சந்தன முல்லை என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்த தலைப்பு இது.

5-ம் வகுப்பு வரை படித்தது திண்டுக்கல் பக்கத்தில் கிராமம். அங்க எப்படின்னா ஐந்து வகுப்புக்கும் சேர்த்து 2 ஆசிரியரே இருப்பார். 1, 2, 3 வகுப்புக்கு ஒரு வாத்தியார். 4, 5ம் வகுப்புக்கு ஒரு வாத்தியார். ஏன்னா இது பெரிய கிளாஸ்னால பாடம் அதிகமா இருக்கும்னு ரெண்டு வகுப்பு. 1,2,3 வகுப்புப் பக்கம் ஒரே போர்க்களம் மாதிரி ஹோன்னு சத்தம் கேட்கும். சின்ன வகுப்புன்றதால பிள்ளங்க அடங்க மாட்டாங்க. 4,5 பிள்ளைங்க வாத்தியார் இருந்தா அமைதியா இருப்பாங்க.

5-ம் வகுப்பு முடிச்சுட்டா பக்கத்து ஊருல ஹை-ஸ்கூல் இருக்கும். ஒரு 4,5 கிலோ மீட்டர் நடந்து போய் படிக்கணும். பெரும்பாலும் பெண் பிள்ளைகள் 5ம் வகுப்போடு நிறுத்தப்படுவார்கள். நான் 5ம் வகுப்பு முடித்தவுடன் குடும்பச் சூழல் காரணமா திண்டுக்கல் இடம் பெயர்ந்தோம். அங்க சென்-ஜோசப்ஸ் ஸ்கூல்ல எங்க மாமா என்ன சேத்துவிட்டுட்டாரு. காதல் படத்துல வருமே ஒரு ஸ்கூல் அதுதான். மதுரைன்னு சொல்லிக்கிட்டு திண்டுக்கல்லதான் எடுத்திருக்காங்க.

ஒரு வாரம் லேட்டாக சேர்க்கப்பட்டேன். அன்று வகுப்பிற்கு போய் முதல் பீரியடோ இரண்டாவது பீரியடோ இங்கிலீஸ். அங்க போயித்தான் பீரியட்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இங்கிலீஸ்ல ஏ,பி,சி,டி மட்டுமே தெரியும். அதுவும் கேப்பிடல் மட்டும். தமிழ் படிக்கத் தெரியும் (எங்க அம்மா புண்ணியத்தில்)ஒரு வாரத்துல ஒரு பாடம் இங்கிலீசுல நடத்திட்டாங்க போல. அன்னிக்கி டிக்டேசன் நடக்குது. எல்லாரும் டீச்சர் சொல்லச் சொல்ல அந்த வார்த்தைகள எழுதறாங்க. நான் மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்குறேன். எனக்கு வலது பக்கம் உள்ள பெண் என்னை இடித்து சைகையால் எனக்கு இடது பக்கம் எழுதும் பெண்ணை பார்த்து எழுதச் சொல்கிறாள். ஏன்னா அவளும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருந்தாள். நானும் திரும்பிப் பார்த்தேன். அவள் எழுதியிருக்கும் எழுத்து எந்த லாங்குவேஜ்ன்னே தெரியல. அவ ஸ்மால் ஏ,பி,சி,டி-யில் எழுதிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த எழுத்தையே பார்க்கிறேன். என்னால் பார்த்துக்கூட எழுத முடியவில்லை. கடைசி வரை ஒரு வார்த்தைகூட எழுதல.

அடுத்த அதிர்ச்சி இங்கிலீஸ் புத்தகம் கிட்டத்தட்ட 8-10 பாடம் + போயம் + கிராமர்னு புத்தகம் ஒரு நாவல் சைஸ்ல இருக்கு. ஏ,பி,சி,டி மட்டுமே தெரிந்த எனக்கு அந்த புத்தகத்த எப்படி படிக்க முடியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எனக்கு இன்னிக்கும் ஒரு வரி இங்கிலீஸ்ல ஏதாவது மெயிலோ ஏதோ வந்துருச்சுன்னா பயந்துருவேன். தமிழ் படிச்சு எப்படியும் பாஸ் பண்ணிருவேன். அது எப்படின்னே தெரியல இந்த கணக்கு மட்டும் எனக்கு கொஞ்சம் வந்துருச்சு. இந்த கணம், அல்ஜீப்ரா, க்ராப் எல்லாம் ஓரளவுக்கு வரும் அதைத் தவிர மீதி சப்ஜெக்ட் எல்லாம் கண்டிப்பா பெயில்தான். எப்பவாவது வரலாறு பாஸ் பண்ணுவேன்.

எனக்கு இந்த ஸ்கூல் போறது மாதிரி உலகத்துலயே பிடிக்காத விஷயம் வேற எதுவுமே இல்ல. ஏன்னா நாம மக்குன்னு மனசுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துருதே. நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற எண்ணங்களும் வரும்.

இப்படியே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினேன். எப்படியும் பெயில்தான ஆகப்போறம்றதுல எந்த சந்தேகமும் இல்லையே. ஆனா அங்கதான் ஒரு டுவிஸ்ட் இன்னைக்கி வரைக்கும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் புரியாத விஷயம் நான் 10-ம் வகுப்பு பாஸ். பாஸானது ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் இன்னொரு பக்கம் +2 சேத்துவிட்டுருவாங்களோன்னு பயம். நல்ல வேலை அந்த தப்ப எங்க வீட்டுல செய்யல.

நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்.

ஆண்டு விழான்னா எங்க பள்ளியில நிகழ்ச்சிங்க தொடங்கறதுக்கு முன்னால ஸ்கூல்ல உள்ள பிள்ளைகள் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு எக்ஸசைஸ் மாதிரி பண்ணுவோம். பெரிய கிரவுண்ட் அந்த கிரவுண்ட் முழுக்க நிறைந்திருப்போம். இசைக்கு ஏற்ப நாங்கள் அனைவரும் எக்சசைஸ் பண்ணுவோம். அது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். அதில் நான் இருப்பேன். அப்புறம் சுதந்திர தினம் வந்தா திண்டுக்கல்ல இருக்க எல்லா பள்ளிகளும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணுவாங்க. முன்னால ஒரு லாரியோ வண்டியோ போகும் அதில் பாரதமாதா போல நேதாஜி, காந்தி, பகத்சிங் போல எல்லாம் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள். பின்னால் அந்த பள்ளியின் பிள்ளைகள் மார்ச் பாஸ்ட் செய்து நடந்து செல்வார்கள். அவர்களுக்கு அடுத்து இன்னொரு பள்ளியின் வண்டி அதன் அந்தப் பள்ளியின் பிள்ளைகள் என அனைத்துப் பள்ளிகளும் கலந்துகொள்வார்கள். அதில் சிறந்த முறையில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுமாம். இதிலும் நான் பங்கேற்பேன் (இங்க பாருங்க இப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது). எல்லாரும் காந்தி மைதானத்துக்கு போனபின் பூந்திப் பொட்டலம் கொடுப்பார்கள். அப்புறம் அவங்கவங்க வீட்டுக்கு அவரக்காயும் சோத்துக்கு.

நாங்க சென்னை வந்த பின்னர் நான் தீக்கதிரில் வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டரையே அப்போதான் பார்த்தேன். ரொம்ப சீக்கிரம் வேலை கற்றுக்கொண்டு தினசரி செய்தித்தாள் லே-அவுட் டிசைனிங் செய்வேன், விளம்பரம் செய்வேன், புக் ஒர்க் செய்வேன். அந்த நாளிதழின் தவிர்க்க முடியாத ஆழுமையாக நான் இருந்தேன். ம் ஜெயந்தி வந்துருச்சு, இன்னிக்கு பக்கம் பிரச்சனையில்லாம போயிரும்னு ஆசிரியர்ல இருந்து எல்லாரும் நினைப்பாங்க. எனக்கு முன்னால் வேலை கற்றவர்களையும் என்னைவிட அதிகம் படித்தவர்களையும் விட நான் நன்றாக வேலை செய்தேன். இது சுயவிளம்பரத்திற்காக சொல்லவில்லை. நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்தேனே நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. நம் கல்வி முறையில் உள்ளது. என்போல் கோடிக்கணக்கான பேர் தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறார்கள். இதற்கு யார் காரணம்?

அரசாங்கப் பள்ளிகளின் கட்டிடங்கள் சரியில்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைக்கு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நன்றாக சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி இருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் அந்த நெருக்கடி இல்லாததால் ஆசிரியர்களும் ஏனோ தானோவென்று பாடம் சொல்லித் தருகிறார்கள். இப்போது சில அரசாங்கப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான இடங்களைப் பெறுவதைப் பார்க்கும்போது கடமையை உணர்ந்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகள் ஓரளவுக்கு பரவாயில்லை. அரசாங்கம் அனைத்துப் பள்ளிகளையும் (தனியார் பள்ளிகள் உட்பட) இதேபோல் எய்டட் பள்ளிகளாக மாற்றி அந்தப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து பிள்ளைகள் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணம். அனைவராலும் சிரமமில்லாமல் படிக்க வைக்க முடியும். கல்வியின் தரமும் மேம்படுத்தினால் பிள்ளைகளின் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.
This entry was posted on 10/26/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

20 comments:

On October 26, 2010 at 1:25 PM , ஹுஸைனம்மா said...

என்ன நீங்க, பத்தாங்கிளாஸ் மார்க்கைச் சொல்லவே இல்லியே!! அதுதானே இப்ப பதிவுலகில லேட்டஸ்ட் ஃபேஷன்!!

//இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்.//
ROTFL!!

விளையாட்டாச் சொல்லிட்டு வந்தாலும் நல்ல கருத்துகளைச் சொல்லிருக்கீங்க கடைசியில. இப்பவும் பத்திரிகையில் வேலை செய்றீங்களா? (இல்லை, என் கதை கிதை பத்திரிகையில் போட ரெக்கமெண்டேஷன்... ;-) )

 
On October 26, 2010 at 1:25 PM , ஜோதிஜி said...

அதிகம் படித்தவர்களையும் விட நான் நன்றாக வேலை செய்தேன்.

நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்தேனே நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. நம் கல்வி முறையில் உள்ளது. என்போல் கோடிக்கணக்கான பேர் தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறார்கள்

நூறு சதவிகிதம் உண்மை. திருப்பூரில் ஜெயித்த ஜெயித்துக் கொண்டுருக்கும் 90 சதவிகித மக்களின் சார்பாளர் போலவே உங்களை பார்க்கின்றேன்.

 
On October 26, 2010 at 1:36 PM , ஜெயந்தி said...

நன்றி ஹுசைனம்மா!
எல்லாத்துலயும் ஜஸ்ட் பாஸ் (மானத்த வாங்காம விட மாட்டாங்க போலயே)

கொஞ்சம் உடம்பு சரியில்லாம் இருந்ததால இப்போ வீட்டுலதான் இருக்கேன். என் பேரச்சொல்லி கதைய அனுப்புங்க. போடலன்னா இருக்கு.

 
On October 26, 2010 at 1:38 PM , ஜெயந்தி said...

நன்றி ஜோதிஜி!
இந்த இடுகையே என் போன்றவர்களுக்கு சமர்ப்பணம்தான்.

 
On October 26, 2010 at 1:39 PM , கே.ஆர்.பி.செந்தில் said...

நான் படித்ததும் அரசாங்கப் பள்ளிதான்.. சில ஆண்டுகள் ஆண்டு விழாவே நடக்காது .

 
On October 26, 2010 at 1:41 PM , ganesh said...

ஐன்ஸ்டீன் அப்பபாவிடம் அவரது ஆசிரியர் உங்களது மகன் ஒன்றுக்குமே உதவமாட்டான்..இவனை படிக்க வைப்பது உங்களுக்கு நஷ்டம்தான்...இவனால் உருப்படியாக ஒரு காரியத்தையும் செய்ய முடியாது என்று சொன்னாராம்..

இன்றுவரை ஐன்ஸ்டீனை போல ஒரு அறிவுத்திறமை கொண்ட மனிதர் எனக்கு தெரிந்து இல்லை...

அவரே சொல்லி இருக்கிறார்..பள்ளி படிப்பு என்பது எல்லாவற்றையும் கற்றுகொடுக்கும் ஒன்று இல்லை என்று..

மேலும் அவரது பள்ளி காலங்களை அவர் ஆசிரியர்களை விளையாட்டாக ஒரு ராணுவத்தோடு ஒப்பிட்டு இருப்பார்...


அதே விசயத்தை நீங்கள் உங்களது பாணியில் இங்கு சொல்லி இருக்கிறிர்கள் என நினைக்கிறேன்,,

நல்ல பகிர்வு...தாத்தாவை பற்றி பேசினால் பேசிக்கொண்டே இருப்பேன்))))

 
On October 26, 2010 at 2:03 PM , வெறும்பய said...

பள்ளி நாட்க்களை அருமையாக பகிர்ந்ததொடு.. நல்ல கருத்துக்களையும் சொல்லியிருக்கிறீர்கள்...

 
On October 26, 2010 at 2:04 PM , அருண் பிரசாத் said...

நிதர்சன பதிவு.... பள்ளி முதல் அலுவலம வர சொல்லிவிட்டீர்கள்....

கண்டிப்பாய் கல்விதரம் உயர வேண்டும்

 
On October 26, 2010 at 2:14 PM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

நகைச்சுவையோட சொன்னாலும் உண்மையாச் சொல்லி இருக்கீங்க.. நான் கூட சின்ன ஸ்கூலிலிருந்து பெரிய ஸ்கூலில் போய் இதே மாதிரி மிரண்டிருக்கிறேன்..

இது போன்ற கல்விமுறையிம் மாற்றம் தேவைதான்ப்ப்பா ஜெயந்தி..
உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும்..

 
On October 26, 2010 at 3:01 PM , சந்தனமுல்லை said...

/நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்./

அவ்வ்வ்வ்வ்வ்!

இதுக்குத்தானே நாங்க, படிச்சதை கேக்காம நடிச்சதை கேட்டோம்.....நீங்களா கதை சொல்லிட்டு....ஸ்..ப்பா...:-‍))#பவ்வ்வ்வ்வ்

போஸ்ட் ‍- நல்ல நினைவலைகள்!

ஹூசைனம்மாக்குத்தான் எவ்ளோ சந்தோஷம்.....;‍-)

 
On October 26, 2010 at 5:28 PM , தமிழ் உதயம் said...

நாங்க சென்னை வந்த பின்னர் நான் தீக்கதிரில் வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டரையே அப்போதான் பார்த்தேன். /////

பத்திரிகை அலுவலகத்துல வேலை பார்த்து இருக்கீங்களா

நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. ///

நானும் இப்படி தான். அதனால் வாழ்க்கைய இழந்துடல். வேற திசையில் போய் ஜெயிச்சோம்.

 
On October 26, 2010 at 9:27 PM , ஜெயந்தி said...

நன்றி கே.ஆர்.பி.செந்தில்!

நன்றி கணேஷ்!
உங்களுக்கு தாத்தாவ பத்தி பேச ஆரம்பிச்சா நேரம்போறது தெரியாதுதான்.

நன்றி வெறும்பய!

 
On October 26, 2010 at 9:30 PM , ஜெயந்தி said...

நன்றி அருண்பிரசாத்!

நன்றி முத்துலெட்சுமி!

நன்றி சந்தனமுல்லை!
எனது இந்த எண்ணங்களை பகிர்ந்துகொள்வதற்கு ஏற்ற தலைப்பே. சும்மா உங்களை தமாசுக்கு கலாய்த்தேன்.

 
On October 26, 2010 at 9:32 PM , ஜெயந்தி said...

நன்றி தமிழ் உதயம்!
ஆமா பத்திரிக்கையில் வேலை பார்த்திருக்கிறேன். அந்த அனுபவங்கள் எல்லாம் உண்மையிலேயே கிரேட்.

 
On October 27, 2010 at 9:46 AM , Chitra said...

நல்ல மெசேஜ் உடன், ஒரு பகிர்வு. அருமை.

 
On October 27, 2010 at 10:14 AM , பதிவுலகில் பாபு said...

ரொம்ப உண்மையா எழுதியிருக்கீங்க ஜெயந்தி.. எளிமையான நடையில கேசுவலா விசயங்களை சொல்லியிருக்கீங்க..

நமது கல்விமுறைதான் பெரும்பாலான மாணவர்களுக்கு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்துது.. தேவையே இல்லாத பல விசயங்கள்..

நான் காலேஜ் முடிக்கற வரைக்குமே சொல்லிக்கொள்ளும்படி எனக்கு நல்ல ஆசிரியர்கள் அமையவே இல்ல.. எல்லாருமே எங்களைய வைச்சிக் கத்துக்கறவங்களாகவே அமைஞ்சாங்க..

இப்போல்லாம் அரசாங்கப் பள்ளிகள் மட்டுமில்லாம.. மக்கள்கிட்டயிருந்து காசை அடிச்சுப்புடுங்கற பிரைவேட் ஸ்கூல்ஸ் வரை டீச்சிங் ரொம்ப மோசமாவே இருக்கு..

படிப்புக்கும் நம்முடைய திறமைக்கும் சம்பந்தம் இல்லைன்னு நீங்க சொன்னது ரொம்ப உண்மை..
நன்றி..

 
On October 29, 2010 at 8:27 AM , Sriakila said...

//
சந்தனமுல்லை said...

/நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்./

அவ்வ்வ்வ்வ்வ்!

இதுக்குத்தானே நாங்க, படிச்சதை கேக்காம நடிச்சதை கேட்டோம்.....நீங்களா கதை சொல்லிட்டு....ஸ்..ப்பா...:-‍))#பவ்வ்வ்வ்வ்
//
அவங்க சொல்றது சரிதானே.

 
On November 4, 2010 at 3:20 AM , எம் அப்துல் காதர் said...

"ஜெயந்தி, தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த 'தீபாவளி' நல் வாழ்த்துகள்"

 
On November 8, 2010 at 4:29 PM , அஹ‌ம‌து இர்ஷாத் said...

ந‌ல்ல‌ ப‌கிர்வு அருமையான‌ நினைவுக‌ள்..

 
On November 14, 2010 at 1:27 PM , ஜெயந்தி said...

நன்றி சித்ரா!

நன்றி பதிவுலகில் பாபு!

நன்றி Sriakila!

நன்றி அப்துல் காதர்!
வாழ்த்துக்களுக்கு நன்றி!

நன்றி அஹமது இர்ஷாத்!