பதிவுலகம்
12/04/2010 | Author: ஜெயந்தி
வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த ப்ளாக் எனக்கு அறிமுகமானது. வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது. பார்க்காமல் பேசிக்கொள்வது, பாராட்டிக்கொள்வது, திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக்கொள்வது உண்மையிலேயே இது வேறொரு உலகம்தான். இந்த உலகம் எனக்கு மிகவும் பிடித்தமான உலகமாக மாறிப்போனது. எத்தனை எத்தனை உறவுகள். நட்புகள்.

ப்ளாக் தொடங்குவற்கு முன் என்னால் எழுத முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. என்னையும் எழுத வைத்திருக்கிறது கூகுள். என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்களை எழுத வைத்திருக்கிறது. எத்தனை விதமான அனுபவங்கள் எத்தனை விதமான சிந்தனைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான எழுத்துக்கள். பத்திரிகைன்னு எடுத்துக்கொண்டால் ஒரு சிலர் மட்டுமே எழுத முடியும். அதிலும் தரம் என்று ஒன்று வைத்திருப்பார்கள். இங்கே அதெல்லாம் இல்லை. நமக்கு நாமே ராஜா. அதற்காக ப்ளாக் உலகம் ஒன்றும் பத்திரிகை உலகத்திற்கு குறைந்தது என்று நான் நினைக்கவில்லை.

சிலர் எழுத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைப்போல் சிலர் எழுத்துக்கள் பரவாயில்லாமல் இருக்கும். அவரவர் படிப்பு, அறிவு, வளர்ந்த விதம், சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரியே எழுத்துக்கள் அமையும். அதனால் எல்லா எழுத்துக்களும் அவர்களது உணர்வுகளே என்ற வகையில் நான் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

நாம் எழுதுவதை இன்னொருவர் பாராட்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் எழுதுவதையும் பாராட்டுகிறார்களே என்று எனக்குத் தோன்றும். நிச்சயம் எல்லோருக்கும் பின்னூட்டம் அதே மகிழ்ச்சியை அளிக்கும் என்று நினைக்கிறேன். நானும் நிறைய பேருக்கு பின்னூட்டமிட நினைப்பேன். என்னுடை வேலைகளுக்கு நடுவே குறைந்த அளவே பின்னூட்டமிட முடிகிறது என்பது எனக்கு மிகப்பெரிய குறையே. ஒருவருக்கு ஒருவர் வாக்களித்துக்கொள்வது, நாம் ஒருவருக்கு வாக்களித்தால்தான் நாமும் நமக்கான வாக்கை எதிர்பார்க்க முடியும். இது ஒன்றும் ஒன்வே இல்லையே.

இப்படியே சந்தோஷமா போயிட்டிருந்த ப்ளாக் உலகத்துல ஒரு சின்ன தேக்கம். சிலபல காரணங்களுக்காக மூன்று மாதங்களுக்கு என்னால் இந்தப்பக்கம் வர முடியாது. மக்களே என்னை மறந்துறாதீங்க. எப்பவாவது நேரம் கிடைத்தால் இந்தப்பக்கம் வருவேன். (யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும், சவுந்தருமா?)

ஆரஞ்சு கலர் பட்டுப்புடவையை பார்த்தால்
அதை வாங்கிக்கொடுத்த அக்காவின் ஞாபகம்

மயிலிறகைப் பார்த்தால்
சிறுவயது பள்ளித்தோழனோடு
புத்தகத்தில் குட்டிபோட வைத்து
மயிலிறகு வளர்த்த ஞாபகம்

சுவரில் தொங்கும் இயற்கைக் காட்சி படத்தைப்பார்த்தால்
ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போது கொடுத்த
தோழி ஞாபகம்

யாருக்காவது எதைப்பார்த்தாவது
என் ஞாபகம் வருமா?

டிஸ்கி: இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.
சிலர் தமிழ்படங்களை விமர்சிப்பதைப்பார்க்கும்போது எனக்கு பயங்கர கோபம் வரும். நாம் அருமையான படம் என்று நினைத்திருப்போம், அந்தப்படத்தை குறைகூறி கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருப்பார்கள். பிறகு நமக்கு கோபம் வராதா? இவர்கள் எந்தப்படத்தைத்தான் நல்ல படம் என்று கூறுவார்கள் என்று தோன்றும். இவர்களுக்கு ரசனையே இல்லையோ என்றும் நினைப்பேன்.

எங்க மாமாவும் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏதாவது ஒரு நல்ல படம் பார்க்கலாமா என்று கேட்டேன். அவர்கள் அளித்தபதில் இதேபோல் எனக்கு கோபத்தை ஊட்டியது. எங்களுக்கு தமிழ்படமே பாக்க முடியல என்றனர். ஏதோ பிலிம் சொசைட்டியில் மெம்பராம். வாரம் ஒரு உலகப் படம் போடுவார்களாம். அதைப்பார்த்துவிட்டு தமிழ்படம் பார்க்க முடியவில்லை என்றனர். அது நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மாமா என்பதால் சின்ன கோபத்தோடு போயிற்று.இப்போது சில வருடங்களாக என் பிள்ளைகளின் தயவில் சில உலகப்படங்கள் நானும் பார்க்கிறேன். ஆங்கில சப் டைட்டிலுக்கே எனக்கு தமிழில் மொழிபெயர்ப்பு செய்யனும். அப்படி சமீபத்தில் பார்த்த படம் The Way Home 2002 - வீடு திரும்பல் என்ற கொரியன் பிலிம். முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு கூன் வளைந்த வாய் பேச முடியாத ஒரு கிழவி, ஒரு 7-8 வயது சிறுவன். அந்தச் சிறுவனின் அம்மா மகனை தன் தாயிடம் (சிறுவனின் பாட்டி) கொஞ்சம் நாட்கள் விட்டுச் செல்கிறார். மலைமேல் அமைந்த கிராமம். அதிலும் அவங்க பாட்டி வீடு இன்னும் மேலே தனியாக இருக்கும்.

சிட்டியில் வளர்ந்த பையன். அவனுக்கு அந்த ஊர், அந்த வீடு, அந்தப்பாட்டி எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் அவர் அம்மா வலுக்கட்டாயமாக விட்டுச் செல்கிறார். அவன் தன் பாட்டியிடம் பேசவே மாட்டான் அவ்வளவு பிடிக்காது. அந்த சில நாள் பாட்டியுடனான வாழ்க்கை அவனுக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை.

அந்த நாட்களில் அவர்கள் இருவரும் சாதாரணமான வாழ்க்கையில் ஏற்படுவது போன்ற நிகழ்வுகளே இருக்கும். மலையில் விளையும் பொருட்களை பஸ்சில் பக்கத்து ஊருக்கு எடுத்துச்சென்று விற்றுவிட்டு வந்தால்தான் பாட்டிக்கு காசு. சிட்டியில் பீஃசா, பர்கர் என்று சாப்பிட்டு வளர்ந்த பையன். பேரன் மீது பாசம் மட்டுமே காட்டும் பாட்டி. ஊருக்குச் செல்லும் நாள் வரும்போது பாட்டியின் அன்பை புரிந்துகொள்ளும் சிறுவன்.

இதில் வரும் காட்சிகள் அனைத்தும் சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள்தான். திடுக் சம்பவங்களோ, குளோசப் காட்சிகளோ, முகம் துடிக்க, கண்கள் கலங்க நடிக்கும் காட்சிகளோ இல்லை. நாம் நம் வாழ்க்கையில் எப்படி இருப்போம் அதே போன்ற காட்சிகள்தான். மெல்ல அந்த மலைப் பாதையில் நடந்து செல்லும் பாட்டி. படமும் மெதுவாகத்தான் செல்லும். மெதுவாகச் செல்வதால் போர் அடிக்கவில்லை. தொடர்ந்து பார்க்கும் ஆவலைத்தான் தந்தது. படம் முடிந்தவுடன் மனதில் தோன்றும் கனமான உணர்வு. அந்தப் படத்தைப் பார்த்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இன்னும் அந்தப்பாட்டியும், எனக்குப் புரியாத மொழியில் பேசும் அந்தச் சிறுவனும் என் நினைவில் அடிக்கடி வருகிறார்கள். இதைத்தான் உலகப் படம் என்று கொண்டாடுகிறார்கள்.இப்படிப்பட்ட படங்களையே பார்ப்பவர்களுக்கு தமிழ்ப்படங்கள் ஏமாற்றத்தைத்தானே அளிக்கும். இந்தப் படங்களைப் பார்த்த பிறகு தமிழ்ப்படங்களை விமர்சிப்பவர்களின் ஆதங்கம் புரிகிறது. அவர்களின் விமர்சனமும் எனக்கு கோபத்தை அளிப்பதில்லை. புரிந்துகொள்ளவும் முடிகிறது.

இப்போ வந்துள்ள நந்தலாலா படத்தின் காட்சிகள் டிவியில் பார்க்கும்போது மேற்சொன்ன படங்களின் சாயல் தெரிகிறது. நம்ம ஊருலயும் உலகப்படமான்னு தோணுது. அந்தப்படத்த வச்சு ரெண்டு விதமான கருத்துக்கள் இணையவெளியில் இருப்பதை அறிகிறேன். இரண்டுமே தவறல்ல. ஒன்று இந்த மாதிரி படங்கள் தமிழில் தேவை. இதைப் பார்த்தாவது மக்களும் சினிமான்னா என்னவென்று தெரிந்துகொள்ளட்டும், ஒன்றிரண்டு இயக்குனர்களாவது இதைப்போல படமெடுக்க முனைவார்கள் என்பது. இவர்கள் நினைப்பு ரொம்ப சரி. இரண்டாவது ஜப்பான் படத்தை முன்மாதிரியாக வைத்து எடுத்துவிட்டு அந்தப் படத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பது. இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. பூ, பேராண்மை போன்ற படங்களில் டைட்டிலில் போட்டிருந்த அந்த ஆங்கிலப்படங்களின் பெயர்களை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்தந்த இயக்குநர்களின் படங்களாகவே பார்த்தார்கள். இவரும் அதைப்போல் போட்டிருக்கலாம். இப்போது அதை வைத்து நடக்கும் சர்ச்சைகளால்தான் இந்த விஷயம் மக்களுக்கு தெரிகிறது. சிறிதாக ஒரு வரி போட்டிருந்தால் மிஷ்கின் படமாகவே அனைவரும் பார்த்திருப்பார்கள்.

டிஸ்கி :  The Way Home 2002 - வீடு திரும்பல் இந்தப் படத்தின் விமர்சனம் பிரசன்னா (கொத்து பரோட்டா) நன்றாக செய்துள்ளார்.