கல்யாணமாம் கல்யாணம்
6/28/2010 | Author: ஜெயந்தி
உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள்/தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை”(கண்டிப்பா இது ஒரு அனுமார்வால்தான்!)

திருமணத்திற்கு முன்பாக காம்ப்ரமைஸ் செய்து கொள்வது பற்றி சந்தனமுல்லை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.

எனக்கு திருமணத்தின் போது பட்டுப்புடவைதான். அதனால அதுபற்றி ஒன்றும் பிரச்சனையில்லை. புடவை எடுப்பதற்கு முன் கலர் மட்டும் கேட்டார்கள். எனக்கு சிவப்புக்கலர் பட்டுப்புடவை வேண்டும் என்று கேட்டேன். அதே கலரில் வாங்கி வந்துவிட்டார்கள். பத்திரிகை மாப்பிள்ளை வீட்டிலேயே அடித்துக்கொடுத்துவிட்டார்கள். நாலாக மடித்த ஆர்ட்பேப்பரில் அச்சடித்த பத்திரிகைதான். நான் பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்குப்போட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எதிரே நடேசர் பிரஸ் இருந்தது. அதில் லேடீஸ் செக்ஷன் என்று தனியாக ஒன்று ஆரம்பித்தார்கள். அதில் அனைவரும் பெண்களே. எங்கள் வீட்டில் நேர் எதிர். அதனால் அங்கே அச்சுக்கோர்க்கும் வேலைக்குச் சென்றேன். அதனால் ப்ஃரண்ட்ஸ்னு பார்த்தா ஒரு பத்து பேருதான் இருந்தார்கள். அவர்களுக்கு அந்தப் பத்திரிகையையே கொடுத்துவிட்டேன். இந்த மாதிரி தனியாக அடிக்கலாம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போ அவ்வளவு வெவரம் பத்தாது (யாருப்பா அது இப்போ மட்டும் ரொம்ப விவரமாக்கும் என்று சொல்வது).

கணவர் தனியாக ப்ஃரண்ட்ஸ் கார்டு அச்சடித்துக்கொண்டார்.

என்ன ஒன்னும் இன்ரஸ்டிங்கா இல்லையா? இருங்க கல்யாணத்தின் போது நடந்த சில சுவாரஸ்யங்களைச் சொல்கிறேன். என்னை பெண் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு கணவர் ஒரு முறை வீட்டிற்கு வரப்பார்த்தார். வேறு எதற்கு அப்படியே என்னையும் பார்க்கத்தான். எங்க வீட்டிலயெல்லாம் ரொம்ப ஸ்ரிக்டு. அவர் வர்ராருன்னு தகவல் தெரிஞ்சவுடனே எங்க மாமா வழியிலேயே மடக்கி தெரிஞ்ச இடத்தில் வைத்து பேசி அனுப்பிவிட்டார். பொண்ணு பார்க்க வந்தபோதுகூட தனியாகவெல்லாம் பேசவில்லை. இப்போது போல போனில் கூட பேசிக்கொள்ளவில்லை. எங்கள் திருமணம் முடிந்தபிறகுதான் வீட்டிற்கு போனே வந்தது. திருமணத்திற்குப் பிறகுதான் நான் அவருடன் பேசினேன்.

எங்கள் கல்யாணத்தை தலைவர்களை வைத்து சுயமரியாதை திருமணம்போல் நடந்த வேண்டும் என்று என் கணவருக்கு ஆசை. அதை என் மாமாவிடம் சொன்னார். என் மாமாவுக்கும் அதில் உடன்பாடு உண்டு. அம்மாவிடம் மாமா கேட்டார்கள். என் அம்மாவிற்கு நான் ஒரே பெண். அதனால் அவர்கள் விருப்பம்தான் முக்கியம் என்று மாமா நினைத்தார்கள். அம்மா அந்தத் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்கள். என் கல்யாண வாழ்க்கைதான் சரியில்லாமப்போச்சு. (என் அம்மாவுக்கு ஐயர் வைத்துத்தான் கல்யாணம் நடந்தது) என் மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும். அதுனால ஐயர் வச்சுத்தான் கல்யாணம் நடக்கணும்னு சொல்லிட்டாங்க. மாமா சொல்லிப்பார்த்தார் "அக்கா மாப்பிள்ளை பிரியப்படுகிறார்" என்றார் அம்மா சொல்லிட்டாங்க "அப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னா வேற பொண்ணப் பார்த்து பண்ணிக்கச் சொல்லு" என்று கறாராக கூறிவிட்டார். என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).

திண்டுக்கல்லில் எங்கம்மாவுக்கு நடந்த அதே சுப்பைய்யர் சத்திரத்தில் எனக்கும் கல்யாணம் நடந்தது.

இந்தத் தொடரை தொடர நான் அழைப்பது சித்ரா, புன்னகைதேசம் சாந்தி, ஹுசைனம்மா, முத்துலட்சுமி. ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் மாட்டிவிட்டாச்சு.
சென்னையில் ஒரு மழை நாள்
6/25/2010 | Author: ஜெயந்தி
நம்ம அமைதிச்சாரல் மும்பை மழையப் பத்தி எழுதுனவொடனே எனக்கு சென்னை மழையில நான் மாட்டிக்கிட்ட நியாபகம் வந்துவிட்டது.

2002 ஆ 03ன்னு ஞாபகம் இல்லை. அப்போ சைதாப்பேட்டையில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். ஒரு நாள் சாயங்காலம் சரியாக 6 மணிக்கு மழை பிடிச்சுக்கிருச்சு. மழையின்னா மழை பேய் மழைன்னு சொல்வாங்களே அந்த மாதிரி கொட்டுது. சரியா 8 மணி வரைக்கும் ஒரே மாதிரி மழை கொட்டிக்கொண்டிருந்தது. 8 மணி ஆனவுடனே மழை சுத்தமாக விட்டுவிட்டது. அதன் பிறகு ஒரு சின்னத் தூறல்கூட இல்லை. நானும் என்னுடன் வேலை பார்க்கும் லட்சுமியும் ஆபீசில் இருந்து கிளம்பினோம். கிளம்பும்போதே வீட்டிற்கு போன் செய்து சொல்லிவிட்டேன் டிராபிக் ஜாம் ஆகி லேட்டானால் கவலைப்படவேண்டாம் லட்சுமி என்னுடன் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டேன். இல்லன்னா எங்கம்மாவுக்கு பயத்துல நாலு முறை வயத்தக்கலக்கி போயிரும். பஸ் ஸ்டேண்டுக்கு வந்தோம். சைதாப்பேட்டை கட் சர்வீஸ் ஒன்றில் ஏறி அமர்ந்துவிட்டோம். அங்கேயே டிராபிக் ஜாம் தொடங்கிவிட்டது.டிராபிக் ஜாம்னா உங்க வீட்டு ஜாம் எங்க வீட்டு ஜாம் இல்லைங்க. சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி வந்து சேர 3 மணி நேரம் ஆனது. என்ன விஷயம்னா மழை கொட்டுன வேகத்துக்கு அத்தனை தண்ணீரும் வெளியேற முடியாதில்லையா? அதுனால எல்லா இடத்துலயும் தண்ணி அதிகளவுல தேங்கி நிக்குது. (கம்மியா பேஞ்சா மட்டும் தேங்கி திக்காதான்னெல்லாம் கேக்கக்கூடாது) அதுனால டிராபிக் ஜாம் ஆகியிருக்கு. நல்ல வேளை லட்சுமியும் கூட இருக்காங்க. ஒரு துணையா போச்சுன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. எனக்கு அடுத்த ஸ்டாப்பிங் அவங்க வீடு.

எங்க பஸ்சுல கூட்டம் கம்மி அதுனால எல்லாரும் உட்கார்ந்திருந்தோம். பக்கத்தில் வந்த பஸ்களில் ஸ்டேண்டிங்கில் வந்தார்கள். அவர்கள் எவ்வளவு பாவம். எவ்வளவு நேரம் நிற்க முடியும். உட்கார்ந்திருந்தாலும் எங்களுக்கு ஒரு கஷ்ட வந்துச்சு பாருங்க. பசின்னா பசி வயத்த கிள்ளுது. என்னா பண்ண முடியும். ஒரு வாய் தண்ணி குடிக்கலாம்னா எங்க போறது? அதுலயும் ஒரு சந்தோஷம் நல்ல வேளை பாத்ரூம் வரல. அத்தனை பேருலயும் வயத்தக்கலக்கிட்டு வந்தவங்க, யூரின் டேங்க் புல்லானவுங்க பாடெல்லாம் நினைச்சுப்பார்க்கவே முடியல.

அப்போ இந்தளவுக்கு செல்போன் எல்லாம் எல்லோரும் வைத்திருக்க மாட்டார்கள். இப்போதான் பிறக்கும் குழந்தை கூட கையில் செல்போனுடன் பிறக்கிறது. நிறையப்பேர் தகவல் சொல்ல முடியாமல் தவித்திருக்கலாம்.

ஒருவழியா நாங்க வீட்டுக்கு வந்து சேந்தப்ப மணி நள்ளிரவு 1 மணி. அப்பக்கூட எங்க ஹவுஸ் ஓனர் வரல. அவங்க பாரீஸ்ல இருந்து வரணும். அவங்க கார் வேற வழியில ரிப்பேர் ஆகி அவங்க ஒரு வழியாகி 2 மணிக்கு மேல வந்தாங்க.

அடுத்த நாள் பேப்பர்ல பாத்தா சென்னை முழுவதும் இதே மாதிரிதான் நிலைமையாம். அன்று சென்னையில் எல்லோருமே இரவு 1 மணி 2 மணிக்குத்தான் வீட்டுக்குப் போயிருக்காங்க. தண்டவாளத்துல தண்ணி நின்னுச்சுன்னு டிரெயினும் ஓடலையாம்.
பேச்சு மொழி
6/21/2010 | Author: ஜெயந்தி

எங்க ஊர் திண்டுக்கல்னாலும் எங்க சொந்தக்காரங்க நிறைய இருந்தது திருநெல்வேலிப்பக்கம். அதுனால அவங்க வர்றப்ப போறப்ப அந்த ஊர் பேச்சு சிறுவயதில் இருந்தே கேட்டு பழக்கமாயிடுச்சு. பெறகு, மதினி போல நிறைய வார்த்தைகள் புதுசாக இருக்கும்.

அப்புறம் கல்யாணமாகி கோயம்புத்தூருக்கு விருந்துக்கு போன போது அந்த ஊர் பேச்சு வித்தியாசமாக இருந்தது. அங்கும் நிறைய சொற்கள் நம் ஊரில் இருந்து வேறுபடும்.

அப்பறம் வேலூருல போயி தனிக்குடித்தனம் வச்சுட்டு எல்லாரும் வந்துட்டாங்க. அப்போ 19 வயசுங்க. வீட்டுல கதை புத்தகம் படிச்சிக்கிட்டு இருந்த எனக்கு கல்யாணத்தப்பண்ணி அதுவும் தனிக்குடித்தனம்வேற. சமையல் ஒரு பக்கம் பயமுறுத்துது. அந்த ஊருல பேசுற பேச்சு வேற பயமுறுத்துது. மெட்ராஸ் பாஷை மாதிரி பேசுவாங்க.

அப்புறம் ஒரு வழியா ரெண்டையும் கத்துக்கிட்டாச்சு. ஊருக்குப் போனப்போ என்னோட பேச்சு வேலூரு பேச்சு மாதிரி மாறிடிச்சுனு ஒரே திட்டு. அந்த ஊரு பேச்ச பேசுனா இந்த ஊருப்பக்கமே வராதன்னு சொல்லிட்டாங்க. அப்பறம் ஊருப்பக்கம் போறதுக்கு பயந்துக்கிட்டே போயி ஒரு மாதிரியா அதிகமா வாயத் தொறக்காம சமாளிச்சேன்னு வைங்க.

இந்த ஊரு பேச்சுல எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை இருக்கு. சிலர் கலைஞன் என்ற வார்த்தைய கலைஞ்ஜன்-னு உச்சரிப்பாங்க. எனக்கு காதுல ஈயத்தக் காய்ச்சி ஊத்துன மாதிரி இருக்கும்.

நான் அறிவொளி இயக்கம் வகுப்பு எடுக்கறப்போ வரும் இளவழகன் இதே மாதிரி என் எதிரில் உச்சரித்துவிட்டார். அவ்வளவுதான் எனக்கு வந்ததே கோபம். அவரோட சண்டைதான்.
"நீங்க உச்சரிக்கறது தப்புங்க."
"இல்லங்க அப்படித்தான் சொல்லனும்"
"சரி ஞாயிறு இத எப்படி உச்சரிப்பீங்க"
"ஞாயிறு"
"இத மட்டும் ஏன் சரியா சொல்றீங்க. ஞ்ஜாயிறுனு சொல்ல வேண்டியதுதான"
"ஞாயிறு அப்படித்தான் சொல்லனும் கலைஞ்ஜன கலைஞ்ஜன்னுதான் சொல்லனும்"

இத்தனைக்கு அவரு எப்பவுமே அதிகமா தூய தமிழ்லதான் பேசுவாரு.
நான் அவர தப்பா குறை சொல்றேன்னு அவரு நினைக்கிறாரு. அவரு பேசுறதுதான் சரின்னு நினைக்கிறாரு.
"இங்க பாருங்க எனக்கு நன்னன்தான் கல்யாணமே பண்ணி வச்சாரு. நான் பேசுறதுதான் சரி."
"இல்லங்க நீங்க பேசுறது தப்பு"
"சரி நானு இத பத்தி விசாரிக்கிறேன்"
அதுக்கப்புறம் அவரும் அத மறந்துட்டாரு. நானும் மறந்திட்டேன்.

என்னதான் சொல்லுங்க இந்த "ழ" கரம் மட்டும் கொஞ்சம் எங்கள படுத்துனாலும் எங்க ஊருப் பேச்சுதாங்க கரெக்ட்டு.
குந்தாணி
6/14/2010 | Author: ஜெயந்தி
சினிமாக்களில் இந்த வார்த்தை வரும்.

இந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால் தமிழ்நாட்டில் அநேகம் சொல்வது குண்டான பெண்களைக் குறிக்கும் சொல் என்பதாகவே இருக்கும்.

ஆனால் குந்தாணியின் உண்மையான பொருள் சவுத் பக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும். உரலில் நெல்லையோ, அரிசியையோ போட்டு குத்தும்போது அது வெளியில் சிதறிவிடாமல் இருக்க உரலைச் சுற்றி ஒரு தடுப்பு மாதிரி வைத்திருப்பார்கள். நம்ம கிரைண்டரில் வெளியே இருக்கிறதே எவர்சில்வர் பாகம் அதுபோல. ஆனால் குந்தாணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாய் அகன்று, கீழே (உரல் அளவுக்கு) ஒடுங்கி இருக்கும்.

எங்க அம்மா சொல்வாங்க அவங்க சின்ன வயசா இருந்தப்போவெல்லாம் (திண்டுக்கல் பக்கத்தில் கிராமம்) பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பச்சரிசியும், கருப்பட்டியும் வருமாம். இரண்டு பேர் இரவிலேயே மாவிடிக்கத் துவங்கிவிடுவார்களாம். விடியற்காலையில் இரண்டு பேர் களி கிண்டத் தொடங்கிவிடுவார்களாம். அதாவது இரண்டுபேர் என்பது மாற்றி மாற்றி பலர் செய்வார்கள். ஊரில் உள்ளவர்களை யாரும் இந்த வேலை செய்யச் சொல்லி அழைக்க மாட்டார்களாம். இந்த மாதிரி கேள்விப்பட்டால் அவர்களாகவே வந்து வேலை செய்துகொண்டிருப்பார்களாம். காலையில் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கருப்பட்டிப் பாகு ஊற்றி கிண்டிய களி போகுமாம்.

எங்கள் குடும்பம் திண்டுக்கல் வந்த பிறகும் பழைய பழக்கம் போகாமல் நீண்ட நாட்கள் கருப்பட்டிக் காப்பிதான். அதுவும் வேம்பார் கருப்பட்டி பெரிய ஓலைக்கொட்டானில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். கருப்பட்டிக் காப்பி போடுவது ஒரு கலை. எங்க அம்மா மிகச் சரியாக அதைச் செய்வார்கள். கருப்பட்டியை தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கும்போது காப்பித்தூள் போட்டு கொதித்தவுடன் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பாலைக் காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் சூடு ஒரு அளவில் இருக்கும்போது இரண்டையும் கலக்க வேண்டும். ரொம்ப சூடாக இருந்தால் காப்பி திரிந்துவிடும். அப்புறம் எப்படியோ ஜீனி எனப்படும் சர்க்கரைக் காப்பிக்கு மாறிவிட்டது.குந்தாணியில் தொடங்கி கருப்பட்டிக்கு வந்துவிட்டேன். கிராமங்களில் நெல் குத்தும் உரல் சற்று உயரமாக இருக்கும். பெரிய சைஸ் உடுக்கை போல் இருக்கும். அதன் மேல் இந்த குந்தாணியை வைத்து மாவோ, நெல்லோ, சோளமோ குத்துவார்கள். குண்டாக இருக்கும் பெண்களை குந்தாணி என்று சொல்லுவார்கள் (குந்தாணிபோல் இருப்பதால்). இப்போது அந்த உரலும் குந்தாணியும் இருக்கதோ என்னவோ தெரியவில்லை.

வரும் காலங்களில் குந்தாணி என்றாலே குண்டான பெண்கள் என்று ஆகிவிடுமோ?

டிஸ்கி: குந்தாணி படம் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் அனுப்பி உதவவும்.
ஒரு பிரச்சனைன்னு வந்தா இப்படி தடி எடுத்தவனெல்லாம் தண்டல்க்காரனாக மாறுவது ஒரு பிரச்சனைக்குத் தீர்வாக எப்போதும் ஆகாது. அந்தப் பிரச்சனை முடிவின்றி தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

நான் பிளாக் உலகத்திற்கு வந்ததிலிருந்து இது வரை நடந்த சண்டைகளில் இதுதான் முடிவேயில்லாமல் நீண்டுகொண்டே இருக்கிறது.

நம் பிளாக் உலகம் பல குழுக்களாகத்தான் இயங்குகிறது என்று தெளிவாக தெரிந்துவிட்டது. எனக்கு என்ன தோன்றுகிறதென்றால், ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒருவரையோ அல்லது இருவரையோ தேர்ந்தெடுத்து 5லிருந்து 10 பேர் கொண்ட ஒரு குழு அமைத்துக்கொண்டால், சின்னப் பிரச்சனைகள் முதல் இது போன்ற தீராத பிரச்சனைகள் வரை நம் சர்ாபாக குழு அங்கத்தினர் கூடிப்பேசி ஒரு முடிவை கொண்டு வருவார்கள். அதுவரை மற்ற அனைவரும் அமைதி காக்க வேண்டும்.

குழுகூடி என்ன முடிவெடுக்கிறார்களோ அதை நாம் அனைவரும் மவுனமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இது எனக்குத் தோன்றும் கருத்து. வலையுலக மக்கள் அனைவரும் யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.