திருமணம் ஆனவுடன் வேலூரில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டார்கள். அங்கிருந்து ஊருக்கு (திண்டுக்கல்) வருவதென்றால் அநேகமாக நான் மட்டும்தான் அதிகமுறை வந்து செல்வேன். அப்போவெல்லாம் பஸ் பயணம்னு பார்த்தா கவர்ண்மென்ட் பஸ்கள்தான் அதிகம். அதிகம்னு சொல்றதவிட முழுவதும்னு சொல்லலாம். தனியார் பஸ்ச பார்ப்பதே கடினம். திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம், பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை சத்யா, கட்டபொம்மன், ராணி மங்கம்மா என்று போக்குவரத்துக்கழகங்களுக்கு பெயர் இருக்கும். பின்னர் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்று ஆகி அப்புறம் மாநகரம், நகரம் என்று ஆகிவிட்டது.
ஊருக்குச் செல்வதென்றால் திருவள்ளுவர் போக்குவரத்ததுக்கழகத்தில் ஒரு வாரம் முன்னாலேயே ரிசர்வ் செய்தால்தான் டிக்கட் கிடைக்கும். பஸ் பயணம் பாதுகாப்பாக இருக்கும். பயமே கிடையாது. அதிக தூரப் பயணம் என்றால் நடுவழியில் டிரைவர், கண்டக்டர் மாறுவார்கள். என்ன ஒரு சிரமம்னு பார்த்தா இப்ப மாதிரி புஷ்பேக் சீட்டெல்லாம் கிடையாது. பின்னால கொஞ்சம் உயரம் அதிகமான சாய்மானம் இருக்கும் அவ்வளவுதான். நீண்ட தூரம் போவதென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா டிரெயினவிட பஸ்சுல டிக்கட் சார்ஜ் கம்மி. இரவு 8.30க்கு வேலூரில் ஏறி அமர்ந்தால் காலை 5.30 லிருந்து 6 மணிக்குள் திண்டுக்கல் போய்விடலாம். 8.30ன்னா கரெக்டா 8.30க்கு வண்டியை எடுத்துவிடுவார்கள்.
அங்கிருந்து திரும்பும்போதுதான் பிரச்சனையே. வரும் தேதியை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததால் டிக்கட் ரிசர்வ் பண்ண முடியாது. டிரெயின் வசதின்னு பார்த்தா ஒரே ஒரு டிரெயின்தான் திண்டுக்கல்லில் இருந்து வேலூர் வழியாகச் செல்லும். திருப்பதி எக்ஸ்பிரஸ். மதுரையில் இருந்து திருப்பதி செல்லும். மீட்டர் கேஜ். வேற டிரெயின்னா சென்னை போயி அங்கயிருந்து வேறு டிரெயின் பிடித்து வேணா வேலூர் போகலாம். தனியாகச் செல்வதால் ஒரே டிரெயின்தான் வசதிப்படும் என்பதால் திருப்பதி எக்ஸ்பிரஸ்தான் போக்குவரத்திற்கு. டிரெயின்ல மட்டும் ரிசர்வேஷன் பண்ணாம போக முடியுமான்னு கேட்குறீங்களா? இந்த டிரெயின் எப்படி போகுமுன்னா தஞ்சாவூர், சிதம்பரம், சீர்காழி என்று திருச்சியில் இருந்து விலகி ஒரு சுற்று சுற்றிச் செல்லும் அதனால் மதியம் 12.30க்கு திண்டுக்கல்லில் ஏறி உட்கார்ந்தால் நடுராத்திரி 1.30க்கு வேலூர் போகும். விடியற்காலையில் திருப்பதி செல்லும். இவ்வளவு நேரம் ஆகுறதுனால இந்த டிரெயினில் கூட்டம் கம்மியாக இருக்கும். ரிசர்வேஷன் இல்லாமலேயே உட்கார இடம் கிடைக்கும். தஞ்சாவூர், சிதம்பரம் இந்தப்பக்கம் போறவங்கதான் நிறைய இருப்பார்கள்.
வேலூரில் இருந்து பஸ்சில் ஏற்றிவிட்டால் காலையில் மாமா வந்து வீட்டுக்கு அழைத்துச்சென்று விடுவார். திண்டுக்கல்லில் இருந்து டிரெயினில் ஏற்றிவிட்டால் கணவர் வந்து அழைத்துச்செல்வார்.
ஒரு முறை 1988லிருந்து 90க்குள் ஏதோ ஒரு வருடம். எனக்கு இரண்டு சின்னச் சின்னக் குழந்தைகள். மாமா டிரெயின் ஏற்றிவிட்டார். லேடீஸ் கம்ப்பார்ட்மெண்ட் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி அதில் ஏற்றி விட்டார். ஏறும்போது ஓரளவு கூட்டம் இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் இரண்டு பக்கமும் (எதிரெதிர் சீட்டுக்களில்) நானும் குழந்தைகளும் மட்டுமே இருந்தோம். வண்டி செல்லச்செல்ல தஞ்சாவூர், சிதம்பரம் பக்கத்துக்காரர்கள் இறங்கிவிட்டார்கள்.
இரவு உணவை குழந்தைகளுக்கு கொடுத்து உறங்க வைத்துவிட்டேன். சின்னவன் கைக்குழந்தை. அதன் பிறகுதான் கவனித்தேன் ரயிலில் ஒரு நிசப்தத்தை உணர முடிந்தது. எனக்கு இரண்டு இருக்கைகள் முன்னால் ஒரு பெண் இரண்டு குழந்தைகள் போல பேச்சுக்குரல் மட்டுமே கேட்டது. மெல்ல எழுந்து சென்று பார்த்தேன். ஆம் அந்த பெட்டியில் என்னையும் அந்தப் பெண்மணியையும் தவிர கம்ப்பார்ட்மெண்டே காலியாக இருந்தது. மெல்ல அவர் அருகில் சென்று அமர்ந்தேன். அவருக்கும் இரண்டு பிள்ளைகள். சற்று பெரியவர்கள்.
"என்னங்க டிரெயின் காலியா இருக்கு" இது நான்.
"ஆமாம் காலியாதான் இருக்கு" இது அந்தப்பெண்.
"நீங்க எங்க போறீங்க"
"திருக்கோவிலூர்"
"அதுக்கு எவ்வளவு தூரம் இருக்கு"
"அடுத்து திருக்கோவிலூர்தான்"
எனக்கு பகீர் என்றது. அவர்களும் இறங்கிவிட்டால் மொத்த கம்ப்பார்ட்மெண்டிலும் நானும் குழந்தைகளும் மட்டுமே.
"நீங்க இறங்கீட்டா நான் மட்டும்தான் இருப்பேன். எனக்கு பயமா இருக்கு" என்றேன்.
நான் இப்படி சொன்னவுடனே அந்தம்மாவுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது. சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
"இப்படித்தான் ஒரு முறை இதே டிரெயினுல ஒரு பொண்ணு வந்துருக்கு. அந்தப்பொண்ணும் ஒரு பையனும் லவ் பண்ணியிருக்காங்க. வீட்டுல ஒத்துக்கல. அதுனால திருப்பதியில போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. அந்தப் பையன் முதல்ல போயி திருப்பதியில இந்தப்பெண்ணுக்காக காத்திருக்கான். இவள் இந்த டிரெயினுல ஏறி வர்றா. இதே மாதிரி கம்ப்பார்ட்மெண்ட் காலியாகி அவ மட்டும் இருந்துருக்கா. இத கவனிச்ச ஒரு நாலு பேரு (ஆண்கள்) அவங்க ரயில்வேல வேலை செய்றவங்க. அந்தப் பெட்டியில ஏறிட்டாங்க. அந்தப்பொண்ணு அவ்வளவு அழகா இருக்குமாம். இப்டியும் அப்டியுமா நடக்குறானுங்க. அப்பற நாலு பேரு சேர்ந்து அவள நாசப்படுத்திட்டாங்க. இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னா என்னோட வீட்டுக்காரர் ஸ்டேஷன் மாஸ்டர்"
அந்தப் பெண் இந்த சம்பவத்தை என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசன பண்ணிப்பாருங்க. இந்த மாதிரி சம்பவத்தை வீட்டிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ இருந்துகொண்டு கேட்பதற்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருந்து கேட்பதற்கு உள்ள வித்தியாசம் புரியுதா? எனக்கு அப்படியே நாக்கு வறண்டு, நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்குது. மனசுக்குள்ள அந்தம்மாவ திட்டிக்கிட்டிருக்கேன். நான் கேட்டனா. இப்போ போயி இந்த சம்பவத்தை சொல்லுறீயேன்னு மனசுக்குள்ள திட்டுறேன்.
மெள்ள அவங்கிட்ட கேட்டேன் "ஏங்க என்னய ஜெனரல் கம்ப்பார்ட்மெண்ட்ல ஏத்திவிட்டுறீங்களா?"
ஏன்னா ரெண்டு குழந்தைகள். இரண்டும் தூங்குது. துணி இருக்கற பெட்டி அப்பறம் ஊருலருந்து ஏதாவது கொடுத்துவிடுவாங்களே அந்தப் பைகள் எல்லாவற்றையும் தனியாக இறக்கி ஏற்ற முடியாது. அதுவும் திருக்கோவிலூரில் எவ்வளவு நேரம் ரயில் நிற்கும் என்றும் தெரியாது.
"பயப்படாதீங்க. உங்கள நான் ஏத்திவிடறேன்" அந்தம்மா சொன்னாங்க.
அப்படா என்று நிம்மதியானது.
அப்பறம் திருக்கோவிலூரில் ரயில் நின்றவுடன் எங்களை இறக்கி ஜெனரல் கம்ப்பார்ட்மெண்டில் ஏற்றிவிட்டு அங்கே அவர்களுக்குத் தெரிந்தவர்கள் ஒரு கணவன் மனைவி இருந்தார்கள். அவர்களும் ரயில்வேயில் வேலை செய்பவர்கள். அவர்களிடம் அந்தம்மா சொல்லி இவங்களை வேலூருல இறக்கிவிட்டுருங்க. பாத்துக்கங்க என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.
எனக்கு எப்போது அந்த ரயில் பயணம் நினைவு வந்தாலும் அந்த ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியும், அந்த முகம் தெரியாத பெண்ணும் நினைவுக்கு வருவார்கள்.
16 comments:
இந்த மாதரி அனுபவம் மறக்க முடியாது......
பக்...பக்... பயணமா..?
http://vaarththai.wordpress.com
Same Feeling...
மறக்க முடியாத பயணம் தான்.! நல்லவேளை முன்னெச்சரிக்கையாக ஜெனரல் கம்பார்ட்மெண்ட்டில் ஏறிக்கொண்டீர்கள். இல்லயெனில் முழுப் பயணமும் நடுங்கி கொண்டே இருந்திருப்பீர்கள்.
ஒரு திக் திக் பயணம். உண்மைல மறக்க முடியாத அனுபவம்..
திக் திக் திக் பயணம்தான்
பகீர்ன்னு இருந்தாலும் பத்திரமா சேர்ந்திங்கல்ல.... எல்லா இடத்திலேயும் நல்லவங்கலும் இருப்பாங்க.
நல்ல அனுபவம், பகிர்வுக்கு நன்றி
உண்மையிலேயே கஷ்டமான சூழ்நிலைதான். நல்ல வேலை கம்பார்ட்மெண்ட் மாறினீர்கள்.
உண்மையிலேயே கஷ்டமான சூழ்நிலைதான். நல்ல வேலை கம்பார்ட்மெண்ட் மாறினீர்கள்.
சில விஷயங்களை மறக்கவே முடியாது.
டிரையின்ல நீங்க சொன்ன வழி பெரும்பாலும் காலியாதான் இருக்கும். . படிக்கும்போது திக்..திக்.ன்னு இருந்தாலும் ,உதவி செய்யும் நல்லவர்களும் இருக்காங்களே..
சில நினைவுகள் நம்மை விட்டு என்றும் நீங்காது.....நல்ல பதிவு வாழ்த்துகள்
எப்பா... crime ஸ்டோரி எபக்ட்ல ஆரம்பிச்சு சுபமா முடிசீங்க...சூப்பர் ...திகில் பயணம் தான் போங்க
மன்னிக்கவும்....
சேர்த்துக் கொண்டேன்...
உங்கள் பதிவின் பின்னூட்ட பதிவாக என் வலையில்
உங்களை எழுதியுள்ளேன். அதை
பார்க்க
: http://forum.padukai.com/post7443.html#p7443
தவறாக எழுதியிருந்தால்
பின்னூட்டம் விடவும்.
இவன்
படுகை.காம்
பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி!