இது ஆயிரத்தி ஒன்னாவது.

நான் சிறு வயதில் படித்த மாயாஜாலக் கதைகள் நினைவுக்கு வந்தது. ஒரு நாட்டில் இளவரசியை அரக்கன் தூக்கிக்கொண்டு போய்விடுவான். உடனே ராஜா தாண்டோரா போட்டு அறிவிப்பார், 'யார் இளவரசியை காப்பாற்றி அழைத்து வருகிறார்களோ அவர்களுக்கு இளவரசியை கல்யாணம் பண்ணி வைத்து நாடும் ஒப்படைக்கப்படும்'.

நமது ஹீரோ இளவரசியைக் காப்பாற்றக் கிளம்புவார். அப்போது அவருக்குத் தெரியவரும் அரக்கனை நேருக்கு நேர் போரிட்டு ஜெயிக்க முடியாது. ஏனென்றால் ஏழு மலை தாண்டி ஏழு கடல் தாண்டி ஒரு கூண்டுக்குள் இருக்கும் கிளியின் உடலில் அரக்கனின் உயிர் இருக்கும். அந்தக் கிளியைக் கொன்றால்தான் அரக்கன் சாவான். அந்த ஏழு மலை, கடலை தாண்டும்போது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான இடர்பாடுகளைத் தாண்டிச் செல்ல வேண்டும். ஒவ்வொரு இடங்களின் இடர்பாடுகளையும் கடந்து ஹீரோவுக்கு தேவதைகள், மந்திரவாதி, நல்ல பூதம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு உதவி செய்து அந்தக் கிளியை அடைய உதவுவார்கள். கடைசியில் கிளியைக் கொன்று இளவரசியை திருமணம் செய்து பல்லாண்டு நல்லாட்சி நடத்துவான் ஹீரோ.இந்தப் படத்தில் அதேபோல் அந்த ஏழு இடர்பாடுகள் வந்தபோது எனக்கு இந்தக்கதைகள்தான் ஞாபகத்திற்கு வந்தன. அதனால் என்னால் படத்தை ஆர்வத்துடன் பார்க்க முடிந்தது. இடைவேளைக்கு பின்னர் வரும் காட்சிகள் புரியவில்லை என்று பெரும்பாலோர் கூற்று. இடைவேளைக்குப் பின் வரும் காட்சிகளில் வசனம் மிகக் குறைவு. அதுவும் 12ம் நூற்றாண்டுத் தமிழ். ஒரு பாதி படத்தை வசனமே இல்லாமல் பார்த்து புரிந்துகொள்ளுங்கள் என்றால் நமக்கு இது புது விசயம். ஒரு காட்சியை விளக்க பக்கம் பக்கமாக வசனம் பேசுவார்கள். அல்லது கொஞ்சமாவது வசனம் இருக்க வேண்டும். காட்சியைப் பார்த்து நீயே புரிந்து கொள்ள வேண்டும் என்பது நமக்கு ரொம்பப் புதிது. அதுதான் இதில் பிரச்சனை.

செட் போட்டு படம் எடுக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட்டு, முதன் முதலில் நிஜமான கிராமங்களை நோக்கி பாரதிராஜா சென்றபோது சந்தோஷமாக வரவேற்றவர்கள் நாம். அடுத்து பக்கம் பக்கமாக பேசும் வசனங்களை சுருக்கி சின்னச் சின்னதாக மணிரத்தினம் கொடுத்தபோது அதையும் வரவேற்று ஏற்றுக்கொண்டவர்கள் நாம். இப்போது அடுத்த கட்டத்திற்குச் சென்று சீன்களைப் பார்த்து உன் மூளைக்கு வேலை கொடுத்து நீயே புரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்வதையும் நாம் ஏற்றுக்கொள்வோம். இது நிச்சயமாக அடுத்தகட்ட வளர்ச்சி என்றே நான் நினைக்கிறேன்.

படத்திலும் அந்த பல நூற்றாண்டுகளாக வஞ்சம் வைத்து ஒரு இனத்தையே அழிப்பதைப் பார்க்கும்போது நம் பக்கத்தில் சமீபத்தில் பார்த்த இன அழிப்பே ஞாபகத்திற்கு வந்து மனதை கனக்கச் செய்கிறது. அழிப்பு என ஒன்று நடக்கும்போது அது நிச்சயம் அத்துடன் முடியாது என்பதை படத்தின் முடிவு காட்டுகிறது, அடுத்த அழிப்பு நிச்சயம் இருக்கிறது என்பதை. மனிதனாக பிறந்த நாம் வாழப் போவது ஒரு பிறவிதான். அந்த வாழ்க்கையை ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்து சந்தோஷமாக வாழ்வோம் என்ற எண்ணம் எப்போது அனைவருக்கும் வருகிறதோ அப்போதுதான் நாம் பரிணாமத்தில் முழுமை அடைகிறோம் என்று நினைக்கிறேன்.
ஜனவரி முழுவதும் ப்ளாக் பக்கமே வரமுடியாதபடி வேலை. சரி பிப்ரவரியில் அதை சரிக்கட்டிவிடலாம் என்று நினைத்தால்...

வைரஸ் ஒன்று புகுந்து கம்ப்யூட்டரை கபளீகரம் பண்ணிவிட்டது. அது சரி செய்வதற்கு ஒருவாரம் ஆகிவிட்டது. அது சரியானதும் கோயம்புத்தூருக்கு கல்யாணத்திற்கு போக வேண்டி அதில் ஒரு வாரம் ஓடிவிட்டது. பின்னூட்டத்திற்குக்கூட நன்றி சொல்ல முடியவில்லை. ப்ளாக்கர் வாழ்க்கைக்கு நேரும் கொடுமைகளைப் பாருங்கள்.

எப்படித்தான் எல்லாரும் ப்ளாக்கை மெயின்டெயின் பண்ணுகிறார்களோ? அடிக்கடி இடுகைகளையும் போட்டுக்கொண்டு வியூவர்சையும் பாலோயர்சையும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு யப்பா நினைக்கும்போதே தலைசுற்றுகிறது. இதில் அடுத்தவருக்கு பின்னூட்டம் போடுவது வேறு. அவர்களைப் பார்த்தாலே பொறாமையாக இருக்கிறது (நற நற நற நற வேறு ஒன்றுமில்லலை பல் கடிபடுகிறது).

எங்களுக்கும் காலம் வரும். அப்போது நாங்களும் கலக்குவோம்ல (அப்டியெல்லாம் பாக்கப்படாது. அப்துல்கலாம் அய்யாதான் கனவு காணச் சொல்லியிருக்காரு).
மூளையா? மனசா?
2/08/2010 | Author: ஜெயந்தி
எனக்கும் என் மகளுக்கும் நடந்த சிறு உரையாடல்,

நான் :  ஒரு விஷயத்துல மூளை ஒண்ணு நினைக்கும். மனசு ஒண்ணு நினைக்கும். மூளை அறிவுப்பூர்வமாக சிந்திக்கும். மனசு உணர்ச்சிப்பூர்வமாக சிந்திக்கும். அந்த விஷயத்தை செயல்படுத்தும்போது அந்த நேரத்தில் எது ஜெயிக்கிறதோ (மனசுஅல்லது மூளை) அது நினைத்தது நிறைவேற்றப்படுகிறது. மூளை ஜெயித்தால் பின் விளைவுகள் குறைவாக இருக்கும். மனசு ஜெயிச்சால் பின் விளைவுகள் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும்.

மகள் : அது அப்படியில்ல குண்டு (என் செல்லப்பெயர்). இரண்டையுமே மூளைதான் நினைக்கும். மனசுக்கு நினைக்கவெல்லாம் தெரியாது.

நான் : அப்படி மூளைதான் இரண்டையுமே நினைக்குனா ஏன் ரெண்டு விதமா யோசிக்குது. ஒண்ணே ஒண்ணை மட்டும் யோசிக்க வேண்டியதுதானே?

மகள் :  மூளை உனக்கு ரெண்டு ஆப்சன் தருது. அந்த ரெண்டுல இருந்து ஒண்ணை நீ செலக்ட் பண்ணிக்க வேண்டியதுதான்.

சொல்லிவிட்டு மகள் சென்றுவிட்டாள்.

எனக்கு அதன் பிறகும் யோசனைகள் வந்துகொண்டேயிருந்தன. முதலாவது மூளைதான் ரெண்டையும் சிந்திக்குன்னா, ஏன் ரெண்டு விதமாக சிந்திக்கணும். ஒரே ஒரு சிந்தனையைக்கொடுத்து நம்மை நிம்மதியாய் வைக்க வேண்டியதுதானே? இரண்டாவது சில நேரங்களில் மூளை ஆப்சென்ட் ஆகிவிடும். பிரச்சனையை எப்டி தீர்க்கிறதுன்னு ஒன்னுமே தோணாது. அப்புறம் நிதானமாக யோசித்தால் நல்ல தீர்வு கிடைக்கும். அப்படி ஆப்சென்ட் ஆவது எதனால். (ஒருவேளை எனக்கு மட்டும் அப்படி ஆப்சென்ட் ஆகிவிடுகிறதோ?) சில நேரங்கள்ல இந்த முடிவ மட்டும்தான் எடுக்கணும்னு மூளை தீர்மானமாச் சொல்லிடும்.

ஒரு வேளை மூளை உள்ளவர்களுக்கு இதெல்லாம் புரியும்போல.
ஜோதிபாசு
2/04/2010 | Author: ஜெயந்தி
அதிக வேலை காரணமாக நிறைய நாட்களாக ப்ளாக் பக்கமே வர முடியவில்லை. ஆனாலும் மனதிற்குள் ப்ளாக் நினைப்பு ஓடிக்கொண்டேதான் இருக்கும். அப்போது எழுத நினைத்த பல விஷயங்களில் ஒரு விஷயம் மட்டும் எழுதியே தீர வேண்டும் என்று தோன்றியது. சற்று தாமதம்தான். அது பெருந்தலைவர் ஜோதிபாசுவின் உடல் தானம்.

நம் நாட்டில் எந்தத் தலைவரின் உடலும் தானம் அளிக்கப்பட்டதாக நினைவிலில்லை. குறைந்தபட்சம் கண் தானமாவது செய்திருப்பார்களா என்று தெரியவில்லை. அவர்களின் உடல் ஒன்று எரிக்கப்படும் அல்லது புதைக்கப்படும்.ஜோதிபாசுவின் கண்களும் தானம் அளிக்கப்பட்டு, அவரது உடலும் இறுதி மரியாதைகள் நிறைவடைந்தவுடன் கொல்கத்தா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டதைப் பார்த்தவுடன் மெய்சிலிர்த்தது. அவர் வாழ்ந்த காலத்திலும் எளிமையான வாழ்க்கையே வாழ்ந்தார். மக்கள் சேவைக்காகவே வாழ்ந்தார், இறந்த பின்பும் மக்கள் சேவைக்காக தனது உடலை கொடுத்துள்ளார்.

பிருந்தா காரத்தும் பிரகாஷ் காரத்தும் கருத்தடை ஆபரேஷன் செய்துகொண்ட பிறகே திருமணம் செய்துகொண்டார்களாம். முழுமையாக தங்களை நாட்டு சேவைக்காகவே அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு.
அரசியல்வாதி என்றாலே நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக்கொள்வது என்பதுதான் பொருள். அதன்படியே வாழ்ந்த ஒரு பெருந்தலைவரின் காலத்திலேயே நாமும் வாழ்கிறோம் என்பது நமக்குப் பெருமை.