபோல் உடை அணிகிறார்கள். சாப்பிடுகிறார்கள். கம்பெனிக்காரனுக்கு வேலை நடக்க வேண்டும் என்பதற்காக சனிக்கிழமை இரவுகளில் இவர்களை ரிலாக்ஸ் பண்ணுகிறேன் என்று குடிக்க டான்ஸ் ஆட எல்லாம் கற்றுக்கொடுக்கிறான். அவனுக்கு நமது கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவன் சம்பாதிக்க வருகிறான். இவர்களை எப்படியெல்லாம் வேலை வாங்க வேண்டும் என்று தெரிந்து அதன்படி வேலை வாங்குகிறான். அதாவது ஆடுகிற மாட்டை ஆடிக்கறப்பது பாடுகிற மாட்டை பாடிக்கறப்பது. நம் நாட்டை ஆள்கிற நமது ஆள்களுக்கே நமது கலாச்சாரத்தைப்பற்றி கவலையில்லாதபோது அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

சாஃப்ட்வேர் பியுபிள்தான் நமது கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று அடுத்த பலி. நாம் நமது பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம். பணம் சம்பாதிக்கும் மெஷின்களாக. சிறு வயதில் இருந்தே காலையில் எழுத்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். சாயங்காலம் வந்தவுடன் ஏதாவது கொறித்துவிட்டு டியூஷனுக்கு ஓட வேண்டும். சில பிள்ளைகள் தின்னக்கூட முடியாதபடி ஸ்கூல் அருகிலேயே டியூஷன் என்று அப்படியே படித்துவிட்டு வருவார்கள். 8 மணி 9 மணிக்கு வீட்டுக்கு வந்து அதன்பிறகு ஹோம் ஒர்க் செய்துவிட்டு படுக்க வேண்டும். ஒரு குழந்தையின் ரொடீன் ஒர்க் இதுதான். அவன் கல்லூரி படிப்பு முடிக்கிறவரை. அவனுக்கு தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாது. நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. படிப்பு படிப்பு மட்டுமே தெரியும். சரி பள்ளியிலாவது நமது வாழ்க்கைமுறை நாட்டு நிலைமை பற்றியெல்லாம் சொல்லித்தருகிறார்களா என்று பார்த்தால், அங்கே புத்தகத்தை மனப்பாடம் பண்ணி பரிட்சையில் வாந்தி எடுக்கத்தான் சொல்லித்தருகிறார்கள்.

படிப்பு முடிந்ததும் நேராக பன்னாட்டு கம்பெனிக்கு வேலைக்குப் போகிறான். அவன் சொல்லித்தருவதுதான் சரியான வாழ்க்கை முறை என்று நினைக்கிறான். அதைப் பின்பற்றுகிறான். அவனது நிலைமைப் பாருங்கள் உலக்கைக்கு ஒருபக்கம் இடின்னா மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடிங்கற மாதிரி, அவன் கம்பெனிக்காரன் சொல்ற மாதிரி வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அங்கே அவன் வித்தியாசமாக பார்க்கப்படுவான். அதன்படி நடந்தால் நமது மக்களால் சாஃப்ட்வேர் மக்கள்தான் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று போடும் கூப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டும். இதுல வேடிக்கை என்னன்னா பெண்களை மட்டும் டான்ஸ் ஆடக்கூடாது என்று தூக்கிப்போட்டு மிதிப்பார்கள். அவர்களும் இதேமுறையில் படித்து வந்தவர்கள்தானே. அவர்கள் தனியாக வானத்தில் இருந்து குதித்துவிடவில்லையே. அவர்களை மட்டும் தண்டிப்பது ஏன்?

புதிய பொருளாதாரக்கொள்கை வருவதற்கு முன்னாலேயே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தலையால் அடித்துக்கொண்டார்கள். கலாச்சார சீரழிவு ஏற்படும் அதனால கதவை திறந்துவிடும்போது உள்ளே என்ன என்ன நுழைகிறது என்று பார்த்து ஜாக்கிரதையாக அனுமதியுங்கள். உள்ளே வருபவற்றின் குடுமியும் உங்கள் கைகளில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் ஒன்று வெளிநாட்டுக்கம்பெனிகளே வரக்கூடாது என்று சொல்லவில்லை. வருவதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார்கள். உடனே நம் ஆட்கள் கம்யூனிஸ்ட்கள் பிற்போக்குவாதிகள். நாட்டை வளர்ச்சிப்பாதையில் செல்லவிடாமல் பின்னால் பிடித்து இழுப்பவர்கள் என்று கிளப்பிவிட்டார்கள். இன்றுவரை அந்த வரி மட்டுமே எல்லோராலும் பேசப்படுகிறது. உண்மையை ஏன் யாரும் உணரவில்லை என்று தெரியவில்லை.

அப்போதே அரசாங்கம் எங்கள் பிள்ளைகளை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று குடி, டான்ஸ் போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர்களைத்தானே தடுத்திருக்க வேண்டும். உள்ளே நுழைபவற்றிலும் நம் கலாச்சாரத்திற்கு எதிரானவற்றை அங்கேயே தடுத்திருக்க வேண்டும்தானே. நல்லா இரண்டு கதவையும் விரியத் திறந்துவைத்துவிட்டு இப்போது பெண்களால்தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று பெண்களை பிடித்து அடித்து தங்கள் வீரத்தைக்காட்டிக்கொள்பவர்கள், மற்றும் பெண்களால் மட்டும்தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று பேசுபவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களையோ அல்லது ஸ்டார் ஹோட்டல்க்காரர்களையோ அடித்து தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டியதுதானே.

கல்யாணம் ஆனவுடன் சின்னச்சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஈகோ பிரச்சனை வந்து டைவர்சுக்கு செல்கிறார்கள். பெற்றோர்களால் எடுத்துச்சொல்ல முடியவில்லை. சிறிய வயதில் பணம் சம்பாதிக்கும் மிஷினாக வளர்த்துவிட்டு இப்போது புத்திசொன்னால் எடுபடுமா? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது.

அடுத்து இந்த குடி. அதைத்தான் கவர்ன்மென்டே ஆதரிக்கிறதே. முன்பெல்லாம் குடித்தால் கேவலம் என்ற ஒரு எண்ணம் குடிப்பவர்களுக்கும் இருந்தது. அதனால் வெளியில் தெரியாமல் குடிப்பார்கள். குடிக்கிறார்கள் என்றால் அவர்களை மதிக்கவே மாட்டார்கள். அவங்கெடக்குறான் குடிகாரன் என்று சொல்வார்கள். எம்ஜிஆர் அவர்கள் அவர் படத்தில் குடிப்பதுபோலவோ சிகரெட் குடிப்பதுபோலவே நடிக்க மாட்டாராம். அப்படி நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் அதைப்பின்பற்றக்கூடும் என்ற சமூக அக்கறை. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இரண்டு பேரும் பாட்டு டான்ஸ் மூலம் குடியினால் ஏற்படும் விளைவுகளை விளக்கி பாடுவார்கள். வள்ளுவர் கள்ளுண்ணாமை அதிகாரத்தையே வைத்திருக்கிறார். சங்க இலக்கியங்களும் மது அருந்தக்கூடாது என்றே சொல்லுகிறது. ஆனால் இப்போது குடிப்பது ஏதோ கவுரவம்போல் ஆகிவிட்டது. நமது கலாச்சாரமே குடிப்பதுதான் என்பது போலவும் மாறிவிடும் என்று தோன்றுகிறது. நல்ல தரமான படங்கள்கூட இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நாயகர்கள் குடிப்பார்கள். நம்ம ப்ளாக்கில்கூட அதுஒரு சாதாரண நிகழ்வுபோல பேசப்படுகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது இன்னும் இந்தக்குடியை நாடாமல் இருக்கும் ஒருசிலரையும் மாற்றிவிடுமோ என்ற பதைப்பு என்னுள் வரும்.

பஸ்சில் வரும்போது டாஸ்மாக் கடை இருந்தால் திரும்பிப்பார்ப்பேன். டீசன்டாக இருப்பவர்கள்கூட நிறைய பேர் நின்று வாங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த கூச்ச உணர்வும் இருக்காது. அதைப்பார்க்கும்போது இனி வரும் தலைமுறை உடலில் ரத்தத்திற்குப் பதிலாக ஆல்கஹால் ஓடுமோ என்ற சந்தேகம் வரும். இந்த கலாச்சார சீரழிவிற்காக எந்த ஆணும் அடி வாங்கவில்லை. கலாச்சார சீரழிவு என்றால் பெண்களை மட்டும் எப்போதும் அடித்துக்கொண்டிருப்போம். அது எதனால் நடக்கிறது என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். பெண்களை அடிப்பதுதானே ஈஸி அவர்கள் திருப்பி அடிக்கும்வரை.

டிஸ்கி: எங்கள் வீட்டில் ஆஷ் டிரே இல்லை. குடிப்பவர்களும் இல்லை. நாங்கள் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோமோ? கலாச்சாரத்தை மதிக்கவில்லையோ?
நான் கே.ஆர்.பி.செந்தில் அவர்களின் வலைப்பூவில் இருந்து எடுத்துப்போட்டுள்ளேன்.
-----------

நம் கேபிள் சங்கர் தன்னுடைய வலைபக்கத்தில் இந்த சிறுமிக்கு உதவி தேவைப்படுகிறதாக எழுதியிருந்தார். அதனைப் பார்த்த சில நல்ல உள்ளங்கள் உதவ முன் வந்துள்ளன. ஆனால் தேவைப்படும் தொகை பெரிது என்பதால் உங்கள் அனைவரின் உதவியும் தேவைபடுகிறது. எனவே தயவு செய்து உங்களால் ஆன சிறிய உதவியையும் தயங்காது செய்யுங்கள்..

கேபிள் சங்கர்  இந்த சிறுமியின் விபரங்களை தந்திருக்கிறார்...



இந்த  குழந்தைக்கு வயது ஒன்பது. இவள் பெயர் ப்ரியா  இவளுக்கு பிறந்ததிலிருந்து சரியாக காது கேட்டதில்லை. இவளுடய மாமா என்னுடன் பணியாற்றும் உதவி இயக்குனர். அவர் பெயர் கணேசன்.  ப்ரியா ஒரு மாற்று திறனாளிகள் பள்ளியில் படித்து வருகிறாள். இவளுக்கு Cochlear Implantation Surgery  செய்தால் நிச்சயம் கேட்கும் திறன் வந்துவிடும் என்று டாக்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கான எலலா மருத்துவ சான்றிதழ்களையும், மருத்துவர்கள் பரிந்துரைகளையும் பார்த்தேன். இக்குழந்தைக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இந்த அறுவை சிகிச்சையை செய்யாவிட்டால் பின்பு எப்போதுமே செய்ய முடியாதுஎன்று சொல்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சைக்கு ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூபாய் ஒன்பது லட்சம். இவர்கள் முதல்வர் செல்லுக்கும் உதவி கோரியிருக்கிறார்கள். நாமும் நம் பங்கிற்கு உதவலாமே என்ற எண்ணத்தில் உங்களின் பார்வைக்கு வைத்திருக்கிறேன். எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு நம் பதிவுலகம் முன்னுதாரணமாய் இருந்திருக்கிறது. மேலும் இக்குழந்தையின் மருத்துவ சான்றிதழ்கள், மருத்துவர்களின் பரிந்துரை வேண்டுவோர்கள் கேபிள் சங்கரின் தொலைபேசி எண்ணிலோ.. அல்லது அவரது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளலாம். உங்கள் உதவியால் ஒலி பெறப் போகும் ஒரு சிறுமிக்காக..

அவருடைய வங்கி கணக்கு எண் கீழே தந்துள்ளேன்... அந்த வங்கி கணக்குக்கும் பணம் அனுப்பலாம்.. பணம் அனுப்பியவர்கள் தங்கள் பணம் அனுப்பிய விபரங்களை அவருக்கு மின்னஞ்சலாகவும் அனுப்புங்கள். இது பின்னால் கணக்குகளை சரிபார்க்க எங்களுக்கு உதவும்..

மேலும் இந்த பதிவினை உங்கள் வலைபக்கத்தில் ஒரு நாள் பதிவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இதை மின்னஞ்சலாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி அவர்களையும் உதவி செய்ய சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

கேபிளின் மின்னஞ்சல் முகவரி ...
 
அவரிடம் பேச: 9840332666

வங்கி கணக்கு விபரம் :
A/C NAME : SANWAS INFOTECH
A/C NO : 0077 0501 0890
ICICI BANK, ASHOK NAGAR BRANCH 
வளரும் பிஞ்சுக்கு உங்களால் முடிந்ததை செய்யுங்கள்.

டிஸ்கி: 10 நாட்களாக ப்ளாக் பக்கம் சரியாக வர முடியவில்லை. நண்பர்களின் வலைப்பூக்களை படித்து பின்னூட்டமிட முடியவில்லை. என்னுடை ப்ளாக் பின்னூட்டங்களுக்கே நன்றி சொல்ல முடியவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். அடுத்த வாரம் வந்துவிடுவேன்.