எழுத்தும் வாழ்க்கையும்
6/01/2013 | Author: ஜெயந்தி

சுஜாதா அவர்களது எழுத்தை எனது டீனேஜ் பருவத்தில் இருந்தே வாசித்து வருகிறேன். சிறுகதையாகட்டும் நாவலாகட்டும் அவரது எழுத்து நம்மை எங்கும் அசைய விடாமல் படிக்க எடுத்தால் முடித்துவிட்டுத்தான் கீழே வைக்கவிடும். அறிவியல் கட்டுரைகளைக்கூட வாசகனை விறுவிறுப்பாக படிக்க வைக்க அவரால் மட்டுமே முடியும். அவரது எழுத்து என்னை எந்தளவுக்கு ஈர்த்துள்ளது என்பது அவரது இறப்பின்போதுதான் புரிந்தது.

எழுத்தாளர் சுஜாதா இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன் மனம் கலங்கி கண்ணீர் வந்தது. இவரைப்போல பிரபலமான நபர்களது இறப்பின் செய்தி ஒரு செய்தியாகத்தான் தெரியும். அல்லது கொஞ்சம் மன வருத்தம் அடையும். கண்ணீரெல்லாம் வந்தது கிடையாது. ஆனால் சுஜாதாவின் இறப்பின் செய்தி என்னுள் மிகப் பெரிய சோகத்தை ஏற்படுதியது. அந்த சோகம் பல மாதங்கள் நீடித்தது. அப்போதுதான் சுஜாதா அவர்களின் எழுத்து எத்தகைய தாக்கத்தை என்னுள் ஏற்படுதியுள்ளது என்று உணர்ந்தேன்.


சுஜாதா மனைவியின் பேட்டி பற்றி சிவராமன் ப்ளசில் படித்தேன். படித்தவுடன் தோன்றியது இத்தனை காலத்துக்குப் பிறகு இந்த அம்மாவுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேல.

ஆனால் திருமதி சுஜாதா அவர்களின் இதே வகையான பேட்டி சுஜாதா உயிரோடு இருந்த போதே ஏதோ ஒரு பத்திரிகையில் படித்திருக்கிறேன். இதே மாதிரி திட்டித்தான் எழுதியிருந்தார். அப்போதிலிருந்து எனக்கு ஏனோ திருமதி சுஜாதாவை பிடிக்காமல் போனது. நமது மனதிற்குப் பிடித்த ஒருவரைப்பற்றி தவறான செய்தியை மனது ஏற்கவில்லை. அப்படி சொன்னவரை பிடிக்காமல் போனது. இப்போது வரை பிடிக்காமல்தான் இருந்தது. காரணம் சுஜாதாவைப் பற்றி தவறாக சொன்னதனால்தான்.

எனக்கு ஒன்னுதான் புரியல. பேட்டி கொடுத்தது திருமதி சுஜாதா. ஆனா அத பேட்டி எடுத்தவங்களயும் வெளியிட்ட பத்திரிகையையும் ஏன் திட்டறாங்கன்னு புரியல. அவங்க மனசுல உள்ளத அவங்க சொல்றாங்க. புதுகை அப்துல்லா சொல்றாரு அவங்க காலகட்டத்துல இதெல்லாம் சகஜம்னு. அப்டி சகஜமா இருந்தா இந்த அம்மாவுக்கு இப்பவும் அவ்வளவு வலி தரக்கூடிய நிகழ்வா அது இருந்திருக்காதுன்னு நினைக்கிறேன். நிறைய படித்த உலகத்தைப்பற்றி அதிக அளவில் தெரிந்த ஒருவர் ஒரு சராசரி ஆண் மகனைப்போலதான் மனைவியை நடத்த வேண்டுமா என்ன? அப்பறம் படிப்பு என்னத்துக்கு.

சுஜாதா அவர்களுக்கும் தனது குணம் தெரிந்திருந்த காரணத்தினால்தான் தனது மனைவி கொடுத்த பத்திரிகை பேட்டியை அவர் தடுக்கவில்லை என்று நினைக்கிறேன். அல்லது அவரையும் மீறி வந்திருக்குமா தெரியவில்லை. ஒவ்வொரு மனிதனுள்ளும் ப்ளசும் இருக்கும் மைனசும் இருக்கும்.

திருமதி சுஜாதாவும் சராசரி சமையலரையில் ஒளிந்துள்ள பெண் அல்ல. அவர்களும் பத்திரிகை ஆசிரியராகவெல்லாம் இருந்திருக்கிறார்கள். தெளிவான பெண்தான். அவர்கள் உணர்வுகளை சொல்கிறார்கள். சரி. இவங்க இப்டி சொல்றதுனால சுஜாதாவோட எழுத்தோட பவரெல்லாம் காணாம போயிடுமா என்ன? அவங்க அவங்க உணர்வுகள சொல்றாங்க. அதுக்கு மதிப்புக்கொடுப்போம்.