ஒருநாள் சுதா சொன்னாள்
"அக்கா எங்க வீட்டுல உங்கள திட்டுறாங்க"
உமாவும் "ஆமாக்கா எங்க வீட்டுலயும் உங்கள திட்டுறாங்க" என்றதும் இன்னொமொரு நாலைந்து பெண்களும் ஆமாம் என்றனர்.
எனக்கு ஒரே கவலையாகிடுச்சு "எதுக்கு என்னய திட்டுறாங்க"
"உங்க கிட்ட வந்தப்பறம் வீட்டுல ரொம்ப எதிர்த்துப் பேசுறமா. அப்பற சாயங்காலம் வீட்டுல வேலை செய்யாம இங்க ஓடி வந்துர்றமா" என்றாள் சுதா.

பின்ன நான் சொல்ற கதை, சொல்லித்தர்ர விஷயங்கள் அப்படி.

கதைகள் எப்படி இருக்கும்னா,
ஒரு ஊர்ல முனியன்னு ஒருத்தன் இருந்தான். அவங்க வீட்டுல ஏதாவது விசேஷம் வந்துச்சுன்னா என்ன செய்வாங்கன்னா எங்க இருந்தாவது ஒரு பூனையை பிடித்து வந்து வீட்டில் ஒரு கூடை போட்டு மூடி வைப்பார்கள். விசேஷம் முடிந்தவுடன் திறந்து விடுவார்கள். அது என்ன பழக்கம், ஏன் அப்படி செய்றீங்கன்னு கேட்டா முனியன் சொல்வாரு எங்க வீட்டு பழக்கம் அதுதான். எங்க தாத்தாவும் இப்படித்தான் மூடி வச்சாரு. எங்க அப்பாவும் இப்படித்தான் மூடி வச்சாரு. நானும் பரம்பரைப் பழக்கம் மாறாம அதையே செய்றேன்னு சொன்னான்.

விஷயம் என்னன்னா அவங்க தாத்தா வசதியா இருந்தாரு. அவங்க வீட்டுல தானியம் தவசங்கள் மூட்டையாக அடுக்கியிருக்கும். அதுனால வீட்டுல எலித்தொல்லை இருக்கும். எலியைப் பிடிக்க முனியனின் தாத்தா பூனை வளர்த்தார். வீட்டுல ஏதாவது விசேஷம்னா இந்தப் பூனை பாத்திரங்கள் மேலேயெல்லாம் விழுந்து ஓடும். அதுனால அவங்க தாத்தா அந்தப் பூனையைப் பிடித்து கூடை போட்டு மூடி வைத்தார்.

அவங்க அப்பா காலத்துல கொஞ்சம் வசதி குறைந்தது. தானிய தவசமெல்லாம் இல்லாட்டியும் பூனை மட்டும் இருந்தது. அதுனால அதைப் பிடித்து கூடை போட்டு கவிழ்த்து வைத்தார்கள்.

முனியன் வீட்டுல தானியமும் இல்லை, பூனையும் இல்லை. ஆனாலும் பழக்கம் விட்டுப் போகக்கூடாது என்பதற்காக எங்காவது பூனையைத் தேடிக்கண்டுபிடித்து தூக்கி வந்து கூடை போட்டு கவிழ்த்தார்கள்.

இப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம். அதுனால நாம எது செஞ்சாலும் இது தேவைதானான்னு யோசிக்கணும், ஒரு செயல் அந்தக் காலத்துக்கு தேவையானதா இருக்கும், இப்போதும் அது தேவையான்னு யோசிக்கணும். மூட நம்பிக்கைகளை அகற்றணும்.

இப்படி இருக்கும்.

இதுனால வீட்டுல மூடநம்பிக்கைகளை கேள்வி கேக்குறாங்கன்னு ஒரு கோபம், அப்புறம் சாயங்காலம் வீட்டு வேலை செய்யறதில்லன்னு ஒரு கோபம்.

நான் சுதாவிடம் கேட்டேன்,
"ஏன் சுதா உங்க அம்மாவும் வீட்டு வேலையும் செஞ்சுக்கிட்டு பீடியும் ஒட்டுறாங்கல்ல. சாயங்கால நீதான கொஞ்சம் வீட்டு வேல செய்யக்கூடாதா?"
"இல்லக்கா எங்க கம்பெனியில என்னோட வேல ஆமர் அடிக்கிறது. ஹேண்ட் பேக், ஷூ வுலயெல்லாம் பித்தளையில ஒரு ஓட்டை இருக்கும் பாத்துருக்கீங்களா? அதை இரும்புல அடிக்கணும். அந்த இரும்பு எவ்வளவு வெயிட்டா இருக்கும் தெரியுமாக்கா? கையெல்லாம் வலிக்கும். எப்டிக்கா வீட்டுலயும் வேல செய்யறது. சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடனே காப்பியக்குடிச்சிட்டு மூஞ்சியக் கழுவிட்டு இங்க ஓடி வந்திருவம். இங்க வந்தாத்தான் எங்களுக்கு சந்தோஷம்" என்றாள்.
அதன் பிறகு நான் பேசவில்லை.

இரண்டு நாள் கழித்து தெருவில் சென்று கொண்டிருந்தேன். எதிரில் பார்த்தால் சுதாவின் அம்மாவும், லலிதாவின் அம்மாவும். அவங்கள பார்த்தவுடனே அவங்க வீட்டுல என்னை திட்டியது ஞாபகம் வந்துவிட்டது. அய்யய்யோ தெருவிலேயே வைத்து என்னை திட்டிவிட்டால் என்ன செய்வது. இப்படியே திரும்பிப் போய் விடலாமா?

அதுக்கெல்லாம் நேரமே இல்லை. அவர்கள் இருவரும் என்னைநோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நடுக்கத்துடன் சரி என்ன ஆனாலும் சரி. பார்த்துக்கலாம்னு அசட்டு தைரியத்துடன் சென்றேன்.

"எங்க கடைக்குப் போறீங்களா?" சுதாவின் அம்மா
"ஆமாங்க. நீங்க" என்றேன்.
"நாங்க ரேஷன்ல அரிசி வாங்கிட்டு வர்றோம்" என்றனர்.
என்னிடம் அவர்கள் பேச்சு மரியாதையாக இருந்தது. அவர்கள் என் மீது வைத்திருந்த மரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.

அந்தப் பிள்ளைகளின் சாயங்கால நேரங்களின் சந்தோஷம் என் மூலமாகக் கிடைக்கிறது என்பதை உணர்ந்தபோது என் மேலேயே எனக்கு ஒரு மதிப்பு வந்தது. தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் குறைந்தது.

இதுக்கு நடுவுல எங்க மையம் எங்களை அறியாமலே பேமஸ் ஆகிவிட்டது. எப்படின்னா ஞாயிற்றுக்கிழமை தவிர எல்லா நாட்களிலும் அதிக நேரம் இயங்கும் மையம். மையத்தைப் பார்வையிட அதிகாரிகள் யாராவது வந்தால் எங்கள் வீட்டுக்கு தைரியமாக அழைத்து வரலாம். ஒருமுறை இதன் டைரக்டர் மிஸ்ரா எங்கள் மையத்திற்கு வந்திருந்தார். அவருடன் சென்னை அறிவியல் இயக்கத்தில் இருந்து ராமானுஜம் மற்றும த.வி.வெங்கடேஸ்வரன் வந்திருந்தனர்.

எங்கள் வீடுதான் சின்னதாயிற்றே. அதனால் அவர்களே ஐடியா பண்ணி எங்கள் வீட்டு ரூமுக்கு முன்னால் உள்ள இடத்தில் இருந்து கீதா வீட்டு ரூம் வரை நீட்டாக ஒரு இடம் இருக்கும். அதில் எதிர் எதிராக இந்தக் கடைசியில் இருந்து அந்தக் கடைசி வரை உட்கார்ந்துவிட்டார்கள். மிஸ்ராவிடம் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்திக்கொண்டனர். பெரும்பாலோர் தோல் ஷாப்களில் வேலை செய்வதை கேட்டறிந்துகொண்டார். அவர்கள் வீடுகளில் பீடி ஒட்டுவதையும் கேட்டறிந்தார்.

அந்தப் பெண்கள்தான் நல்லா பேசுவார்களே. வந்திருந்த எல்லோரையும் அசத்திவிட்டார்கள். மிஸ்ரா திரும்பிச் சென்றபோது எங்கள் மையத்தைப் பாராட்டி குறிப்பு எழுதியிருந்ததாக என் கணவர் சொன்னார். எல்லோரிடமும் பாராட்டிப் பேசியதாகவும் சொன்னார். மிஸ்ரா பாராட்டிய மையம் என்று இப்போதும் கணவர் பெருமைப்படுவார்.

மாவட்ட அளவிலே பெரிய மீட்டிங்குகள் வைப்பார்கள். அதற்கு ஷீலா ராணி சுங்கத, குத்தியா காந்தி போன்றவர்கள் வந்து பேசுவார்கள். அவர்கள் வேறுமாவட்டங்களில் அறிவொளியில் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த மீட்டிங்களுக்கு செல்லும்போது செந்தமிழ்ச்செல்வன் மனைவி குணசுந்தரி, முகில் மனைவி ஜோதிமணி, சிலுப்பன் இன்னும் நிறையப்பேரை மறந்துவிட்டேன். சந்திப்போம். நிறையப் பேரின் அறிமுகம் கிடைக்கும்.

இவை இல்லாமல் இளவழகன் பக்கத்தில் உள்ள மையங்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார். பக்கத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சென்று வந்தோம். சில இடங்களுக்கு மைத்ரேயி, ராஜதிலகமும் வருவார்கள். மைத்ரேயி அருமையாக சினிமாப் பாடல்கள் பாடுவாள்.

அவள் மையங்களில் பாடிய சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வருமே ஒரு பாடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசம் உன் வாசம் என் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
அப்புறம் மறுபடியும் படத்தில் வரும் பாடல்
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

அவள் பாடிய இந்த இரண்டு பாடல்களையும் இப்போதும் எங்கே கேட்டாலும் அவள் ஞாபகம் வந்துவிடும்.

ஆறே மாதம் நீங்கள் சொல்லித் தந்தால் போதும் என்று கேட்ட வகுப்பு இரண்டு வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
1992ம் வருடம் துவங்கியது. அதன் பிறகு நாங்கள் 1994ல் சென்னை வர வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. நாங்கள் சென்னை செல்கிறோம் என்று சொன்னவுடன் அந்தப் பெண்கள் அழுத அழுகை இன்னும் என் கண்களில் தெரிகிறது.
நாங்கள் சென்னை வந்தவுடன் அவர்கள் எனக்கு இன்லண்ட் கார்டில் கடிதம் எழுதினார்கள். அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துக்களை படிப்பதில் அவ்வளவு ஆனந்தம் அடைந்தேன்.

எத்தனை உறவுகள், எவ்வளவு ஞாபகங்கள். வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் நம்முடன் வந்தவர்கள் கொஞ்சம் தூரத்தில் பிரிந்து சென்றுவிடுகின்றனர். வேறு புதியவர்கள் வந்து சேர்கின்றனர். அவர்களும் பிரிந்து செல்கின்றனர். இப்படி எல்லோரின் நினைவுகள் மட்டும் நம்மோடு.
முடிந்தது






அருகிலுள்ள மலைக்கிராமத்தைப் பார்வையிட்டபோது எடுத்த படம். கிராமத்தின் பெயர் நினைவிலில்லை.

This entry was posted on 5/27/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

17 comments:

On May 27, 2010 at 12:10 PM , சௌந்தர் said...

இப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம்.வளர்கிறது

 
On May 27, 2010 at 12:13 PM , Chitra said...

இப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம். அதுனால நாம எது செஞ்சாலும் இது தேவைதானான்னு யோசிக்கணும், ஒரு செயல் அந்தக் காலத்துக்கு தேவையானதா இருக்கும், இப்போதும் அது தேவையான்னு யோசிக்கணும். மூட நம்பிக்கைகளை அகற்றணும்.


........பூனை கதைக்கும் அது சொல்லிய கருத்துக்கும் - applause! excellent

 
On May 27, 2010 at 12:23 PM , எல் கே said...

arummayaana ninavigaul

 
On May 27, 2010 at 12:30 PM , சந்தனமுல்லை said...

மிகுந்த சுவாரசியமாக இருந்தது! உங்கள் எக்சைட்மென்ட், அர்ப்பணிப்பு எல்லாம் இடுகைகளில் உணர முடிந்தது!

 
On May 27, 2010 at 4:31 PM , தமிழ் உதயம் said...

பூவே செம் பூவே பாட்டு, இடம் பெற்ற படம் சொல்ல துடிக்குது மனசு.

 
On May 27, 2010 at 7:23 PM , Menaga Sathia said...

அழகான நினைவுகள்!!

 
On May 27, 2010 at 7:40 PM , puduvaisiva said...

"அவள் மையங்களில் பாடிய மெல்லத் திறந்தது கதவு படத்தில் வருமே ஒரு பாடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசம் உன் வாசம் என் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்"

படம்: சொல்லத் துடிக்குது மனசு :-)

உணர்வு பூர்வமான பதிவு
பழய புகைப்படம் இனைத்தது அழகாக உள்ளது.

நன்றி !

எத்தனை முறை கேட்டாலும் அலுப்பு தட்டாத பாடல்.

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

நிழல் போல நானும்
நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே )

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை தானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்
இந்நாளும் எந்நாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

படம்: சொல்லத் துடிக்குது மனசு
இசை: இளையராஜா
பாடியவர்: கே.ஜே.ஜேசுதாஸ்

 
On May 27, 2010 at 11:32 PM , ஜெய்லானி said...

//எத்தனை உறவுகள், எவ்வளவு ஞாபகங்கள். வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் நம்முடன் வந்தவர்கள் கொஞ்சம் தூரத்தில் பிரிந்து சென்றுவிடுகின்றனர். வேறு புதியவர்கள் வந்து சேர்கின்றனர். அவர்களும் பிரிந்து செல்கின்றனர். இப்படி எல்லோரின் நினைவுகள் மட்டும் நம்மோடு.//

நெஞ்சம் மறப்பதில்லை அது அது நினைவை இழப்பதில்லை. ...

 
On May 28, 2010 at 10:25 AM , Unknown said...

நல்ல பதிவு ...

 
On May 28, 2010 at 10:35 AM , ஜெயந்தி said...

முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சவுந்தர்!

நன்றி சித்ரா!

நன்றி எல்கே!

 
On May 28, 2010 at 10:39 AM , ஜெயந்தி said...

நன்றி சந்தன முல்லை!

நன்றி தமிழ் உதயம்!
படம் பேரு தப்பா போட்டுட்டேன். மாத்திட்டேன்.

நன்றி Mrs.Menagasathia!

 
On May 28, 2010 at 10:46 AM , ஜெயந்தி said...

நன்றி ♠புதுவை சிவா♠!
தமிழ் உதயமும் கூறியுள்ளார். படத்தின் பெயரைமாற்றி விட்டேன்.

நன்றி ஜெய்லானி!

முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி கே.ஆர்.பி.செந்தில்!

 
On May 28, 2010 at 10:47 AM , ஜெயந்தி said...

நன்றி ♠புதுவை சிவா♠!
தமிழ் உதயமும் கூறியுள்ளார். படத்தின் பெயரைமாற்றி விட்டேன்.

நன்றி ஜெய்லானி!

முதல் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி கே.ஆர்.பி.செந்தில்!

 
On May 30, 2010 at 1:45 PM , insight said...

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் ... அந்த இறைவனே அழுத ?..

 
On June 2, 2010 at 10:32 PM , thiyaa said...

சூப்பர்.வாழ்த்துக்கள்

 
On June 12, 2010 at 9:55 AM , Chitra said...

http://blogintamil.blogspot.com/2010/06/blog-post_12.html

.. :-)

 
On June 26, 2010 at 11:35 PM , சாந்தி மாரியப்பன் said...

// நாம எது செஞ்சாலும் இது தேவைதானான்னு யோசிக்கணும், ஒரு செயல் அந்தக் காலத்துக்கு தேவையானதா இருக்கும், இப்போதும் அது தேவையான்னு யோசிக்கணும்//

நல்லா சொன்னீங்க. இது மூட நம்பிக்கைக்கு மட்டுமல்ல எல்லாத்துக்கும் பொருந்துது.