புத்தாண்டு வாழ்துக்கள்!
12/31/2009 | Author: ஜெயந்தி
உலக மக்கள் அனைவருக்கும் வரும் ஆண்டு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்.வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நோபல் பரிசு விஞ்ஞானி.பரம்பரை நோய்களையும் தீர்க்கக்கூடிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியவர். இவரைப் பற்றி ஆனந்த விகடனில் போட்டிருந்த செய்தி 2002ல் நடந்த குஜராத் கலவரத்தில் அநாதைகளான  முஸ்லிம் சிறுவர்களில் சிலரை நண்பர்களின் உதவியுடன் படிக்க வைத்துக்கொண்டிருப்பதாக படித்தபோது அவர் மீதான மரியாதை கூடியது. அவர் நோபல் பரிசை அறிவித்தவுடன் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், 'என்னைப்போலவே இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். எனக்கு தந்தது ஆச்சரியமாக இருக்கிறது' என்று அவர் தன்னடக்கத்துடன் சொன்னதைக் கேட்டபோது மரியாதை ஏற்பட்டது.

இப்போது சென்னை வந்திருந்தபோது அரசாங்கம் அழைத்தால் இங்குள்ள மாணவர்களுக்கு நான் பாடம் எடுக்கத்தயார் என்று கூறுவதை டிவியில் பார்த்தேன்.

இங்குள்ளவர்கள் அவரைப்பற்றி என்னென்ன திட்டினார்கள்? அவர் இந்தியரா? அவர் தமிழரா? அவர் மனிதரா? நமக்கு திட்டுவதற்கு யாராவது கிடைத்தால் போதும் நாமெல்லாம் அடுத்தவரைத் திட்டுவதற்காகவே பிறந்ததுபோல் திட்டித்தீர்ப்போம்.

நோபல் பரிசு அறிவித்தவுடன் மெயில் நிறைய வந்ததால் அவருக்கு ஏற்பட்ட கஷ்டத்தை அவர் கூறியவுடன் நமக்கெல்லாம் கோபம் வந்துவிட்டது. உண்மையை ஒருநிமிடம் யோசித்துப் பாருங்கள். நம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கானவர்களில் ஆயிரக்கணக்கில் கூட வேணாம், நூற்றுக்கணக்கானவர்கள் மெயில் பண்ணியிருந்தாலும் போதும். என்ன நடந்திருக்கும்? ஒரு மனிதன் அந்த மெயில்களால் தனக்கு நேர்ந்த கஷ்டத்தைக்கூட சொல்லக்கூடாது. அவரைப் பொறுத்தவரை ஸ்டெயிட் பார்வேர்ட் ஆன ஆள். மனதில் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிடுபவர். நோபல் பரிசுக்காக ஆராய்ச்சிப் படிப்புக்கு வராதீங்க! சயின்சில் ஆர்வம் இருந்தால் வாங்க என்று இளைஞர்களை அவர் அழைத்துள்ளார்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
கோயம்புத்தூர் பயணம்
12/23/2009 | Author: ஜெயந்தி
ஏனுங் என்னய தொலாவுனீங்களா?

நான் வந்துட்டேனுங்.அப்பா மூணு நாளு சூறாவளி சுற்றுப்பயணம் மாதிரி சுத்தியாச்சு. பனிக்காத்துல சுத்துனதுனால இங்க வந்தவுடனே ஜுரத்திலயிலும் விழுந்து எந்திரிச்சாச்சு. போன திங்கள் செவ்வாய் சென்னையில் நல்ல மழை என்று பிள்ளைகள் போனில் சொன்னார்கள். கோவை வெறும் மேக மூட்டம் மட்டுமே.கோவையில் ஒரு நாள் பொள்ளாச்சி பக்கத்தில் கிராமங்களில் இரண்டு நாள். கணவரது உறவுகள். பொள்ளாச்சியில் இருந்து உடுமலை போகிற ரோடில் இருக்கும் சில கிராமங்களுக்கு சென்று வந்தோம். எங்களைப் பார்த்ததும் அந்த மக்கள் கண்களில்தான் எவ்வளவு சந்தோஷம். ரெண்டு ஏக்கர் மூணு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு நிலத்திற்கு நடுவில் வீடு கட்டிக்கொண்டு வருஷமெல்லாம் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த தலைமுறையில்தான் ஒன்றிரண்டு பிள்ளைகள் இன்ஜினியரிங் முடித்துவிட்டு மற்ற ஊர்களுக்கு வேலைக்குச் சென்றிருக்கிறார்கள்.அந்த கிராமங்களில் வெயில் காலத்தில்கூட வேர்க்காது. காற்று வேறு அடித்துக்கொண்டே இருக்கும். இப்போது ஊருக்குப் போனபோது சுஸ்லான் காற்றாலைகளை பார்க்க முடிந்தது.இந்த கிராமத்திற்குச் செல்வதென்றாலே சந்தோஷமாகிவிடும். முக்கால்வாசி தென்னந்தோப்பு. கொஞ்சம் மற்ற பயிர்களும் வைத்திருப்பார்கள். உறவினர் ஒருவரின் தயவில் காரிலேயே எல்லா ஊர்களுக்கும் சென்று திரும்பும் வாய்ப்பு கிடைத்தது. அவர் இல்லாவிட்டால் எல்லோரையும் பார்ப்பது மிகவும் சிரமமாகியிருக்கும். என்ன சொல்ல கோயமுத்தூர் பயபுள்ளைகளும் பாசக்கார பயபுள்ளைங்கதான்.ஒரு ஊருக்குச் செல்லும்போது இரவு நேரம். தோட்டத்திற்கு நடுவில் வீடுகட்டிக்கொண்டு இருப்பதால் தெரு விளக்கு இருக்காது. நடு ரோட்டில் ஒரு ஆந்தை கார் வெளிச்சத்தைப் பார்த்து செய்வதறியாமல் அமர்ந்திருந்தது. உடனே காரை நிறுத்திவிட்டு லைட்டை ஆப் பண்ணி போட்டவுடன் அந்த ஆந்தையைக் காணவில்லை.ஒரு வீட்டிற்குச் செல்லும் போது வரப்பில் புல் பிடுங்கி ஒரு ஓரம் கிடந்தது. அதன் அருகிலேயே கடப்பாரை ஒன்று மண்ணில் குத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டிற்குச் சென்றவுடன் அவர்கள் கேட்ட கேள்வி "ஏனுங் வழியில ஆணி கெடந்துச்சுங்" "ஆணியெல்லாம் ஒன்னுமில்ல. ஒரு கடப்பாரைதான் இருந்துச்சு" "சின்ன ஆணிகூட கெடந்துச்சுங் அதுலதான் மாடு கட்டி வச்சிருந்தோம் " ஆணியில மாடு கட்டுறதா? என்னான்னு பார்த்தா அது கடப்பாரையில பாதியளவு இருக்கு. கடப்பாரை ஆணின்னா, ஆணிய என்னான்னு சொல்லுவாங்க.
தமிழ் மணம் அவார்ட்
12/11/2009 | Author: ஜெயந்தி

தமிழ் மணம் விருதுகளுக்கு எனது படைப்புகளை பரிந்துரை செய்திருக்கிறேன். எவ்வளவு தைரியம் உனக்கு, என்ன கிழித்துவிட்டாய் என்று பரிந்துரை செய்திருக்கிறாய் என்று கேட்கிறீர்களா?

ஏங்க இப்டியெல்லாம் யோசித்திருந்தா நானெல்லாம் ப்ளாக்கே ஆரம்பித்திருக்க கூடாதே. சரி விடுங்க ஏதோ அசட்டு தைரியம்.

மத்தவங்கள்ளாம் ரஜனி, கமல்-ன்னா நான் ஒரு சிம்பு, தனுஷ் அப்படிப் பார்க்காதீங்க, சரி சரி ஒரு ஜே.கே.ரித்தீஷ் மாதிரி இருந்துவிட்டுப் போகிறேனே. விட்டுட்டுப் போவீங்களா அதுக்குன்னு ஒரு பச்சப் புள்ளயப் போயி இப்டி ஆளாளுக்கு பேசுனா எப்புடி.

XXXXXXXXXXXXXX

நாளை கணவரும் நானும் கோவை செல்ல இருக்கிறோம். அதன் காரணமாக கம்பேனிக்கு அடுத்தவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
"ஏம்மா எப்போ பாத்தாலும் ஒரே மாதிரி சமையல் பண்ணுறியே கொஞ்சம் மாத்தி ஏதாவது பண்ணேன்" என்ற பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு எடுத்த அதிரடி முயற்சி. டிவியில் தான் எல்லாச் சேனலிலும் சமையல் சொல்லித்தருகிறார்களே. ஒரு ஞாயிற்றுக்கிழமை சிக்கன் மஞ்சூரியன் செய்வது என்று கம்பேனியில் முடிவானது. அடுத்து அதற்கு தேவையான பொருட்களை சேகரிக்கும் பணி. அது என்ன பொருட்களை சேகரிக்கும் பணி என்று தனியாக ஒரு வேலை போல் சொல்கிறேன் என்று பார்க்கிறீர்களா? நம்மூர் சமையலுக்கு அதிகபட்சமாக இஞ்சி, புதினா, கறிவேப்பிளை கொத்தமல்லி போன்றவைதான் உடனடித்தேவையாக இருக்கும். சிக்கன் மஞ்சூரியனுக்கு நாம் சும்மா வேடிக்கை மட்டுமே பார்க்கும் குடை மிளகாய், வெங்காயத் தாள் போன்றவை. இன்னும் கேள்வியே பட்டிறாத சோயா சாஸ் போன்றவை. ஓரளவு எல்லாவற்றையும் சேகரித்தாகிவிட்டது. இந்த சோயா சாஸ் மட்டும் பக்கத்துக்கடையில் கிடைக்கவில்லை. கணவர் மெயின் ரோடுக்கு அனுப்பப்பட்டார். இரண்டு மூன்று கடைகளில் தேடிவிட்டு போன் வந்தது சோயா சாஸ் கிடைக்கவில்லை என்று. "இங்க பாருங்க அது இல்லாம இந்த டிஷ் நல்லா இருக்காது" போனிலேயே முகமும் தெரிந்துவிட்டது போலும் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி கடைசியாக நீல்கிரீஸ் கடையில் இருந்து அப்படா என்று வாங்கி வந்தார்.

அது எந்த அளவில் கிடைக்கும் என்று தெரியாததால் சின்ன அளவில் கிடைப்பதை வாங்கி வரும்படி சொல்லி அனுப்பினேன். வாங்கி வந்த பாட்டில் பெரிதாக இருந்தது. (350 மிலி)

"சின்னதுதான வாங்கிட்டு வரச்சொன்னேன்".
"இதுதான் சின்னதாம்".
"எத்தனை ரூபா"
"நாப்பது ரூபா". பக்கத்தில் அம்மா பார்ப்பது தெரிந்தது. நாம ஏன் அந்தப் பக்கம் திரும்பப் போறோம். நமக்குத்தான் தெரியுமே அதன் அர்த்தம் 'இவ்வளவு காசு குடுத்து அத வாங்கனுமா?' என்று.

ஒருவழியாக சமையல் செய்து முடித்து சாப்பிட அமர்ந்தோம்.
"எப்டி இருக்கு?" - நான்
".........." கணவர் (எதுக்கு வம்பு)
"ம் இருக்கு. இதுல சிக்கன் போடம காய் போட்டுருந்தா நல்லாயிருக்கும்" -அம்மா
"நல்லா இருக்கு" -பிள்ளைகள்
பிள்ளைகள் கடையில் இதெல்லாம் சாப்பிடுவார்கள் என்பதால் நம் அடுத்த கேள்வி
"கடையில மாதிரியே இருக்கா?"
"ம் கடையில மாதிரிதான் இருக்கு" -பிள்ளைகள்
நல்ல வேளை சமையல் செஞ்சவங்களையே யாரும் கேட்க மாட்டாங்களே? நாம் தப்பித்தோம். அந்த குடை மிளகாய் வாடை சிக்கன் சாப்பிடும் திருப்தியையே தரவில்லலை. தேவையில்லாமல் எப்போதும் செய்யும் சிக்கன் வறுவல், பெப்பர் ப்ரை, சிக்கன் 65 எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது.

சரி இந்த சோயா சாஸ் பாட்டிலில் அப்படியே இருக்கிறதே? சிக்கன் மஞ்சூரியனுக்கு இரண்டு ஸ்பூன்தான் செலவாகியது. அடுத்து வெஜிடபிள் ப்ஃரைடு ரைஸ் செய்வது என்று கம்பேனியில் (வேறு யார் நான் மட்டும்தான்) முடிவு செய்யப்பட்டது. ப்ஃரைடு ரைஸ்சை சாப்பிடும் போது இந்த முறை நினைவிற்கு வந்தது வெஜிடபிள் பிரியாணி, தேங்காய்பால் சாதம் with மட்டன் or சிக்கன் குழம்பு. இதற்கும் இரண்டு ஸ்பூன் மட்டுமே செலவானது.

சோயா சாஸ் பாட்டிலை பார்க்கும்போதெல்லாம் இரண்டு விஷயங்கள் தோன்றும். முதலாவது பாட்டிலில் மீதம் இருப்பதை என்ன செய்வது? நம்மூர் சமையலில் இதை உபயோகிக்க முடியுமா? யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் ப்ளீஸ் சொல்லுங்கள். இரண்டாவது அம்மாவிடமிருந்து இன்னும் கொஞ்சம் நாட்களில் வரப்போகும் வசனம் "சாப்புட வேண்டியதுதான், நான் வேண்டாம்னு சொல்லல. ஒவ்வொரு காசையும் எப்டி கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறோம். இப்புடி வீணாக்கணுமா?"

டிஸ்கி: எழுதி முடிச்சுட்டு பார்த்தா சேம் சைடு கோல் போல தெரியுது. இதுதான் சொந்த செலவுல சூன்யம் வச்சுக்கிறதா?
போபால்
12/04/2009 | Author: ஜெயந்தி

நேற்று போபால் விஷ வாயு தாக்கிய நாள். ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியான நாள். லட்சக்கணக்கான மக்கள் இன்னும் அதன் பாதிப்புகளுடனேயே வாழ்கிறார்களாம். குழந்தைகளும் ஊனத்துடனேயே பிறக்கிறதாம். அங்குள்ள நிலத்தடி நீர் மாசுபட்டுவிட்டது. இதற்கான வழக்கு இன்னும் நடக்கிறதாம். அப்படியே நிதியுதவி கிடைத்தாலும் 1200 ரூபாய் மட்டுமே கிடைக்குமாம். விஷ வாயு தாக்கியதில் இருந்து அனைத்து தேசியக் கட்சிகளும் ஆட்சி செய்துவிட்டன. கம்யூனிஸ்ட் கட்சியைத் தவிர. அந்த மக்கள் இந்த நிதியையும் ஆண்ட தேசியக்கட்சிகள் அனைத்திற்கும் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். அவர்கள் அப்போதாவது வெட்கப்படுவார்களா என்று தெரியவில்லை?

இதெல்லாம் நம் நாட்டிற்குள்ளேதான் நடந்தது. இன்னும் அதற்கான தீர்வு கிடைக்காமல் லட்சக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். எல்லா அரசியல்வாதிகளும் அரசியல் நடத்திக்கொண்தான் இருக்கிறார்கள். யாருக்காக நடத்துகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. உள் நாட்டுக்குள்ளேயே இந்த நிலை. இதில் பக்கத்து நாட்டில் வாழும் நம் இன மக்களை அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று நாம் நினைப்பது...

XXXXXXXXXX

மழை

உழவன் முதல் கிழவன் வரை திட்டியதால்
கோபம் கொண்டு பெய்து தீர்த்தது
ஊரே வெள்ளக் காடாய் மாறியது.

பெரிசு முதல் சிரிசு வரை திட்டியதால்
மறுபடியும் கோபம் கொண்டு
நான்கு வருடத்திற்கு வரவேயில்லை.

எப்படி அழைத்தால் இந்த மழை
தேவையான அளவிற்கு மட்டுமே பெய்யும்!

இதை கவிதை என்று நீங்கள் நினைத்துக்கொண்டு படித்தால் அதற்கு கம்பேனி பொறுப்பல்ல.
ரங்கமணியின் அட்டூழியம்
12/02/2009 | Author: ஜெயந்தி

எதிர் பதிவு
பொதுவா எங்க வீட்டுல ஆட்டோவுல வெளிய போற பழக்கமில்லை. மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே ஆட்டோ பயணம் மேற்கொள்ளப்படும். அந்த அவசியம் தீபாவளிக்கு முன் ஏற்பட்டது. பையனுக்கு காய்ச்சல் வந்துவிட்டது. கூடவே உடல் வலியும். கணவரை ஆட்டோவை அழைத்துவர அனுப்பினேன். அவரும் அழைத்து வந்தார். எங்கள் வீட்டில் இருந்து கிளினிக் செல்ல 20 ரூபாய் ஆகும். அடித்துப் பேசும் ஆட்டோ டிரைவர்களிடம் மாட்டினால் 25, 30 வரை கொண்டுபோய்விடுவார்கள்.

"எவ்வளவு ஆட்டோவுக்கு பேசியிருக்கீங்க?"
"ஐம்பது ரூபா"
"என்னது ஐம்பது ரூபாயா? என்னங்க முப்பது ரூபாகூட ஆகாது. நீங்க என்ன ஐம்பது ரூபாக்கு பேசியிருக்கீங்க"
"அவன் ரோட்டுல இருந்து வந்ததுக்கும் சேர்த்து கேட்குறான்."


எனக்குத் தெரிஞ்சு எங்காவது லாங்கா போகும்போதுதான் ஆட்டோ டிரைவருங்க ரிட்டன் வரும் போது சவாரி கிடைக்கலேன்னா என்ன பண்றதுன்னு கூடுதலாக கேட்பார்கள்.

அடுத்த வாரம் எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. அதோடு ஒவ்வொரு ஜாயிண்டுக்கும் சொல்ல முடியாத வலி. கிளினிக்குக்கு நடந்து போகவே முடியாது. வேறு வழியே இல்லை கணவரை ஆட்டோ அழைத்துவர அனுப்பினேன். முப்பது ரூபாதான் இங்கயிருந்து என்று சொல்லி அனுப்பினேன்.

ஆட்டோ வந்தது. "எவ்வளவு பேசியிருக்கீங்க?"
"ஐம்பது ரூபா"

ஜுர வேகம் ஒருபுறம் வலி ஒருபுறம் சண்டைபோடும் நிலையில் இல்லை. ஜுரம் மட்டும் இரண்டு டிகிரி அதிகமாகிவிட்டது.

இரண்டு வாரம் கழித்து அம்மாவுக்கு ஜுரம் வந்துவிட்டது (தொடர் பதிவு மாதிரி, இது தொடர் ஜுரம்). இப்போது ஆட்டோ அழைக்க நானே சென்றுவிட்டேன். இப்போதுதான் கிளைமாக்ஸ்.

ஆட்டோ டிரைவரிடம் "ஏங்க மோகன் டாக்டர் கிளினிக்கு போகனும் எவ்வளவு?"
"ஐம்பது ரூபாங்க" இது ஆட்டோ டிரைவர்.
"என்னங்க இங்கயிருந்து இருபது ரூபாதான நீங்க என்ன ஐம்பது ரூபா கேக்குறீங்க?"
"ஏங்க நீங்களே ஐம்பது ரூபா குடுத்து வந்திருக்கீங்களே? இப்ப இப்டி கேக்குறீங்க?"
ஆஹா அவனா நீயி?
"ஏங்க எங்க வீட்டுக்காரர் அவசரத்துல கூட்டிட்டு வந்துட்டாரு."
"அவருக்குத்தான் எங்க கஷ்டம் தெரியுது"
"இப்ப முப்பது ரூபாய்க்கு வர முடியுமா? முடியாதா?"
"சரி வாங்க" என்றவாறே ஆட்டோவை கிளப்பினார்.
இந்த முறை வலைப்பூ விமர்சனத்திற்கு சிக்கியவர் சந்தன முல்லை. "சித்திரக்கூடம்"

சந்தன முல்லை. இந்தப் பெயர்தான் என்னை அவர்பால் ஈர்த்தது. ஃப்ளாக்கை படிக்க ஆரம்பித்தால் அங்கே தாய்மை நதி ஓடிக்கொண்டிருந்தது. என் பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது என் நிலையை எனக்கு உணர்த்தியது.

மகளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து கவிதையாக்கியுள்ளார். கண்ணை மூடிக்கொண்டு சோப்பு போடச் சொல்வது, மகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிப்பது போன்றவை அருமை. பப்புவிற்கு கடிதம் எழுதுவது வித்தியாசமான முயற்சி. பிறந்த நாளுக்கு ஹோமுக்கு அழைத்துச் சென்று அந்த குழந்தைக்கு சிறு வயதிலேயே சமூக உணர்வை ஊட்டியது மிகவும் நல்ல செயல்பாடு. நம் ஒவ்வொருக்குள்ளும் இந்த சிந்தனை இருந்தால் நன்றாக இருக்கும். காது குத்தும் படலம் அமர்க்களம்.

ஜுன்ஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் குறித்த இவரது கட்டுரை சிறப்பானது.சிறு வயது பயண அனுபவக் கட்டுரையின் போது நாமும் அவருடனே பயணித்தோம். பண்ருட்டி பலாச்சுளைகளை நாமும் உண்டுகொண்டு வடலூரை நெருங்கும்போது சாராய பேக்டரியின் நாற்றத்தின் காரணமாக மூக்கை மூடிக்கொண்டும் பயணிக்கிறோம்.

மகளை முதன்முதலில் டூருக்கு அனுப்புப் அனுபவம். அந்த திகதிக் பக்பக் அந்த உணர்வு, குழந்தை அந்த சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்று விரும்பும் மனது அடுத்த நிமிடமே குழந்தையின் பாதுகாப்பு குறித்த பயத்தில் பின்வாங்குவது நல்ல தடுமாற்றம்.

தன்னுடைய மகளின் பயணத்தினூடே தன்னுடைய சிறு வயது நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார். தென்கச்சிக்கு எழுதிய கடித்திற்கு பாட்டியின் ரியாக்ஷன். (எனக்கு இப்போது 46 வயது ஆகிறது. ஆதிமூல கிருஷ்ணனின் ஃபிளாக்கை நான் விமர்சித்ததை பார்த்து என் அம்மா 'எதுக்கு இந்த ஃப்ளாக் எழுதுற வேலையெல்லாம். இதை நிறுத்தச் சொல்லு' என்று என் மகனிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.)

இவர் ரொம்ப சீனியர். 2006ல் இருந்து எழுதிக்கொண்டிருக்கிறார். அப்போதெல்லாம் கணவன் மனைவி சண்டை போடுவது அன்பால் பிறகு இணைவது போன்ற கதைகளும் ஜோக்குகளும் எழுதி இருக்கிறார். 'சண்டக்கோழி' சூப்பர். 'ஜில்லுனு ஒரு காதல்', 'கற்றது தமிழ்' படங்களை லொள்ளு சபா ஸ்டைலில் கலக்கல் கிண்டல். அதற்கு விளம்பர இடைவேளை வேறு. இவரது எழுத்து சரளமாகவும் வாசிக்க பிடித்தாகவும் இருக்கிறது. இவர் சிறு வயது முதல் நிறைய படித்ததும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். பள்ளி அனுபவங்கள் நன்றாக இருக்கிறது.

'பதிவர்கள் ஒரு ஜாலி கற்பனை' அப்போதைய நிகழ்வுகளை வைத்து எழுதப்பட்டதுபோல் இருக்கிறது. எனக்கு புரியவில்லை. பாலி சாகு மற்றும் பாப் மாலி, ஸ்டீவன் கபூர் அகா, அப்பாச்சி இந்தியன், நஃப் வைப்ஸ், இலா அருண்இ கவிதா கிருஷ்ணமூர்த்தி, ரெமோ, உஷா உதூப், சுனிதா, சுவேதா, சுசித்ரா போன்ற பாப் இசைக் கலைஞர்களை அனுபவித்து அறிமுகம் செய்கிறார்.

பப்புவுடனேயே இவரது ஃப்ளாக்கும் வளர்கிறது.

குறிப்பு: என் குழந்தைகளுடனேயே நானும் வளர்ந்தேன். அவர்கள் என் மீது உயிரையே வைத்திருக்கிறார்கள். எனது சிறந்த நண்பர்கள் அவர்கள்தான்.
முதல் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்போது இரண்டாவது குழந்தை பிறக்கும். சின்னக்குழந்தை என்பதால் அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு 24 மணி நேரமும் இருக்கும். அப்பா வீட்டிற்குள் நுழையும்போதே சின்னக்குழந்தையைப் பற்றி விசாரித்தபடியே வருவார். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் புதிதாக பிறந்துள்ள குழந்தையை பார்த்து கொஞ்சிவிட்டுச் செல்வார்கள். பெரிய குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கும்.

நமக்கு அது பெரிய குழந்தை. அதற்கு அவ்வளவு கவனிப்புத் தேவையில்லை. சின்னக்குழந்தைக்குத்தானே கவனிப்பு அவசியம். உண்மைதான்.
மூன்று நான்கு வருடமாக பெரிய குழந்தைதான் நமது முழு போகஸ் ஆக இருந்திருக்கும். அப்பா அந்தக்குழந்தையைத்தான் அழைத்துக்கொண்டே உள்ளே நுழைவார். அம்மா எப்போதும் அந்தக் குழந்தையைத்தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இன்னொரு குழந்தை உள்ளே நுழைந்து அத்தனையையும் தட்டிப்பறித்துகொள்வதை அந்த பெரிய குழந்தையின் இடத்திலிருந்து யாராவது பார்த்திருக்கிறோமா?

அலுவலகத்தில் நமக்கு 6 மாதம் பின்னால் வந்த ஒருவருக்கு பிரமோஷன் தந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் பெரியவர்கள். நம்மாலேயே தாங்க முடியவில்லை என்றால் குழந்தைக்கு எப்படி இருக்கும். சிறு வயதில் உண்டாகும் இந்த ஏக்கம் எப்போதுமே தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பெரிய குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போது சின்னக்குழந்தை 3ம் வகுப்பு படிக்கும். அப்போதும் அதுதான் சின்னக்குழந்தை.

இரண்டு பேருக்கும் ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும்போது விலையிலோ தரத்திலோ சின்ன வித்தியாசம்தான் இருக்கும். நாம் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டோம். எதேச்சையாகத்தான் நடந்திருக்கும். பெரிய குழந்தையின் மனதில் நாம் இரண்டாம்பட்சம் என்ற உணர்வு வரும். இரண்டு பேருக்குள்ளும் பாசம் எல்லாம் இருக்கும். ஆனால் இந்த உணர்வை மட்டும் நம்மால் கடைசி வரை மாற்ற முடியாது.

எனவே பெற்றோர்களே! கொஞ்சம் கவனமாக இருந்து பிஞ்சு மனங்களை பூ வாக்குவோம்!
சினிமா விமர்சனம், புத்தக விமர்சனம் போல் வலைப்பூ விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே ஞாபகம் வந்தவர் ஆதி மூல கிருஷ்ணன். (ஆதி: அதுக்கு நாந்தானா கெடைச்சேன்.)

இவரது ஃ ப்ளாக்கை என் மகள் சொல்லித்தான் நான் படித்தேன். 'அம்மா இங்க பாறேன், குருவி பத்தி ஒரு விமர்சனம் சூப்பரா இருக்குது, அப்பறம் கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை எல்லாம் நல்லா இருக்கு படிச்சுப் பாறேன்'.

அப்படி படிக்க ஆரம்பித்து இம்ப்ரஸ்சாகி ஃப்ளாக்கையே தலைகீழாக கொட்டிக் கவிழ்த்தாகிவிட்டது. இவரது அறிவுரை சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே அறிவுரை சொல்வது. கல்யாணம் பண்ணிக்காதீங்க என்று சொல்லிக்கொண்டே கல்யாணம் பண்ணிக்கொள்ள தூண்டுவது இவரது தனிச்சிறப்பு.

இவரது தங்கமணி இடுகைகள் அனைத்தும் அருமை. நீங்கள் தங்கமணிகளை கிண்டல் செய்வதைப் பார்த்து கொதித்துப் போயுள்ள பெண்கள் ரங்கமணிகளைப் பற்றி எழுதப்போவதாக ரகசியத் தகவல். (பெண் பதிவர்களிடம் தனி இடுகையே போட்டு மன்னிப்புக்கேட்டார், ஆனாலும் அவர்கள் கோபம் தீரவில்லை.)

சிக்மா பற்றி எளிய முறையில் புரிய வைத்தது, சுஜதாவை நினைவூட்டியது. அவர்தான் விஞ்ஞானக் கட்டுரைகளைக் கூட எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதுவார்.

இவர் வைத்த அயிரை மீன் குழம்பு வாசத்தில் நாக்கில் நீர் சொட்டி, அடுத்த நாள் எங்கள் வீட்டில் மீன் குழம்பு. (அயிரை கிடைக்காததால் சங்கரா மீன்). தக்காளி ரசத்துக்கு ஏனுங்க தக்காளியை வெந்நீரில் போட்டு தோளை உரித்துக்கொண்டு, பச்சையாக புளித்தண்ணீரில் பிசைந்துவிட்டால் போகிறது. நடுநடுவே டிப்ஸ் வேறு தருவார். நாமெல்லாம் இவர் உண்மையிலேயே இதையெல்லாம் செய்வார்னு நம்பனுமாம். ரமா ஏமாறுவதைப் போல் நாங்களெல்லாம் ஏமாந்தவர்களா என்ன?

இவரது எழுத்தின் சிறப்புக்குக் காரணம் இவரது நகைச்சுவை உணர்வுதான். கல்யாண வீடுகள், குடும்ப நிகழ்ச்சிகளில் பார்த்மோமென்றால் ஒரு இடத்தில் ஒரே கூட்டமாக இருக்கும். உள்ளே சென்று எட்டிப்பார்தால் ஒருவர் நடுவில் ஹீரோ போல் அமர்ந்திருப்பார். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருப்பார். கூடி நிற்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அதேபோல் இவரது ஃப்ளாக்கைச் சுற்றி ஒரே கூட்டம்.

கதைகளும் நன்றாகத்தான் எழுதுகிறார். இவரின் 'அழுக்கின் அழகு' சிறுகதை மீது எனக்கு உடன்பாடில்லை. கண்டனங்களும் உண்டு. இவர் கடைசியாகப் போட்டுள்ள ஆயுதம் ஆவணப்படம் க்ளாஸ். ஏங்க வடை தட்டையாகத்தானே இருக்கும். போண்டாபோல் உள்ளதை வடை என்கிறீர்களே?

டிஸ்கி : இவரது ரசிகர் மன்றத்தினர் இவருக்கு பட்டம் கொடுப்பதற்காக மொக்கை திலகம், லொள்ளு சக்கரவர்த்தி, குசும்பு தளபதி போன்ற பெயர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்களாம்.
இரங்கல்
11/18/2009 | Author: ஜெயந்தி
கேபிள் சங்கர் அவர்களின் தந்தையார் காலமான செய்தியை இடுகைகளின் மூலமாக அறிந்தேன். அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.மாநகரப் பேருந்து


சென்னையில காலையிலயும் மாலையிலயும் பீக் அவர்ஸ்ல மாநகரப் பேருந்தில் பயணம் செய்பவர்கள் பாவம் செய்தவர்கள். பஸ்சில் ஏறுவதற்கே தனி டிரெயினிங் வேண்டும். அதிலும் பெண்கள், இரண்டு மூன்று பேர் இருந்தால் சேர்ந்து ஏறிவிடலாம். தனியாக மாட்டிக்கொண்டால் ஆண்களை தள்ளிக்கொண்டு ஏறவே முடியாது. அவர்களும் பாவம் பார்த்து வழிவிட மாட்டார்கள். அவரவர்களுக்கு அவரவர் அவசரம். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது.

பேருந்திற்குள் ஏறிவிட்டாலோ மூச்சு முட்டும் கூட்டத்தில் நெருக்கியடித்து நின்றுகொண்டு வர வேண்டும். அதற்குள் விதவிதமான சண்டைகள் நடக்கும். 'அய்யோ என் காலை மிதிக்கிறீங்களே?' 'ஏங்க இப்டி மேல சாய்றீங்களே, கொஞ்ச தள்ளி நில்லுங்க' 'எடம் இருந்தா தள்ளி நிக்க மாட்டாங்களா?' ரெண்டு மூணு சண்டையாவது நடந்துகொண்டிருக்கும். அந்த நெரிசலில் வேர்த்து வடிய பயணம் செய்வோருக்கு இந்த சண்டை சத்தம் பயங்கர டென்ஷனைக் கொடுக்கும். இதில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வேறு காசு ஒருபுறமும் டிக்கெட் மறுபுறமும் பாஸ் செய்ய வேண்டும். அதிலும் சில குளறுபடிகள் நடக்கும்.

இதில் பெண்கள் மீது உரசுவதற்கென்றே ஒரு கோஷ்டி வரும். இவர்களை சமாளிப்பதுதான் பெரும்பாடு. பெண்கள் இருக்கைக்கு அருகே உள்ள வரிசையில் நிற்பவர்கள் தப்பித்துவிடுவார்கள். அதற்கு அடுத்த வரிசையில் இருப்பவர்கள் நிலைதான் மோசமாக இருக்கும். நல்ல ஆண்கள் அருகில் நின்றால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அவர்கள் நம்மீது இடித்துவிடாமல் நிற்பார்கள். மீறி பட்டாலும் வேறு வழியில்லாமல்தான்படும். இந்த மாதிரி ஆண்கள் பக்கத்தில் நின்றால் பிழைத்தோம். இடிஅமீன்கள் பக்கத்தில் நிற்க நேர்ந்தால்... தைரியமுள்ள பெண்கள் நன்றாக திட்டிவிடுவார்கள். பயந்த சுபாவம் உள்ள பெண்கள் கூனி குறுகி பக்கத்தில் உள்ள பெண்களின் மீது சாய்ந்துகொண்டே செல்வார்கள். பெண்களின் திட்டும் போனசாக கிடைக்கும். திட்டும் பெண்களுக்கு இடிமாடுகளின் பதில், 'கூட்டம்னா அப்டித்தான். இடிபடாம போகனும்னா ஆட்டோல போங்க, கார்ல போங்க'. அப்படியே அவங்களை நாலு சாத்து சாத்த வேண்டும்போல் இருக்கும். பஸ்ல வந்தா இவங்ககிட்ட இடி வாங்கியே தீர வேண்டுமா என்ன?
அப்பறம் இந்த பஸ்சுல கடைசியா நீளமா ஒரு சீட் இருக்குமே, அது பெண்களுக்கானது. அதில் ஆண்கள் ஏறி வரிசையாக அமர்ந்துகொள்வார்கள். பெண்களுக்கும் அவர்களுக்கும் நடக்கும் சண்டை சுவாரசியமாக இருக்கும்.

"இது லேடீஸ் சீட் எந்திரிங்க"
"ஏம்மா ஆம்பளங்க சீட்டுல நீங்க உட்கார்றீங்க"
"ஆம்பளங்க சீட்டுனு தனியா எதுவும் இல்ல. லேடீஸ் சீட் மட்டும்தான் தனி. மத்ததெல்லாம் பொது சீட்டுதான். யார் வேணும்னாலும் உட்காரலாம்."
"ஆணும் பெண்ணும் சமம்னு சொல்றீங்க, பஸ்சுல மட்டும் தனியா சீட்டு கேக்கிறீங்க?"
"ஆணும் பெண்ணும் சமங்கறத நாங்க படிப்புலயும் வேல செய்யிறதிலயும் காட்டிக்கிறோம். பஸ்சு சீட்டுல காட்ட வேண்டியதில்ல."
"நாங்களும் வேல செஞ்சிட்டுத்தான் வர்றோம். எங்களால எந்திரிக்க முடியாது"

இப்படியாக சண்டை ஓடிக்கொண்டிருக்கும். சில நேரம் இவர்கள் ஜெயிப்பார்கள், சில நேரம் அவர்கள் ஜெயிப்பார்கள்.

பஸ்சுல ஏன் தனி இருக்கைகள் பெண்களுக்கு?
என் மனதில் ஓடியவை.

1. வீட்டிலும் வேலை செய்துவிட்டு அலுவலகத்திற்கும் சென்று பணியாற்ற வேண்டும். இரட்டை பளு.
2. மாதவிடாய் பிரச்சனை. இந்த நேரத்தில் சிலருக்கு வயிறு வலிக்கும். சிலருக்கு தலைவழி, உடல்வழி. எந்த வழியும் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
3. குழந்தை வயிற்றில் சுமக்கின்ற பெண்கள்.
4. குழந்தை பிறந்து பேருக்கு 3ம் மாதம், ஆனால் ஒரு மாதம்கூட ஆகியிருக்காது. அவர்கள் உடல் பச்சை உடம்பு என்பார்கள்.
5. 40-50 வயது பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலகட்டம். அவர்கள் உடலை பாடாய் படுத்திவிட்டு நிற்கும்.
6. இடிமன்னர்கள்.

நீங்களே சொல்லுங்கள், பெண்களுக்கு தனி இருக்கைகள் கொடுப்பது தவறா?
இந்தப் படத்தைப் (பாகம் 1) பார்க்கும்போது, அந்தப் பையனுக்கு பள்ளியின் மீதும் படிப்பின் மீதும் இருக்கும் வெறுப்பு, அதனால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகள் போலவே எனக்கும் பள்ளிக்கூட நாட்களில் இருக்கும் என்று என் மகனிடம் கூறினேன். உடனே அவன் சொன்னான் இந்தப் படத்தைப் பார்த்த 90 சதவீதம் பேருக்கு இந்த உணர்வுதான் ஏற்பட்டதாம் என்றான்.

எனக்கு என் பள்ளி நாட்கள் நினைவில் வந்தன. திண்டுக்கல் பக்கத்தில் 5ம் வகுப்பு வரை உள்ள சிறு கிராமம். அங்குதான் 5ம் வகுப்பு வரை படித்தேன். 6ம் வகுப்பிற்கு திண்டுக்கலில் கான்வென்ட் என்று அழைக்கப்படும் (செயின்ட் ஜோசப்ஸ் ஹையர் செகண்ட்ரி ஸ்கூல்) கிறிஸ்துவ பள்ளிக்கூடம். பெரிய பள்ளிக்கூடம். காதல் படத்தில் சந்தியா படிக்கும் பள்ளிதான்.

5ம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் பிக் ஏபிசிடி மட்டுமே தெரியும். ஸ்மால் ஏபிசிடி என்றால் என்னவென்றே தெரியாது. 6ம் வகுப்பில் 80-90 பக்கமுள்ள ஆங்கிலப் புத்தகம். ஒரு 10 பாடங்களாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வாரம் தாமதமாக பள்ளியில் சேர்க்கப்பட்டேன். இந்த ஒரு வாரத்தில் அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பாடம் நடத்திவிட்டார்கள் போல் இருக்கிறது. நான் போன அன்று டிக்டேஷன். எல்லோரும் டீச்சர் வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல புத்தகத்தைப் பார்க்காமல் எழுத வேண்டும். என் நிலையை யோசித்துப் பாருங்கள். எனக்கு வலது பக்கத்தில் இருந்த பெண் எனது இடதுபுறமுள்ள பெண்ணை பார்த்து எழுதிக்கொண்டிருந்தார். என்னையும் அவ்வாறே எழுதச் சொல்லி சாடை காட்டினார். நான் எனது இடதுபுறமுள்ள பெண் எழுதுவதை பார்த்தேன். ஸ்மால் லெட்டர்சில் வேகவேகமாக எழுதிக்கொண்டிருந்தாள். என்னால் அதைப் பார்த்தே எழுத முடியவில்லை. புரியவேயில்லை. எனக்குத்தான் ஸ்மால் ஏபிசிடியே தெரியாதே.

நல்ல வேளை மற்ற பாடங்கள் எல்லாம் தமிழிலேயே இருந்தன. அதுவும் கஷ்டம்தான். ஆனால் எழுத்துக்கூட்டி படிக்கவாவது முடியுதே. நான் படித்த பத்தாம் வகுப்பு வரையில் ஒருமுறைகூட ஆங்கிலத்தில் பாஸ் ஆனதே கிடையாது. மற்ற பாடங்களிலும் ஒன்று அல்லது இரண்டில் பெயில் ஆகி விடுவேன். தமிழிலும், கணக்கிலும் மட்டும் எப்போதும் பாஸ் பண்ணிவிடுவேன்.

இந்த லட்சணத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வந்தது. அந்த வருடம்தான் 11ம் வகுப்பை எடுத்துவிட்டு +2 கொண்டுவந்தார்கள். நாங்களும், 11ம் வகுப்பு பசங்களும் ஒன்றாக பொதுத்தேர்வு எழுதினோம். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதினேன்.

ரிசல்ட் வந்துவிட்டது என்று காலையிலேயே ஊரே அல்லோல கல்லோலப்பட்டது. எங்கள் வீட்டிலும் மாமா பேப்ரில் என் நம்பரை தேடிக்கொண்டிருந்தார். அது எங்கே இருக்கப்போகிறது என்று நானும் பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம் என் நம்பர் வந்திருந்தது.

மாமாவிற்கும் அதே ஆச்சரியம்தான். அந்த வருடம் புதிதாக 10ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வைத்ததால் 30 சதவீதம் பேர்கூட பாசாகவில்லை என்றதால் பார்டரில் இருந்த கொஞ்சம் பேருக்கு மார்க் போடப்பட்டு பாசாக்கப்பட்டதாக பேப்பரில் செய்தி வந்திருந்தது. உடனே மாமா சொல்லிவிட்டார் நீ எப்படி பாசானேன்னு இப்போ தெரியுது.
அமீர்கான் படம் 'தாரே சமீன் பர்'. இந்த படத்தில் வரும் சிறுவனுக்கு மூளையில் ஒரு சிறு குறைபாடு. அவன் பார்க்க நார்மலாகத்தான் இருப்பான்.

பசங்களோடு விளைபாடும்போது பந்து தன்னை நோக்கி வரும்போது அவன் மூளை ஒரு இடத்தைச் சொல்லும். அவன் அந்த இடத்தில் போய் பந்தை பிடிப்பான். ஆனால் பந்து வேறு இடத்தில் விழும். இதனால் தன் வயது பிள்ளைகளால் ஒதுக்கப்படுகிறான்.

அதே போல் படிப்பிலும் அவனால் மற்ற பிள்ளைகளைப் போல் படிக்க முடியவில்லை. அவன் பெற்றோர்களுக்கும் இவனது குறைபாடு தெரியவில்லை. அவன் வேண்டுமென்றே படிக்காததுபோல் நினைக்கிறார்கள். அவனை ஹாஸ்டலில் சேர்த்துவிடுகிறார்கள். அம்மாவை பிரிந்து செல்வது அவனால் தாங்க முடியாத துன்பமாக இருக்கிறது. வேறுவழியில்லை. ஹாஸ்டலிலும் அவனுக்கு அதே நிலை. ஆசிரியர்களாலேயே வெறுத்து ஒதுக்கப்படுகிறான். அவன் பெற்றோர்களை அழைத்து புகார் செய்கிறார்கள். அவன் அதிகமாக தனிமையை நாடிச் செல்கிறான்.
இந்த நேரத்தில் அவனுக்கு ஒரு புது ஆசிரியர் வருகிறார் (அமீர்கான்). அவர் இந்தச் சிறுவனின் வித்தியாசமான நடவடிக்கைகளை கவனித்து அவனுடைய குறையை கண்டுபிடித்துவிடுகிறார். ஏனென்றால் அவருக்கும் சிறுவயதில் அதே குறைபாடு இருந்திருக்கிறது. உடனே அந்த ஆசிரியர் அவன் பெற்றோரை அணுகி அவனுக்கு மூளையில் இந்த குறைபாடு இருக்கிறது என்கிறார். அவன் பெற்றோர் இவரை திட்டி அனுப்பிவிடுகின்றனர்.

இந்த ஆசிரியர் பிள்ளைகளிடம் வித்தியாசமான அணுகுமுறை உள்ளவர். அவர்களுக்கு புரிகிற விதத்தில் விடையாட்டுடன் பாடம் நடத்தக்கூடியவர். இது மற்ற ஆசிரியர்களுக்கு பிடிக்காது. இவரை மட்டமாகவே பார்ப்பார்கள் (அம்மணமான ஊரில் கோவணம் அணிந்தவன் பைத்தியக்காரன் என்பதைப்போல) இவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார்.

அந்தச் சிறுவன் நன்றாக படம் வரைவான். ஒரு வீடு அதில் அம்மா, அப்பா, இரண்டு சிறுவர்கள். அவன் நோட்டில் கார்ட்டூன்போல் வரைந்த படத்தை பேப்பரை வேகமாக புரட்டும்போது ஒரு சிறுவன் மட்டும் அந்த வீட்டில் இருந்து மெல்ல மெல்ல விலகி பிறகு இல்லாமலே போய்விடுகிறான். அவனை ஹாஸ்டலுக்கு அனுப்பப்போவதை நினைத்து அவன் வரைந்த படம். கண்களில் நீரை வரவழைக்கிறது.

பின்னர் அவனை தன்வழிக்குக் அந்தச் சிறுவனை கொண்டு வந்து எப்படி அவனை சரியாக்குகிறார் என்பதுதான் படம். சிறுவனின் தந்தையும் மகனின் குறைபாட்டை நெட்டின் உதவியுடன் உணர்ந்து மகனை பார்க்க வருகிறார்.

டைரக்டர்கள் மட்டும்தான் 80களுக்கு போக வேண்டுமா? நாங்களும் போவோம்ல.

10ம் வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு (சத்தியமா பாசுங்க) வீட்டில் இருந்த காலம். அப்போது ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். திண்டுக்கல்லில் நாங்கள் இருந்தது இபி காலனியில். இபி காலனி கட்டும்போதுதான் பக்கத்தில் மெயின்ரோடை ஒட்டி கணேஷ் தியேட்டரை கடடினார்கள். வீட்டிலிருந்து ஐந்து நிமிடத்தில் தியேட்டருக்கு சென்றுவிடலாம். காலனியின் பின் பக்கம் என்விஜிபி தியேட்டர். பத்து நிமிடத்தில் சென்றுவிடலாம். இரண்டு தியேட்டர்களுக்கும் நடுவில் போல் (சிறிது தூரம் நடக்க வேண்டும்) ஃ மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம், சோலைஹால் தியேட்டர் இருக்கும். அதற்கு கால்மணி நேரத்தில் போய் விடலாம். சென்ரல் தியேட்டர் ஊரின் நடுவில் இருக்கும். இருபது நிமிடத்தில் சென்றுவிடலாம். சக்தி தியேட்டர் ஊரின் கோடியில் இருக்கும். அதற்கு போவதுதான் சற்று சிரமம். அதனால் இந்த நான்கு தியேட்டர்தான் எங்கள் டார்கெட்.
எல்லாத் தியேட்டரிலும் பெஞ்ச் டிக்கெட் ஐம்பது காசுதான். அதற்கு பின்னால் அதே பெஞ்சில் பின்னால் சாய்மானம் இருக்கும். அதற்கு எழுபத்தைந்து பைசா என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னால் பாலகனி. என்விஜிபியில் மட்டும் பால்கனி டிக்கெட் கொஞ்சம் அதிகம். கணேஷ் தியேட்டர் புது தியேட்டர் என்பதால் எடுத்துவுடனேயே முன்னால் உள்ள டிக்கெட்டே ஒன்னேகால் ரூபாய். புது தியேட்டர் என்பதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

நான் எங்க பாட்டியோடுதான் சினிமாவிற்கு போவேன். ஏன்னா என்னைவிட அதிகம் படம் பார்ப்பது எங்க பாட்டிதான். வயது 85 சக்தி தியேட்டருக்குக்கூட தனியாக நடந்தே போய் படம் பார்த்துவிட்டு வரும். (கரிசல் காட்டில் பாடுபட்டு, கம்மஞ்சோறும், கேழ்வரகு கூழும் குடித்த உடம்பு). எங்கள் கூட அவ்வப்போது என் அக்காவும் சேர்ந்துகொள்வார்கள்.

நான் மாமா வீட்டில்தான் வளர்ந்தேன். மாமாவின் பர்மிஷன் கிடைத்தால்தான் சினிமாவிற்கு போக முடியும். 'ஏ' சர்ட்டிபிகேட் இல்லாத படமா, ஆபாச காட்சிகள் இல்லாத படமா என்று ஆலோசித்துவிட்டுத்தான் மாமா பர்மிஷன் கொடுப்பார். சினிமாவிற்கு போகிற நாள் என்றால் காலையிலேயே மனது சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்துவிடும். வீட்டில் என்ன வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்வேன். மதியம் சாப்பாடு முடிந்தவுடன் கிளம்பிவிடுவோம். இப்போது உச்சகட்ட சந்தோஷத்தில் மனது திளைத்திருக்கும். ஓட்டமும் நடையுமாக தியேட்டருக்கு போவோம். பெஞ்ச் டிக்கெட்டிற்கு பெரிய கியூ நிற்கும், அதனால்தான் வேகவேகமாக செல்வோம். அப்போதெல்லாம் எப்போதுமே கூட்டம் இருக்கும். கூட்டத்தின் அளவு வேண்டுமானால் வித்தியாசப்படும். தியேட்டர் காலியாக இருந்து நான் பார்த்ததில்லை.
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு சவ்ராஷ்ரா குடும்பம் இருந்தது. அவர்களை பட்டுநூல்காரர்கள் என்று மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் அழைப்பார்கள். அவர்கள் நெசவுத் தொழில் செய்பவர்கள், அதனால் இந்தப்பெயர். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் நல்ல வசதியானவர்கள். அவர்கள் வீட்டில் ஒரு பாட்டி உண்டு. அந்தப் பாட்டிக்கு எம்ஜியார் படம் என்றால் உயிர். எந்தத் தியேட்டரிலாவது எம்ஜியார் படம் போட்டால் என்னை துணைக்கு அழைப்பார்கள். (அதிர்ஷ்ட்டம் எப்படி அடிக்கிறது பாருங்கள்). அவர்களுடன் செல்வதென்றால் வீட்டில் பர்மிஷன் கேட்கத் தேவையில்லை. தகவல் சொன்னாலே போதும். அந்தப் பாட்டிக்கு பிரஷர், ஷூகர் போன்றவை உண்டு. அதனால் ரிக்ஷாவில் செல்வோம். அப்போதெல்லாம் ரிகஷாவும், குதிரை வண்டியும்தான் போக்குவரத்திற்கு. நிறைய பேர் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்வார்கள். தியேட்டரில் அந்தப்பாட்டி பால்கனி டிக்கெட் எடுப்பார்கள். ஆனால் நாங்கள் உட்காருவது என்னவோ முன்னால் உள்ள பெஞ்ச் டிக்கெட்டில். பாட்டிக்கு கண்ணு அவுட்.


ஒருமுறை பேப்பரில் அந்த ஆண்டு எத்தனை படங்கள் வெளியாகியுள்ளன என்று படத்தின் பெயரோடு வெளியிட்டிருந்தார்கள். எங்கள் மாமா என்னை அழைத்து அதில் நான் பார்த்த படங்களை என்னிடம் கேட்டு டிக் பண்ணிக்கொண்டே வந்தார். மொத்தம் நூற்றிப்பத்து படம் என்று நினைக்கிறேன். அதில் நான் பார்தது எழுபது படங்கள். (இதில் இந்த எம்ஜியார் படங்கள் கணக்கு கிடையாது). என் மாமாவின் அடுத்த கேள்வி இந்த படங்களில் உனக்கு பிடிக்காத ஒரு படத்தின் பெயரைச்சொல். ஒன்றுமேயில்லை.
இப்போதெல்லாம் டீவியிலேயே பாதி சீன்கள் போட்டுவிடுகிறார்கள். அப்புறம் பைரேட் சிடி வேறு வந்து விடுகிறது. பாட்டு எல்லாம் முதலிலேயே போட்டு விடுகிறார்கள். அதுனால படம் பார்க்கப் போகும் முன்னாலேயே அந்தப் படத்தைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துவிடும். படம் பார்ப்பதற்கு அப்போது இருந்த சந்தோஷம் இந்தத் தலைமுறையினரிடம் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. அந்த சந்தோஷம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இது போன வாரம் நடந்தது.
நானும், வீட்டில் வேலை செய்யும் லட்சுமி அம்மாவும் அமர்ந்து டீவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தோம்.
"...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலித் மக்களுடன் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட்டது..."

லட்சுமி அம்மா என்னிடம் கேட்டார், "தலித்னா காலனிக்காரங்கதான."
"ஆமா" என்றேன்.
"காலனிக்காரங்கல்லா கோயிலுக்குள்ள போகக் கூடாது. இப்பெல்லா ரீஜன்டா (டீசன்ட்) டிரெஸ் பண்ணிக்கிட்டு கோயிலுக்குள்ள போறாங்க. அந்த பாவத்த அவங்கதான் அனுபவிப்பாங்க."
"ஏம்மா அவங்களும் மனுசங்கதான"
"அவங்கள கீழ்சாதின்னு கடவுளே பிரிச்சி வச்சுருக்கான்."
"கடவுள் பிரிக்கல, மனுசங்கதான் அவங்க வசதிக்காக பிரிச்சி வச்சிருக்காங்க. மேல் ஜாதிக்காரங்க அவங்களுக்கு வேலை செய்ய ஆள் வேணும்ங்கிறதுக்காக அப்புடி பிரிச்சி வச்சிருக்காங்க."

"அவங்க இப்ப ரீஜன்டாயிட்டாங்க, அந்தப்பசங்க என்னா பேச்சு பேசுறாங்க தெரியுமா?"
"கொஞ்சம் பேருதான் முன்னேறியிருக்காங்க. இன்னும் நிறையபேர் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்காங்க, எல்லா சாதிக்காரங்களும் பத்து மாசந்தான?"  என்றேன்.
அந்தம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது, கோபம்னுகூட சொல்ல முடியாது. ஆவேசம்னுதான் சொல்லனும்.
"போன வாரம் நான் அந்த பெரிய வீட்டுல வேல செய்யிறப்ப ஒரு தொழுநோய் வந்த பிச்சைக்காரன் கூப்டான். நான் வீடு பெருக்கிக்கிட்டே வெளிய வந்து அவங்கிட்ட சொன்னே -'வீட்டுல யாரும் இல்லப்பா'
'ஏன் நீ எங்கருந்து வர்ற?'
'செருப்பாலடிப்பேன். நான் வீட்டு வேல செய்யிறவ. வீட்டுக்காரங்க இல்லனா போவியா, திமிரு பேச்சு பேசற?'
'ஏன் நான் பேசக்கூடாதா?'
'நீ என்ன பாவஞ் செஞ்சியோ நோய் வந்து பிச்ச எடுக்கற, நா என்ன பாவஞ் செஞ்சனோ வீட்டு வேல செய்யிறேன். வாய மூடிக்கிட்டு போ'ன்னு சொன்னேன்."

"அப்பற நாலு நாளைக்கு முன்னால எங்க தெருவுல ஒரு வயசான அம்மா மயக்கம் போட்டு விழுந்துருச்சு. நானும் எம் மவனும் அந்த அம்மாவத் தூக்கிதண்ணி தெளிச்சி எழுப்பி விட்டோம் ரெண்டு நாளா சாப்பிடலன்னு சொல்லுச்சு. எம் மவன் பாக்கெட்ல இருந்து பத்து ரூபா எடுத்து குடுத்தான். நானு என்னோட சேல ஒண்ணு, சால்வ ஒண்ணு எடுத்து குடுத்தேன்."

"நேத்து அந்த தெருப் பக்கமா போறேன், மயக்கம் போட்டு விழுந்த அந்தப் பொம்பள அவங்க வீட்டு வாசல்ல நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு ஒக்காந்துருக்கு. நான் நல்லா திட்டிட்டேன். பிச்ச வேணும்னா கேட்டு வாங்கனும். பொய் சொல்லக்கூடாது. அந்த பொம்பளய தூக்குறப்ப ஒரே நாத்தம். அவங்க குளிக்கவே மாட்டாங்க. கண்டதையும் திம்பாங்க". என்று சொல்லிக்கொண்டே விர்ரென்று அவங்க வீட்டுக்கு கிளம்பி போய் விட்டார்.

நான் அப்படியே விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தேன். வீட்டுக்குப்போயாவது என் மீது உள்ள கோபம் தீர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.
மழையே மழையே
10/30/2009 | Author: ஜெயந்தி
இந்த வருடம் பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. கிணற்றில் இப்போதே தண்ணீர் கீழே உள்ளது. வெயில் காலத்தில் தண்ணீருக்கு அலையப் போகிறோம் என்று கவலையாக இருந்தது. நல்ல வேளை, மழை வயிற்றில் பாலை (நீரை) வார்த்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை வீடுகளுக்குள் வரும் அளவுக்கு பெய்கிறது. ஆனால் அவ்வளவு நீரும் சாக்கடை வழியாக கடலில்தானே போய் சேர்கிறது.

நம் முன்னோர்களெல்லாம் மழை நீரை குளம், கம்மாய், ஏரி என்று சேமித்து வைத்து வளமாக வாழ்ந்தார்கள். நாம் அவற்றையெல்லாம் பிளாட் போட்டு விற்று வீடு கட்டிக்கொண்டு மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் வருகிறது என்று புலம்பிக்கொண்டு இருக்கிறோம்.

வெயில் காலத்திலோ தண்ணீருக்காக குடங்களைத் தூக்கிக்கொண்டு தெருவில் திரிய வேண்டும். சென்னையில் சின்டெக்ஸ் டேங் வைத்து லாரிகளில் நீரை கொண்டுபோய் அதில் ஊற்றிவிடுவார்கள். அந்தத் தெருவாசிகள் வரிசையில் நின்று தண்ணீர் பிடித்துக்கொள்ள வேண்டும். குறுக்கும் மறுக்கும் ஓடும் இந்த தண்ணி லாரிகளினால் அதிகளவில் விபத்துக்கள் நடப்பது தனிக்கதை.

அமெரிக்காவில் நம் அளவு மழைதான் பெய்யுமாம். ஆனால் ஒரு சொட்டு தண்ணீர்கூட கடலில் கலக்காதாம். அவ்வளவும் சேமிக்கப்பட்டு உபயோகிக்கப்படுகிறது. வெளி நாட்டினரிடமிருந்து எதை எதையோ பின்பற்றும் நாம் இதை பின்பற்ற முடியாதா? நல்ல விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் என்று அழைத்து திட்டம் தீட்டி இதை செய்ய முடியாதா என்ன? ( நம் விஞ்ஞானிகளும், தொழில் நுட்ப வல்லுநர்களும்தான் வெளிநாட்டை வளப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்)

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த குடி நம் குடி என்று பேசிக்கொண்டே நம்மை பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடுவார்கள் போல் இருக்கிறது. (மூத்த குடி என்பதை தவறாகப் புரிந்துகொண்ட நம் குடிமக்கள் டாஸ்மாக்கில் கும்பல் கும்பலாய் நிற்கிறார்கள். ரேஷன் கடைகளில் கூட அவ்வளவு கூட்டம் இல்லை.)

ஒரே ஒரு காமராஜரை இன்னும் எத்தனை காலத்துக்கு உதாரணம் காட்டிக்கொண்டிருக்கப் போகிறோம். (அவர் காலத்தில்தான் நிறைய அணைக்கட்டுகள் கட்டப்பட்டன)
நேற்று... இன்று... நாளை...
10/28/2009 | Author: ஜெயந்தி
நேற்று...

டீவியின் ரிமோட் யாரால் கைப்பற்றப்படுகிறதோ (அடிதடி ரகளைக்குப்பின்) அவர்களின் விருப்ப சானல் ஓடிக்கொண்டிருக்கும். மகனுக்கு கிரிக்கெட், புட்பால், டென்னிஸ் போன்றவை. மகளுக்கு பிற மொழி சேனல்கள் (ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்). அம்மாவுக்கு சீரியல்கள். கணவருக்கு நியூஸ் சேனல். நம்மளுக்கு பாட்டு மற்றும் காமெடி சீன்கள்.

மகளுக்கு படிப்பின் மீது கொஞ்சம் (நிறைய) ஆர்வம் அதிகம். "எனக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு அந்த டீவிய ஆஃப் பண்ணுங்க."
"எக்ஸாமுனாலும் பரவாயில்ல டெஸ்டுக்கெல்லாம் ஆஃப் பண்ண முடியாது. வேணும்னா ரூமுக்குள்ள போய் கதவை மூடிக்கிட்டு படி." (வருடம் முழுவதும் ஒன்று டெஸ்ட் இருக்கும் இல்லைன்னா எக்ஸாம் இருக்கும்)
மகளின் புலம்பல்: எல்லா வீட்டுலயும் டீவிய ஆஃப் பண்ணிட்டு புள்ளைங்கள படிக்க வைக்கிறாங்க, இங்க எல்லாமே தலைகீழ்.

இன்று...

ஞாயிற்றுக்கிழமை, கம்ப்யூட்டரை யார் கைப்பற்றுவது என்று காலையில் இருந்தே போர் தொடங்கிவிடும். மகனுக்கு ஆங்கிலப் படங்கள், ஆர்க்குட் ஸ்கிராப்புகள், சாட்டிங்... மகளுக்கு படிப்பு சம்பந்தமான வேலை. காலையில் இருவரும் தொடங்கிவிடுவார்கள். கணவர் ஏதோ வேலையாக வருவது போல் சைடில் கம்ப்யூட்டரை பார்த்தபடி வந்து வந்து போய்க்கொண்டிருப்பார். கொஞ்சம் கேப் கிடைத்தாலும் அம்மா உட்கார்ந்துவிடுவார்கள் (வயது 66. இரண்டு கேம்ஸ் தெரியுமுங்கோ). நமக்குத்தான் ப்ளாகில் நிறைய வேலை இருக்கிறதே. இதற்கு நடுவில் கடைக்காரப் பையன் தண்ணீர் கேன் எடுத்து வருவான். அவன் வரும்போது யார் கம்யூட்டரில் அமர்ந்து இருந்தாலும் எழுந்துவிட வேண்டும். அவனுக்கு ஐந்து நிமிடம் டைம், ஐந்தாவது நிமிடம் அவனுடைய செல்போனுக்கு அவனுடைய கடை ஓனர் மிஸ்டு கால் கொடுப்பார், உடனே ஓடிவிடுவான். அவனுக்கும் கேம்ஸ்.
மகளின் புலம்பல்: படிப்புக்கு கம்யூட்டர குடுக்க மாட்டேங்கறாங்க.

நாளை...
தற்போது பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் வரும் ஒரு செய்தி நம்மை மிரட்டுகிறது. மரபணு மூலம் மாற்றப்பட்ட பயிர்களை இந்தியாவில் சோதனை செய்யப்போகிறதாம் அமெரிக்கா.

முதலில் வருவது கத்தரிக்காய். மரபணு மூலம் மாற்றப்பட்ட பயிர்களை பயிரிட்டால் விளை நிலங்கள் பாழாகிவிடுமாம்.

நம் பயிர் செய்யும் முறை விளைந்த பொருட்களில் இருந்து,  அடுத்த விவசாயத்திற்கு விதை நெல், விதை வேர்க்கடலை என்று என்ன பொருள் விளைவித்தோமே அதிலிருந்து நல்ல தானியங்களை பொருக்கி அடுத்த விளைச்சலுக்கு பத்திரப்படுத்திவிட்டுத்தான் (விளைச்சல் குறைவாக இருந்தாலும்) அடுத்த தேவைக்கு விளைபொருட்களை பயன்படுத்துவார்கள் விவசாயிகள்.
ஆனால் மரபணு பயிர்களில் அதெல்லாம் நடக்காது. ஒரு முறை பயிர் செய்தால் அதிலிருந்து அடுத்த விளைச்சலுக்கு விதைகளை எடுக்க முடியாது. திரும்பவும் அமெரிக்காவில் இருந்துதான் வாங்கி பயிர் செய்ய வேண்டும். விதைகள் இல்லாமல் நம் விவசாயம் முறை அழித்தொழிக்கப்படும். நாம் சாப்பிடுவதற்கு அமெரிக்காவின் கையை எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

விளை நிலங்களின் நிலமையே இப்படியென்றால், அதை சாப்பிடும் நம் கதி.

இந்தியாவின் முக்கியத் தொழில் விவசாயம்.

70களில் கடலைச் செடியில் முதன் முதலில் கம்பளிப் பூச்சி விழுந்தபோது செடிகளெல்லாம் பாழாவதைக் கண்டு கலங்கி நின்றவர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.
அதன் பிறகு பூச்சி மருந்து என்ற பெயரில் ரசாயன உரங்கள் வந்தன. பூச்சி இல்லாமல் எப்படி மருந்தை வாங்குவார்கள். முதலில் பூச்சியை அனுப்பிவிட்டு பிறகு மருந்தை அனுப்பினார்கள்.

அந்த உரங்கள் நம் உடலையும், விவசாய நிலங்களையும் எப்படியெல்லாம் கெடுக்கிறது என்று இப்போதுதான் உணர்ந்துகொண்டிருக்கிறோம். விவசாயிகள் திரும்பவும் பாரம்பரிய விவசாயத்தை நோக்கிச்சென்று விவசாய நிலங்களை மீட்டெடுக்க போராடிக்கொண்டிருக்கிறார்கள். நம்மையும்தான்.

இந்தியாவை ஏன் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா. இங்கேதான் வெள்ளையர்களுக்கு சலாம் போடும் அரசியல்வாதிகள், நடப்பதை புரிந்துகொள்ளமுடியாமல் அறியாமையில் இருக்கும் ஜனங்கள் இருக்கிறார்கள். இதுதான் பொருத்தமான இடம் என்று தேர்ந்தெடுத்துவிட்டது.

அணு ஆயுத ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் கையெழுத்து போடும் போது கம்யூனிஸ்ட்கள் ஏதோ போராடியதாக ஞாபகம் (இப்படியெல்லாம் உள்குத்து இருக்கும் என்று சொன்னார்கள்) நமக்குத்தான் அவர்களை பிடிக்காதே, அவர்கள் கிடக்கிறார்கள். விட்டுவிடுவோம்.

அப்புறம் இந்த ஜங்க் ஃபுட் என்று ஒன்று (பீஸா, பர்கர், நூடுல்ஸ் வகையறாக்கள்) உலவுகிறதே. இவற்றை சாப்பிட்டால் கேன்சர் வருமாம்.

என் பையனிடம் கேட்டேன் "ஏண்டா இந்த ஜங்க் ஃபுட் சாப்டா கேன்சர் வருதாம்னு எனக்கே தெரியிதே, இந்த சாஃப்ட்வேர்ல வேல செய்யிறவங்களுக்கு தெரியாதா?" அவன் சொன்னான், "நல்லாத் தெரியும். வேற வழியில்லை." ஏனென்றால் சென்னையில் ஹோட்டல்களில் சாதம் பாதி அளவுதான் வெந்திருக்கும். குழம்பு பிடிக்கவில்லை என்றால் சாதத்தை நன்றாக பிசைந்து ரசமோ, மோரோ ஊற்றி சாப்பிட ஆசை இருக்காது. ரசமோ, மோரோ ஊற்றினால் சாதம் இன்னும் விரைத்துக்கொள்ளும். ஒரு வேளை சாப்பிட்டால் ஒரு நாள் முழுவதும் பசிக்காது. அவர்கள் வேறு என்ன செய்வார்கள், ஜங்க் ஃபுட் பக்கம் போய் விடுகிறார்கள்.

அப்புறம் இந்த அஜினோ மோட்டோ என்று ஒன்று இருக்கிறது. அது எத்தனை விதமான கெடுதிகளை செய்யும் என்று பட்டியலிடுகிறார்கள். அவற்றில் ஒன்று கரு உற்பத்தியே பாதிக்கப்படுமாம்.

டிவியில் விளம்பரம் போடுகிறார்கள், உங்கள் சமையலில் ருசி இல்லையா? அதில் போடுங்கள் அஜினோ மோட்டோ. "எங்கம்மா சமைச்சா மாதிரி ருசியா உனக்கு சமைக்கத் தெரியுதா?" என்கிற கணவன்களை சமாளிக்க நிறைய வீடுகளில் இதை வாங்கி உபயோகிக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர்களை காப்பாற்றியதைப்போல நம்மையும் காப்பாற்றுவார்கள் என்று இருந்து விடுவோமா? அல்லது......
சின்னத் தாய் அவள்
10/22/2009 | Author: ஜெயந்தி
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 போட்டியில் கலந்து கொண்டவர்களில் பிரியங்காவும் அவரது தாயாரும் என்னுள் வந்தார்கள்,

ஆரம்ப சுற்றுகளில் எல்லாம் பிரியங்கா பாடும் போதெல்லாம் அவரது தாயாரின் கண்களில் தண்ணீர் வழிந்துகொண்டிருக்கும். பிரியங்கா பாடும் பாடல்கள் எல்லாம் பழைய நாம் அதிகம் கேட்டறியாத மிக நல்ல பாடல்களாகவே இருக்கும். ஒவ்வொரு சுற்றிலும் அவர் பாராட்டுதல்களோடு செலக்ட் செய்யப்படுவார்.

ஒரு முறை நடுவர்கள் உனக்கு யார் இந்தப் பாடல்களை சொல்லித்தருகிறார்கள் என்று கேட்டனர். தன் தாயார் சொல்லித்தருவதாக சொன்னார். அவளது தாயை அழைத்து பாடச் சொன்னார்கள். அப்போதும் கண்களில் கண்ணீரோடு மகள் பாடிய அதே பாடலை பாடினார். மிகவும் அற்புதமாக பாடினார். நடுவர்கள் இப்போது தெரிகிறது பிரியங்கா எப்படி இவ்வளவு நன்றாக பாடுகிறாள் என்று என்று பாராட்டினார்கள்.

அதன் பிறகு அந்தத் தாயின் கண்களில் கண்ணீர் இல்லை. ஒரு புன்சிரிப்பு மட்டுமே இருக்கும். மோனாலிசாவின் ஓவியத்தில் வரும் புன்னகை போல் இருக்கும்.

இறுதிச் சுற்றுகளில் வேறு நடுவர்கள் (பிரபல பாடகர்கள்) அந்தச் சுற்றுகளிலும் பிரியங்கா நன்றாகவே பாடினார். இப்போது நடுவர்கள் அந்தத் தாயை அழைத்து பாடச் சொன்னார்கள்.

மகள் பாடிய அந்தப் பாடலை மகளை விடவும் அருமையாகப் பாடினார்.

"சின்னத்தாய் அவள் தந்த ராசாவே
முள்ளில் தோன்றிய சின்ன ரோசாவே"
உன்னை போல் ஒருவன்
10/21/2009 | Author: ஜெயந்தி
எங்கள் அலுவலகத்தில் அலுவலகத்தை சுத்தம் செய்யும் பெண் வேலையை விட்டு நின்று விட்டாள். மின்சார அடுப்பில் அலுவலகத்திலேயே டீ தயாரித்து அனைவருக்கும் கொடுப்பார்கள், அதற்கும் ஆள் தேவைப்பட்டது. எனவே இதற்கென்று ஆள் அனுப்பும் நிறுவனத்திடம் தொடர்பு கொண்டு ஆள் ஏற்பாடு செய்தார்கள். 


வரும் பையன்கள் ஒருவாரம் அல்லது அதிகபட்சம் 10 நாட்களுக்கு மேல் ஒருவரும் நிலைக்கவில்லை. காரணம் என்னவென்றால் அவர்களுக்கான வேலையைத் தவிர, கடைக்குச் செல்வது, பேங்குக்கு செக் போட அனுப்புவது, சாப்பாடு வாங்க ஹோட்டலுக்கு அனுப்புவது... என்று வேலை சக்கையாகப் பிழியப்படும். மேனேஜர் வேறு அவர் மேல் இடத்தில் வாங்கிய அர்ச்சனையை இவர்களிடம் காட்டித் தீர்த்துக்கொள்வார். மேனேஜரிடம் முதலில் முறைப்பார்கள். பிறகு பதில் பேசத் தொடங்குவார்கள். அடுத்து காணாமல் போய்விடுவார்கள். இதெல்லாம் ஒரு வாரத்தில் இருந்து பத்து நாட்களுக்குள் நடந்து முடிந்துவிடும். அடுத்த பையன் அனுப்பப்படுவான். இதே கதைதான். 


இந்த முறை வந்தவன்தான் ஷாகித். அமைதியாக இருப்பான். சொன்ன வேலைகளையெல்லாம் செய்துகொண்டிருப்பான். எதிர்த்து பேச மாட்டான். ஆறடி உயரம் இருப்பான். ஆள் பார்க்க நன்றாக இருப்பான். வயது 20௦-லிருந்து 22-க்குள் இருக்கும் எங்களுக்கு அவனைப் பார்த்தால் பாவமாக இருக்கும். நாங்கள் வேலை செய்தது அந்த அலுவலகத்தின் பிராஞ்சில். மெயின் ஆபீஸ் இரண்டு தெரு தள்ளி இருக்கும். அவன் எங்கள் அலுவலகத்திற்கு வந்தால் அவனை சிறிது நேரம் உட்கார சொல்லுவோம். உடனே மெயின் ஆபீசில் இருந்து போன் வரும்.

"ஷாகித் அங்கே இருக்கானா?''

"இங்க இல்ல"
"இப்பத்தான் வந்தான். இங்கே கொஞ்சம்வேலை இருக்கிறது. முடிந்தவுடன் அனுப்புகிறோம்."
என்று நேரத்திற்குத் தகுந்தாற்போல் பதில் சொல்லுவோம். என்ன ஒரு பத்து நிமிடம் அவனைக்காப்பாற்ற முடியும்.

ஒரு முறை அவன் டீ எடுத்து வந்து அனைவருக்கும் கொடுத்துவிட்டு அவர்கள் டீ குடிக்கும் வரை அமர்ந்திருந்தான். டீ குடித்தவுடன் டம்ளரை எடுத்து கழுவ வேண்டுமே?

திடீரென்று சுதா ஓடி வந்தாள்.

"மேடம் மேடம் ஷாகித்திற்கு ஃபிட்ஸ் வந்துருக்கு"


நாங்கள் எல்லோரும் அவனிடம் ஓடினோம்.

எங்கள் அலுவலகத்தில் ஆண்கள் எல்லாம் மார்க்கெட்டிங்கிற்கு காலையிலேயே கிளம்பிவிடுவார்கள். நாங்கள் பெண்கள் மட்டுமே இருப்போம். அவன் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு வலிக்கிறது என்றான். உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. இது ஃபிட்சில் சேருமா என்று தெரியவில்லை. அவன் சுய நினைவோடுதான் இருந்தான். பாக்கெட்டிருந்து தீப்பெட்டியை எடுத்துக்கொடுத்து சூடு வைக்கும்படி கையைக்காட்டினான். அவன் மணிக்கட்டிலிருந்து முழங்கைவரை சூடு வைத்த வடு.


நான் வயதில் பெரியவள் என்பதால் சூடு வைக்கும் பொறுப்பு எனக்கு வந்தது. என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"சூடு அவசியம் வைக்கணுமா?"

"வச்சாத்தான் சரியாகும்"

தீக்குச்சியைப் பற்ற வைத்து அருகில் சென்று வைக்க முடியாமல் ஐந்தாறு குச்சிகள் காலியாகின. கடைசியில் பற்றவைத்தவுடன் அவனே இழுத்து வைத்துக்கொண்டான். எம்டிக்கு தகவல் சொல்லப்பட்டு, அவனுடைய ஓனர் வந்து அழைத்துச சென்றார். 


அடுத்தநாள் அலுவலகத்திற்கு வந்த அவனை அழைத்து விசாரித்தேன். எப்போதிலிருந்து இப்படி வருகிறது என்று கேட்டேன். அப்போது அவன் வலது கையைக் காட்டினான். அதில் சுமதி என்ற பெயர் பச்சை குத்தப்பட்டிருந்து. அந்தக்கையில் தீக்காயம் எதுவும் இல்லை. 


"இந்தப்பெண்ணை நான் லவ் பண்ணினேன். அவங்க அம்மாவும், அண்ணனும் எதுத்தாங்க, அதனால அறுவாள எடுத்துட்டுப்போயி அவங்க ரெண்டு பேரையும் வெட்டிட்டேன். இதப்பார்த்துக்கிட்டிருந்த எங்க அம்மாவுக்கு உடம்பு சரியில்லாம போச்சி. ஆஸ்பத்திரியில வெச்சி என் கையைப் பிடிச்சிகிட்டே செத்துப்போயிட்டாங்க. அப்போதான் முதல் முறையா வந்தது" என்று ஏதோ மூலைக்கடையில் மசால்வடை கிடைக்கும் என்கிற தொணியில் சொல்லிக்கொண்டிருந்தான்.


என் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அவன் உண்மையில் நாலே வார்த்தையில் சென்னையில் பேசும் கொச்சைத் தமிழில் சொன்னான்.

"அப்புறம் ஜெயிலுக்கு கூட்டிடுபோனாங்க. சொந்தக்காரர்கள் எங்கள் நிலத்தை விற்று அரசியல்வாதிக்கு பணம் கொடுத்து என்னை வெளியே கொண்டு வந்தார்கள். இப்போதுகூட போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப்போடுகிறேன்" என்றான்.

"டாக்டர்கிட்ட பார்த்தியா?"

"எத்தனையோ டாக்டர்கிட்ட பாத்துட்டேன். யாராலயும் சரிபண்ண முடியல."

மனோதத்துவ மருத்துவரிடம் பார்த்தாயா என்று கேட்க நினைத்தேன். அது அவனுக்கு புரியுமா என்று தெரியவில்லை.

"உங்க ஊர் எது?"
"ஆம்புர் பக்கத்துல கிராமம். அங்க சொந்த வீடு இருக்கு. என் பிரண்ஃட் குடும்பத்தான் தங்கியிருக்கு. அவங்க அம்மா எனக்கும் அம்மாபோல. நான் சம்பாதிப்பதை அவர்களுக்கு அனுப்பிவிடுவேன்"
"உங்க அப்பா?"

"அவர் எங்க அம்மா இருந்தப்பவே ஹார்ட் அட்டாக்குல செத்துப்போயிட்டார். என்றான்.

அவங்க அலுவலகத்தில் 200, 300 பையன்களை வடாற்காடு மாவத்தில் இருந்து அழைத்து வந்து ஒரு இடத்தில் தங்க வைத்து சாப்பாடு போட்டு, கல்யாண மண்டபங்கள, ஹோட்டல்கள், எங்கள் அலுவலகம் போல் வேலைக்கு ஆள் கேட்பவர்களுக்கு என்று சுத்தம் செய்யும் வேலை செய்பவர்கள். எங்கள் ஆபிஸில் 4000 சம்பளம் வாங்கிக்கொண்டு அவனுக்கு 3000 கொடுப்பார்கள். அன்றிலிருந்து ஷாகித் தான் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தான். மனம் எப்போதும் வேதனையிலியே இருந்து.

அவன் விஷயத்தை என்னிடம் மட்டுமே சொல்லவில்லை, யார் கேட்டாலும் சொல்லிவிடுவான். இவனை மாற்ற வேண்டும் என்று மனதில் முடிவு செய்துகொண்டேன். இவன் யார் சொல்வதையும் கேட்கிற குணமுடையவன் அல்ல மனதில் தோன்றுவதை செய்கிறவன் என்று தோன்றியது.


பரவாயில்லை அன்பினாலே செய்ய முடியாதது எதுவுமில்லை என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை. எப்படி பேசுவது என்று பலவாறாக யோசனை செய்து கொண்டேன். அப்போது அவன் என்னருகில் வந்தான். முகம் மிகவும் சந்தோஷமாக இருந்தது.


"மேடம் எங்க ஊருலயிருந்து எனக்கு போன் வந்துச்சு. எங்க வீட்டு வாசல்ல ஒரு குழந்தை கிடந்ததாம். அதை என்ன செய்யனு கேட்டாங்க. அத எடுத்து வச்சிக்கங்க, அது என்னோட தங்கச்சின்னு சொல்லிட்டேன்." முகத்தில் அவ்வளவு சந்தோஷம்.

"யாராவது வந்து கேட்டாங்கன்னா குடுக்க முடியாதுன்னு சொல்லிடுங்கன்னு சொல்லிட்டேன்". முகத்தில் அத்தனை ஆக்ரோஷம்.

இவன் முகத்தில் உணர்ச்சிகளை இன்றைக்குத்தான் பார்த்தேன்.

"தீபாவளிக்குக் பிறகு நான் வேலைக்கு வர மாட்டேன். ஊருக்கே போயிருவேன், என் தங்கச்சிய வளக்கப்போறேன்" என்றான்.

தீபாவளிக்குப் பிறகு அவனை பார்க்கவில்லை.
எனது யோகா...
10/20/2009 | Author: ஜெயந்தி
குழந்தைகளைப் பார்த்தாலே மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கும். அவர்கள் பேசினாலோ கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அவர்கள் பாடினால்...?

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 நிகழ்ச்சியில் அவர்கள் பாடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது.
நிகழ்ச்சி துவங்குவதற்கு சற்று முன் என் நிலை என்ன என்பதை சொல்கிறேன். இடுப்பு வலியின் காரணமாக எதைப் பார்த்தாலும் எரிச்சல், எல்லோர் மீதும் எரிச்சல் வந்துகொண்டிருந்தது. நேரம் ஆக ஆக எரிச்சல் கூடிக்கொண்டே போனது.

அப்போதுதான் நிகழ்ச்சி துவங்கியது.
இரண்டு குழந்தைகள் பாடியவுடனேயே மனதில் அத்தனை அமைதி. தியானம், யோகா பண்ணினால் அமைதி கிடைக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். குழந்தைகளின் பாட்டைக்கேட்டு என் மனது அமைதியானது.
சின்ன குழந்தைகளிடம் எவ்வளவு திறமை. பழைய மெலடி பாடல்களை எவ்வளவு அருமையாக பாடுகிறார்கள். நல்ல நிகழ்ச்சி.

 நானும் வந்துட்டேன். சேர்த்துக் கொள்வீர்களா? ஃபிளாக் பற்றி கேள்விப்பட்டேன். பின்னர் சில ஃபிளாகுகளைப் படித்துப் பார்த்தேன். நாமும் ஃபிளாக் தொடங்கினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. 


தொடங்கலாம்... வேண்டாம்... என்று மாறி மாறி தோன்றியது. தொடங்க வேண்டும் என்ற நமைச்சல் கடைசியில் ஜெயித்துவிட்டது. விளைவு, உங்கள் முன் நான்! வேறு வழியில்லை, சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்.