மேரி ஜேன் தூக்கத்திலேயே அலுப்புடன் புரண்டு புரண்டு படுத்தாள். கடினமான கரடுமுரடான படுக்கையின் மீது அவள் தூங்கியதுதான் அலுப்பிற்குக் காரணம். இந்தப் படுக்கை ஒன்றே ஒன்றுதான் அவளிடம் இருந்தது. கடினமான படுக்கைதான் ஒரு கறுப்பினக் குழந்தைக்குப் பொருத்தம். மென்மையான படுக்கைகள் வெள்ளை மனிதர்களுக்கு! என்றிருந்த காலமது.

என்று துவங்குகிறது இந்த புத்தகம். மேரி ஜேன் சுதந்திரமாகப் பிறந்தவள். பருத்திக்காட்டிற்கு செல்லும் வழியில் முன்னால் ஓடும் மேரியைப் பார்த்து அவளது தந்தை சந்தோஷமடைகிறார். இல்லாவிட்டால் அவளும் தொலைதூரத்தில் உள்ள ஒரு பண்ணையில் உள்ள வெள்ளை குழந்தைக்கு வேலை செய்ய அனுப்பப்பட்டிருப்பாள். அவளது தாயும் தந்தையும் அடிமையாக இருந்தவர்கள். உள்நாட்டுக் கலவரத்தின்போது ஆப்ரஹாம் லிங்கன் வெளியிட்ட "அமெரிக்காவின் தென்பகுதி வாழ் கருப்பின அடிமைகள் யாவரும் சுதந்திர மக்கள்" என்ற பிரகடனத்தால் சுதந்திரம் பெற்றவர்கள். அவர்கள் சுதந்திரம் பெற்றபின் பிறந்தவள் மேரி.

பருத்திக்காட்டில் குடும்பமே (சிறுவர் முதல் பெரியவர் வரை) தினமும் பாடுபட வேண்டும். அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை ஓட்டியாக வேண்டும். அவளது அம்மா வெள்ளையர்களின் துணியை துவைத்து இஸ்திரி போட்டுக்கொடுத்து சில்லரை செலவுகளை சமாளிப்பாள். கருப்பர்கள் வெள்ளையர்களின் வீட்டிற்குச் செல்வதானால் பின் வழியாகத்தான் செல்ல வேண்டும். அங்கே செல்வதென்றால் மேரி சந்தோஷமாக செல்வாள். பெரிய பெரிய வீடுகள். காற்றோட்டமான ஜன்னல்கள். ஜன்னல்களுக்குக்கூட வெண்மையாக திரைச்சீலைகள்.

மேரி குதித்து ஓடினாள். அம்மா வெள்ளையர் வீட்டின் பின்வாசல் வழியே சென்றாள். பக்கத்தில் வெள்ளையர் குழந்தைகள் விளையாடுவதற்கு சிறிய வீடு இருந்தது. அதற்குள் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி மேரியை அழைத்தாள். மேரி மெல்ல மெல்ல உள்ளே சென்று விளையாடினாள். அப்போது அங்கே இருந்த ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்தாள். உடனே அப்புத்தகம் அவள் கைகளில் இருந்து பிடுங்கப்படுகிறது. "உனக்குப் படிக்கத் தெரியாது" என்று ஒரு சிறுமி சொல்கிறாள்.

மேரிக்கு அந்தச் செயல் சொல்லொன்னா துயரத்தைத் தருகிறது. அந்த வார்த்தை அவளை படாதபாடு படுத்துகிறது. அப்பாவிடம் கேட்கிறாள் "அப்பா நான் படிக்க வேண்டும்." "மேரி நமக்கெல்லாம் பள்ளிக்கூடம் கிடையாதம்மா" என்கிறார்.

நாம் ஏன் இப்படி இருக்கிறோம். வெள்ளையர்கள் ஏன் அப்படி சொகுசாக வாழ்கிறார்கள். அவளுள் பலபலக் கேள்விகள். அந்தக் கேள்விகளைத் துறத்திச் சென்று பதிலைக் கண்டடையும் பெண்ணாக மாறுகிறாள்.

இதைப்படிக்கும்போது நமது நாட்டில் உள்ள தலித் மக்கள் கண் முன்னே வருகிறார்கள். அவர்கள் பட்ட அத்தனை துயரத்தையும் இன்றும் இவர்கள் பட்டுக்கொண்டுதானே இருக்கிறார்கள். அவர்களாவது வேறு நாட்டில் இருந்து அடிமைகளாக அழைத்துவரப்பட்டவர்கள். ஆனால் தலித் மக்கள் சொந்த நாட்டிலேயே அடிமையாக்கப்பட்டு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

மேரி மேக்லியோட் பெத்யூனின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் புத்தகம். மேரியின் சுயசரிதையைப் படித்து தன்னுள் உள்வாங்கி தனது தேர்ந்த நடையில் தந்துள்ளார் நூல் ஆசிரியர் கமலாலயன். ஒரு விறுவிறுப்பான நாவலைப் படிப்பதைப் போல் இருக்கிறது. எழுத்து ஒரு பசுமையான மலைப்பாதையில் பயணம் செய்வதைப்போல, தொண்டைக்குள் வழுக்கிச்செல்லும் இனிப்புப்போல படிக்கப்படிக்க இனிமையாக இருக்கிறது. ஒரு சுயசரிதை விறுவிறுப்பான புத்தகமாகவும் இருக்கும் என்று இதைப்படிக்கும்போது உணர முடிகிறது.

உனக்குப் படிக்கத் தெரியாது
-கமலாலயன்

வாசல்
40-D\3, முதல் தெரு,
வசந்தா நகர், மதுரை-625 003.
மொபைல் 91 98421 02133
This entry was posted on 10/04/2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

2 comments:

On January 15, 2012 at 7:42 AM , அன்புடன் நான் said...

வணக்கம்.... உங்களுக்கும் உறவினர் நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

 
On February 27, 2012 at 10:16 PM , குணசேகரன்... said...

very nice...i am also try to get book.