தோள்ல கை போடுறாங்கடா, அப்புறம் ஏதோ கடாமுடா நடக்குது. அப்புறம் குழந்தை பொறக்குது.
8ம் வகுப்பு அல்லது 9ம் வகுப்பு படிப்பார்கள் அந்தச் சிறுவர்கள் பேசிக்கொண்டே என்னை தாண்டி சென்றுவிட்டனர். இந்த வயதில் எல்லோருக்கும் வரும் இயல்பான சந்தேகங்கள். ஆண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசிக்கொள்வார்கள். பெண் பிள்ளைகள் வெளிப்படையாக பேசுவது இல்லை.

புதிய பொருளாதாரக்கொள்கை என்ற பூதம் உள்நுழைவதற்கு முன்பு செக்ஸ் சம்பந்தமான விஷயங்களை தெரிந்துகொள்வதற்கு செக்ஸ் புத்தகங்கள் மற்றும் பிட்டு படம்ன்னு சொல்வாங்களே (பிட்டு படம் என்பது கூட இப்போது அனைத்து படங்களிலும் பேசப்படுவதால் தெரிகிறது) அதுமட்டும்தான்னு நெனைக்கிறேன். அதுவும் தேடிப்போக வேண்டும். எனவே அதிக முனைப்புள்ள பிள்ளைகள் மட்டுமே அதைத்தேடிப் போவார்கள். சில பிள்ளைகள் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்ற நினைப்போடு இருப்பார்கள். அவர்கள் இந்தப்பக்கமே போக மாட்டார்கள். சில பிள்ளைகள் இந்தப்பக்கமா அந்தப்பக்கமா என்று தடுமாடுவார்கள். அவர்களைத்தான் இரண்டும்கெட்டான் என்பது. இவர்கள் எந்தப்பிள்ளைகளுடன் சேர்கிறார்களோ அதைப்பொருத்தே இவர்கள் பழக்க வழக்கம் அமையும். அதனால் பெற்றோர்கள் அவர்கள் பிள்ளைகளின் நண்பர்களை கண்கொத்திப்பாம்பாக கண்காணிப்பார்கள். இதெல்லாம் அந்தக்காலம்.

இப்போது நம் வீட்டு நடுக்கூடத்திற்கே டிவி மூலமாக அனைத்தும் வந்துவிழுகிறது. இன்டர்நெட்டைத் திறந்தால் கேட்கவே வேண்டாம். இப்போ உள்ள குழந்தைகளை தரம் பிரிக்க முடியுமா? அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர்கள் முன்னே வந்து விழுகிறது. உண்மையிலேயே அவர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கிறது.

எல்லாம் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும். கொஞ்ச நாளைக்கு முன்னால் நெசவாளிகள் கஞ்சித் தொட்டி வைத்து கஞ்சி வாங்கிக்குடிக்கும் நிலைமைக்கு ஆளானார்கள். தேயிலைத் தொழிலாளர்கள் நிலைமை அதைவிட மோசமாக இருந்தது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும், எலிக்கறி தின்றதும். இப்போது நாம் அனைத்தையும் மறந்துவிட்டோம். நமக்குத்தான் வரிசையில் நின்று மொட்டைபோட்டுக்கொள்ளுவதும் படத்தை பார்ப்பதும் என்று மிகப்பெரிய பொருப்புகள் இருக்கிறதே.

அதனால் விளைந்த நன்மைகள்னு பாத்தா சில லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதுவும் அவர்களின் வால்களாக பின்னாலேயே வந்துள்ளவர்கள் அவர்கள் சம்பளத்தையும் பிடிங்கிக்கொள்வார்கள். எப்படின்னு கேட்குறீங்களா? ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் நன்றாக டிரஸ் செய்து கொள்ள வேண்டும் அல்லவா அதற்காக பன்னாட்டுக்கம்பெனிகள் துணிக்கடைகளை இங்கே திறந்துள்ளன அல்லவா? அவற்றில் ஒரு சட்டையின் விலை 2000. வாட்ச் 4000, 5000 இன்னும் அதிகமாகவும் உள்ளது. நான் சொல்வது மீடியம் விலைகள். ஷீ போட்டுக்கொள்ள வேண்டும் அல்லவா? அதுவும் 4000, 5000. அப்புறம் ஆக்சி சென்ட் இந்த மாதிரி சில சில்லறைகள். அப்புறம் சாப்பிட ஃபீஸா. ஒரு வேலை சாப்பாடே 500, 1000ன்னு ஓடும். அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை எப்படி அவர்களே பிடுங்கிக்கொள்கிறார்கள் பார்த்தீர்களா?

அப்புறம் சென்னை போன்ற பெருநகரங்களில்தான் சாஃப்ட்வேர் கம்பெனிகள் இருப்பதால் அவர்கள் வீட்டைவிட்டு இங்கே வந்து இருக்க வேண்டும். அவர்களுக்கு சம்பளம் அதிகம் என்றவுடன் வாடகைக்கு விடும் ஹவுஸ் ஓனர்கள் வாடகையை கன்னாபின்னாவென்று ஏற்றிவிடுகின்றனர். இதெல்லாம்போக அவர்கள் வீட்டு கமிட்மென்டுக்கு பணம் அனுப்ப வேண்டும்.

இதற்கு நடுவில் ரியல் எஸ்டேட்காரர்கள் இந்தியாவையே சாஃப்ட்வேர் மக்கள்தான் வாங்கிக்கொள்வதுபோலவும் மற்றவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டும் போலவும் நிலத்தின் மதிப்பை தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றிக்கொண்டனர்.

பன்னாட்டு கம்பெனிக்காரன் சொல்லிக்கொடுப்பதுபோல் உடை அணிகிறார்கள். சாப்பிடுகிறார்கள். கம்பெனிக்காரனுக்கு வேலை நடக்க வேண்டும் என்பதற்காக சனிக்கிழமை இரவுகளில் இவர்களை ரிலாக்ஸ் பண்ணுகிறேன் என்று குடிக்க டான்ஸ் ஆட எல்லாம் கற்றுக்கொடுக்கிறான். அவனுக்கு நமது கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவன் சம்பாதிக்க வருகிறான். இவர்களை எப்படியெல்லாம் வேலை வாங்க வேண்டும் என்று தெரிந்து அதன்படி வேலை வாங்குகிறான். அதாவது ஆடுகிற மாட்டை ஆடிக்கறப்பது பாடுகிற மாட்டை பாடிக்கறப்பது. நம் நாட்டை ஆள்கிற நமது ஆள்களுக்கே நமது கலாச்சாரத்தைப்பற்றி கவலையில்லாதபோது அவர்கள் ஏன் கவலைப்பட வேண்டும்.

சாஃப்ட்வேர் பியுபிள்தான் நமது கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று அடுத்த பலி. நாம் நமது பிள்ளைகளை எப்படி வளர்க்கிறோம். பணம் சம்பாதிக்கும் மெஷின்களாக. சிறு வயதில் இருந்தே காலையில் எழுத்து பள்ளிக்குச் செல்ல வேண்டும். சாயங்காலம் வந்தவுடன் ஏதாவது கொறித்துவிட்டு டியூஷனுக்கு ஓட வேண்டும். சில பிள்ளைகள் தின்னக்கூட முடியாதபடி ஸ்கூல் அருகிலேயே டியூஷன் என்று அப்படியே படித்துவிட்டு வருவார்கள். 8 மணி 9 மணிக்கு வீட்டுக்கு வந்து அதன்பிறகு ஹோம் ஒர்க் செய்துவிட்டு படுக்க வேண்டும். ஒரு குழந்தையின் ரொடீன் ஒர்க் இதுதான். அவன் கல்லூரி படிப்பு முடிக்கிறவரை. அவனுக்கு தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பது தெரியாது. நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. படிப்பு படிப்பு மட்டுமே தெரியும். சரி பள்ளியிலாவது நமது வாழ்க்கைமுறை நாட்டு நிலைமை பற்றியெல்லாம் சொல்லித்தருகிறார்களா என்று பார்த்தால், அங்கே புத்தகத்தை மனப்பாடம் பண்ணி பரிட்சையில் வாந்தி எடுக்கத்தான் சொல்லித்தருகிறார்கள்.

படிப்பு முடிந்ததும் நேராக பன்னாட்டு கம்பெனிக்கு வேலைக்குப் போகிறான். அவன் சொல்லித்தருவதுதான் சரியான வாழ்க்கை முறை என்று நினைக்கிறான். அதைப் பின்பற்றுகிறான். அவனது நிலைமைப் பாருங்கள் உலக்கைக்கு ஒருபக்கம் இடின்னா மத்தளத்துக்கு ரெண்டுபக்கமும் இடிங்கற மாதிரி, அவன் கம்பெனிக்காரன் சொல்ற மாதிரி வாழ்க்கைமுறையை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்றால் அங்கே அவன் வித்தியாசமாக பார்க்கப்படுவான். அதன்படி நடந்தால் நமது மக்களால் சாஃப்ட்வேர் மக்கள்தான் கலாச்சாரத்தை கெடுக்கிறார்கள் என்று போடும் கூப்பாட்டையும் எதிர்கொள்ள வேண்டும். இதுல வேடிக்கை என்னன்னா பெண்களை மட்டும் டான்ஸ் ஆடக்கூடாது என்று தூக்கிப்போட்டு மிதிப்பார்கள். அவர்களும் இதேமுறையில் படித்து வந்தவர்கள்தானே. அவர்கள் தனியாக வானத்தில் இருந்து குதித்துவிடவில்லையே. அவர்களை மட்டும் தண்டிப்பது ஏன்?

புதிய பொருளாதாரக்கொள்கை வருவதற்கு முன்னாலேயே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தலையால் அடித்துக்கொண்டார்கள். கலாச்சார சீரழிவு ஏற்படும் அதனால கதவை திறந்துவிடும்போது உள்ளே என்ன என்ன நுழைகிறது என்று பார்த்து ஜாக்கிரதையாக அனுமதியுங்கள். உள்ளே வருபவற்றின் குடுமியும் உங்கள் கைகளில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் ஒன்று வெளிநாட்டுக்கம்பெனிகளே வரக்கூடாது என்று சொல்லவில்லை. வருவதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார்கள். உடனே நம் ஆட்கள் கம்யூனிஸ்ட்கள் பிற்போக்குவாதிகள். நாட்டை வளர்ச்சிப்பாதையில் செல்லவிடாமல் பின்னால் பிடித்து இழுப்பவர்கள் என்று கிளப்பிவிட்டார்கள். இன்றுவரை அந்த வரி மட்டுமே எல்லோராலும் பேசப்படுகிறது. உண்மையை ஏன் யாரும் உணரவில்லை என்று தெரியவில்லை.

அப்போதே அரசாங்கம் எங்கள் பிள்ளைகளை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் சென்று குடி, டான்ஸ் போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தக்கூடாது என்று அவர்களைத்தானே தடுத்திருக்க வேண்டும். உள்ளே நுழைபவற்றிலும் நம் கலாச்சாரத்திற்கு எதிரானவற்றை அங்கேயே தடுத்திருக்க வேண்டும்தானே. நல்லா இரண்டு கதவையும் விரியத் திறந்துவைத்துவிட்டு இப்போது பெண்களால்தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று பெண்களை பிடித்து அடித்து தங்கள் வீரத்தைக்காட்டிக்கொள்பவர்கள், மற்றும் பெண்களால் மட்டும்தான் கலாச்சாரம் சீரழிகிறது என்று பேசுபவர்கள் பன்னாட்டு கம்பெனிக்காரர்களையோ அல்லது ஸ்டார் ஹோட்டல்க்காரர்களையோ அடித்து தங்கள் வீரத்தைக் காட்ட வேண்டியதுதானே.

கல்யாணம் ஆனவுடன் சின்னச்சின்னப் பிரச்சனைகளுக்கெல்லாம் ஈகோ பிரச்சனை வந்து டைவர்சுக்கு செல்கிறார்கள். பெற்றோர்களால் எடுத்துச்சொல்ல முடியவில்லை. சிறிய வயதில் பணம் சம்பாதிக்கும் மிஷினாக வளர்த்துவிட்டு இப்போது புத்திசொன்னால் எடுபடுமா? பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அதிகமாக இருக்கிறது.

அடுத்து இந்த குடி. அதைத்தான் கவர்ன்மென்டே ஆதரிக்கிறதே. முன்பெல்லாம் குடித்தால் கேவலம் என்ற ஒரு எண்ணம் குடிப்பவர்களுக்கும் இருந்தது. அதனால் வெளியில் தெரியாமல் குடிப்பார்கள். குடிக்கிறார்கள் என்றால் அவர்களை மதிக்கவே மாட்டார்கள். அவங்கெடக்குறான் குடிகாரன் என்று சொல்வார்கள். எம்ஜிஆர் அவர்கள் அவர் படத்தில் குடிப்பதுபோலவோ சிகரெட் குடிப்பதுபோலவே நடிக்க மாட்டாராம். அப்படி நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் அதைப்பின்பற்றக்கூடும் என்ற சமூக அக்கறை. என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் இரண்டு பேரும் பாட்டு டான்ஸ் மூலம் குடியினால் ஏற்படும் விளைவுகளை விளக்கி பாடுவார்கள். வள்ளுவர் கள்ளுண்ணாமை அதிகாரத்தையே வைத்திருக்கிறார். சங்க இலக்கியங்களும் மது அருந்தக்கூடாது என்றே சொல்லுகிறது. ஆனால் இப்போது குடிப்பது ஏதோ கவுரவம்போல் ஆகிவிட்டது. நமது கலாச்சாரமே குடிப்பதுதான் என்பது போலவும் மாறிவிடும் என்று தோன்றுகிறது. நல்ல தரமான படங்கள்கூட இயல்பாக இருக்கவேண்டும் என்பதற்காக நாயகர்கள் குடிப்பார்கள். நம்ம ப்ளாக்கில்கூட அதுஒரு சாதாரண நிகழ்வுபோல பேசப்படுகிறது. இதை எல்லாம் பார்க்கும்போது இன்னும் இந்தக்குடியை நாடாமல் இருக்கும் ஒருசிலரையும் மாற்றிவிடுமோ என்ற பதைப்பு என்னுள் வரும்.

பஸ்சில் வரும்போது டாஸ்மாக் கடை இருந்தால் திரும்பிப்பார்ப்பேன். டீசன்டாக இருப்பவர்கள்கூட நிறைய பேர் நின்று வாங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த கூச்ச உணர்வும் இருக்காது. அதைப்பார்க்கும்போது இனி வரும் தலைமுறை உடலில் ரத்தத்திற்குப் பதிலாக ஆல்கஹால் ஓடுமோ என்ற சந்தேகம் வரும். இந்த கலாச்சார சீரழிவிற்காக எந்த ஆணும் அடி வாங்கவில்லை. கலாச்சார சீரழிவு என்றால் பெண்களை மட்டும் எப்போதும் அடித்துக்கொண்டிருப்போம். அது எதனால் நடக்கிறது என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். பெண்களை அடிப்பதுதானே ஈஸி அவர்கள் திருப்பி அடிக்கும்வரை.

டிஸ்கி: எங்கள் வீட்டில் ஆஷ் டிரே இல்லை. குடிப்பவர்களும் இல்லை. நாங்கள் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோமோ? கலாச்சாரத்தை மதிக்கவில்லையோ?
This entry was posted on 10/08/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

25 comments:

On October 8, 2010 at 1:46 PM , Anonymous said...

nice article...

புதிய பொருளாதாரக்கொள்கை வருவதற்கு முன்னாலேயே கம்யூனிஸ்ட் கட்சிக்காரர்கள் தலையால் அடித்துக்கொண்டார்கள். கலாச்சார சீரழிவு ஏற்படும் அதனால கதவை திறந்துவிடும்போது உள்ளே என்ன என்ன நுழைகிறது என்று பார்த்து ஜாக்கிரதையாக அனுமதியுங்கள். உள்ளே வருபவற்றின் குடுமியும் உங்கள் கைகளில் இருப்பதுபோல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். அவர்கள் ஒன்று வெளிநாட்டுக்கம்பெனிகளே வரக்கூடாது என்று சொல்லவில்லை. வருவதை கட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள் என்றுதான் சொன்னார்கள். உடனே நம் ஆட்கள் கம்யூனிஸ்ட்கள் பிற்போக்குவாதிகள். நாட்டை வளர்ச்சிப்பாதையில் செல்லவிடாமல் பின்னால் பிடித்து இழுப்பவர்கள் என்று கிளப்பிவிட்டார்கள். இன்றுவரை அந்த வரி மட்டுமே எல்லோராலும் பேசப்படுகிறது. உண்மையை ஏன் யாரும் உணரவில்லை என்று தெரியவில்லை.
repeat te.te...

 
On October 8, 2010 at 3:41 PM , http://rkguru.blogspot.com/ said...

good post...cograts

 
On October 8, 2010 at 3:44 PM , somanathan said...

arumai

 
On October 8, 2010 at 4:18 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//டிஸ்கி: எங்கள் வீட்டில் ஆஷ் டிரே இல்லை. குடிப்பவர்களும் இல்லை. நாங்கள் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோமோ? கலாச்சாரத்தை மதிக்கவில்லையோ? //

Yes. போய் நல்ல டாக்டரை (விஜய் இல்லை) பாருங்க

 
On October 8, 2010 at 5:11 PM , அம்பிகா said...

நல்ல பகிர்வு ஜெயந்தி.
முன்பெல்லாம் `குடி’ என்றாலே பாவம் என்ற எண்ணம் இருந்தது. இப்போ, கட்டிங், குவார்ட்டர் என்பதெல்லாம் சாதாரணமாய் புழங்கும் வார்த்தை ஆகிவிட்டது. அது தான் ஃபேஷன் ஆகிவிட்டது.
சீரியல்களை பாருங்கள்.... எப்படி கதை போகிறதென்று.

 
On October 8, 2010 at 5:50 PM , Sriakila said...

//பஸ்சில் வரும்போது டாஸ்மாக் கடை இருந்தால் திரும்பிப்பார்ப்பேன். டீசன்டாக இருப்பவர்கள்கூட நிறைய பேர் நின்று வாங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த கூச்ச உணர்வும் இருக்காது. அதைப்பார்க்கும்போது இனி வரும் தலைமுறை உடலில் ரத்தத்திற்குப் பதிலாக ஆல்கஹால் ஓடுமோ என்ற சந்தேகம் வரும். இந்த கலாச்சார சீரழிவிற்காக எந்த ஆணும் அடி வாங்கவில்லை. கலாச்சார சீரழிவு என்றால் பெண்களை மட்டும் எப்போதும் அடித்துக்கொண்டிருப்போம். அது எதனால் நடக்கிறது என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். பெண்களை அடிப்பதுதானே ஈஸி அவர்கள் திருப்பி அடிக்கும்வரை.//

அழுத்தமான பதிவு!

//டிஸ்கி: எங்கள் வீட்டில் ஆஷ் டிரே இல்லை. குடிப்பவர்களும் இல்லை. நாங்கள் இன்னும் பழங்காலத்திலேயே இருக்கிறோமோ? கலாச்சாரத்தை மதிக்கவில்லையோ? //

நல்லக் குடும்பம்! நல்ல வளர்ப்பு! வாழ்த்துக்கள்!

 
On October 8, 2010 at 6:22 PM , சீனு said...

இது வரவேற்கப்படவேண்டிய பதிவு. நிச்சயம் நம் கலாச்சாரம்/வாழ்க்கைமுறை ஆகியவற்றிற்கு வேட்டு வைப்பது 1992 கதவை திறந்துவிட்டபொழுது ஆரம்பித்தது. இன்று, கல்வி என்பது குமாஸ்தாவை உருவாக்குவது என்று நிலை கொண்டுவிட்டது. படிக்கவேண்டும், வைட் காலர் வேலை வேண்டும், செட்டில் ஆக வேண்டும். இது தான் தாரக மந்திரம் ஆகிவிட்டது.

இடையில் நமக்கு உணவளிக்கும் விவசாயத்தை விட்டுவிட்டோம். இதன் ஆபத்தை நாம் நிச்சயம் புரிந்து கொள்வோம்.

எந்த வளமும் இல்லாத நாடு தான் இறக்குமதியையும் ஏற்றுமதியையும் நம்பிக் கொண்டிருக்கும். ஆனால், நமக்கு அது தேவையில்லை. உலகில் வல்லரசாக ஆக நினைக்காமல், நாம் நம் சொந்தக்காலில் நின்றாலே போதும்.

 
On October 8, 2010 at 6:23 PM , சீனு said...

//பஸ்சில் வரும்போது டாஸ்மாக் கடை இருந்தால் திரும்பிப்பார்ப்பேன். டீசன்டாக இருப்பவர்கள்கூட நிறைய பேர் நின்று வாங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு எந்த கூச்ச உணர்வும் இருக்காது.//

ஹி...ஹி...ரொம்ப புகழாதீங்க.

 
On October 8, 2010 at 6:55 PM , Bibiliobibuli said...

"கற்றது தமிழ்" பார்த்த உணர்வு உண்டானது. தொழில்நுட்பம், பொருளாதார கொள்கைகள், இவற்றோடு இயைந்த வாழ்க்கைமுறை காரணமாக சமூக பண்பாட்டு விழுமியங்களிலிருந்து வழுவுதல் இல்லாமலில்லை. தனிமனித ஒழுக்கம் என்று ஒன்றிருக்கிறதே!!!! கற்றது தமிழ் காதாபாத்திரத்திற்கு வேறெந்த social support ம் கிடைக்காத மாதிரி கதையமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால், யதார்த்தம் எல்லோருக்குமா அப்படி?

 
On October 8, 2010 at 7:45 PM , ஜெய்லானி said...

ஒவ்வொரு வரியும் சும்மா நச்சுன்னு எழுதி இருக்கீங்க ..சூப்பர்..!!! எப்பவுமே நம்க்கு லேட்டாதானே புரியுது

 
On October 8, 2010 at 8:18 PM , Unknown said...

நான் தினமும் குடிக்கிறேன் அளவாகவும், அதீதமாகவும் நிதிநிலைக்கும், அலுவல் முடிக்கும் திறனுக்கும் ஏற்ப ...

 
On October 8, 2010 at 8:25 PM , vinthaimanithan said...

தெளிவான சிந்தனை. வெல்டன்!

//கலாச்சார சீரழிவிற்காக எந்த ஆணும் அடி வாங்கவில்லை.//

உண்மை... ஒரு பெண் தவறு செய்யும்போது கூடச்சேர்ந்து தவறிழைப்பது ஒரு ஆண் என்பது வசதியாக மறக்கப்பட்டு விடுகிறது எப்போதும்

 
On October 8, 2010 at 10:18 PM , ஜெயந்தி said...

நன்றி ஆர்.கே.குரு!

நன்றி சோமநாதன்!

நன்றி ரமேஷ்!

 
On October 8, 2010 at 10:21 PM , ஜெயந்தி said...

நன்றி அம்பிகா!

நன்றி Sriakila!

நன்றி சீனு!

 
On October 8, 2010 at 10:27 PM , ஜெயந்தி said...

நன்றி ரதி!
புதிய பொருளாதாரக் கொள்கைக்கு முன்பிருந்த வாழ்க்கை முறைக்கு இப்போதுள்ள வாழ்க்கை முறைக்குமான வித்தியாசத்தை பார்த்தால் இது புரியும். நீங்கள் வயதில் இளையவராக இருந்தால் இது புரியாது. தனி நபர் ஒழுக்கத்தையே எடுத்துக்கொண்டாலும் அப்போது இருந்த விகிதாச்சாரத்திற்கும் இப்போது உள்ள விகிதாச்சாரத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

நன்றி ஜெய்லானி!

நன்றி கே.ஆர்.பி.செந்தில்!

 
On October 8, 2010 at 10:28 PM , ஜெயந்தி said...

நன்றி விந்தை மனிதன்!

 
On October 9, 2010 at 11:11 AM , சாந்தி மாரியப்பன் said...

தனி நபர் ஒழுக்கத்தின் அளவுகோலே இப்பொழுதெல்லாம் வேறுபடுகிறது ஜெயந்தி. அடுத்தவன் செய்யும் தப்புகளை விட நாம் குறைச்சலாக செஞ்சா,'அவன் அளவுக்கு நான் மோசமில்லை'ன்னு சொல்றதும், அதுவே நல்லவனுக்கான அடையாளமுமாக ஆகிவிட்டது.

 
On October 9, 2010 at 4:43 PM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்லா எழுதி இருக்கீங்க..ஜெயந்தி..

 
On October 9, 2010 at 8:04 PM , S.Gnanasekar said...

நல்ல அழுத்தமான பதிவு!
முன்பெல்லாம் குடித்தால் கேவலம் என்ற ஒரு எண்ணம் குடிப்பவர்களுக்கும் இருந்தது. அதனால் வெளியில் தெரியாமல் குடிப்பார்கள். குடிக்கிறார்கள் என்றால் அவர்களை மதிக்கவே மாட்டார்கள். இப்போ குடிக்காதவர்களை மதிபதில்லை குடிமகன்கள்..
சோ.ஞானசேகர்.

 
On October 9, 2010 at 10:33 PM , ஜானகிராமன் said...

//கலாச்சார சீரழிவிற்காக எந்த ஆணும் அடி வாங்கவில்லை. கலாச்சார சீரழிவு என்றால் பெண்களை மட்டும் எப்போதும் அடித்துக்கொண்டிருப்போம். அது எதனால் நடக்கிறது என்றெல்லாம் யோசிக்க மாட்டோம். பெண்களை அடிப்பதுதானே ஈஸி அவர்கள் திருப்பி அடிக்கும்வரை.//

நச். 100% உண்மையான வார்த்தைகள்.

புதிய பொருளாதார கொள்ளை பற்றி நம்மைச்சுற்றி நிகழும் சம்பவங்களினுடாக சொல்லியிருப்பது உரைக்கிறது. நன்றி

 
On October 10, 2010 at 2:48 AM , ஜீவன்பென்னி said...

இது ஆணாதிக்க சமூகம்னு சொல்லுறதுக்கு ஒரு எடுத்துக்காட்டுங்க. இந்த மாதிரி விசயங்கள்ல நான் என் நண்பர்களுடன் நிறைய தடவ சண்டையே போட்டிருக்கேன். பல ஆண்கள் இந்த மாதிரி விசியத்துல தான் செய்யுறத வசதியா மறந்திடுவாங்க.

 
On October 10, 2010 at 12:07 PM , ராம்ஜி_யாஹூ said...

வாக்காளர்களாகிய நாம் தானே, புதிய பொருளாதார கொள்கையை ஊக்கு விக்கும் அரசுகளுக்கு வாக்கு அளிக்கிறோம்.

 
On October 10, 2010 at 1:04 PM , Anonymous said...

வீட்டு வாடகை,பிள்ளைகள் படிப்பு சாப்பாடு செலவு ,இதற்கான செலவு ஒருத்தர் சம்பாத்தியத்தில் பத்தாது.ஒரு அபார்ட்மென்ட் வாங்கினால் இரண்டு பேரும் வேலைக்கு போக வேண்டிய கட்டாயம்.அதனால் குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாத டென்ஷன்.இருவரும் வேலைக்கு போவதால் வாழ்க்கையை நின்று நிதானமாக வாழ முடியாத அவலம்.இவர்களின் ஐம்பது அறுபது வயதுகளில் வாழ்க்கையை திரும்பி பார்க்கும போது வாழ்க்கையை இழந்து விட்டோமே என வருத்தம் வநது விடகுடாது.இளசுகளின் தான்தோன்றி தனமான வாழ்க்கையின் விலைகள் என்னவாக இருக்குமோ.

 
On October 10, 2010 at 2:57 PM , ஹுஸைனம்மா said...

//நம்ம ப்ளாக்கில்கூட அதுஒரு சாதாரண நிகழ்வுபோல பேசப்படுகிறது.//

ஆமாங்க!! வந்த புதுசுல ரொம்ப அதிர்ச்சியா இருந்துது.

 
On October 14, 2010 at 6:43 PM , Unknown said...

//அதனால் விளைந்த நன்மைகள்னு பாத்தா சில லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது. அதுவும் அவர்களின் வால்களாக பின்னாலேயே வந்துள்ளவர்கள் அவர்கள் சம்பளத்தையும் பிடிங்கிக்கொள்வார்கள். எப்படின்னு கேட்குறீங்களா? ஐடி கம்பெனிகளில் வேலை செய்பவர்கள் நன்றாக டிரஸ் செய்து கொள்ள வேண்டும் அல்லவா அதற்காக பன்னாட்டுக்கம்பெனிகள் துணிக்கடைகளை இங்கே திறந்துள்ளன அல்லவா? அவற்றில் ஒரு சட்டையின் விலை 2000. வாட்ச் 4000, 5000 இன்னும் அதிகமாகவும் உள்ளது. நான் சொல்வது மீடியம் விலைகள். ஷீ போட்டுக்கொள்ள வேண்டும் அல்லவா? அதுவும் 4000, 5000. அப்புறம் ஆக்சி சென்ட் இந்த மாதிரி சில சில்லறைகள். அப்புறம் சாப்பிட ஃபீஸா. ஒரு வேலை சாப்பாடே 500, 1000ன்னு ஓடும். அவர்கள் கொடுக்கும் சம்பளத்தை எப்படி அவர்களே பிடுங்கிக்கொள்கிறார்கள் பார்த்தீர்களா?//

கவலை தரும் எதார்த்தம். நல்ல பதிவு.

ஒரே ஒரு கருத்து: குடிக்கிறவனெல்லாம் கெட்டவனும் இல்லை. குடிக்காதவனெல்லாம் யோக்கியனும் இல்லை!!