மழையே மழையே
10/30/2009 | Author: ஜெயந்தி
இந்த வருடம் பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. கிணற்றில் இப்போதே தண்ணீர் கீழே உள்ளது. வெயில் காலத்தில் தண்ணீருக்கு அலையப் போகிறோம் என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை, மழை வயிற்றில் பாலை (நீரை) வார்த்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை வீடுகளுக்குள் வரும் அளவுக்கு பெய்கிறது. ஆனால் அவ்வளவு நீரும் சாக்கடை வழியாக கடலில்தானே போய் சேர்கிறது.

நம் முன்னோர்களெல்லாம் மழை நீரை குளம், கம்மாய், ஏரி என்று சேமித்து வைத்து வளமாக வாழ்ந்தார்கள். நாம் அவற்றையெல்லாம் பிளாட் போட்டு விற்று வீடு கட்டிக்கொண்டு மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது என்று புலம்பிக்கொண்டு இருக்கிறோம்.

வெயில் காலத்திலோ தண்ணீருக்காக குடங்களைத் தூக்கிக்கொண்டு தெருவில் திரிய வேண்டும். சென்னையில் சின்டெக்ஸ் டேங் வைத்து லாரிகளில் நீரை கொண்டுபோய் அதில் ஊற்றிவிடுவார்கள். அந்தத் தெருவாசிகள் வரிசையில் நின்று தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும். குறுக்கும் மறுக்கும் ஓடும் இந்த தண்ணி லாரிகளினால் அதிகளவில் விபத்துக்கள் நடப்பது தனிக்கதை.

அமெரிக்காவில் நம் அளவு மழைதான் பெய்யுமாம். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர்கூட கடலில் கலக்காதாம். அவ்வளவும் சேமிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. வெளி நாட்டினரிடமிருந்து எதை எதையோ பின்பற்றும் நாம் இதை பின்பற்ற முடியாதா? நல்ல விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என்று அழைத்து திட்டம் தீட்டி இதை செய்ய முடியாதா என்ன? ( நம் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுநர்களும்தான் வெளிநாட்டை வளப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்)

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி நம் குடி என்று பேசிக்கொண்டே நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடுவார்கள் போல் இருக்கிறது. (மூத்த குடி என்பதை தவறாகப் புரிந்துகொண்ட நம் குடிமக்கள் டாஸ்மாக்கில் கும்பல் கும்பலாய் நிற்கிறார்கள். ரேஷன் கடைகளில் கூட அவ்வளவு கூட்டம் இல்லை.)

ஒரே ஒரு காமராஜரை இன்னும் எத்தனை காலத்துக்கு உதாரணம் காட்டிக்கொண்டிருக்கப் போகிறோம். (அவர் காலத்தில்தான் நிறைய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன)
நேற்று... இன்று... நாளை...
10/28/2009 | Author: ஜெயந்தி
நேற்று...

டீவியின் ரிமோட் யாரால் கைப்பற்றப்படுகிறதோ (அடிதடி ரகளைக்குப்பின்) அவர்களின் விருப்ப சானல் ஓடிக்கொண்டிருக்கும். மகனுக்கு கிரிக்கெட், புட்பால், டென்னிஸ் போன்றவை. மகளுக்கு பிற மொழி சேனல்கள் (ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்). அம்மாவுக்கு சீரியல்கள். கணவருக்கு நியூஸ் சேனல். நம்மளுக்கு பாட்டு மற்றும் காமெடி சீன்கள்.

மகளுக்கு படிப்பின் மீது கொஞ்சம் (நிறைய) ஆர்வம் அதிகம். "எனக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு அந்த டீவிய ஆஃப் பண்ணுங்க."
"எக்ஸாமுனாலும் பரவாயில்ல டெஸ்டுக்கெல்லாம் ஆஃப் பண்ண முடியாது. வேணும்னா ரூமுக்குள்ள போய் கதவை மூடிக்கிட்டு படி." (வருடம் முழுவதும் ஒன்று டெஸ்ட் இருக்கும் இல்லைன்னா எக்ஸாம் இருக்கும்)
மகளின் புலம்பல்: எல்லா வீட்டுலயும் டீவிய ஆஃப் பண்ணிட்டு புள்ளைங்கள படிக்க வைக்கிறாங்க, இங்க எல்லாமே தலைகீழ்.

இன்று...

ஞாயிற்றுக்கிழமை, கம்ப்யூட்டரை யார் கைப்பற்றுவது என்று காலையில் இருந்தே போர் தொடங்கிவிடும். மகனுக்கு ஆங்கிலப் படங்கள், ஆர்க்குட் ஸ்கிராப்புகள், சாட்டிங்... மகளுக்கு படிப்பு சம்பந்தமான வேலை. காலையில் இருவரும் தொடங்கிவிடுவார்கள். கணவர் ஏதோ வேலையாக வருவது போல் சைடில் கம்ப்யூட்டரை பார்த்தபடி வந்து வந்து போய்க்கொண்டிருப்பார். கொஞ்சம் கேப் கிடைத்தாலும் அம்மா உட்கார்ந்துவிடுவார்கள் (வயது 66. இரண்டு கேம்ஸ் தெரியுமுங்கோ). நமக்குத்தான் ப்ளாகில் நிறைய வேலை இருக்கிறதே. இதற்கு நடுவில் கடைக்காரப் பையன் தண்ணீர் கேன் எடுத்து வருவான். அவன் வரும்போது யார் கம்யூட்டரில் அமர்ந்து இருந்தாலும் எழுந்துவிட வேண்டும். அவனுக்கு ஐந்து நிமிடம் டைம், ஐந்தாவது நிமிடம் அவனுடைய செல்போனுக்கு அவனுடைய கடை ஓனர் மிஸ்டு கால் கொடுப்பார், உடனே ஓடிவிடுவான். அவனுக்கும் கேம்ஸ்.
மகளின் புலம்பல்: படிப்புக்கு கம்யூட்டர குடுக்க மாட்டேங்கறாங்க.

நாளை...
தற்போது பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் ஒரு செய்தி நம்மை மிரட்டுகிறது. மரபணு மூலம் மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் சோதனை செய்யப்போகிறதாம் அமெரிக்கா.

முதலில் வருவது கத்தரிக்காய். மரபணு மூலம் மாற்றப்பட்ட பயிர்களை பயிரிட்டால் விளை நிலங்கள் பாழாகிவிடுமாம்.

நம் பயிர் செய்யும் முறை விளைந்த பொருட்களில் இருந்து,  அடுத்த விவசாயத்திற்கு விதை நெல், விதை வேர்க்கடலை என்று என்ன பொருள் விளைவித்தோமே அதிலிருந்து நல்ல தானியங்களை பொருக்கி அடுத்த விளைச்சலுக்கு பத்திரப்படுத்திவிட்டுத்தான் (விளைச்சல் குறைவாக இருந்தாலும்) அடுத்த தேவைக்கு விளைபொருட்களை பயன்படுத்துவார்கள் விவசாயிகள்.
ஆனால் மரபணு பயிர்களில் அதெல்லாம் நடக்காது. ஒரு முறை பயிர் செய்தால் அதிலிருந்து அடுத்த விளைச்சலுக்கு விதைகளை எடுக்க முடியாது. திரும்பவும் அமெரிக்காவில் இருந்துதான் வாங்கி பயிர் செய்ய வேண்டும். விதைகள் இல்லாமல் நம் விவசாயம் முறை அழித்தொழிக்கப்படும். நாம் சாப்பிடுவதற்கு அமெரிக்காவின் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

விளை நிலங்களின் நிலமையே இப்படியென்றால், அதை சாப்பிடும் நம் கதி.

இந்தியாவின் முக்கியத் தொழில் விவசாயம்.

70களில் கடலைச் செடியில் முதன் முதலில் கம்பளிப் பூச்சி விழுந்தபோது செடிகளெல்லாம் பாழாவதைக் கண்டு கலங்கி நின்றவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.
அதன் பிறகு பூச்சி மருந்து என்ற பெயரில் ரசாயன உரங்கள் வந்தன. பூச்சி இல்லாமல் எப்படி மருந்தை வாங்குவார்கள். முதலில் பூச்சியை அனுப்பிவிட்டு பிறகு மருந்தை அனுப்பினார்கள்.

அந்த உரங்கள் நம் உடலையும், விவசாய நிலங்களையும் எப்படியெல்லாம் கெடுக்கிறது என்று இப்போதுதான் உணர்ந்துகொண்டிருக்கிறோம். விவசாயிகள் திரும்பவும் பாரம்பரிய விவசாயத்தை நோக்கிச்சென்று விவசாய நிலங்களை மீட்டெடுக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். நம்மையும்தான்.

இந்தியாவை ஏன் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா. இங்கேதான் வெள்ளையர்களுக்கு சலாம் போடும் அரசியல்வாதிகள், நடப்பதை புரிந்துகொள்ளமுடியாமல் அறியாமையில் இருக்கும் ஜனங்கள் இருக்கிறார்கள். இதுதான் பொருத்தமான இடம் என்று தேர்ந்தெடுத்துவிட்டது.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் கையெழுத்து போடும் போது கம்யூனிஸ்ட்கள் ஏதோ போராடியதாக ஞாபகம் (இப்படியெல்லாம் உள்குத்து இருக்கும் என்று சொன்னார்கள்) நமக்குத்தான் அவர்களை பிடிக்காதே, அவர்கள் கிடக்கிறார்கள். விட்டுவிடுவோம்.

அப்புறம் இந்த ஜங்க் ஃபுட் என்று ஒன்று (பீஸா, பர்கர், நூடுல்ஸ் வகையறாக்கள்) உலவுகிறதே. இவற்றை சாப்பிட்டால் கேன்சர் வருமாம்.

என் பையனிடம் கேட்டேன் "ஏண்டா இந்த ஜங்க் ஃபுட் சாப்டா கேன்சர் வருதாம்னு எனக்கே தெரியிதே, இந்த சாஃப்ட்வேர்ல வேல செய்யிறவங்களுக்கு தெரியாதா?" அவன் சொன்னான், "நல்லாத் தெரியும். வேற வழியில்லை." ஏனென்றால் சென்னையில் ஹோட்டல்களில் சாதம் பாதி அளவுதான் வெந்திருக்கும். குழம்பு பிடிக்கவில்லை என்றால் சாதத்தை நன்றாக பிசைந்து ரசமோ, மோரோ ஊற்றி சாப்பிட ஆசை இருக்காது. ரசமோ, மோரோ ஊற்றினால் சாதம் இன்னும் விரைத்துக்கொள்ளும். ஒரு வேளை சாப்பிட்டால் ஒரு நாள் முழுவதும் பசிக்காது. அவர்கள் வேறு என்ன செய்வார்கள், ஜங்க் ஃபுட் பக்கம் போய் விடுகிறார்கள்.

அப்புறம் இந்த அஜினோ மோட்டோ என்று ஒன்று இருக்கிறது. அது எத்தனை விதமான கெடுதிகளை செய்யும் என்று பட்டியலிடுகிறார்கள். அவற்றில் ஒன்று கரு உற்பத்தியே பாதிக்கப்படுமாம்.

டிவியில் விளம்பரம் போடுகிறார்கள், உங்கள் சமையலில் ருசி இல்லையா? அதில் போடுங்கள் அஜினோ மோட்டோ. "எங்கம்மா சமைச்சா மாதிரி ருசியா உனக்கு சமைக்கத் தெரியுதா?" என்கிற கணவன்களை சமாளிக்க நிறைய வீடுகளில் இதை வாங்கி உபயோகிக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றியதைப்போல நம்மையும் காப்பாற்றுவார்கள் என்று இருந்து விடுவோமா? அல்லது......
சின்னத் தாய் அவள்
10/22/2009 | Author: ஜெயந்தி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 போட்டியில் கலந்து கொண்டவர்களில் பிரியங்காவும் அவரது தாயாரும் என்னுள் வந்தார்கள்,

ஆரம்ப சுற்றுகளில் எல்லாம் பிரியங்கா பாடும் போதெல்லாம் அவரது தாயாரின் கண்களில் தண்ணீர் வழிந்துகொண்டிருக்கும். பிரியங்கா பாடும் பாடல்கள் எல்லாம் பழைய நாம் அதிகம் கேட்டறியாத மிக நல்ல பாடல்களாகவே இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் அவர் பாராட்டுதல்களோடு செலக்ட் செய்யப்படுவார்.

ஒரு முறை நடுவர்கள் உனக்கு யார் இந்தப் பாடல்களை சொல்லித்தருகிறார்கள் என்று கேட்டனர். தன் தாயார் சொல்லித்தருவதாக சொன்னார். அவளது தாயை அழைத்து பாடச் சொன்னார்கள். அப்போதும் கண்களில் கண்ணீரோடு மகள் பாடிய அதே பாடலை பாடினார். மிகவும் அற்புதமாக பாடினார். நடுவர்கள் இப்போது தெரிகிறது பிரியங்கா எப்படி இவ்வளவு நன்றாக பாடுகிறாள் என்று என்று பாராட்டினார்கள்.

அதன் பிறகு அந்தத் தாயின் கண்களில் கண்ணீர் இல்லை. ஒரு புன்சிரிப்பு மட்டுமே இருக்கும். மோனாலிசாவின் ஓவியத்தில் வரும் புன்னகை போல் இருக்கும்.

இறுதிச் சுற்றுகளில் வேறு நடுவர்கள் (பிரபல பாடகர்கள்) அந்தச் சுற்றுகளிலும் பிரியங்கா நன்றாகவே பாடினார். இப்போது நடுவர்கள் அந்தத் தாயை அழைத்து பாடச் சொன்னார்கள்.

மகள் பாடிய அந்தப் பாடலை மகளை விடவும் அருமையாகப் பாடினார்.

"சின்னத்தாய் அவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே"
உன்னை போல் ஒருவன்
10/21/2009 | Author: ஜெயந்தி
எங்கள் அலுவலகத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பெண் வேலையை விட்டு நின்று விட்டாள். மின்சார அடுப்பில் அலுவலகத்திலேயே டீ தயாரித்து அனைவருக்கும் கொடுப்பார்கள், அதற்கும் ஆள் தேவைப்பட்டது. எனவே இதற்கென்று ஆள் அனுப்பும் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு ஆள் ஏற்பாடு செய்தார்கள். 


வரும் பையன்கள் ஒருவாரம் அல்லது அதிகபட்சம் 10 நாட்களுக்கு மேல் ஒருவரும் நிலைக்கவில்லை. காரணம் என்னவென்றால் அவர்களுக்கான வேலையைத் தவிர, கடைக்குச் செல்வது, பேங்குக்கு செக் போட அனுப்புவது, சாப்பாடு வாங்க ஹோட்டலுக்கு அனுப்புவது... என்று வேலை சக்கையாகப் பிழியப்படும். மேனேஜர் வேறு அவர் மேல் இடத்தில் வாங்கிய அர்ச்சனையை இவர்களிடம் காட்டித் தீர்த்துக்கொள்வார். மேனேஜரிடம் முதலில் முறைப்பார்கள். பிறகு பதில் பேசத் தொடங்குவார்கள். அடுத்து காணாமல் போய்விடுவார்கள். இதெல்லாம் ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்களுக்குள் நடந்து முடிந்துவிடும். அடுத்த பையன் அனுப்பப்படுவான். இதே கதைதான். 


இந்த முறை வந்தவன்தான் ஷாகித். அமைதியாக இருப்பான். சொன்ன வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருப்பான். எதிர்த்து பேச மாட்டான். ஆறடி உயரம் இருப்பான். ஆள் பார்க்க நன்றாக இருப்பான். வயது 20௦-லிருந்து 22-க்குள் இருக்கும் எங்களுக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருக்கும். நாங்கள் வேலை செய்தது அந்த அலுவலகத்தின் பிராஞ்சில். மெயின் ஆபீஸ் இரண்டு தெரு தள்ளி இருக்கும். அவன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் அவனை சிறிது நேரம் உட்கார சொல்லுவோம். உடனே மெயின் ஆபீசில் இருந்து போன் வரும்.

"ஷாகித் அங்கே இருக்கானா?''

"இங்க இல்ல"
"இப்பத்தான் வந்தான். இங்கே கொஞ்சம்வேலை இருக்கிறது. முடிந்தவுடன் அனுப்புகிறோம்."
என்று நேரத்திற்குத் தகுந்தாற்போல் பதில் சொல்லுவோம். என்ன ஒரு பத்து நிமிடம் அவனைக்காப்பாற்ற முடியும்.

ஒரு முறை அவன் டீ எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவர்கள் டீ குடிக்கும் வரை அமர்ந்திருந்தான். டீ குடித்தவுடன் டம்ளரை எடுத்து கழுவ வேண்டுமே?

திடீரென்று சுதா ஓடி வந்தாள்.

"மேடம் மேடம் ஷாகித்திற்கு ஃபிட்ஸ் வந்துருக்கு"


நாங்கள் எல்லோரும் அவனிடம் ஓடினோம்.

எங்கள் அலுவலகத்தில் ஆண்கள் எல்லாம் மார்க்கெட்டிங்கிற்கு காலையிலேயே கிளம்பிவிடுவார்கள். நாங்கள் பெண்கள் மட்டுமே இருப்போம். அவன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலிக்கிறது என்றான். உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. இது ஃபிட்சில் சேருமா என்று தெரியவில்லை. அவன் சுய நினைவோடுதான் இருந்தான். பாக்கெட்டிருந்து தீப்பெட்டியை எடுத்துக்கொடுத்து சூடு வைக்கும்படி கையைக்காட்டினான். அவன் மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை சூடு வைத்த வடு.


நான் வயதில் பெரியவள் என்பதால் சூடு வைக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"சூடு அவசியம் வைக்கணுமா?"

"வச்சாத்தான் சரியாகும்"

தீக்குச்சியைப் பற்ற வைத்து அருகில் சென்று வைக்க முடியாமல் ஐந்தாறு குச்சிகள் காலியாகின. கடைசியில் பற்றவைத்தவுடன் அவனே இழுத்து வைத்துக்கொண்டான். எம்டிக்கு தகவல் சொல்லப்பட்டு, அவனுடைய ஓனர் வந்து அழைத்துச சென்றார். 


அடுத்தநாள் அலுவலகத்திற்கு வந்த அவனை அழைத்து விசாரித்தேன். எப்போதிலிருந்து இப்படி வருகிறது என்று கேட்டேன். அப்போது அவன் வலது கையைக் காட்டினான். அதில் சுமதி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்து. அந்தக்கையில் தீக்காயம் எதுவும் இல்லை. 


"இந்தப்பெண்ணை நான் லவ் பண்ணினேன். அவங்க அம்மாவும், அண்ணனும் எதுத்தாங்க, அதனால அறுவாள எடுத்துட்டுப்போயி அவங்க ரெண்டு பேரையும் வெட்டிட்டேன். இதப்பார்த்துக்கிட்டிருந்த எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சி. ஆஸ்பத்திரியில வெச்சி என் கையைப் பிடிச்சிகிட்டே செத்துப்போயிட்டாங்க. அப்போதான் முதல் முறையா வந்தது" என்று ஏதோ மூலைக்கடையில் மசால்வடை கிடைக்கும் என்கிற தொணியில் சொல்லிக்கொண்டிருந்தான்.


என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் உண்மையில் நாலே வார்த்தையில் சென்னையில் பேசும் கொச்சைத் தமிழில் சொன்னான்.

"அப்புறம் ஜெயிலுக்கு கூட்டிடுபோனாங்க. சொந்தக்காரர்கள் எங்கள் நிலத்தை விற்று அரசியல்வாதிக்கு பணம் கொடுத்து என்னை வெளியே கொண்டு வந்தார்கள். இப்போதுகூட போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப்போடுகிறேன்" என்றான்.

"டாக்டர்கிட்ட பார்த்தியா?"

"எத்தனையோ டாக்டர்கிட்ட பாத்துட்டேன். யாராலயும் சரிபண்ண முடியல."

மனோதத்துவ மருத்துவரிடம் பார்த்தாயா என்று கேட்க நினைத்தேன். அது அவனுக்கு புரியுமா என்று தெரியவில்லை.

"உங்க ஊர் எது?"
"ஆம்புர் பக்கத்துல கிராமம். அங்க சொந்த வீடு இருக்கு. என் பிரண்ஃட் குடும்பத்தான் தங்கியிருக்கு. அவங்க அம்மா எனக்கும் அம்மாபோல. நான் சம்பாதிப்பதை அவர்களுக்கு அனுப்பிவிடுவேன்"
"உங்க அப்பா?"

"அவர் எங்க அம்மா இருந்தப்பவே ஹார்ட் அட்டாக்குல செத்துப்போயிட்டார். என்றான்.

அவங்க அலுவலகத்தில் 200, 300 பையன்களை வடாற்காடு மாவத்தில் இருந்து அழைத்து வந்து ஒரு இடத்தில் தங்க வைத்து சாப்பாடு போட்டு, கல்யாண மண்டபங்கள, ஹோட்டல்கள், எங்கள் அலுவலகம் போல் வேலைக்கு ஆள் கேட்பவர்களுக்கு என்று சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள். எங்கள் ஆபிஸில் 4000 சம்பளம் வாங்கிக்கொண்டு அவனுக்கு 3000 கொடுப்பார்கள். அன்றிலிருந்து ஷாகித் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தான். மனம் எப்போதும் வேதனையிலியே இருந்து.

அவன் விஷயத்தை என்னிடம் மட்டுமே சொல்லவில்லை, யார் கேட்டாலும் சொல்லிவிடுவான். இவனை மாற்ற வேண்டும் என்று மனதில் முடிவு செய்துகொண்டேன். இவன் யார் சொல்வதையும் கேட்கிற குணமுடையவன் அல்ல மனதில் தோன்றுவதை செய்கிறவன் என்று தோன்றியது.


பரவாயில்லை அன்பினாலே செய்ய முடியாதது எதுவுமில்லை என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. எப்படி பேசுவது என்று பலவாறாக யோசனை செய்து கொண்டேன். அப்போது அவன் என்னருகில் வந்தான். முகம் மிகவும் சந்தோஷமாக இருந்தது.


"மேடம் எங்க ஊருலயிருந்து எனக்கு போன் வந்துச்சு. எங்க வீட்டு வாசல்ல ஒரு குழந்தை கிடந்ததாம். அதை என்ன செய்யனு கேட்டாங்க. அத எடுத்து வச்சிக்கங்க, அது என்னோட தங்கச்சின்னு சொல்லிட்டேன்." முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

"யாராவது வந்து கேட்டாங்கன்னா குடுக்க முடியாதுன்னு சொல்லிடுங்கன்னு சொல்லிட்டேன்". முகத்தில் அத்தனை ஆக்ரோஷம்.

இவன் முகத்தில் உணர்ச்சிகளை இன்றைக்குத்தான் பார்த்தேன்.

"தீபாவளிக்குக் பிறகு நான் வேலைக்கு வர மாட்டேன். ஊருக்கே போயிருவேன், என் தங்கச்சிய வளக்கப்போறேன்" என்றான்.

தீபாவளிக்குப் பிறகு அவனை பார்க்கவில்லை.
எனது யோகா...
10/20/2009 | Author: ஜெயந்தி
குழந்தைகளைப் பார்த்தாலே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் பேசினாலோ கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அவர்கள் பாடினால்...?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 நிகழ்ச்சியில் அவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று முன் என் நிலை என்ன என்பதை சொல்கிறேன். இடுப்பு வலியின் காரணமாக எதைப் பார்த்தாலும் எரிச்சல், எல்லோர் மீதும் எரிச்சல் வந்துகொண்டிருந்தது. நேரம் ஆக ஆக எரிச்சல் கூடிக்கொண்டே போனது.

அப்போதுதான் நிகழ்ச்சி துவங்கியது.
இரண்டு குழந்தைகள் பாடியவுடனேயே மனதில் அத்தனை அமைதி. தியானம், யோகா பண்ணினால் அமைதி கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். குழந்தைகளின் பாட்டைக்கேட்டு என் மனது அமைதியானது.
சின்ன குழந்தைகளிடம் எவ்வளவு திறமை. பழைய மெலடி பாடல்களை எவ்வளவு அருமையாக பாடுகிறார்கள். நல்ல நிகழ்ச்சி.

 நானும் வந்துட்டேன். சேர்த்துக் கொள்வீர்களா? ஃபிளாக் பற்றி கேள்விப்பட்டேன். பின்னர் சில ஃபிளாகுகளைப் படித்துப் பார்த்தேன். நாமும் ஃபிளாக் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. 


தொடங்கலாம்... வேண்டாம்... என்று மாறி மாறி தோன்றியது. தொடங்க வேண்டும் என்ற நமைச்சல் கடைசியில் ஜெயித்துவிட்டது. விளைவு, உங்கள் முன் நான்! வேறு வழியில்லை, சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.