Showing posts with label வாழ்க்கை நிகழ்வுகள். Show all posts
Showing posts with label வாழ்க்கை நிகழ்வுகள். Show all posts
நீயா நானா
6/13/2011 | Author: ஜெயந்தி
"டேய் ஒம்பொண்டாட்டி பண்றது கொஞ்சங்கூட சரியில்ல சொல்லீட்டேன்."
"என்னம்மா விஷயம்"
"சாயங்காலம் சீக்கிரம் வா, கிருஷ்ணஜெயந்திக்கு எல்லா தயார் பண்ணி வச்சிர்றேன். நீ வந்தவுடனே சாமி கும்புடலாம்னு சொல்றேன் அதுக்கு அவ சொல்றா ஆபீசுல முக்கியமான வேல இருக்கு. அது சீக்கிரம் முடிஞ்சிருச்சுன்னா சீக்கிரம் வர்றேன்னு சொல்றாடா"
ரூமுக்குள் வந்த கணவன் "என்னம்மா சாயங்காலம் சீக்கிரம் வர்றதுதான"  என்றான்
"ஏங்க உங்க அம்மா சொல்றாங்க, பிரக்னென்டா இருக்கறவங்க கிருஷ்ணஜெயந்தி கும்புட்டா ஆம்பளப்புள்ள பொறக்குமா, இந்த வார்த்தைக்காகத்தான் நான் அப்டிச்சொன்னேன். ஏன் பொம்பளப்புள்ள பொறந்தா தூக்கி எறிஞ்சுடுவீங்களா?"

"ஏண்டா குழந்தைக்கு கழுதப்பால் குடுக்கணும்னு சொன்னா ஒம்பொண்டாட்டி கேக்க மாட்டேங்குறாடா."
"ஏங்க டாக்டர்கிட்ட கேட்டேன். வேற எந்த உயிரினமாவது வேற ஒரு உயிரினத்தோட பாலக்குடுக்குதான்னு என்னையே திருப்பிக்கேக்குறாரு. தாய்பால் மட்டும்தான் குடுக்கணுமாம். அதுனாலதான் வேண்டாம்னு சொன்னேன்."
"ஏண்டா கொழந்தைக்கு பால் குடுக்குறாளே தயிர் ஊத்தி திங்காத கொழந்தைக்கு சளி பிடிக்கும்னு சொன்னா கேக்க மாட்டேங்குறாடா"
"டாக்டர் எல்லாமே சாப்புடலாம்னு சொல்லியிருக்காரு. நான் சாப்புறது அப்டியே கொழந்தைக்கு போகாது. குழந்தைக்கு ஜீரணமாகுறமாதிரி பால்தான் போகும்".
"ஏண்டா வாழப்பழம் மாம்பழமெல்லாம் சாப்புட்டா கொழந்தைக்கு சேராது"
"ஏங்க எனக்கு பழம் சாப்புட்டாத்தான் வயிறு பிரச்சன இல்லாம இருக்கும். என்னால பழம் சாப்புடாம இருக்க முடியாது."
"ஏண்டா கொழந்தைக்கு போனிசன் ஊத்தணும். வசம்பு ஊத்தணும். அப்பத்தான் பிள்ள நல்லா வளரும்"
"ஏங்க எந்த டாக்டராவது கிரைப் வாட்டர பிரிஸ்கிரைப் பண்றாங்களா? அப்புறம் இந்த வசம்பப்பத்தி எனக்கு தெரியல. ஆனா அதை கருக்கி கருப்பா குடுக்குறாங்க. கருப்பா இருக்கறது கார்பன்தான, எனக்கு அதக் குடுக்க பயமா இருக்கு அதுனால குடுக்கல"
"ஏண்டா ஐஞ்சாம் மாதம் இட்லி, சாதம், சப்பாத்தியெல்லாம் குடுக்கலாம்னு எங்க அக்கா சொல்றாங்க"
"இங்க பாருங்க ஆறு மாசம் வரைக்கும் வெறும் தாய்ப்பால்தான் குடுக்கணும்னு டாக்டர் சொல்றாரு. அதுக்கு அப்பறம்தான் சாலிட் புட் குடுக்கணுமாம். ஏங்க கொழந்தைக்கு சப்பாத்தியெலலாம் குடுத்தா எப்டி ஜீரணமாகும்"
"ஏண்டா அதுக்குத்தான் போனிசன், வசம்பு எல்லாம் குடுக்கணும்"
"இங்க பாருங்க குழந்த அதுவே ஜீரணிக்கணும். மருந்து குடுத்து ஜீரணிக்க வைக்கக்கூடாது. அது நல்லதில்ல"
கணவன் மெல்ல "ஏ
ண்டா செல்லம் நீதான் அம்மாவ கொஞ்சம் அஜ்ஜஸ் பண்ணி போயிறேன்"
"நான் அஜ்ஜஸ் பண்ணத் தொடங்குனா உங்க அம்மா மாதிரி இன்னொரு அம்மாவா இருப்பேன். என்னோட படிப்பு, எனக்கான அறிவு எல்லாத்தையும் தூக்கி குப்பையிலதான் போடணும்"

கணவன் மனதிற்குள் 'இப்டி புட்பால் மாதிரி மிதிபடுறேனே. அப்பவே ஆதிமூல கிருஷ்ணன்னு ஒரு நல்ல மனுஷன் திருமணம் ஆகாதவங்களுக்கு ஒரு எச்சரிக்கைன்னு எச்சரிச்சாரு. கேட்டனா...'
ஒரு காதல் கதை
10/19/2010 | Author: ஜெயந்தி
அமமாவும் நானும் அமர்ந்திருந்தோம். அம்மாவின் பலமான யோசனை ஏதோ பழைய ஊர் ஞாபகம் உள்ளுக்குள் ஓடுவதாக தோன்றியது. நான் நினைத்தது சரிதான்.

"இந்த முத்தம்மா மக சந்திரா தெரியும்ல" என்று ஆரம்பித்தார்கள்.

"ஏதோ நிழலாட்டம் ஞாபகம் இருக்கு" என்றேன்.

"சந்திரா வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மனுசங்க. கடுமையா உழைப்பாங்க. யாருகிட்டயும் எதுக்கும் கையேந்த மாட்டாங்க. யாரையும் ஒரு வார்த்தை கடிஞ்சு பேச மாட்டாங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. வெளியிலயும் கூலி வேலைக்குப் போவாங்க. அவங்க உண்டு அவங்க வீடு உண்டுன்னு இருப்பாங்க. அதுவும் இந்த சந்திரா ரொம்ப தைரியசாலி. ஒரு ஆம்பள அவகிட்ட தப்பான நோக்கத்துல பேச முடியாது. ஆம்பளங்களே பயப்படுவாங்க."

35, 40 வருஷத்துக்கு முந்தைய சம்பவம் கண் முன் விரியத் தொடங்கியது.

"பெருமாள் வீட்டு தோட்டம் காடு எல்லாத்துக்கும் சந்திராதான் வேலைக்கு ஆள் கூட்டிட்டுப்போறது, முன்னால நின்னு வேலை செய்றதுன்னு இருந்தா. அவ தலைமையிலதான் பெருமாள் நிலத்துல வேலை நடக்கும். இப்பிடியே இருந்தப்ப ஊருல எல்லாரும் பெருமாளயும் சந்திராவையும் பத்திஒரு மாதிரியா பேசத் தொடங்குனாங்க. அவங்க ரெண்டு பேரும் அந்தப் பேச்சப்பத்தி கவலப்படல. இந்த நெலமையில சந்திரா வீட்டுல மாப்பிள்ள பாக்கத் தொடங்குனாங்க. அவ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒரே பிடியா நின்னா. ஆனா அவங்க வீட்டுல என்ன பேசுனாங்களோ தெரியல ஒரு மாப்பிள்ளய பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பெருமாள் வீட்டுலயும் ஒரு பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க."



"ஏன் அவங்கதான் லவ் பண்றாங்கள்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல?"

"கிராமத்துல அதெல்லாம் நடக்காது. அதுவும் ரெண்டு பேரும் வேறவேற ஜாதி வேற"

"சந்திராவுக்கு பாத்த மாப்பிள்ளயோட ஊரு பஸ்ச விட்டு எறங்கி 6, 7 மைல் நடக்கணுமாம். இவ ஊருக்கு வரக்கூடாதுன்னு வேணும்னே அப்டி பார்த்தாங்களா இல்ல இவ விஷயம் தெரிஞ்சு வேற எங்கயும் அமையலயான்னு தெரியல. மாப்பிள்ளையும் நல்லாவே இருக்க மாட்டான். கல்யாணம் பண்ணி அனுப்புச்சாங்க மூணாவது நாள் மறுவீட்டுக்கு வந்தவ திரும்ப போகவே மாட்டேன்னு சொல்லிட்டா. அப்பற என்ன பண்ணுறது. இங்கயே ஒரு வீட்டுல ரெண்டு பேரையும் தனிக்குடித்தனமா வச்சாங்க. வீடுன்னா சின்ன குடிசை. ஒரு சின்ன ரூம், ஒரு தடுப்பு வச்ச சமையல்கட்டு. ரெண்டு பேரும் கூலி வேல செஞ்சுக்கிட்டு இருந்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா சந்திரா புருஷன் கூட ஒரு வார்த்த கூட பேச மாட்டா. அவனும் கொஞ்ச நாள் இருந்து பாத்துட்டு அவங்க ஊருக்கே ஓடிட்டான். அவ அந்த குடிசையிலேயே இருந்துட்டா."

"இந்த நேரத்துல பெருமாளு பொண்டாட்டி பிரசவத்துக்கு போனவ பிரசவத்துல செத்துப்போயிட்டா. பெறந்த கொழந்தய அவங்க மாமனார் வீட்டுலயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. இவனும் அதுக்கப்பறம் வேற கல்யாணம் பண்ணிக்கல."

"ரெண்டு பேரும் எங்க பாத்துக்கறாங்க எப்படி பேசிக்கறாங்கன்னெல்லாம் யாருக்கும் தெரியாது."

"அப்போ ஊருலயெல்லாம் உண்டாகிட்டா கொறத்திய கூப்புடுவாங்க. அவ வந்து குச்சி வப்பா"

"கொறத்தின்னா நரிக்கொறத்தியா?"

"இல்ல. இவங்க பன்னி மேய்க்கறவங்க. ஊருக்குள்ளயே இருப்பாங்க. கொறவர்ன்னு சொல்வாங்க"

"சரி இந்த குச்சி வைக்கறதுன்னா என்ன?"

"எருக்கஞ்செடி இருக்குல்ல அதுதான் இந்த வினாயகர் சதுர்த்திக்குக்கூட எருக்கம்பூ மாலை போடுவாங்களே அந்தச்செடி."

"ம் தெரியும்."

"அதோட எல நல்லா பழுத்த எல. அந்தா அந்தப் பாய் இருக்கு பாரு அந்த மாதிரி மஞ்சக் கலர்ல இருக்கும். அந்த எலைய எடுத்து அது நடுவுல இருக்க காம்பு குச்சிய ஒரு ரெண்டு இஞ்சு நீளத்துக்கு எடுத்துக்குவாங்க. ஒருமுனையில ஒரு துணிய கட்டிருவாங்க. இன்னொரு முனையில ஏதோ மருந்து வைப்பாங்களாம். இந்த குச்சிய துணி வெளியில தொங்குற மாதிரி வச்சுருவாங்க. தீட்டு படத் தொடங்குன ஒடனே அந்த துணிய பிடிச்சு குச்சிய இழுத்துவிட்டுறனும். குச்சி உள்ள போயிருச்சுன்னா அவ்வளவுதான். துணியிலயிருந்து குச்சி கழன்றுகிட்டு உள்ளே போயிருச்சுன்னாலும் அவ்வளவுதான். உயிருக்கே ஆபத்து. யாராலும் காப்பாத்த முடியாது."

"கொறத்தி இருக்காளே அவ என்ன ஆளு தெரியுமா? அவ நைசா இதுக்கு காரணம் யாருன்னு சொல்லு அப்பத்தான் மருந்து பலிக்கும்னு சொல்லி உண்மைய வாங்கிக்குவா? ஆனா யாரு கேட்டாலும் அவ சொல்லவே மாட்டா. யாரும் கேட்க மாட்டாங்க. அதுதான் எல்லாருக்கும் தெரியுமே."

பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ யோசித்த அம்மாவின் வாயிலிருந்து "எவ்வளவு பாவம்ல அந்த சந்திரா" என்ற வார்த்தைகள் வந்தன.

"இப்டியே இருந்தாங்க. அப்பறம் கொஞ்ச நாள்ல நாங்க திண்டுக்கல் வந்துட்டம். அதுப்பறம் எங்க ஊரு தொடர்பே விட்டுப்போச்சு. அப்பறம் என்னாச்சுன்னு தெரியல."

"இந்தா பாரு ஒரு கதை சொன்னா முடிவ சொல்லனும். இப்படி முடிவு கிழிஞ்சுபோன நாவல்மாதிரி கதை சொன்னா என்ன அர்த்தம்"

"நான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும்தான சொல்ல முடியும். ஊருக்கு போனா தெரியும். என்ன அப்டியேதான் இன்னும் இருப்பாங்க இல்லன்னா ஒரே வீட்டுல இருப்பாங்க. ஏன்னா இப்போ அவங்களுக்கு வயசாகியிருக்கும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல. சொன்னாலும் அவங்களுக்கு கவலையில்லை இல்ல. இல்ல ஊருக்கு பயந்துக்கிட்டு இன்னும் தனித்தனியாத்தான் இருகாங்களோ தெரியல."