1. காலையிலும் மாலையிலும் வாசல் தெளித்து கோலம் போடப்போகும்போது எங்கிருந்தோ கூட்டமாக கிளம்பி வந்து நம்மை அட்டாக் பண்ணுமே கொசுக்கள், கோலம் போடுவதற்குள் பாடாய்ப்படுத்திவிடும். அதனுடன் டான்ஸ் ஆடிக்கொண்டுதான் கோலம் போடமுடியுமே அப்போது.

2. அரிவாள்மனையில் கறி நறுக்கும்போதோ அல்லது மீன் கழுவும்போதோ மூக்கு நமநமக்கும், காதுக்குள் ஏதோ ஊர்வதுபோல் இருக்கும், எங்காவது உடனே சொரிய வேண்டும்போல் அரிக்குமே அப்போது.

3. அடுப்பில் பால் பொங்க தொடங்கும் நேரமாக இருக்கும் அல்லது எண்ணெயில் கடுகு போட்டு வெடிக்கத் துவங்கும் நேரமாக இருக்கும் அப்போது லேண்ட் லைன் அடிக்கும். அடுப்பில் உள்ளதை என்ன செய்வது என்று புரியாமல் தவித்து ஏதோ ஒன்றை செய்துவிட்டு அவசரமாக போனை எடுத்தால் பிஎஸ்என்எல்-லின் ரெக்கார்டட் வாய்சாக இருக்கும் அல்லது ராங் காலாக இருக்குமே அப்போது.

4. பஸ்சுக்காக காத்திருக்கும்போது நாம் எதிர் பார்க்கும் பஸ்சைத் தவிர அனைத்து ரூட் வண்டிகளும் நிறைய போகும். அடுத்த முறை வேறு ரூட் பஸ்சிற்காக காத்திருக்கும்போது நாம் முதல் நாள் காத்திருந்து வராமல் தவித்த வண்டியாக போகும் இப்போதும் நாம் எதிர்பார்க்கும் பஸ்சே வராதே அப்போது.

5. ஒருவழியாக பஸ்சிற்குள் ஏறி உட்கார இடம் இருக்காது. நின்றுகொண்டே அரை மணி நேரம் செல்லுவோம். அப்போது வரும் ஸ்டாப்பிங்கில் ஏறும் பெண் நின்ற இடத்தில் அமர்ந்திருப்பவர்கள் அடுத்த ஸ்டாப்பிங்கில் இறங்குவார்கள். நாம் அப்படியே நின்றுகொண்டிருப்போமே அப்போது.

6. காலையில் அலுவலம் செல்ல பஸ்சை பிடிப்பதிலேயே லேட்டாகியிருக்கும் (அப்போதே மேனேஜரின் முகம் வந்துபோகும்) அதுபோதாதென்று வரும் சிக்னலில் எல்லாம் பஸ் நிற்குமே அப்போது.

7. வெயிலில் வெளியே அழைத்துவிட்டு வீட்டுக்கு வந்து பேனை போட்டுவிட்டு உட்காரும்போது கரெண்ட் போகுமே அப்போது. (நல்ல தூக்க நேரத்தில் கரெண்ட் போகும்போதும்)

8. வீட்டுக்கு விருந்தினர் வந்திருக்கும்போது தண்ணீர் மோட்டார் ரிப்பேராகிவிடுமே அப்போது.

9. மழை நீரில் கால் பாதம் நனையாமல் பார்த்து பார்த்து மெல்ல நடந்து சென்று கொண்டிருக்கும்போது வேகமாக வரும் வாகனம் நம் மீது மழை நீரை வாரி அடித்துச் செல்லுமே அப்போது.

10. பத்தாவதாக எதை போடுவது என்று யோசிக்கும் வேளையில் எதுவுமே தோன்றாமல் இருக்குமே அப்போது.

(யாருங்க அது குத்து சீசன் முடிஞ்சுபோச்சுன்னு சொல்றது. பழங்கள் எல்லாம் சீசன் முடிஞ்சு போனால் அடுத்த வருடம் சீசன் வருமே அதுபோல இது அடுத்த சீசன்)
அந்தோணி முத்து
8/25/2010 | Author: ஜெயந்தி
சில நாட்களாக இந்தப்பக்கம் வரமுடியாத அளவுக்கு வேலை. நேற்று இன்ட்லியை திறந்தவுடன் மேலேயே டோண்டு அவர்களின் பதிவு இருந்தது. பதிவர் அந்தோணி முத்து மறைவு என்ற தகவலுடன்.

இந்த ப்ளாக் துவங்கியவுடன் இதில் தமிழில் டைப் பண்ணுவதற்கு அம்மா என்றால் எஎம்எம்எ என்று ஆங்கிலத்தில் அடிக்க வேண்டும் என்று என் பையன் சொன்னான். எனக்கு இந்தக் கதையே வேணாம் தமிழிலேயே எழுத்துக்களை டைப் பண்ண வேண்டும் அதற்கு ஏதாவது செய்துகொடு என்று கேட்டேன். அவன் அழகி ஃபாண்டை டவுண் லோடு செய்து தந்தான். இப்போதும் அதைத்தான் உபயோகிக்கிறேன். மெயில் அனுப்ப வேண்டுமானால்கூட (எனக்கு ஆங்கிலம் படிப்பது, எழுதுவது எல்லாம் அலர்ஜி) அழகியிலேயே டைப் பண்ணி அனுப்புகிறேன்.

யாரோ தமிழ் ப்ளாக்கை கண்டுபிடித்துக் கொடுத்தார்கள். யாரோ அழகி ஃபாண்டை கண்டுபிடித்துக்கொடுத்தார்கள் என்று உபயோகித்துக்கொண்டிருந்தேன். இப்போது அழகி ஃபாண்டை கண்டுபிடித்தவர்களில் அந்தோணி முத்துவும் ஒருவர். அவர் யாரோ எவரோ இதுவரை அவரை நான் அறிந்ததில்லை. ஆனால் அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார். பாலாஜி என்ற பதிவர் அவருக்கு உறுதுணையாக இருந்திருப்பதை அறிகிறேன்.



அந்தோணி முத்துவைப் பற்றி மேலதிக விவரங்கள் தெரியவில்லை. அவர் மாற்றுத் திறனாளி என்று அறிகிறேன். அவரது ப்ளாக்கிற்குச் சென்று படித்தேன். அவரது அண்ணனைப்பற்றி எழுதியுள்ளார். அவரது பிரிந்துபோன காதலியைப் பற்றிய பதிவைப் படிக்க முடியவில்லை அத்தனை சோகம். அவர் மறைந்தாலும் அவரது நினைவுகளைத் தாங்கி அவரது வலைப்பூ உள்ளது.

அவருக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

"பாய் 300 சிக்கன் போடுங்க"

வீட்டு வாசலில் இருந்தது மட்டன் ஸ்டால்.
பாய் லெக் பீஸை வெட்டி எடை போட்டார். வீட்டு வாசலில் கடை என்பதால் பழக்கத்தின் காரணமாக எந்த மாதிரி சிக்கனோ மட்டனோ தேவை என்பதை சொல்லாமலேயே போட்டுவிடுவார்.

"350 இருக்கு. போடவா?"
"நான் 300 தான கேட்டேன்"
"இதுக்குத்தான் சார அனுப்புங்கன்றது. அவர் வந்தாருன்னா புரிஞ்சுக்கிட்டு அமைதியா வாங்கிட்டுப் போயிருவாரு"
"ஆமா வெளியில நல்ல பேரு வாங்க பேசாம வந்துருவாரு. வீட்டுல நல்ல பேரு வாங்கனும்னு நெனக்க மாட்டாரு."
"ஆமா பொம்பளங்க யாரு புருஷன பாராட்டியிருக்கீங்க."
"நாங்க பாராட்டுனம்னா நீங்க அப்படியே ஒக்காந்துருவீங்க பாய்"
"ஆமா நீங்க சொல்றதும் சரிதான். நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா அதுக்கு எங்க வீட்டம்மாதான் காரணம்."

கடையில் கூட்டம் அதிகமிருக்கும் நாட்களில் அவரது மனைவியும் கடைக்கு வருவார். பாய் வெட்டிய கறியை கவரில் வாங்கிக் கொடுப்பது, பணத்தை வாங்கிக்கொண்டு சில்லரை கொடுப்பது, சிக்கன் தீர்ந்துவிட்டால் கோழியை வெட்டி உரித்துக்கொடுப்பது என்று அவருக்கு சரியாக சுழலுவார். இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் இருக்கும். மனைவியை வெடுக்கென்று பேசமாட்டார். மூஞ்சியைக் காட்ட மாட்டார்.

ஒரு ஞாயிறன்று மதிய நேரம் கடைக்குச் சென்றேன். அவரது மனைவி சுவரில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
" என்னங்க பாய் இப்படித் தூங்கறாங்க என்றேன்"
அதற்கு அவர் "ஆமாங்க என்ன செய்றது நான் 11-12 மணிக்கு வீட்டுக்கு போவேன், என் பெரிய மகன் 1 மணிக்கு வருவான். சின்ன மகன் 2 மணிக்கு வருவான். எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறிவிட்டு படுக்கனும். திரும்பவும் காலையில் சீக்கரமே எந்திரிக்கனும். அவங்களும் என்ன பண்ணுவாங்க. தூங்கட்டும்" என்றார். பெண்மையை புரிந்துகொள்பவர்களைக் கண்டால் ஏனோ தலைவணங்கத் தோன்றுகிறது.

ஞாயிறன்று கடைக்கு வந்தால் பாய் நம்மை கண்டுகொள்ள மாட்டார். அவ்வளவு கூட்டம் அவரை மொய்த்திருக்கும். மற்ற நாட்களில் போனால் அவரால் பேசாமல் இருக்க முடியாது. அவரது பேச்சு நியாயமாகவும் எதார்த்தமாகவும் இருப்பதாக எனக்குப்படும்.

"எங்க வீட்டுக்கு வந்த சொந்தக்காரங்க ரெண்டு பேரு எங்க வீட்டுக்கே வந்து என்னையே கொற பேசிட்டுப்போனாங்க. அப்ப நான் கூலி வேலைதான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் நீ கூலி வேலதான செய்யுறன்னு பேசுனாங்க. அவங்க பேசறதால நான் அடுத்து என்ன செய்றதுன்னு முயற்சி பண்ணி இந்தக் கடை வச்சேன். அதுனால அவங்க மேல கோபப்படுறதெல்லாம் இல்ல. வேற யாராவது இருந்தா இந்த மாதிரி பேச்சைக்கேட்டு அப்படியே ஒக்காந்துருவாங்க. நான் அந்தப் பேச்சை எடுத்துக்கொண்டு முன்னேறனும்னு நெனப்பேன்"
அவர் பேசிக்கொண்டே கறியை வெட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று பேச்சு திசை திரும்பியது.



"எங்க தம்பி வந்திருந்தான் அவன் பொண்ண மாப்பிள்ள வீட்டுல சரியா நடத்தலன்னு சொல்றான். ஆறுன சாதம்தான் போடுறாங்களாம். தம்பி வீட்டுல தனிக்குடுத்தனம் அதுனால மூணு வேளையும் சூடா சாப்பிடுவாங்க. மாப்பிள்ள வீட்டுல கூட்டுக்குடும்பம். அதுனால காலையிலேயே சமைச்சுருவாங்க. அது ஆறிப் போயிடுது. அதையெல்லாம் ஒரு குறையா சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.

"ஆமா பாய் பொண்ணுங்க போற எடத்துல அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும். ஏன்னா அவங்க வீட்டுல ஒரு பழக்கம் இருக்கும் போற இடத்துல வேற மாதிரி பழக்கவழக்கம் இருக்கும். அதுனால அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும்" என்றேன்.

"மாப்பிள்ளை சொல்றாரு உங்க பொண்ணு சண்ட போடுறத மட்டும் சொல்றாளே, அவளை வெளிய கூட்டிட்டுப்போறது சந்தோஷமா பேசிக்கிறதயெல்லாம் சொல்றாளான்னு கேக்குறாரு. அவரு சொல்றதும் சரிதானே அவங்க பிரச்சனையில நம்ம தலையிடலாமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.

"ஆமாம் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் இருக்குற பேரண்ட்ஸ் தலையிடாம இருந்தாலே அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துப்பாங்க" என்றேன்.

"அப்பறம் என் தம்பி நான் கேட்டேன் ஏன்டா உன் பொண்ணு கஷ்டப்படுதுன்னு இவ்வளவு வேதனைப்படுறியே, உன்னையே நம்பி ஒரு பொண்ணு வந்துச்சே அத இன்னிக்கி வரைக்கும் எப்படிடா வச்சிருக்கன்னு கேட்டேன். என்னாங்க நான் சொல்றது"

டிஸ்கி: பத்து நாள் பதிவு போடலன்னா காணாம போயிருவாங்கன்னு சவுந்தர் பயமுறுத்துனதுனால உடனே பதிவு போட்டுட்டேன். (எப்படியெல்லாம் பயமுறுத்துறாங்கப்பா)