எல்லாரும் பிடிச்ச பத்து படம் போடறாங்களே? சினிமான்னதும் அழைப்பு இல்லாமலேயே வந்துட்டேன்.

1. உதிரிப்பூக்கள்
மனைவியை கொடுமைப்படுத்தும் கணவன். தனக்கு சாதகமாக நடக்காத மற்றவர்களிடமும் கொடூரமாக நடந்துகொள்பவன். மனித உருவில் இருக்கும் மிருகம். அருமையான மனைவி. இவர்களிடையே நகரும் கதை. விஜயன் ஹீரோவாக (ஆன்டி ஹீரோ) நடித்திருப்பார். மகேந்திரன் படம்.

2. பூட்டாத பூட்டுக்கள்
அழகான குடும்பத்திற்குள் நுழைந்து அடுத்தவன் மனைவியை தன்னுடைய சாமர்த்தியத்தால் தன்வசப்படுத்தி அந்த குடும்பத்தை உருக்குலைக்கும் ஒருவன். அவளுடைய மிக அருமையான குணமுள்ள கணவன். அவர்களின் வாழ்க்கையின் போக்கை உரைக்கும் கதை. ஜெயன் கதாநாயகனாக நடித்திருப்பார். டைரக்டர் மகேந்திரனா  வேறு யாராவதா என்று ஞாபகமில்லை.

3. 16 வயதினிலே
முதல் முறையாக அசலான கிராமத்திற்குச் சென்ற அசலான கிராமத்துக் கதை.

4. சுவர் இல்லாத சித்திரங்கள்
எதார்த்தமான அருமையான படம்.

5. சிவப்பு மல்லி
அருமையான படம்.


6. தில்லுமுல்லு
ஒரு பொய்யை மறைக்க படம் முழுக்க பொய் மூட்டையாகவே வாழும் ரஜினி. எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது.

7. தளபதி
குழந்தையிலிருந்தே அனாதையாக வளரும் ஹீரோ. அனாதைத் தன்மைக்காகவே இந்தப் படம் பிடிக்கும்.

8. நிழல் நிஜமாகிறது

9. கரகாட்டக்காரன்

10. மறுபடியும்

11. ஆட்டோகிராஃப்

12. அழகி

13. விருமாண்டி

14. அன்பே சிவம்

15. காதல்

16. பூ

17. பருத்தி வீரன்

18. சுப்ரமணியபுரம்

19. பசங்க

20. நாடோடிகள்

21. ரேணிகுண்டா

22. அங்காடித்தெரு

ஐய்யய்யோ பத்து படத்துக்கு மேலேயே போகுதே. இன்னும் வேற இருக்கு.

பலே பாண்டியா, சபாஷ் மீனா, பாச மலர், காதலிக்க நேரமில்லை, கிழக்கே போகும் ரயில், முதல் மரியாதை கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இதெல்லாம் ஞாபகத்தில் இருப்பதிலிருந்து மட்டுமே. இன்னும் மறந்த படங்களில் உள்ள நல்ல படங்கள் ஞாபகம் வரும் போது உச்சுக்கொட்ட வைக்கும். இன்னும் பார்க்காத படத்தில் எத்தனை நல்ல படங்களோ?

செல்வேந்திரன் வீட்டுக்கு யட்சியும், ஆதி வீட்டுக்கு விரலியும் வந்திருப்பதாக அறிந்தேன். நம்ம வீட்டுக்கு யாருமே வரலயேன்னு மனசு முழுக்க சோகம். மொச்சக்கொட்டயும் நெத்திலிக் கருவாடும் போட்டு குழம்பு வைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பேச்சுக் குரல் கேட்டது. யாரது? அம்மா ஹால்ல டிவி பார்த்துக்கிட்டிருந்தாங்க. சுத்தி முத்தி பார்த்தேன்.

"நான் இங்கயிருக்கேன். இங்க பாரு"

சமையல் மேடையில டம்ளர் அருகே இருந்துதான் குரல் வந்தது. தெரிந்துவிட்டது. எங்க வீட்டுக்கும் யாரோ வந்துட்டாங்க.

"நீ வந்தது ரொம்ப சந்தோஷம்" என்றேன்.
"இந்த வழியா போயிக்கிட்டிருந்தேன். நீ வச்ச கருவாட்டுக் கொழம்பு வாசம் என்ன இங்க கூட்டிட்டு வந்திருச்சு" என்றாள்.
"உன் பேரென்ன"
"இசக்கி"
" கொஞ்சம் இரு இந்தா வாரேன்"ஹாலில் டிவியில் இத்தனை கல்யாணம் ஆகியும் இன்னும் கன்னி கழியாத கஸ்தூரியைப் பார்த்து கண் கலங்கிக் கொண்டிருந்த அம்மாவிடம் ஓடினேன்.

"அம்மா இந்த யட்சி வந்து மண் பானைக்குள்ள இருக்கும்னு சொல்றாங்க. விரலி வந்து சீசாவுக்குள்ள இருக்கும்னு சொல்றாங்க. இந்த இசக்கி எங்க இருக்கும்" என்றேன்.

இவ்வளவு நேரம் ஸீரோ வாட் பல்ப் போல இருந்த என் முகம் இப்போது 1000 வாட்ஸ் பல்பு போல மின்னுவதை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே அம்மா கேட்டாள்
"இப்போ திடீர்னு எதுக்கு அத கேட்குற"
"இல்லம்மா இந்த ப்ளாக் படிக்கிறேன்ல அதுலதான் போட்டுருந்துச்சு. இசக்கிக்கு ஒன்னுமே போடல அதுதான் ஒனக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டேன்"
"எனக்கும் சரியாத் தெரியல. பீங்கானா இருக்கலாம்னு நெனக்கிறேன்" என்றாள்.
சமையலறைக்கு ஓடினேன். பீங்கான் டீ கப்பை எடுத்தேன். அதற்குள் இசக்கியை வைத்தேன். அப்போது இசக்கி சொன்னாள்
"கொஞ்ச கேப்பக் கழியும் கிண்டிறு. கருவாட்டுக் கொழம்புக்கு நல்லா இருக்கும்"
"சரி நீ இங்க இரு நான் சமையல முடிச்சிட்டு வர்றேன்"
என்று சொன்னவாறே கப்பை சர்க்கரை டப்பாவின் பின்னே டீ கப்பை மறைத்தேன்.

கேப்பைக் கழி கிண்டும்போது வந்த அம்மா கேட்டாள்,
"இப்ப ஏன் கழி கிண்டுற?"
"இல்ல கருவாட்டுக் கொழம்புக்கு நல்லா இருக்கும்னு. சாப்புடனும் போலஇருந்துச்சு"
அம்மா சந்தேகத்துடன் பார்த்தவாறே குளிக்கச் சென்றாள்.
நான் அவசரமாக ஒரு தட்டில் சோறும் கருவாட்டுக் குழம்பும், ஒரு தட்டில் கேப்பக் கழியும் கருவாட்டுக் குழம்பும் ஊற்றி இசக்கியிடம் தந்தேன். அவள் அதை ருசித்துச் சாப்பிட்டாள்.
"உன்னோட கை பக்குவம் நல்லா இருக்கு. சாப்பாடு ரொம்ப ருசியா இருந்துச்சு" என்றாள்.
இந்த சந்தர்ப்பத்த நாங்க தவற விடுவோமா?
"ஆமா ஆமா என்னோட சமையல சாப்புடுற எல்லாருமே அப்டித்தான் சொல்லுவாங்க" என்றேன்
வயிறு நிறைந்த திருப்தியுடன் இசக்கி கேட்டாள்,
"ஏதாவது கேளு தர்றேன்"
"என்ன கேட்டாளும் தருவியா?"
"தங்கம் வேணுமா? வைரம் வேணுமா? அரண்மனை மாதிரி வீடு வேணுமா? தயங்காம கேளு. எனக்கு யட்சி, விரலிய எல்லாம் விட சக்தி அதிகம்" என்றாள். நான் உற்சாகத்துடன் கேட்கத் துவங்கினேன்.

"இங்க வந்து இந்த மேல் சாதிக்காரங்க கீழ் சாதிக்காரங்கள ரொம்ப கொடுமப்படுத்துறாங்க. அதுனால சாதியே இருக்கக்கூடாது. அப்பறம் இந்த அரசியல்வாதிங்க அவங்க சொந்த லாபத்துக்காக மதச் சண்டைய மூட்டிவிட்டு ஏராளமான பேர சாகடிக்கிறாங்க அதுனால மதமும் இருக்கக் கூடாது. அப்பறம் என்னோட இனம்தான் ஆளனும், வாழனும் அடுத்த இனம் சாகனும்னு நெனக்கிறாங்க. அதுனால இனமும் இருக்கக் கூடாது. அப்பறம் கொஞ்ச பேரு காச வச்சிக்கிட்டு எப்டி செலவு பண்றதுன்னு தெரியாம இருக்குறாங்க. நெறய பேரு சாப்புட சாப்பாடு இல்லாம, இருக்க வீடுகூட இல்லாம பிளாட்பாரத்துல இருக்காங்க. அதுனால எல்லாருக்கும் சமமான அளவுல வசதி இருக்கனும். அப்பறம் கோடுகள் இல்லாத உலகம் வேண்டும்... அய்யய்யோ... இசக்கி... இசக்கி... என்னாச்சு?"

இசக்கி டீ கப்புக்குள்ளேயே மயங்கி சரிந்து கொண்டிருந்தாள்.
ஆண்கள் அழலாமா?
4/02/2010 | Author: ஜெயந்தி
எங்க அம்மா இருக்காங்களே அவங்களால வேலை செய்யாம இருக்கவே முடியாது. வேலை செய்வது ஒன்றே அவர்கள் வாழ்க்கை லட்சியம் என்பதுபோல் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வீட்டில் நாங்கள் எல்லோரும் இருந்தாலும் காலிங்பெல் அடித்தால் அவர்கள்தான் ஓடுவார்கள் கதவைத் திறக்க. வயது 65 ஆகிறது.

ஒரு நாள் என்னாச்சு வெளியே மழை பெய்யத் தொடங்கிய சத்தம் கேட்டவுடன் காயப்போட்ட துணிகளை எடுக்க அவசரமாக கட்டிலில் இருந்து இறங்கும்போது கால் இடறி அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள். அவ்வளவுதான். எந்திரிக்கவே முடியவில்லை. எனக்கு அலுவலகத்திற்கு போன் வந்தது. அப்போதே முடிவு செய்துவிட்டேன். அது ஃப்ராக்சராகத்தான் இருக்கும். வீட்டிற்குச் சென்று அம்மாவைத் தூக்கி ஆட்டோவில் திணித்துக்கொண்டு ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே டாக்டரிடம் அம்மா வலிக்கிறதாகச் சொன்ன இடத்தில் எக்ஸ்-ரே எடுத்தார்கள். அதில் ஒன்றும் அவர்களுக்கு தெரியவில்லை. திரும்பவும் எங்க வலிக்குதுன்னு கேட்டாங்க. அம்மாவும் கால் உடம்போடு சேரும் (முன் பக்கம்) இடத்தைக் காட்டினார்கள். திரும்பவும் ஒரு எக்ஸ்-ரே அப்பவும் அவங்களுக்கு ஒன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எழுதிக்கொடுத்தார்கள். அதை எடுக்கச் சென்ற இடத்தில் மெசின் ரிப்பேர் ஆகியிருந்தது. நாங்கள் ஒரு முக்கால் மணி நேரம் காத்திருந்து பிறகு ஸ்கேன் எடுத்துச் சென்றோம். அந்த ஸ்கேனில் பார்த்தால் எங்கம்மா சொன்ன இடத்திற்கும் எலும்பு உடைந்திருந்த இடத்திற்கும் சம்பந்தமே இல்லை. அம்மா முன் பக்கத்தைக் காட்டினார்கள். ஆனால் பின் பக்கம் முதுகெலும்பு முடியும் இடத்திற்கு சற்று கீழே தள்ளி இருந்தது. நல்ல வேளை அது ஃப்ராக்சர் இல்லை. கிராக்தானாம். 6 வாரம் பெட் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கச் சென்றபோது நடந்த நிகழ்ச்சிதான் என் மனதிலேயே நிற்கிறது. ஸ்கேன் மிசின் ரிப்பேர் என்று முக்கால் மணி நேரம் நிற்க வைத்தார்கள் அல்லவா? காத்திருந்தபோது ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. யாரதுன்னு பார்த்தபோது நாங்கள் நின்ற இடத்திற்கு எதிர்புறத்தில் எங்களைப்போலவே எம்ஆர்ஐ ஸ்கேனிற்காக காத்திருந்த ஒரு ஸ்ரெட்சரின் அருகிலிருந்துதான் அந்த அழுகைச் சத்தம். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண். வாய்விட்ட அழுகை. ரொம்ப சத்தமாக இல்லை. பத்தடியில் இருந்த எனக்கு தெளிவாகக் கேட்கும் அளவிற்கான அழுகை. விம்மி விம்மி அழுகிறார். அந்த அழுகைச் சத்தம் என் மனதை என்னவோ செய்தது. ஸ்டெச்சரில் இருப்பவரைப் பார்த்தேன். சற்று வயதான பெரியவர். அழுபவரின் தந்தையாக இருக்கலாம். ஸ்ரெச்சரிலேயே பலவித கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. மார்பருகே லேப்டாப் மாதிரி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. சற்று மேலே பலூன் மாதிரி நாம் மூச்சுவிட்டால் ஏறி இறங்குவதைப் போல் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அவர் முகத்தைப்பார்த்தால் அவருக்கு நினைவின்றிக் கிடந்தார். அதற்கு மேல் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. மகன் கொஞ்சம் நேரம்கூட விடாமல் அழுதுகொண்டே இருந்தார்.

ஆண்கள் அழுவதைப் பார்த்ததில்லை ஆதலால் அவர் அழுதது எனக்கு வித்தியாசமாக இருந்தது. நம் ஊரில் ஆண் அழுதால் எத்தனை விதமான கிண்டல்கள் 'ஏண்டா பொம்பள மாதிரி அழற', அந்தக் கேள்வியிலேயே அசிங்கப்பட்டு அடுத்தமுறை அழுகை வந்தால் அவன் அதை அடக்கிக்கொள்ளப் பழகிக்கொள்கிறான். தன் துக்கத்தை தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்கிறான். அப்படி அடக்கி வைப்பதால் ஹார்ட் அட்டாக், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது ஒரு உணர்ச்சி அத ஏன் அடக்கி வைக்க வேண்டும். சின்னப்பிள்ளைத்தனமாக எதற்கெடுத்தாலும் அழுகச் சொல்லவில்லை. தாங்க முடியாத துயர நேரங்களில் வாய்விட்ட அழுகைதான் துயரத்தின் வடிகாலாக இருக்க முடியும். அழுகையை அடக்குவதில் என்ன கவுரவம் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஸ்கேன் மிசின் சரியானவுடன் அழுது கொண்டிருந்த அந்த நபரின் தந்தைக்கு முதலில் ஸ்கேன் எடுத்து அனுப்பினார்கள். அங்கிருந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரமும் விடாமல் அழுதுகொண்டிருந்தார். அவ்வளவு அழுகை அழுவதென்றால் அந்தத் தந்தை எப்பேர்ப்பட்ட தந்தையாக இருக்கு வேண்டும். அல்லது அந்த மகன் எப்பேர்ப்பட்ட மகனாக இருக்க வேண்டும். அல்லது இருவருமா?

-----------------------
சங்கம்
சங்கம் நல்லதுதான் செய்யும்னு சங்கத்த ஆதரிச்சு சேர்ந்துட்டு திரும்பிப் பார்த்தா நெலமையே தலைகீழா மாறியிருக்கு சங்கம் தேவைன்னு கை தூக்கினவங்க எல்லாம் கையை கீழ போட்டுட்டாங்க. அவசரப்பட்டுட்டனோ?

வேலை அதிகமாக இருப்பதால் ஒரு பத்து பதினைஞ்சு நாளைக்கு இந்தப் பக்கம் வர மாட்டேன். நிம்மதியா இருங்க.
--------------------------------------