Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts
காதல் திருமணம்
11/26/2010 | Author: ஜெயந்தி
சமீபத்தில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மணமக்கள் மேடைக்கு சற்றுத்தள்ளி சிறிய மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அதில் அப்பா மேல் சிங்கர் (ஆண் பாடகர்), 12 வயது மகள் ஃபிமேல் சிங்கர் (பெண் பாடகர்),  இன்னும் இரண்டு மூன்று ஆண்கள் கீ போர்ட் மற்றும் வாத்தியங்கள் வாசித்தார்கள். அம்மா சவுண்டை சரிபண்ணும் கருவியை மேடை மேல் வைத்துக்கொண்டு மேடைக்கு கீழே சேர் போட்டு அமர்ந்து கொண்டு சவுண்டை சரி பண்ணிக்கொண்டிருந்தார். அவர்களின் மகன் 3-4 வயதிருக்கும் நான்கு மேளங்கள் இணைந்தார்போல் ஒரு இணைப்பை அவன் முன் வைத்து ட்ரம்ஸ் அடிக்கும் குச்சியை வைத்து அடித்துக்கொண்டிருந்தான். அவனும் அம்மாவைப்போலவே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே அமர்ந்திருந்தான். அந்தப் பையனைப் பார்த்தவுடன் இப்படித்தான் சூப்பர் சிங்கரில் பாடிய ஸ்ரீகாந்தும் உருவாகியிருப்பான் என்றாள் என் மகள்.

ஸ்டேஜில் இருக்கும் அப்பா அம்மாவை கண்களால் அழைத்து மகன் எங்கே என்று கேட்கிறார். திரும்பிப்பார்த்த அம்மாவின் முகத்தில் சின்ன பதற்றம். பக்கத்தில் மகனைக் காணவில்லை. இருவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே கண்களால் தேடுகிறார்கள். அப்பா உயரமான இடத்தில் நிற்பதால் மகனை உடனே கண்டுபிடித்துவிடுகிறார். அம்மாவிடம் கண்களாலேயே சுட்டிக்காட்டுகிறார். கல்யாணத்திற்கு வந்த இன்னொரு குழந்தையின் அருகே இருக்கும் சேரில் இந்தக் குழந்தை ஏறமுடியாமல் ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவித நிம்மதியுடன் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள்.



கண்களால் பேசிக்கொள்ளும் மொழியை எந்த மொழியாலும் வெல்ல முடியாது. இதை எந்த மொழியாலும் அழிக்கவும் முடியாது. காதலர்கள் கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம்.

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ

கண்களின் மொழிகளைப்பற்றிய அருமையான பாடல்களும் உள்ளன.

மணமக்களின் திருமணம் காதல் திருமணம். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது. சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும் மாறவில்லை.

சாதிகள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் மணங்களும் நடந்திருக்கும். எத்தனை எதிர்ப்பு இருந்த போதிலும், காதல் மரணங்கள் இருந்த போதிலும் இந்தக் காதல் மட்டும் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் காலகாலத்திற்கும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. புதிதாக பிறந்துகொண்டே இருக்கிறது. உலகத்தை வாழ வைப்பதே காதல்தானே.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் அதற்கேற்ற சட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம். இத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கிறதே. அவர்களுக்கு நிறைய சலுகைகள் அளித்து சாதியற்ற ஒரு குழுவை உருவாக்கலாம். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் சாதியை வெறுக்கும் அனைவரும் அதில் இணையலாம் என்று கூறலாம். அவர்களுக்கு வேலை, படிப்பு அனைத்திலும் முன்னுரிமை அளிக்கலாம். மெல்ல மெல்ல இந்தக்குழு பல்கிப்பெருகி சாதியில்லாத நிலைமையை உருவாக்கும். சாதியற்ற தமிழகம் உருவாகும். நினைக்கவே நல்லாயிருக்கில்ல. ம்ம்ம்...

டிஸ்கி : கண்களால் பேசிக்கொள்ளும் பாடல்களை பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.

"பாய் 300 சிக்கன் போடுங்க"

வீட்டு வாசலில் இருந்தது மட்டன் ஸ்டால்.
பாய் லெக் பீஸை வெட்டி எடை போட்டார். வீட்டு வாசலில் கடை என்பதால் பழக்கத்தின் காரணமாக எந்த மாதிரி சிக்கனோ மட்டனோ தேவை என்பதை சொல்லாமலேயே போட்டுவிடுவார்.

"350 இருக்கு. போடவா?"
"நான் 300 தான கேட்டேன்"
"இதுக்குத்தான் சார அனுப்புங்கன்றது. அவர் வந்தாருன்னா புரிஞ்சுக்கிட்டு அமைதியா வாங்கிட்டுப் போயிருவாரு"
"ஆமா வெளியில நல்ல பேரு வாங்க பேசாம வந்துருவாரு. வீட்டுல நல்ல பேரு வாங்கனும்னு நெனக்க மாட்டாரு."
"ஆமா பொம்பளங்க யாரு புருஷன பாராட்டியிருக்கீங்க."
"நாங்க பாராட்டுனம்னா நீங்க அப்படியே ஒக்காந்துருவீங்க பாய்"
"ஆமா நீங்க சொல்றதும் சரிதான். நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா அதுக்கு எங்க வீட்டம்மாதான் காரணம்."

கடையில் கூட்டம் அதிகமிருக்கும் நாட்களில் அவரது மனைவியும் கடைக்கு வருவார். பாய் வெட்டிய கறியை கவரில் வாங்கிக் கொடுப்பது, பணத்தை வாங்கிக்கொண்டு சில்லரை கொடுப்பது, சிக்கன் தீர்ந்துவிட்டால் கோழியை வெட்டி உரித்துக்கொடுப்பது என்று அவருக்கு சரியாக சுழலுவார். இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் இருக்கும். மனைவியை வெடுக்கென்று பேசமாட்டார். மூஞ்சியைக் காட்ட மாட்டார்.

ஒரு ஞாயிறன்று மதிய நேரம் கடைக்குச் சென்றேன். அவரது மனைவி சுவரில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
" என்னங்க பாய் இப்படித் தூங்கறாங்க என்றேன்"
அதற்கு அவர் "ஆமாங்க என்ன செய்றது நான் 11-12 மணிக்கு வீட்டுக்கு போவேன், என் பெரிய மகன் 1 மணிக்கு வருவான். சின்ன மகன் 2 மணிக்கு வருவான். எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறிவிட்டு படுக்கனும். திரும்பவும் காலையில் சீக்கரமே எந்திரிக்கனும். அவங்களும் என்ன பண்ணுவாங்க. தூங்கட்டும்" என்றார். பெண்மையை புரிந்துகொள்பவர்களைக் கண்டால் ஏனோ தலைவணங்கத் தோன்றுகிறது.

ஞாயிறன்று கடைக்கு வந்தால் பாய் நம்மை கண்டுகொள்ள மாட்டார். அவ்வளவு கூட்டம் அவரை மொய்த்திருக்கும். மற்ற நாட்களில் போனால் அவரால் பேசாமல் இருக்க முடியாது. அவரது பேச்சு நியாயமாகவும் எதார்த்தமாகவும் இருப்பதாக எனக்குப்படும்.

"எங்க வீட்டுக்கு வந்த சொந்தக்காரங்க ரெண்டு பேரு எங்க வீட்டுக்கே வந்து என்னையே கொற பேசிட்டுப்போனாங்க. அப்ப நான் கூலி வேலைதான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் நீ கூலி வேலதான செய்யுறன்னு பேசுனாங்க. அவங்க பேசறதால நான் அடுத்து என்ன செய்றதுன்னு முயற்சி பண்ணி இந்தக் கடை வச்சேன். அதுனால அவங்க மேல கோபப்படுறதெல்லாம் இல்ல. வேற யாராவது இருந்தா இந்த மாதிரி பேச்சைக்கேட்டு அப்படியே ஒக்காந்துருவாங்க. நான் அந்தப் பேச்சை எடுத்துக்கொண்டு முன்னேறனும்னு நெனப்பேன்"
அவர் பேசிக்கொண்டே கறியை வெட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று பேச்சு திசை திரும்பியது.



"எங்க தம்பி வந்திருந்தான் அவன் பொண்ண மாப்பிள்ள வீட்டுல சரியா நடத்தலன்னு சொல்றான். ஆறுன சாதம்தான் போடுறாங்களாம். தம்பி வீட்டுல தனிக்குடுத்தனம் அதுனால மூணு வேளையும் சூடா சாப்பிடுவாங்க. மாப்பிள்ள வீட்டுல கூட்டுக்குடும்பம். அதுனால காலையிலேயே சமைச்சுருவாங்க. அது ஆறிப் போயிடுது. அதையெல்லாம் ஒரு குறையா சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.

"ஆமா பாய் பொண்ணுங்க போற எடத்துல அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும். ஏன்னா அவங்க வீட்டுல ஒரு பழக்கம் இருக்கும் போற இடத்துல வேற மாதிரி பழக்கவழக்கம் இருக்கும். அதுனால அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும்" என்றேன்.

"மாப்பிள்ளை சொல்றாரு உங்க பொண்ணு சண்ட போடுறத மட்டும் சொல்றாளே, அவளை வெளிய கூட்டிட்டுப்போறது சந்தோஷமா பேசிக்கிறதயெல்லாம் சொல்றாளான்னு கேக்குறாரு. அவரு சொல்றதும் சரிதானே அவங்க பிரச்சனையில நம்ம தலையிடலாமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.

"ஆமாம் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் இருக்குற பேரண்ட்ஸ் தலையிடாம இருந்தாலே அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துப்பாங்க" என்றேன்.

"அப்பறம் என் தம்பி நான் கேட்டேன் ஏன்டா உன் பொண்ணு கஷ்டப்படுதுன்னு இவ்வளவு வேதனைப்படுறியே, உன்னையே நம்பி ஒரு பொண்ணு வந்துச்சே அத இன்னிக்கி வரைக்கும் எப்படிடா வச்சிருக்கன்னு கேட்டேன். என்னாங்க நான் சொல்றது"

டிஸ்கி: பத்து நாள் பதிவு போடலன்னா காணாம போயிருவாங்கன்னு சவுந்தர் பயமுறுத்துனதுனால உடனே பதிவு போட்டுட்டேன். (எப்படியெல்லாம் பயமுறுத்துறாங்கப்பா)
காட்சியில் எனது படைப்பு "அஞ்சல் தலை" என்ற பகுதியில் பிரசுரமாகியது. அதை எனது பிளாக்கிலும் மறு பிரசுரம் செய்கிறேன்.

---------------------


நினைவு தெரியாத வயதில் பார்த்திருக்கும் அப்பாவுக்கு, நீங்கள் இப்போது உயிருடன் இருக்கிறீர்களா, இல்லையா என்றே தெரியாத உங்கள் மகள் எழுதிக்கொண்டது,

இங்கு நான், உங்கள் மருமகன், பேரன் மற்றும் பேத்தி அனைவரும் நலமாக உள்ளோம். நீங்கள் நலமாக உள்ளீர்களா?

உங்கள் திருமணம் நடந்தபோது அம்மாவிற்கு வயது 16, உங்கள் வயது 17 என்று அம்மா சொன்னார்கள். மூன்று வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து கணாக்கருப்புக்கு பொங்கல் வைத்து கடா வெட்டி அருவா அடித்து வைத்து வேண்டிக்கொண்டபின் நான் பிறந்தேன் என்று அம்மா சொல்வார்கள். அப்படி வேண்டி பிறந்த என்னை நீங்கள் கொண்டாடியிருக்க வேண்டாமா அப்பா. வீதியில் எறிந்துவிட்டீர்களே அப்பா.

உங்களிடம் எனக்கு கேட்க சில கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் அம்மா, அப்பாவுடன் வாழும்போது அவர்கள் குடும்பம் என்பது எவ்வளவு கஷ்டப்படும் குடும்பமாக இருந்தாலும் அதுதான் சொர்க்கம். ஆனால் எனக்கு இன்னொரு குடும்பத்தினரை அண்டி வாழும் வாழ்க்கையை ஏன் கொடுத்தீர்கள்? உங்களின் அறியாமையா, அல்லது சிறுவயதில் திருமணம் முடித்ததினால் அனுபவமில்லாமல் நடந்ததா? தமிழக வழக்கப்படி தாய்மாமா வீட்டில் தஞ்சமடைந்த என்னையும் அம்மாவையும் மாமா எந்தவித குறையும் இல்லாமலேயே கவனித்துக்கொண்டார். இருந்தாலும் அது நம் வீடு என்கிற உரிமை மனதில் தோன்றுமா அப்பா?

பள்ளி செல்லும் வயதில் யாராவது உங்க அப்பா என்ன செய்றாரு, எங்க இருக்காரு போன்ற கேள்விகள் என்னைப்பார்த்து யாராவது கேட்டால் அப்படியே குறுகிப்போய்விடுவேன் அப்பா. அந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் என் ஆவி பாதி போய்விடும் அப்பா. என் வயது பிள்ளைகள் அவர்கள் அப்பாவுடன் விளையாடும்போதோ கையைப் பிடித்துக்கொண்டு எங்காவது வெளியில் செல்லும்போதோ என் மனது எப்படி ஏங்கியிருக்கும் என்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா அப்பா. அப்பா என்ற வார்த்தையே என் வாயிலிருந்து வந்தாக ஞாபகமில்லை. நம் ஊரில் அப்பாவை ஐயா என்றே அழைப்போம். அந்த வார்த்தையும் நான் அறியாத வயதில் என் வாயில் வந்தா என்று நினைவில்லை.

வீட்டில் ஒருமுறை சினிமாவிற்குச் சென்றிருந்தோம். தந்தை மகள் பாசத்தைப் பற்றிய படம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த எனக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது. ஏன் அழுகிறாய் என்று வீட்டில் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தேன்.

எனக்கு திருமணம் ஆன பிறகு கணவர் பொது வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் எனது வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் இருந்தது. ரேஷன் அரிசிதான் சாப்பாடு. அப்போது என் வீட்டிற்கு வந்திருந்த அம்மா சொல்லி அழுதார்கள், உன் அப்பா வீட்டில் நெல் விளைந்து வண்டி வண்டியாக ஒருநாளும் தவறாமல் 3 மாதம் வரை வந்துகொண்டேயிருக்கும். அப்படி குடும்பத்தில் பிறந்த உனக்கு இப்படி புழுத்துப்போன அரிசியை தின்ன கொடுத்துவைத்திருக்கிறதே என்று அழுவார்கள். நான் ரேஷன் அரிசி சாப்பிடுவது பற்றி ஒருநாளும் வருந்தியதில்லை. ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகுதான் எனக்கே எனக்கென்று ஒரு வீடு கிடைத்தது. அது சிறியதாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியையே கொடுத்தது.

என் பிள்ளைகளுக்கு தாத்தா என்கிற வகையில் உங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லையே அப்பா. உங்கள் பேரப்பிள்ளைகள் எவ்வளவு புத்திசாலிகள் தெரியுமா அப்பா? இப்போதும் நீங்கள் இல்லாத அந்த வெறுமையான இடத்தை நோக்கி ஏங்கிக்கொண்டேதான் இருக்கிறேன். இந்தக் கடிதத்தை எழுதும் இந்தக் கணத்தில் என் கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிந்துகொண்டிருக்கின்றன. நான் சாகும் வரை அந்த இடம் வெறுமையாகவே இருக்கும்.

அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு அப்பா என்கிற பிம்பம் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்பா. இந்த கடிதத்தை வாசிக்க நேர்ந்தால் எனக்கு பதில் எழுதுவீர்களா அப்பா?

இப்படிக்கு உங்கள் அன்பே கிடைக்காத மகள்,
ஜெயந்தி
கல்யாணமாம் கல்யாணம்
6/28/2010 | Author: ஜெயந்தி
உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள்/தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை”(கண்டிப்பா இது ஒரு அனுமார்வால்தான்!)

திருமணத்திற்கு முன்பாக காம்ப்ரமைஸ் செய்து கொள்வது பற்றி சந்தனமுல்லை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார்கள்.

எனக்கு திருமணத்தின் போது பட்டுப்புடவைதான். அதனால அதுபற்றி ஒன்றும் பிரச்சனையில்லை. புடவை எடுப்பதற்கு முன் கலர் மட்டும் கேட்டார்கள். எனக்கு சிவப்புக்கலர் பட்டுப்புடவை வேண்டும் என்று கேட்டேன். அதே கலரில் வாங்கி வந்துவிட்டார்கள். பத்திரிகை மாப்பிள்ளை வீட்டிலேயே அடித்துக்கொடுத்துவிட்டார்கள். நாலாக மடித்த ஆர்ட்பேப்பரில் அச்சடித்த பத்திரிகைதான். நான் பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு முழுக்குப்போட்டு வீட்டில் இருந்தேன். அப்போது எதிரே நடேசர் பிரஸ் இருந்தது. அதில் லேடீஸ் செக்ஷன் என்று தனியாக ஒன்று ஆரம்பித்தார்கள். அதில் அனைவரும் பெண்களே. எங்கள் வீட்டில் நேர் எதிர். அதனால் அங்கே அச்சுக்கோர்க்கும் வேலைக்குச் சென்றேன். அதனால் ப்ஃரண்ட்ஸ்னு பார்த்தா ஒரு பத்து பேருதான் இருந்தார்கள். அவர்களுக்கு அந்தப் பத்திரிகையையே கொடுத்துவிட்டேன். இந்த மாதிரி தனியாக அடிக்கலாம் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. அப்போ அவ்வளவு வெவரம் பத்தாது (யாருப்பா அது இப்போ மட்டும் ரொம்ப விவரமாக்கும் என்று சொல்வது).

கணவர் தனியாக ப்ஃரண்ட்ஸ் கார்டு அச்சடித்துக்கொண்டார்.

என்ன ஒன்னும் இன்ரஸ்டிங்கா இல்லையா? இருங்க கல்யாணத்தின் போது நடந்த சில சுவாரஸ்யங்களைச் சொல்கிறேன். என்னை பெண் பார்த்துவிட்டுச் சென்ற பிறகு கணவர் ஒரு முறை வீட்டிற்கு வரப்பார்த்தார். வேறு எதற்கு அப்படியே என்னையும் பார்க்கத்தான். எங்க வீட்டிலயெல்லாம் ரொம்ப ஸ்ரிக்டு. அவர் வர்ராருன்னு தகவல் தெரிஞ்சவுடனே எங்க மாமா வழியிலேயே மடக்கி தெரிஞ்ச இடத்தில் வைத்து பேசி அனுப்பிவிட்டார். பொண்ணு பார்க்க வந்தபோதுகூட தனியாகவெல்லாம் பேசவில்லை. இப்போது போல போனில் கூட பேசிக்கொள்ளவில்லை. எங்கள் திருமணம் முடிந்தபிறகுதான் வீட்டிற்கு போனே வந்தது. திருமணத்திற்குப் பிறகுதான் நான் அவருடன் பேசினேன்.

எங்கள் கல்யாணத்தை தலைவர்களை வைத்து சுயமரியாதை திருமணம்போல் நடந்த வேண்டும் என்று என் கணவருக்கு ஆசை. அதை என் மாமாவிடம் சொன்னார். என் மாமாவுக்கும் அதில் உடன்பாடு உண்டு. அம்மாவிடம் மாமா கேட்டார்கள். என் அம்மாவிற்கு நான் ஒரே பெண். அதனால் அவர்கள் விருப்பம்தான் முக்கியம் என்று மாமா நினைத்தார்கள். அம்மா அந்தத் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்கள். என் கல்யாண வாழ்க்கைதான் சரியில்லாமப்போச்சு. (என் அம்மாவுக்கு ஐயர் வைத்துத்தான் கல்யாணம் நடந்தது) என் மகள் வாழ்க்கை நல்லா இருக்கணும். அதுனால ஐயர் வச்சுத்தான் கல்யாணம் நடக்கணும்னு சொல்லிட்டாங்க. மாமா சொல்லிப்பார்த்தார் "அக்கா மாப்பிள்ளை பிரியப்படுகிறார்" என்றார் அம்மா சொல்லிட்டாங்க "அப்படித்தான் கல்யாணம் பண்ணனும்னா வேற பொண்ணப் பார்த்து பண்ணிக்கச் சொல்லு" என்று கறாராக கூறிவிட்டார். என் கணவருக்கு வேறு வழி. தேவதை போல பெண்ணை மிஸ் பண்ண முடியாதே (அப்படியெல்லாம் பாக்கக்கூடாது).

திண்டுக்கல்லில் எங்கம்மாவுக்கு நடந்த அதே சுப்பைய்யர் சத்திரத்தில் எனக்கும் கல்யாணம் நடந்தது.

இந்தத் தொடரை தொடர நான் அழைப்பது சித்ரா, புன்னகைதேசம் சாந்தி, ஹுசைனம்மா, முத்துலட்சுமி. ஏதோ நம்மால முடிஞ்சவரைக்கும் மாட்டிவிட்டாச்சு.
சென்னையில் ஒரு மழை நாள்
6/25/2010 | Author: ஜெயந்தி
நம்ம அமைதிச்சாரல் மும்பை மழையப் பத்தி எழுதுனவொடனே எனக்கு சென்னை மழையில நான் மாட்டிக்கிட்ட நியாபகம் வந்துவிட்டது.

2002 ஆ 03ன்னு ஞாபகம் இல்லை. அப்போ சைதாப்பேட்டையில வேலை பார்த்துக்கிட்டிருந்தேன். ஒரு நாள் சாயங்காலம் சரியாக 6 மணிக்கு மழை பிடிச்சுக்கிருச்சு. மழையின்னா மழை பேய் மழைன்னு சொல்வாங்களே அந்த மாதிரி கொட்டுது. சரியா 8 மணி வரைக்கும் ஒரே மாதிரி மழை கொட்டிக்கொண்டிருந்தது. 8 மணி ஆனவுடனே மழை சுத்தமாக விட்டுவிட்டது. அதன் பிறகு ஒரு சின்னத் தூறல்கூட இல்லை. நானும் என்னுடன் வேலை பார்க்கும் லட்சுமியும் ஆபீசில் இருந்து கிளம்பினோம். கிளம்பும்போதே வீட்டிற்கு போன் செய்து சொல்லிவிட்டேன் டிராபிக் ஜாம் ஆகி லேட்டானால் கவலைப்படவேண்டாம் லட்சுமி என்னுடன் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டேன். இல்லன்னா எங்கம்மாவுக்கு பயத்துல நாலு முறை வயத்தக்கலக்கி போயிரும். பஸ் ஸ்டேண்டுக்கு வந்தோம். சைதாப்பேட்டை கட் சர்வீஸ் ஒன்றில் ஏறி அமர்ந்துவிட்டோம். அங்கேயே டிராபிக் ஜாம் தொடங்கிவிட்டது.



டிராபிக் ஜாம்னா உங்க வீட்டு ஜாம் எங்க வீட்டு ஜாம் இல்லைங்க. சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி வந்து சேர 3 மணி நேரம் ஆனது. என்ன விஷயம்னா மழை கொட்டுன வேகத்துக்கு அத்தனை தண்ணீரும் வெளியேற முடியாதில்லையா? அதுனால எல்லா இடத்துலயும் தண்ணி அதிகளவுல தேங்கி நிக்குது. (கம்மியா பேஞ்சா மட்டும் தேங்கி திக்காதான்னெல்லாம் கேக்கக்கூடாது) அதுனால டிராபிக் ஜாம் ஆகியிருக்கு. நல்ல வேளை லட்சுமியும் கூட இருக்காங்க. ஒரு துணையா போச்சுன்னு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. எனக்கு அடுத்த ஸ்டாப்பிங் அவங்க வீடு.

எங்க பஸ்சுல கூட்டம் கம்மி அதுனால எல்லாரும் உட்கார்ந்திருந்தோம். பக்கத்தில் வந்த பஸ்களில் ஸ்டேண்டிங்கில் வந்தார்கள். அவர்கள் எவ்வளவு பாவம். எவ்வளவு நேரம் நிற்க முடியும். உட்கார்ந்திருந்தாலும் எங்களுக்கு ஒரு கஷ்ட வந்துச்சு பாருங்க. பசின்னா பசி வயத்த கிள்ளுது. என்னா பண்ண முடியும். ஒரு வாய் தண்ணி குடிக்கலாம்னா எங்க போறது? அதுலயும் ஒரு சந்தோஷம் நல்ல வேளை பாத்ரூம் வரல. அத்தனை பேருலயும் வயத்தக்கலக்கிட்டு வந்தவங்க, யூரின் டேங்க் புல்லானவுங்க பாடெல்லாம் நினைச்சுப்பார்க்கவே முடியல.

அப்போ இந்தளவுக்கு செல்போன் எல்லாம் எல்லோரும் வைத்திருக்க மாட்டார்கள். இப்போதான் பிறக்கும் குழந்தை கூட கையில் செல்போனுடன் பிறக்கிறது. நிறையப்பேர் தகவல் சொல்ல முடியாமல் தவித்திருக்கலாம்.

ஒருவழியா நாங்க வீட்டுக்கு வந்து சேந்தப்ப மணி நள்ளிரவு 1 மணி. அப்பக்கூட எங்க ஹவுஸ் ஓனர் வரல. அவங்க பாரீஸ்ல இருந்து வரணும். அவங்க கார் வேற வழியில ரிப்பேர் ஆகி அவங்க ஒரு வழியாகி 2 மணிக்கு மேல வந்தாங்க.

அடுத்த நாள் பேப்பர்ல பாத்தா சென்னை முழுவதும் இதே மாதிரிதான் நிலைமையாம். அன்று சென்னையில் எல்லோருமே இரவு 1 மணி 2 மணிக்குத்தான் வீட்டுக்குப் போயிருக்காங்க. தண்டவாளத்துல தண்ணி நின்னுச்சுன்னு டிரெயினும் ஓடலையாம்.
பேச்சு மொழி
6/21/2010 | Author: ஜெயந்தி

எங்க ஊர் திண்டுக்கல்னாலும் எங்க சொந்தக்காரங்க நிறைய இருந்தது திருநெல்வேலிப்பக்கம். அதுனால அவங்க வர்றப்ப போறப்ப அந்த ஊர் பேச்சு சிறுவயதில் இருந்தே கேட்டு பழக்கமாயிடுச்சு. பெறகு, மதினி போல நிறைய வார்த்தைகள் புதுசாக இருக்கும்.

அப்புறம் கல்யாணமாகி கோயம்புத்தூருக்கு விருந்துக்கு போன போது அந்த ஊர் பேச்சு வித்தியாசமாக இருந்தது. அங்கும் நிறைய சொற்கள் நம் ஊரில் இருந்து வேறுபடும்.

அப்பறம் வேலூருல போயி தனிக்குடித்தனம் வச்சுட்டு எல்லாரும் வந்துட்டாங்க. அப்போ 19 வயசுங்க. வீட்டுல கதை புத்தகம் படிச்சிக்கிட்டு இருந்த எனக்கு கல்யாணத்தப்பண்ணி அதுவும் தனிக்குடித்தனம்வேற. சமையல் ஒரு பக்கம் பயமுறுத்துது. அந்த ஊருல பேசுற பேச்சு வேற பயமுறுத்துது. மெட்ராஸ் பாஷை மாதிரி பேசுவாங்க.

அப்புறம் ஒரு வழியா ரெண்டையும் கத்துக்கிட்டாச்சு. ஊருக்குப் போனப்போ என்னோட பேச்சு வேலூரு பேச்சு மாதிரி மாறிடிச்சுனு ஒரே திட்டு. அந்த ஊரு பேச்ச பேசுனா இந்த ஊருப்பக்கமே வராதன்னு சொல்லிட்டாங்க. அப்பறம் ஊருப்பக்கம் போறதுக்கு பயந்துக்கிட்டே போயி ஒரு மாதிரியா அதிகமா வாயத் தொறக்காம சமாளிச்சேன்னு வைங்க.

இந்த ஊரு பேச்சுல எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை இருக்கு. சிலர் கலைஞன் என்ற வார்த்தைய கலைஞ்ஜன்-னு உச்சரிப்பாங்க. எனக்கு காதுல ஈயத்தக் காய்ச்சி ஊத்துன மாதிரி இருக்கும்.

நான் அறிவொளி இயக்கம் வகுப்பு எடுக்கறப்போ வரும் இளவழகன் இதே மாதிரி என் எதிரில் உச்சரித்துவிட்டார். அவ்வளவுதான் எனக்கு வந்ததே கோபம். அவரோட சண்டைதான்.
"நீங்க உச்சரிக்கறது தப்புங்க."
"இல்லங்க அப்படித்தான் சொல்லனும்"
"சரி ஞாயிறு இத எப்படி உச்சரிப்பீங்க"
"ஞாயிறு"
"இத மட்டும் ஏன் சரியா சொல்றீங்க. ஞ்ஜாயிறுனு சொல்ல வேண்டியதுதான"
"ஞாயிறு அப்படித்தான் சொல்லனும் கலைஞ்ஜன கலைஞ்ஜன்னுதான் சொல்லனும்"

இத்தனைக்கு அவரு எப்பவுமே அதிகமா தூய தமிழ்லதான் பேசுவாரு.
நான் அவர தப்பா குறை சொல்றேன்னு அவரு நினைக்கிறாரு. அவரு பேசுறதுதான் சரின்னு நினைக்கிறாரு.
"இங்க பாருங்க எனக்கு நன்னன்தான் கல்யாணமே பண்ணி வச்சாரு. நான் பேசுறதுதான் சரி."
"இல்லங்க நீங்க பேசுறது தப்பு"
"சரி நானு இத பத்தி விசாரிக்கிறேன்"
அதுக்கப்புறம் அவரும் அத மறந்துட்டாரு. நானும் மறந்திட்டேன்.

என்னதான் சொல்லுங்க இந்த "ழ" கரம் மட்டும் கொஞ்சம் எங்கள படுத்துனாலும் எங்க ஊருப் பேச்சுதாங்க கரெக்ட்டு.
குந்தாணி
6/14/2010 | Author: ஜெயந்தி
சினிமாக்களில் இந்த வார்த்தை வரும்.

இந்த வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால் தமிழ்நாட்டில் அநேகம் சொல்வது குண்டான பெண்களைக் குறிக்கும் சொல் என்பதாகவே இருக்கும்.

ஆனால் குந்தாணியின் உண்மையான பொருள் சவுத் பக்கம் உள்ளவர்களுக்குத் தெரியும். உரலில் நெல்லையோ, அரிசியையோ போட்டு குத்தும்போது அது வெளியில் சிதறிவிடாமல் இருக்க உரலைச் சுற்றி ஒரு தடுப்பு மாதிரி வைத்திருப்பார்கள். நம்ம கிரைண்டரில் வெளியே இருக்கிறதே எவர்சில்வர் பாகம் அதுபோல. ஆனால் குந்தாணி கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். வாய் அகன்று, கீழே (உரல் அளவுக்கு) ஒடுங்கி இருக்கும்.

எங்க அம்மா சொல்வாங்க அவங்க சின்ன வயசா இருந்தப்போவெல்லாம் (திண்டுக்கல் பக்கத்தில் கிராமம்) பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்துவிட்டால் ஒவ்வொரு வீட்டில் இருந்தும் பச்சரிசியும், கருப்பட்டியும் வருமாம். இரண்டு பேர் இரவிலேயே மாவிடிக்கத் துவங்கிவிடுவார்களாம். விடியற்காலையில் இரண்டு பேர் களி கிண்டத் தொடங்கிவிடுவார்களாம். அதாவது இரண்டுபேர் என்பது மாற்றி மாற்றி பலர் செய்வார்கள். ஊரில் உள்ளவர்களை யாரும் இந்த வேலை செய்யச் சொல்லி அழைக்க மாட்டார்களாம். இந்த மாதிரி கேள்விப்பட்டால் அவர்களாகவே வந்து வேலை செய்துகொண்டிருப்பார்களாம். காலையில் ஊரிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கருப்பட்டிப் பாகு ஊற்றி கிண்டிய களி போகுமாம்.

எங்கள் குடும்பம் திண்டுக்கல் வந்த பிறகும் பழைய பழக்கம் போகாமல் நீண்ட நாட்கள் கருப்பட்டிக் காப்பிதான். அதுவும் வேம்பார் கருப்பட்டி பெரிய ஓலைக்கொட்டானில் வாங்கி வைத்துக்கொள்வார்கள். கருப்பட்டிக் காப்பி போடுவது ஒரு கலை. எங்க அம்மா மிகச் சரியாக அதைச் செய்வார்கள். கருப்பட்டியை தட்டி தண்ணீரில் போட்டு கொதிக்கும்போது காப்பித்தூள் போட்டு கொதித்தவுடன் இறக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பாலைக் காய்ச்சி வைத்துக்கொள்ள வேண்டும். இரண்டும் சூடு ஒரு அளவில் இருக்கும்போது இரண்டையும் கலக்க வேண்டும். ரொம்ப சூடாக இருந்தால் காப்பி திரிந்துவிடும். அப்புறம் எப்படியோ ஜீனி எனப்படும் சர்க்கரைக் காப்பிக்கு மாறிவிட்டது.



குந்தாணியில் தொடங்கி கருப்பட்டிக்கு வந்துவிட்டேன். கிராமங்களில் நெல் குத்தும் உரல் சற்று உயரமாக இருக்கும். பெரிய சைஸ் உடுக்கை போல் இருக்கும். அதன் மேல் இந்த குந்தாணியை வைத்து மாவோ, நெல்லோ, சோளமோ குத்துவார்கள். குண்டாக இருக்கும் பெண்களை குந்தாணி என்று சொல்லுவார்கள் (குந்தாணிபோல் இருப்பதால்). இப்போது அந்த உரலும் குந்தாணியும் இருக்கதோ என்னவோ தெரியவில்லை.

வரும் காலங்களில் குந்தாணி என்றாலே குண்டான பெண்கள் என்று ஆகிவிடுமோ?

டிஸ்கி: குந்தாணி படம் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் அனுப்பி உதவவும்.
ஒருநாள் சுதா சொன்னாள்
"அக்கா எங்க வீட்டுல உங்கள திட்டுறாங்க"
உமாவும் "ஆமாக்கா எங்க வீட்டுலயும் உங்கள திட்டுறாங்க" என்றதும் இன்னொமொரு நாலைந்து பெண்களும் ஆமாம் என்றனர்.
எனக்கு ஒரே கவலையாகிடுச்சு "எதுக்கு என்னய திட்டுறாங்க"
"உங்க கிட்ட வந்தப்பறம் வீட்டுல ரொம்ப எதிர்த்துப் பேசுறமா. அப்பற சாயங்காலம் வீட்டுல வேலை செய்யாம இங்க ஓடி வந்துர்றமா" என்றாள் சுதா.

பின்ன நான் சொல்ற கதை, சொல்லித்தர்ர விஷயங்கள் அப்படி.

கதைகள் எப்படி இருக்கும்னா,
ஒரு ஊர்ல முனியன்னு ஒருத்தன் இருந்தான். அவங்க வீட்டுல ஏதாவது விசேஷம் வந்துச்சுன்னா என்ன செய்வாங்கன்னா எங்க இருந்தாவது ஒரு பூனையை பிடித்து வந்து வீட்டில் ஒரு கூடை போட்டு மூடி வைப்பார்கள். விசேஷம் முடிந்தவுடன் திறந்து விடுவார்கள். அது என்ன பழக்கம், ஏன் அப்படி செய்றீங்கன்னு கேட்டா முனியன் சொல்வாரு எங்க வீட்டு பழக்கம் அதுதான். எங்க தாத்தாவும் இப்படித்தான் மூடி வச்சாரு. எங்க அப்பாவும் இப்படித்தான் மூடி வச்சாரு. நானும் பரம்பரைப் பழக்கம் மாறாம அதையே செய்றேன்னு சொன்னான்.

விஷயம் என்னன்னா அவங்க தாத்தா வசதியா இருந்தாரு. அவங்க வீட்டுல தானியம் தவசங்கள் மூட்டையாக அடுக்கியிருக்கும். அதுனால வீட்டுல எலித்தொல்லை இருக்கும். எலியைப் பிடிக்க முனியனின் தாத்தா பூனை வளர்த்தார். வீட்டுல ஏதாவது விசேஷம்னா இந்தப் பூனை பாத்திரங்கள் மேலேயெல்லாம் விழுந்து ஓடும். அதுனால அவங்க தாத்தா அந்தப் பூனையைப் பிடித்து கூடை போட்டு மூடி வைத்தார்.

அவங்க அப்பா காலத்துல கொஞ்சம் வசதி குறைந்தது. தானிய தவசமெல்லாம் இல்லாட்டியும் பூனை மட்டும் இருந்தது. அதுனால அதைப் பிடித்து கூடை போட்டு கவிழ்த்து வைத்தார்கள்.

முனியன் வீட்டுல தானியமும் இல்லை, பூனையும் இல்லை. ஆனாலும் பழக்கம் விட்டுப் போகக்கூடாது என்பதற்காக எங்காவது பூனையைத் தேடிக்கண்டுபிடித்து தூக்கி வந்து கூடை போட்டு கவிழ்த்தார்கள்.

இப்படித்தான் மூட நம்பிக்கைகள் எல்லாம். அதுனால நாம எது செஞ்சாலும் இது தேவைதானான்னு யோசிக்கணும், ஒரு செயல் அந்தக் காலத்துக்கு தேவையானதா இருக்கும், இப்போதும் அது தேவையான்னு யோசிக்கணும். மூட நம்பிக்கைகளை அகற்றணும்.

இப்படி இருக்கும்.

இதுனால வீட்டுல மூடநம்பிக்கைகளை கேள்வி கேக்குறாங்கன்னு ஒரு கோபம், அப்புறம் சாயங்காலம் வீட்டு வேலை செய்யறதில்லன்னு ஒரு கோபம்.

நான் சுதாவிடம் கேட்டேன்,
"ஏன் சுதா உங்க அம்மாவும் வீட்டு வேலையும் செஞ்சுக்கிட்டு பீடியும் ஒட்டுறாங்கல்ல. சாயங்கால நீதான கொஞ்சம் வீட்டு வேல செய்யக்கூடாதா?"
"இல்லக்கா எங்க கம்பெனியில என்னோட வேல ஆமர் அடிக்கிறது. ஹேண்ட் பேக், ஷூ வுலயெல்லாம் பித்தளையில ஒரு ஓட்டை இருக்கும் பாத்துருக்கீங்களா? அதை இரும்புல அடிக்கணும். அந்த இரும்பு எவ்வளவு வெயிட்டா இருக்கும் தெரியுமாக்கா? கையெல்லாம் வலிக்கும். எப்டிக்கா வீட்டுலயும் வேல செய்யறது. சாயங்காலம் வீட்டுக்கு வந்தவுடனே காப்பியக்குடிச்சிட்டு மூஞ்சியக் கழுவிட்டு இங்க ஓடி வந்திருவம். இங்க வந்தாத்தான் எங்களுக்கு சந்தோஷம்" என்றாள்.
அதன் பிறகு நான் பேசவில்லை.

இரண்டு நாள் கழித்து தெருவில் சென்று கொண்டிருந்தேன். எதிரில் பார்த்தால் சுதாவின் அம்மாவும், லலிதாவின் அம்மாவும். அவங்கள பார்த்தவுடனே அவங்க வீட்டுல என்னை திட்டியது ஞாபகம் வந்துவிட்டது. அய்யய்யோ தெருவிலேயே வைத்து என்னை திட்டிவிட்டால் என்ன செய்வது. இப்படியே திரும்பிப் போய் விடலாமா?

அதுக்கெல்லாம் நேரமே இல்லை. அவர்கள் இருவரும் என்னைநோக்கி வந்து கொண்டிருந்தார்கள். நடுக்கத்துடன் சரி என்ன ஆனாலும் சரி. பார்த்துக்கலாம்னு அசட்டு தைரியத்துடன் சென்றேன்.

"எங்க கடைக்குப் போறீங்களா?" சுதாவின் அம்மா
"ஆமாங்க. நீங்க" என்றேன்.
"நாங்க ரேஷன்ல அரிசி வாங்கிட்டு வர்றோம்" என்றனர்.
என்னிடம் அவர்கள் பேச்சு மரியாதையாக இருந்தது. அவர்கள் என் மீது வைத்திருந்த மரியாதை என்னை ஆச்சரியப்படுத்தியது. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.

அந்தப் பிள்ளைகளின் சாயங்கால நேரங்களின் சந்தோஷம் என் மூலமாகக் கிடைக்கிறது என்பதை உணர்ந்தபோது என் மேலேயே எனக்கு ஒரு மதிப்பு வந்தது. தாழ்வு மனப்பான்மை கொஞ்சம் குறைந்தது.

இதுக்கு நடுவுல எங்க மையம் எங்களை அறியாமலே பேமஸ் ஆகிவிட்டது. எப்படின்னா ஞாயிற்றுக்கிழமை தவிர எல்லா நாட்களிலும் அதிக நேரம் இயங்கும் மையம். மையத்தைப் பார்வையிட அதிகாரிகள் யாராவது வந்தால் எங்கள் வீட்டுக்கு தைரியமாக அழைத்து வரலாம். ஒருமுறை இதன் டைரக்டர் மிஸ்ரா எங்கள் மையத்திற்கு வந்திருந்தார். அவருடன் சென்னை அறிவியல் இயக்கத்தில் இருந்து ராமானுஜம் மற்றும த.வி.வெங்கடேஸ்வரன் வந்திருந்தனர்.

எங்கள் வீடுதான் சின்னதாயிற்றே. அதனால் அவர்களே ஐடியா பண்ணி எங்கள் வீட்டு ரூமுக்கு முன்னால் உள்ள இடத்தில் இருந்து கீதா வீட்டு ரூம் வரை நீட்டாக ஒரு இடம் இருக்கும். அதில் எதிர் எதிராக இந்தக் கடைசியில் இருந்து அந்தக் கடைசி வரை உட்கார்ந்துவிட்டார்கள். மிஸ்ராவிடம் ஒவ்வொருவரும் அறிமுகப்படுத்திக்கொண்டனர். பெரும்பாலோர் தோல் ஷாப்களில் வேலை செய்வதை கேட்டறிந்துகொண்டார். அவர்கள் வீடுகளில் பீடி ஒட்டுவதையும் கேட்டறிந்தார்.

அந்தப் பெண்கள்தான் நல்லா பேசுவார்களே. வந்திருந்த எல்லோரையும் அசத்திவிட்டார்கள். மிஸ்ரா திரும்பிச் சென்றபோது எங்கள் மையத்தைப் பாராட்டி குறிப்பு எழுதியிருந்ததாக என் கணவர் சொன்னார். எல்லோரிடமும் பாராட்டிப் பேசியதாகவும் சொன்னார். மிஸ்ரா பாராட்டிய மையம் என்று இப்போதும் கணவர் பெருமைப்படுவார்.

மாவட்ட அளவிலே பெரிய மீட்டிங்குகள் வைப்பார்கள். அதற்கு ஷீலா ராணி சுங்கத, குத்தியா காந்தி போன்றவர்கள் வந்து பேசுவார்கள். அவர்கள் வேறுமாவட்டங்களில் அறிவொளியில் செயல்பட்டுக்கொண்டிருந்தனர்.

அந்த மீட்டிங்களுக்கு செல்லும்போது செந்தமிழ்ச்செல்வன் மனைவி குணசுந்தரி, முகில் மனைவி ஜோதிமணி, சிலுப்பன் இன்னும் நிறையப்பேரை மறந்துவிட்டேன். சந்திப்போம். நிறையப் பேரின் அறிமுகம் கிடைக்கும்.

இவை இல்லாமல் இளவழகன் பக்கத்தில் உள்ள மையங்களுக்கு எங்களை அழைத்துச் செல்வார். பக்கத்தில் உள்ள சில கிராமங்களுக்கும் சென்று வந்தோம். சில இடங்களுக்கு மைத்ரேயி, ராஜதிலகமும் வருவார்கள். மைத்ரேயி அருமையாக சினிமாப் பாடல்கள் பாடுவாள்.

அவள் மையங்களில் பாடிய சொல்லத் துடிக்குது மனசு படத்தில் வருமே ஒரு பாடல்
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசம் உன் வாசம் என் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
அப்புறம் மறுபடியும் படத்தில் வரும் பாடல்
நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

அவள் பாடிய இந்த இரண்டு பாடல்களையும் இப்போதும் எங்கே கேட்டாலும் அவள் ஞாபகம் வந்துவிடும்.

ஆறே மாதம் நீங்கள் சொல்லித் தந்தால் போதும் என்று கேட்ட வகுப்பு இரண்டு வருடங்கள் ஓடிக்கொண்டிருந்தது.
1992ம் வருடம் துவங்கியது. அதன் பிறகு நாங்கள் 1994ல் சென்னை வர வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. நாங்கள் சென்னை செல்கிறோம் என்று சொன்னவுடன் அந்தப் பெண்கள் அழுத அழுகை இன்னும் என் கண்களில் தெரிகிறது.
நாங்கள் சென்னை வந்தவுடன் அவர்கள் எனக்கு இன்லண்ட் கார்டில் கடிதம் எழுதினார்கள். அவர்கள் கைப்பட எழுதிய எழுத்துக்களை படிப்பதில் அவ்வளவு ஆனந்தம் அடைந்தேன்.

எத்தனை உறவுகள், எவ்வளவு ஞாபகங்கள். வாழ்க்கை என்னும் நீரோட்டத்தில் நம்முடன் வந்தவர்கள் கொஞ்சம் தூரத்தில் பிரிந்து சென்றுவிடுகின்றனர். வேறு புதியவர்கள் வந்து சேர்கின்றனர். அவர்களும் பிரிந்து செல்கின்றனர். இப்படி எல்லோரின் நினைவுகள் மட்டும் நம்மோடு.
முடிந்தது






அருகிலுள்ள மலைக்கிராமத்தைப் பார்வையிட்டபோது எடுத்த படம். கிராமத்தின் பெயர் நினைவிலில்லை.

தன்னார்வலர்களுக்கு மாதத்திற்கு ஒருமுறை கேம்ப் இருக்கும். எங்களை உற்சாகமூட்டி எங்கள் மனம் மாறிவிடாதபடி பார்த்துக்கொள்வார்கள்.

எப்படின்னா கீதாவின் கணவர் என்னிடம் கேட்பார்
"ஏங்க படிப்பு சொல்லித்தர்றீங்களே மாத சம்பளம் ஏதாவது தர்றாங்களா?"
"இல்லங்க."
"சும்மா சொல்லாதீங்க. யாரு இந்தக் காலத்துல ப்ரீயா சொல்லித் தர்றாங்க?"
"உண்மையிலயே சும்மாதாங்க சொல்லித் தர்றேன்."
"நான் நம்ப மாட்டேன்."
"........"
அதே தெருவில் இருக்கும் இன்னொரு பெண்மணி என்னிடம் கேட்டார்,
"ஏங்க சும்மாவா பாடம் சொல்லித் தர்றீங்க"
"ஆமாங்க"
"அதுக்கு பத்துப் பேருக்கு டியூசன் சொல்லிக்குடுத்தீங்கன்னா ஏதாவது செலவுக்காவது ஆகும்."
"........."
"ஃபேன் வேற போடுறீங்களா? அது வேற எதுக்கு உங்களுக்கு வெட்டிச் செலவு"
நான் பதிலே பேசாமல் வந்துவிடுவேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் மனம் மாறிவிடும்தானே?

இந்த கேம்ப்களில் மற்ற இடங்களில் நடக்கும் விஷயங்களும் தெரியவரும். உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் உள்ள மையம் தெரு விளக்கு வெளிச்சத்தில் நடக்கும். தன்னுடைய மனைவி படிக்கக்கூடாது என்று நினைத்த ஒரு குடிகாரக் கணவன் தெரு விளக்கை கல்லால் அடித்து உடைத்து விடுவாராம். வேறு லைட் மாற்றியுள்ளனர். திரும்பவும் உடைத்துவிட்டாராம்.

வேறொரு சம்பவம். ஒரு கிராமத்தில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து கிராமத்தை சுத்தப்படுத்தியுள்ளனர். அப்போது ஊரில் நடுவே இருந்த கட்சிக்கொடி ஊரை அசிங்கப்படுத்துவதாக நினைத்த இளைஞர்கள் அனைத்துக் கட்சிக்கொடியையும் அகற்றியுள்ளனர். அவ்வளவுதான் அடுத்த நாள் போலீஸ் அந்த இளைஞர்களைத் தேடி வந்துவிட்டது. அப்பறம் அறிவொளி இயக்கத்தினர் சென்று அவர்களுக்கு உள் நோக்கமெல்லாம் கிடையாது என்று விளக்கி அவர்களை அழைத்து வந்துள்ளனர்.
இது போலெல்லாம் நிறைய நடக்கும்.

மாதம் ஒருமுறை நடக்கும் கேம்ப்புக்கு என்னுடன் அலமேலு என்ற பெண்ணும் வருவாள். வேலப்பாடிக்கு அருகில்தான் சங்கரன் பாளையம். அங்குள்ள ஒரு தன்னார்வலர்தான் அலமேலு. அந்த ஏரியாவுக்கு என் கணவர்தான் பிபிசி. அவர் சொல்லி அனுப்பியிருந்தார். அவளும் மாதா மாதம் என்னுடன் கேம்ப்புக்கு வருவாள். அது மட்டுமில்லாமல் நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு வந்து விடுவாள். நானும் நேரம் கிடைக்கும்போது அவள் வீட்டிற்குச் செல்வேன். அவர்கள் நிறைய மாடு வைத்து பால் வியாபாரம் செய்பவர்கள்.

கலைச்செல்வியும் மையத்தைப் பார்க்க அடிக்கடி வருவாள். மையம் இல்லாத நேரங்களிலும் வருவாள். அவள் சொன்னது, எவ்வளவு மனக்கஷ்டத்தோட இங்க வந்தாலும் இங்க வந்தவுடனே மனசு ரிலாக்ஸ் ஆகிடுது. மனசு ஒரு மாதிரி ஆனா ஒடனே இங்கதான் வருவேன் என்பாள்.

ஒரு முறை பாண்டிச்சேரியில் இருந்து ஒரு பெண் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தாள். அவளது கணவர் ஒரு எழுத்தாளர். எனது கணவரும் எழுத்தாளர் ஆகையால் அவளது கணவரைத் தெரியும். அதை வைத்து எங்கள் வீட்டில் இரண்டு நாள் தங்கினாள். அவள் கிளம்புவதற்கு முன் அவள் பேசிய விஷயம் என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவர்கள் ஒரு இயக்கம் வைத்திருக்கிறார்களாம். அதன் நோக்கம் என்னன்னா மக்கள் அனைவரும் சமமாக வாழ வேண்டுமாம். அதற்கு மக்கள் செய்ய வேண்டியது என்னன்னா, ஒரு நாலு ஆண்களும், நாலு பெண்களும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ வேண்டும். கல்யாணம் எல்லாம் கிடையாது. பிறக்கும் குழந்தைகள் யார் யாருக்கு பிறக்கிறார்கள் என்று தெரியாததால் நான்கு பேரின் குடும்பமும் ஒன்றாக இருக்கும். சொத்தும் ஒன்றாக இருக்கும். பிள்ளைகளுக்கு சமமாக கிடைக்குமாம்.

எவ்வளவு நல்ல ஸ்கீம். இதைக் கேட்டவுடன் நான் ஆடிப்போய்விட்டேன். அவள் சென்றவுடன் கணவரிடம் கேட்டேன்,
"என்ன இந்தப் பெண் இப்படி சொல்கிறாளே? இது உண்மைதானா? இப்படியெல்லாம் கூட நடக்குமா?"

"ஆமா பாண்டிச்சேரியில சாரு நிவேதிதா குரூப் ஒன்னு இப்படி பேசிக்கிட்டு இருக்காங்க" என்றார்.

"என்ன இப்படிச் சொல்றீங்க இது எப்படி சாத்தியமாகும். எப்படி சரியாகும். சும்மாவே எய்ட்சு கியிட்சுன்னு என்னென்னெவோ வந்துக்கிட்டிருக்கு. இதெல்லாம் என்ன பேச்சு. #$%^&*#$%@!#$%&*......"

"இங்க பாரு யாரோ என்னவோ பேசிக்கிட்டுத் திரியறாங்க. நான் என்னவோ அத ஆதரிக்கிற மாதிரி என்னயப் போட்டு ஏன் திட்டற?"
சரி பாவம் இவரைத் திட்டி என்ன பிரயோஜனம்.

ஆனா அந்த பெண் பேசியதில் இருந்து ஒன்று தெரிந்தது. அந்த குரூப்பில் உள்ளவர்கள் எல்லாம் திருமணமாகி தனித்தனியாகத்தான் இருக்கிறார்கள். ஊருக்கு உபதேசம். யாரோ குட்டிச்சுவராப் போகட்டும்னு எண்ணம் போல.

இரண்டு மூணு நாள் கழித்து கலைச்செல்வி வந்தாள். பாண்டிச்சேரிப் பெண்ணின் பெயரைச் சொல்லி அவள் வந்தாள் வீட்டுக்குள்ளேயே விடாதீங்க என்றாள். நான் கலைச் செல்வியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் முகத்தில் அவ்வளவு கோபம்.
மேலும் சொன்னாள் அவ போற எடத்துல எல்லாம் செருப்படிதான் கெடைக்குது........ என்று பொரிந்து தள்ளினாள்.
பாண்டிச்சேரி பெண் பேசிய விஷயத்தை என்னிடம் கலைச்செல்வி சொல்லவில்லை. அவளால் என்னிடம் அதைச் சொல்லக்கூட வாய் வரவில்லை. மக்களே அந்த பாண்டிச்சேரிப் பெண்ணை விரட்டி விட்டனர்.

(இன்னும் இருக்கு)


அருகிலிருக்கும் பூந்தோட்டத்திற்கு ஒரு விசிட். சூடிதாரில் கலைச்செல்வி.


என் மடியில் இருப்பது உமாவின் அக்கா குழந்தை.
மையம் துவங்கியது

வீடு திரும்பியதும் அடுத்த வாரம் திங்கள் கிழமை அன்று எங்கள் மையம் தொடங்கப்பட்டது. எங்கள் ஏரியா பிபிசி கஸ்தூரி ரங்கன் (பள்ளி ஆசிரியர்), கலைச்செல்விதான் எங்கள் ஏரியா சிபிசி, இளவழகன், படிக்க வந்த பத்துப் பேர். குத்துவிளக்கேற்றி மையத்தை துவக்கி வைத்தனர். ஏற்கெனவே ப்ளாக் போர்ட் சுவரில் மாட்டுவது போன்றது. பலப்பம், சிலேட், அறிவொளி தீபம்-1 புத்தகம், சாக்பீஸ் எல்லாம் இளவழகன் கொடுத்திருந்தார்.

அடுத்து அறிமுகப்படலம். நான் முதலில் என் பெயர் ஜெயந்தி உங்கள் பெயரை ஒவ்வொருவராக சொல்லுங்கள் என்றவுடன் மாணவிகள் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டனர். செல்வி, சுதா, ஜெயா, தேன்மொழி, உமா, ராஜேஜ்வரி, புவனேஷ்வரி, குமுதா, லலிதா, சாந்தி. இதில் சாந்தி மட்டும் திருமணமானவர். மற்றவர்களெல்லாம் 18-22 வயதுள்ள பெண்கள். இதில் செல்வி, சுதா, ஜெயா, லலிதா, உமா இவங்களெல்லாம் அங்குள்ள தோலினால் ஆன ஷு, ஹேண்ட் பேக் போன்ற பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்தனர். ராஜேஜ்வரியும், புவனேஷ்வரியும் வீட்டு வேலை செய்தனர். குமுதா பூக்கட்டிக்கொடுக்கும் வேலை செய்தாள். இதில் பெரும்பாலோர் வீடுகளில் அவங்க அம்மாக்கள் பீடியில் லேபிள் சுற்றும் வேலை செய்தனர்.

என் வீடு இருந்த தெரு, குறுக்குத் தெருக்களில்தான் இவர்கள் அனைவரும் இருந்தனர். எங்க வீடு எப்டின்னா ஒரு கதவுக்குள்ள இரண்டு வீடு. இதுக்கு முன்ன நாங்க இருந்த வீடு ஒரு கதவுக்குள்ள ஐந்து வீடு. பக்கத்தில் கீதா இருந்தாள். என் தோழிதான். ஒரு ரூம் ஒரு சமையலறை மட்டும்தான். கீதா வீடும் அதே போலதான். ரெண்டுமே சின்னச் சின்னது. ரூமுக்குள்ள பத்து பேரு நெருக்கியடித்து உட்கார்ந்திருந்தனர். நல்ல வேளை எங்க வீட்டுல கட்டில், பீரோ எதுவுமில்லை. மூலையில் இரண்டு டிரங்க் பெட்டி, அதன் மேல் இரண்டு தலையணை ஓரமாக ஒரு பாய் அவ்வளவுதான்.

அவ்வளவுதானா? எங்க வீட்டுல இருக்கற புத்தகங்கள நீங்க பாத்திக்கீங்களா? எங்க வீட்டுல புத்தகம் இருக்காது. புத்தகத்துக்குள்ள எங்க வீடு இருக்கும். இந்த வீட்டைப் பொறுத்தவரை யாரோட நல்ல நேரமோ தெரியல ஒரு பரண் ஒன்னு இருந்துச்சு அதுல போயி சேர்ந்திருச்சு. இந்தப் புத்தகக் கதைய நான் தனியா ஒரு பதிவே போடுறேன்.

வகுப்பு தொடங்கி ஒரு இரண்டு மூன்று நாட்கள் கழித்து, எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி இருந்த காயத்திரி என்பவர் என்னிடம் வந்து "எனக்கும் தமிழ் சொல்லித்தருவீங்களா?" என்று கேட்டார்கள். அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

அவங்க கேட்டது எனக்கு கிண்டல்போல தோணுச்சு. ஏன்னா அவங்க டிகிரி முடிச்சவங்க. வேலைக்கு வேற போறாங்க.
"என்ன சொல்றீங்க" என்றேன்.
"நான் பெங்களூருல படிச்சவ. எனக்கு கன்னடம், ஹிந்தி, இங்கிலீஸ் எல்லாம் தெரியும் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. சொல்லிக்குடுப்பீங்களா?" ன்னு கேட்டாங்க.
"வாங்க வாங்க அதுக்குத்தான நான் இருக்கேன்" என்று அழைத்தேன்.
மேலும் ஒரு மூன்று பேரை இளவழகன் கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.
எங்கள் மையத்தில் எப்போதும் 13, 14 பேர் இருந்தார்கள்.

கற்க வந்த அந்தப் பெண்களில் ஒவ்வொருவருக்கும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள். குமுதா, உமா இவர்களின் அப்பாக்கள் குடிகாரர்கள். ராஜேஜ்வரி, புவனேஸ்வரிக்கு அப்பா இல்லை. சுதாவின் தந்தை நோயாளி. ஜெயாவுக்கு அப்பா உடன் இல்லை. அம்மாவும் மனநோயாளி. இவர்களின் சம்பாத்தியம் அவர்களின் வீட்டுக்கு அவசியமான ஒன்று. ஒவ்வொருவரிடமும் ஓராயிரம் கவலைகள்.

சாயங்காலம் ஆறு மணியானால் போதும் பட்டாம்பூச்சிக்கள் போல் சிறகடித்து வந்து விடுவார்கள். எங்கள் வகுப்பு தொடங்கியது முதல் எப்போதும் கலகலப்பாகவே இருக்கும். பாடங்களை ஆர்வமாக கற்றுக்கொண்டார்கள். பாடங்களின் ஊடே பாட்டு, கதை, பொது விஷயங்கள் எல்லாம் இருக்கும். இளவழகன் சொன்னதுபோல் அரைமணி நேரத்தில் எல்லாம் எங்கள் வகுப்பு முடியாது. 6 மணிக்குத் துவங்கினால் 8 மணிக்கு மேல் அந்தப் பிள்ளைகள் போனால் போகிறதென்று கிளம்பிப்போவார்கள்.



படத்தில் வைலட் கலர் சேலைதான் நான். பக்கத்தில் பட்டுச்சேலையில் காயத்திரி. இது காயத்திரி வீடு. அவர்கள் கேமராவில் எடுத்த படம். இதில் ஜெயா, தேன்மொழி, ராஜேஸ்வரி, உமா முதலியோர் உள்ளனர்.

(இன்னும் இருக்கு)
ஏலகிரி மலை

எங்கள் வீடு வேலூரில் வேலப்பாடி என்ற இடத்தில் இருந்தது. பிள்ளைகளை கணவர் வசம் ஒப்படைத்துவிட்டு நான் மட்டுமே கிளம்பிவிட்டேன். வேலூர் பஸ் ஸ்டாண்டில் குறிப்பிட்ட நேரத்தில் சென்று சேர்ந்தேன். அங்கு நின்றிருந்த இளவழகன் அருகிலிருந்த சிலரை அறிமுகப்படுத்தினார். இவங்க உங்க வீட்டுலயிருந்து இன்னும் உள்ளே போனா பூந்தோட்டம்னு ஒரு இடம் வரும் அங்கேயிருக்கிற லேடீஸ் ஹாஸ்டல்ல இருக்காங்க. கவர்ன்மென்ட் இன்ஜினியரிங் காலேஜ்ல படிக்கிறாங்க. இவங்க பேரு ராஜ திலகம், அவங்க பேரு மைத்ரேயி. என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவங்க கூட விஜயன் என்ற அவங்களுடன் படிக்கும் இன்னொருவரும் இருந்தார். இன்னும் சிலர் வந்தவுடன் அங்கிருந்து கிளம்பினோம். அந்த நிமிடத்தில் இருந்து அந்த மூன்று நாட்களும் எனக்கு புதியதான ஒரு உலகம் திறந்து கொண்டநாட்கள்.



ஏலகிரி மலைக்கு எங்களைப்போல் நிறையப்பேர் வந்திருந்தனர். கலைச்செல்வி, மலர், உமா, தேன்மொழி, சிவராமன், பப்லு (சிவ சங்கர்), சீனிவாசன், ஆனந்தன்... இவங்கெல்லாம் ஏபிசி-ங்க.

அது எப்படின்னா அறிவொளி இயக்கத்துக்கு தலைவர் கலெக்டர். அவருக்கு அடுத்து டிபிசி, அவர் ஒருவர்தான். அவருக்கு அடுத்த நிலையில் பிபிசி இவங்க ஆறேழு பேர் இருந்தனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் சிபிசி எனப்படுபவர்கள். இவங்க நிறையப் பேர் இருந்தனர். இவர்களுக்கு அடுத்து அமைப்பாளர் எனப்படும் இளவழகன் போன்றோர். அவர்களுக்கு அடுத்து என்னைப்போன்ற தன்னார்வலர் என்கிற வாலண்டியர்ஸ். இந்த சிபிசிக்கள் எங்களோடு (தன்னார்வலர்கள்) நேரடி தொடர்பில் இருப்பார்கள். சிபிசிக்களை இயக்குவது பிபிசிக்கள். அவர்களுக்கு மேல் உள்ளவர்தான் டிபிசி.

எங்கள் மாவட்டத்துக்கு வந்திருந்த கலெக்டர் அப்போதுதான் டிரெயினிங் முடித்துவிட்டு வந்திருந்த இளைஞர் ராமசுந்தரம். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற துடிப்புள்ளவர். அவரது காதல் மனைவி அர்ச்சனா. இரண்டுபேரும் டிரெயினிங் பீரியடின்போது காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அவரது அழகான மனைவி அர்ச்சனா ஐபிஎஸ் அதிகாரி. அவர் வேறு மாவட்டத்தில் பொறுப்பேற்று பணியாற்றிக்கொண்டிருந்தார்.

டிபிசியாக இருந்தவர் செந்தமிழ்ச் செல்வன். வங்கி மேனேஜராக பணியாற்றிக்கொண்டிருந்தவர். அவருக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அறிவொளி இயக்கப் பணிக்கு அனுப்பியிருந்தது. இவர் அறிவியல் இயக்கம் மூலமாக வந்திருந்தார். அறிவொளி இயக்கத்தை நடத்துவது அறிவியல் இயக்கம்தான். அவர்கள்தான் அந்த புத்தகம் வடிவமைப்பிலிருந்து, படிக்காதவர்களை கணக்கெடுப்பதிலிருந்து, எப்படி மக்களிடம் கொண்டு செல்வது என்பது வரை சிந்தித்து செலாற்றிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் செயல்படும் விதத்தை நேரில் பார்த்திருந்ததால் அவர்கள் செலாற்றிய விதம் எனக்கு பிரமிப்பைக் கொடுத்திருந்தது. எப்படி எல்லாவற்றையும் மிகச் சரியாக யோசனை செய்து செயல்படுத்தியிருக்கிறார்கள். எனக்கு இப்போதும் அந்த பிரமிப்பு உண்டு.

ஒவ்வொன்றையும் யோசித்துப் பார்க்கிறேன். கலைக்குழுக்கள் உருவாக்கியிருந்தார்கள். கலைக்குழுவினருடன் நானும் ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். கலைக்குழுவில் ஆறேழு பேர் இருப்பார்கள். அப்புறம் அந்த ஏரியா சிபிசி, அமைப்பாளர், தன்னார்வலர் எல்லோரும் சேர்ந்து ஒரு பத்துப் பேருக்கு மேல் இருப்பார்கள். முதலில் தவிலை அடித்துக்கொண்டே ஊரைச் சுற்றி வருவார்கள். ஊரே ஒன்றுதிரண்டு பின்னால் வரும். நடுமையமாக ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே நாடகம் போடுவார்கள், பாட்டுப் பாடுவார்கள். படிக்காததுதால என்ன கஷ்டம் வருது அதுனால படிக்கணும்னு வழியுறுத்தும் நாடகங்களும் பாட்டுக்களும் இருக்கும். அது முடிந்தவுடன் அனைவரும் ஒவ்வொரு வீடாக உள்ளே சென்று அந்த மக்களுடன் பேசுவார்கள். அந்த மக்களுக்கு வெளியாட்கள் வந்து அவர்களுடன் இவ்வளவு உரிமையாக பாசமாக பேசுவது புதுமையாக இருக்கும். உடனேயே அவர்கள் நம்மோடு ஒன்றிவிடுவார்கள். அவர்களை படிக்க வைப்பது எளிதாகிவிடுகிறதல்லவா?



அப்பறம் இந்த டிபிசி, பிபிசி, சிபிசி ங்கற வளைபோன்ற அமைப்பு. பிபிசிங்க ஒன்றிரண்டு பேரைத் தவிர அனைவரும் கவர்ன்ெம்ண்ட் வேலை செய்பவர்கள். இவர்களுக்கு கவர்ன்மென்ட் சம்பளத்துடன் லீவு கொடுத்து அனுப்பி இருக்கும். இந்த வேலையால இவங்களுக்கு ப்ரமோஷன் கிடையாது, இன்கிரிமெண்ட்டும் கிடையாது. ஏன்னா அந்த நாட்கள் லீவு நாட்களாக கணக்கு வைக்கப்படுமாம். அடுத்து வர்ற சிபிசிங்கள அவங்க எப்படித் தேர்ந்தெடுத்திருந்தாங்கன்னா அவங்க எல்லோரும் கல்லூரி மூன்றாம் ஆண்டு மாணவர்கள். அவர்களுக்கு போக்குவரத்திற்கு மட்டும் டிஏ போல கொடுத்திருந்தார்கள். எங்களைப்போன்ற தன்னார்வலர்கள் பேரே தன்னார்வலர் தன் ஆர்வத்தினால் வருபவர்கள். அவர்கள் இலவச சேவைதான். ஒன்று இந்த ஸ்கீமிற்கு கொடுக்கும் பணம் மிகவும் குறைந்த அளவானதே. அதை வைத்து சிறப்பாக செய்ய வேண்டும். இரண்டாவது பணத்திற்காக வேலைக்கு வருகிறவர்கள் வேலையை சரியாக செய்ய மாட்டார்கள் அல்லவா? இதில் செயல்பட்டவர்களில் பெரும்பாலானோர் இடதுசாரி தோழர்கள்தான். அவர்களின் இயல்பான சேவை எண்ணம் மீண்டும் ஒருமுறை காணக் கிடைத்தது.

அடுத்து இந்த புத்தகம் வடிவமைப்பு. பள்ளிக்கூடப் புத்தகம் போல அம்மா ஆடு என்று இருக்காது. எடுத்தவுடன் பட்டா படி என்றுதான் ஆரம்பிக்கும். நான் பாடம் சொல்லிக்கொடுத்திருந்ததனால் அது எவ்வளவு எளிமையாக கற்பவருக்கு இருந்தது என்று நேரடியாக பார்த்திருக்கிறேன். அப்போதான் நெனச்சேன் இவங்ககிட்ட பாடப்புத்தங்கள வடிவமைக்க கொடுத்திருந்தா ஒருவேள என்னப்போன்றவங்க நல்லா படிச்சிருப்போமோ?

கிராமங்கள் தோறும் அறிவொளி மையங்களுக்கு தினத்தந்தி பேப்பர் போடச் செய்தார்கள். அதுதான் எளிமையாக செய்தி கொடுக்கும் பத்திரிகை.

கிராமங்கள் தோறும் லைப்ரரி அமைத்தார்கள்.

புதிதாக கற்றவர்களுக்கு படிக்க எளிதாக இருக்க வேண்டும் என்று பெரிய எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை தேர்ந்தெடுத்தனர். அவற்றை கற்போர் படிக்கும் முறையில் சின்னச் சின்ன வாக்கியங்களாக, எளிமையான வாக்கியங்களாக, பாராக்களும் சின்னச்சின்னதாக வடிவமைத்துக்கொண்டிருந்தார்கள் சா.தமிழ்ச்செலவன், கமலாலயன் (கணவர்), முகில் போன்றோர். அவைகள் சிறிய புத்தகங்களாக பெரிய எழுத்துக்களில் படங்களுடன் படிக்க சுவாரசியமாக வந்தது.

எனக்குத் தெரிந்து இவைகள். இன்னும் எனக்குத் தெரியாதவைகள் எவ்வளவோ.

சரி எங்க விட்டேன். ஏலகிரிமலையா? மூணு நாளும் எங்களுக்கு டிரெயினிங் கொடுத்தாங்க. எப்படி பாடம் நடத்த வேண்டும், அது கூடவே பொது அறிவு விஷயங்கள் பேசணும், தகவல்கள் சொல்லணும் எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க. நிறைய பாட்டு சொல்லிக்கொடுத்தாங்க. இந்த எஸ்.ஜே.சூர்யா படத்துல ஒரு பாட்டு வருமே "ஆசப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்க முடியுமா?" இந்த பாட்டு படத்துக்கு எப்படி போச்சுன்னு தெரியல. "காலம் மாறும் மாறுமுன்னா மாறுமா ஒரு கையெழுத்து போடத்தெரியல, கவல தீரும் தீரும்னா தீருமா ஒரு கடுதாசி படிக்க முடியல..." அப்புறம் ஒரு பாட்டு நடுவுலதான் ஞாபகம் இருக்கு அப்போதெல்லாம் இளம் வயது திருமணங்கள் கிராமங்களில் நிறைய நடக்கும். அதைப்பற்றி "........உடம்பு வளரும் முன்னால அவ பிள்ள பெறுவதும்..."ன்னு வரும்.

அப்பறம் எல்லாரும் வட்டமாக அமர்ந்துகொண்டு ஒருவர் பக்கத்தில் இருப்பவர் காதில் ஒன்று சொல்ல அவர் அடுத்தவரிடம் சொல்ல இப்படியே கடைசியாக விஷயத்தைச் சொன்னவரிடம் அவர் சொன்னதற்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத வாக்கியம் வரும். அப்பறம் வந்து ஒருவர் ஒரு கதையை ஆரம்பிப்பார் அடுத்தவர் அதைத் தொடர வேண்டும். இது ரெண்டு வெளையாட்டுமே விளையாடுறப்ப ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருக்கும். இதுபோல விளையாட்டுக்கள் சிலவும் சொல்லிக்கொடுத்தார்கள்.

எங்களுக்கு டிரெயினர்களாக வந்தவர்கள் ராமானுஜம் (சென்னை மேக்ஸ் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் சயின்டிஸ்ட்), ஜே.கிருஷ்ணமூர்த்தி, முகில் பரமானந்தம் (பிஎச்இஎல்-லில் ஆபீசர், ராணிப்பேட்டையில் பிபிசியாகவும் இருந்தார், எழுத்தாளரும் கூட) சுதா சுந்தரராமன் (அஇஜமாச), நிலவு குப்புசாமி (எழுத்தாளர்), த.வி.வெங்கடேஸ்வரன் (இவர் இப்போது டில்லியில் கவர்ன்மென்ட் சயின்ஸ் சென்டர்ல பணியாற்றுகிறார்.)

இந்த சிபிசி டீம் வந்து காலேஜ் படிக்கிற பசங்கன்னு சொன்னேன்னில்லையா? அந்த டீம் எப்படி இருக்கும்னு நான் சொல்லவே தேவையில்லை. சரி ஜாலியான டீம். அதுலயும் இந்த கலைச்செல்வி இருக்குதே வாய் மூடவே மூடாது. சரியான அரட்டை. நான் கொஞ்சம் அமைதியான சுபாவம்னால இந்த மாதிரி பேசறவங்கள பாத்துக்கிட்டே இருப்பேன். எப்படித்தான் பேசுறாங்களோ?

மூணு நாளும் போனதே தெரியல. அந்த மலைப் பிரதேசத்தின் பசுமையும், அந்த கேம்ப்பு கொடுத்த உற்சாகமும், அங்க கத்துக்கிட்ட விஷயங்களும் என்னை புது மனுசியாக்கியது.

(இன்னும் இருக்கு)

"அம்மா உன்னய யாரோ கூப்புறாங்க" மகள் வந்து சொன்னதும் வெளியே சென்று பார்த்தேன். அங்கே ஒருவர் நின்றிருந்தார். சிவந்த நிறம். சுருள் முடி. சற்று குள்ளமான உருவம்.

"என்னங்க"
"என் பெயர் இளவழகன். நான் கவர்ன்மெண்ட் அச்சகத்துல வேல பார்க்கறேன். உங்ககூட கொஞ்சம் பேசனும்" என்றார்
"என்ன விஷயம் சொல்லுங்க" என்றேன்
"அரசாங்கத்துல அறிவொளி இயக்கம்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்காங்க. உங்களால ஒரு பத்து பேருக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க முடியுமா?"
அவர் கேட்டதும் எனக்கு எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியல.

எனக்கு அறிவொளி இயக்கம் பற்றி முன்பே தெரியும். கணவர் அறிவொளி இயக்க வேலைன்னு சொல்லிக்கிட்டு ஒரு மூன்று மாதங்கள் கழித்து அப்போதுதான் வீட்டிற்கே வந்திருந்தார். அவர் மூலமாக அறிவொளி இயக்கம் பற்றி கொஞ்சம் தெரியும். கடைசி இரண்டு மாதம் உள்ளூரிலேயே கேம்ப் மேனேஜராக இருந்தார். கேம்ப்பில் கலைக்குழுவினர், ஏபிசி, பிபிசி, ஒருங்கிணைப்பாளர் என்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தனிதனித்தனியாக பயிற்சி வகுப்புகள் நடக்கும். உள்ளூரிலேயே இருந்தாலும் வீட்டிற்கு வரமுடியாது.


இளவழகன் கேட்டவுடன் எனக்கு என்ன பதில் சொல்லறதுன்னே தெரியல. ஏன்னா ஸ்கூலுக்குப் போயி பாதியிலேயே படிப்ப விட்டவுங்க, ஸ்கூல் பக்கமே போகாதவங்க இவங்களுக்காக எழுதப்படிக்க சொல்லிக்கொடுக்கற ஒரு இயக்கம்னு தெரியும். ஆனா நம்ம பொது புத்தியில எப்பவுமே ஒன்னு இருக்கும். யாரோ யாருக்காகவோ என்னவோ செய்யப்போறாங்கன்னு இருக்கும். நாமலும் செய்யலாம்னு நமக்குத் தோணாது. நீங்க சொல்லிக்கொடுக்கறீங்களான்னு கேட்டவுடன் ஆஹா நம்மளும் செய்யலாமான்ற நெனப்பே வரும்.

அதுவுமில்லாம எனக்கு வந்து எப்பவுமே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். நான் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறேன். அதுவும் சுமாராக அல்லது அதற்கும் கீழேயான படிப்பு. அதுனால நான் எல்லாரையும் விட மட்டம்ன்னு ஒரு தாழ்வு மனப்பான்மை என் மனசுல எப்பவுமே இருக்கும்.

"நான் பத்தாங்கிளாஸ் வரைக்கும்தான் படிச்சிருக்கேன்" என்றேன்.
"உங்களுக்கு தமிழ் எழுத படிக்க தெரியுமில்ல" என்றார்
"ம் அது மட்டும்தான் தெரியும்" என்றேன்.
"அதுபோதும்" என்றார்
"எப்டி சொல்லித்தர்றதுன்னு தெரியாதே?"
"அதுக்கு பயிற்சி வகுப்பு நடக்கும் அங்க சொல்லிக்குடுப்பாங்க"
"சரி படிக்காதவங்க யாருன்னு எனக்குத் தெரியாதே" என்றேன்
"அதப்பத்தியெல்லாம் நீங்க கவலைப்படவே வேண்டாம் நான் அவங்கள உங்க வீட்டுக்கே வரவச்சிர்றேன். ஒரு நாளைக்கு ஒரு அரை மணி நேரம்னு நேரம் ஒதுக்குனா போதும். ஆறு மாசம் பாடம் சொல்லிக்கொடுத்தாப் போதும். ரெண்டு நாள் கழிச்சு வர்றேன் யோசிச்சு முடிவ சொல்லுங்க" என்று சொல்லிக்கொண்டே சென்றுவிட்டார்.

அறிவொளி இயக்கம் வகுப்பு எடுக்கட்டுமா என்று கணவரிடம் கேட்டேன்.
உனக்கு விருப்பமிருந்தா தாராளமா எடுக்கலாம் என்றார்.

இரண்டு நாள் கழித்து வந்தவரிடம் சம்மதத்தைத் தெரிவித்தேன். அடுத்தவாரம் உங்களுக்கு ஏலகிரி மலையில மூன்று நாட்கள் பயிற்சி வகுப்பு இருக்கு தயாராகிகங்க என்றார்.
(இன்னும் இருக்கு)
மகளிர் தினத்திற்காக...

அவள் என் பக்கத்து பெட்டில் படுத்திருந்தாள். முதலில் கவனிக்கத் தோன்றவில்லை. ஏன்னா அந்த ஹால்ல என்னப்போலவே நிறையப்பேர் கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டு படுத்திருந்தாங்க. முதல் நாள் எல்லோரும் ஒருவித மயக்கத்திலேயே இருந்தோம். ஆப்பரேசனுக்கு கொடுத்த மாத்திரை எபக்ட். அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும்போதே வலி மாத்திரைகளின் எபக்ட் தீர்ந்துபோயிருக்க வலியின் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எங்கம்மா ஓடிப்போய் நர்சுகிட்ட வலி மாத்திரை கொடுக்கச்சொல்லி கேட்டுவிட்டு வந்தார்கள். முதல்ல எந்திரிச்சு பாத்ரூம் போயிட்டு, பல் தேய்ச்சிட்டு டிபன் சாப்பிடச்சொல்லுங்க மாத்திரை எடுத்துட்டு வர்றேன்னு அவங்க கறாரா சொல்லிட்டாங்க.

கட்டில்ல இருந்து இறங்குவது பெரிய பிரம்ம பிரயத்தனமா இருந்துச்சு. கால கீழேயே ஊன்ற முடியவில்லை. அம்மா மெல்ல கைத்தாங்கலாக இறக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சி எல்லோரையும் மிரட்டிவிட்டது. இந்த சின்னப்பொண்ணு கட்டிலில் இருந்து ஜங்கென்று குதித்து, துள்ளலோடு நடந்து சென்றாள். எங்கம்மா அலறிவிட்டார்கள், 'அய்யய்யோ தையல் போட்டிருக்கே?' அவள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவள்பாட்டுக்கு சென்று பாத்ரூம் போய்விட்டு திரும்பிவந்து ஒன்றுமே நடக்காததுபோல் படுத்துக்கொண்டால். அந்த ஹாலே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து பிறகு அசைந்தது.

பிறகுதான் அவளை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். அவள் அருகில் யாருமே இல்லை. மருந்து வைக்கும் ரேக்கில் பிரட் பாக்கெட் இருந்தது. அதை எடுத்து தின்றுகொண்டால். நர்சு மாத்திரை கொடுத்ததை வாங்கி தின்றுவிட்டு படுத்துக்கொண்டால். எங்கம்மா போய் அவளிடம் பேசினார்கள். 'ஏம்மா நீ எந்த ஊரு' அவளுக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. 'உனக்கு கல்யாணம் ஆகிருச்சா' ஒரு முறை 'ஆமாம்' என்றால் ஒரு முறை 'இல்லை' என்றாள். 'வேலை பாக்குறியா' 'ஆடு மேய்க்கிறேன்' என்றாள். 'அம்மா அப்பா இருக்காங்களா' என்ற கேள்விக்கு அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவள் பேச்சு நார்மலாக இல்லை. பிறவிலேயே மனவளர்ச்சி இல்லையா அல்லது சமீபத்தில் இப்படி ஆச்சா என்னவென்று தெரியவில்லை. மதியமும் இரவும் எனக்கு கொண்டு வரும் உணவிலிருந்து அவளுக்கும் அம்மா உணவு கொடுத்தார்கள்.

நர்சிடம் விசாரித்தபோது, பக்கத்தில் மலைகிராமத்தைச் சேர்ந்தவள் என்றும், அங்க காட்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பாளாம். அப்போது ஒரு கயவனா அல்லது சில கயவர்களா என்று தெரியவில்லை கர்ப்பமாக்கிவிட்டார்களாம். இப்போது கர்ப்பத்தை கலைத்துவிட்டு கருத்தடை ஆப்பரேசன் செய்துவிட்டார்களாம். அதுக்குக் கூட அவளை அழைத்து வந்தவர்கள் கிராம சுகாதார நிலையங்களில் இருக்கும் பணியாளர்கள்தான். நாங்கள் இருந்தது வேலூர் (காட்பாடி).

இவளை அப்படியே விட்டிருந்தாள் என்னவாகியிருக்கும். காட்டில் எங்காவது சுற்றியலையும்போது பிரசவவலி வந்திருந்தால், அல்லது வலி வந்தவுடன் மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாலும் பிறக்கும் அந்தக் குழந்தையின் நிலைமை என்ன? இப்படி உள்ளவர்களை குழந்தைகளுக்கு ஒப்பானவர்கள். இவர்களை இப்படி செய்ய அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது. அவளுக்கு அம்மா அப்பா இருப்பாங்களா? வீடு இருக்குமா?

அவளுக்கு கர்ப்பம் ஆக்கப்பட்டதும் தெரிந்திருக்காது, கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டது தெரிந்திருக்காது. அவள் அனுமதி இல்லாமலேயே அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள். எனக்கு அன்று இரவு தூக்கம் வர நெடுநேரம் ஆகியது.

அடுத்தநாள் காலையில் எல்லோரையும் அனுப்பிவிட்டார்கள். ஒன்பதாம் நாள் வந்து தையல் பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். சின்னப்பொண்ணுவை அதே பணியாளர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். சின்னப்பொண்ணு செல்வதைப்பார்த்துக்கொண்டிருந்த என் கண்களை கண்ணீர் நிறைத்தது.
எங்கள் ஊர் திருவிழா
1/09/2010 | Author: ஜெயந்தி
திண்டுக்கல்லில் மாசி மாதம் மாரியம்மன் திருவிழா வரும். அந்த ஊரின் பெரிய திருவிழா. திருவிழா சாட்டிவிட்டார்கள் என்றால் ஊரே மகிழ்ச்சியாகிவிடும். பூச்சொறிதலுடன் திருவிழா தொடங்கும். பூச்சொறிதல் என்றால் பூக்களாலேயே அலங்கரிக்கப்பட்ட தேர் வரும். அன்று பல வண்ண பூக்கள் உதறியாக கவர்களில் அடைக்கப்பட்டு விற்கும். மக்கள் ஒவ்வொருவரும் அதை வாங்கி தேரின் பின்னால் வரும் லாரியில் போடுவார்கள். அன்று மாலை கோவிலுக்குச் சென்றால் மூலஷ்தானத்தில் அம்மன் சிலையின் கழுத்து பாகம் வரை பூ கொட்டப்பட்டிருக்கும். கோவிலுக்குச் செல்வோர் அனைவருக்கும் பூ கொடுப்பார்கள்.




கோவிலின் முன்னால் பெரிய மைதானம் இருக்கும். திருவிழா காலங்களில் அந்த மைதானத்தில் மனித தலைகாளாகவே இருக்கும். கோவிலைச் சுற்றி வளையல், பாசிமணி கடைகள், பொம்மைக்கடைகள் என்று ஏகப்பட்ட கடைகள் போடப்பட்டிருக்கும். ஜெயின்ட் வீல் போன்ற ராட்டினங்களும் இருக்கும்.

திருவிழாவிற்கு தினமும் ஒரு கலை நிகழ்ச்சி இருக்கும். எல்.ஆர்.ஈஸ்வரி பாட்டுக் கச்சேரி அவசியம் இருக்கும். எம்.எஸ்.விஸ்வநாதன் கச்சேரியும் சில சமயம் இருக்கும். எல்.ஆர் ஈஸ்வரி தனியாக நடத்தும் கச்சேரிகளில் ஆடிக்கொண்டே பாடுவார். எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் பாடும்போது அமைதியாக பாடுவார். மனோரமா, அவரது மகன் பூபதி கூட ஒருமுறை நிகழ்ச்சி வழங்கினார்கள்.
தேர் அலங்காரம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் மண்டகப்படி நடக்கும். கடைசி நாளுக்கு முந்தைய நாள் அங்குவிலாஸ் மண்டகப்படி நடக்கும். அன்று தேர் அலங்காரம் மிகவும் பிரமாதமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் வித்தியாசமாக இருக்கும். அதைப்பார்க்க சுற்றி உள்ள கிராமங்களில் இருந்தெல்லாம் சாப்பாடு கட்டிக்கொண்டு, வண்டி கட்டிக்கொண்டு வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள். அன்று இரவெல்லாம் மக்கள் தேர் எந்தத் தெருவில் வருகிறது என்று விசாரிப்பதும் அந்த தெருவை நோக்கிச் செல்வதும் நடக்கும்.

ஒவ்வொரு வீட்டிலும் அவசியம் சாட்டு மாவிளக்கு போட வேண்டும். அந்த மாவிளக்கை தேங்காயுடன் சாப்பிட தனி ருசியாக இருக்கும். திருவிழாவில் மணி, வளையல் எல்லாம் எங்களுக்கு வாங்கித் தரப்படும். எங்கள் வீடும் எங்கள் பின்புறம் உள்ள குடும்பமும் சேர்ந்துதான் திருவிழாவிற்குச் செல்வோம். அந்த வீட்டில் உள்ள லட்சுமி என் தோழி. அவளுக்கு அந்த ஜெயின்ட் வீலில் சுற்றுவதென்றால் மிகவும் பிடிக்கும். எனக்கோ அதைப்பார்த்தாலே தலைசுற்றும். லட்சுமியின் அம்மா, அப்பா பக்கத்தில் உள்ள கிராமத்தில் விவசாயம் பார்த்துக்கொண்டு அங்கேயே இருந்தார்கள். அதனால் லட்சுமி திணடுக்கல்லில் அண்ணன் வீட்டில் இருந்து படித்து வந்தாள். திருவிழாவிற்குச் சென்றால் அவசியம் ஜெயின்ட் வீலில் லட்சுமிக்கு ஏற வேண்டும். என்னிடம் மெல்ல ஆரம்பிப்பால், "ஜெயந்தி ஜெயின்ட் வீலில் சுற்றலாம்."

நான்: "அய்யய்யோ. நான் வர மாட்டேன்பா. எனக்கு பயம்."
லட்சுமி: "நான் உன்னய கெட்டியா புடிச்சுக்கறேன். நீ என் மடியில படுத்துக்கோ"
நான்: "நான் வரல"
லட்சுமி: "ப்ளீஸ்ப்பா, நீ வந்தாத்தான் என் அண்ணி என்னைய அனுப்புவாங்க. வாப்பா"

அதுக்கப்புறம் மறுக்க முடியாது. சுற்றிவிட்டு கீழே இறங்கியவுடன்

நான்: "இங்க பாரு என் கைய நடுங்குது. நெஞ்சு பாரு எப்புடி அடிக்குதுன்னு. அடுத்த வருஷம் நான் வர மாட்டேன். என்னைய கூப்புடாத"
லட்சுமி: "சரி!"
ஒவ்வொரு வருடம் திருவிழாவிலுல் இதே டயலாக் பேசப்படும்.
முதல் குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும்போது இரண்டாவது குழந்தை பிறக்கும். சின்னக்குழந்தை என்பதால் அம்மாவின் கவனிப்பு குழந்தைக்கு 24 மணி நேரமும் இருக்கும். அப்பா வீட்டிற்குள் நுழையும்போதே சின்னக்குழந்தையைப் பற்றி விசாரித்தபடியே வருவார். உறவினர்கள் நண்பர்கள் எல்லோரும் புதிதாக பிறந்துள்ள குழந்தையை பார்த்து கொஞ்சிவிட்டுச் செல்வார்கள். பெரிய குழந்தை இதையெல்லாம் பார்த்துக்கொண்டு ஒரு ஓரமாக நின்றுகொண்டிருக்கும்.

நமக்கு அது பெரிய குழந்தை. அதற்கு அவ்வளவு கவனிப்புத் தேவையில்லை. சின்னக்குழந்தைக்குத்தானே கவனிப்பு அவசியம். உண்மைதான்.
மூன்று நான்கு வருடமாக பெரிய குழந்தைதான் நமது முழு போகஸ் ஆக இருந்திருக்கும். அப்பா அந்தக்குழந்தையைத்தான் அழைத்துக்கொண்டே உள்ளே நுழைவார். அம்மா எப்போதும் அந்தக் குழந்தையைத்தான் கவனித்துக்கொண்டிருப்பார்கள். கொஞ்சிக்கொண்டிருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இன்னொரு குழந்தை உள்ளே நுழைந்து அத்தனையையும் தட்டிப்பறித்துகொள்வதை அந்த பெரிய குழந்தையின் இடத்திலிருந்து யாராவது பார்த்திருக்கிறோமா?

அலுவலகத்தில் நமக்கு 6 மாதம் பின்னால் வந்த ஒருவருக்கு பிரமோஷன் தந்தால் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமா? நாம் பெரியவர்கள். நம்மாலேயே தாங்க முடியவில்லை என்றால் குழந்தைக்கு எப்படி இருக்கும். சிறு வயதில் உண்டாகும் இந்த ஏக்கம் எப்போதுமே தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். பெரிய குழந்தை 6ம் வகுப்பு படிக்கும்போது சின்னக்குழந்தை 3ம் வகுப்பு படிக்கும். அப்போதும் அதுதான் சின்னக்குழந்தை.

இரண்டு பேருக்கும் ஒரு பொருளை வாங்கிக்கொடுக்கும்போது விலையிலோ தரத்திலோ சின்ன வித்தியாசம்தான் இருக்கும். நாம் வேண்டுமென்றே செய்திருக்க மாட்டோம். எதேச்சையாகத்தான் நடந்திருக்கும். பெரிய குழந்தையின் மனதில் நாம் இரண்டாம்பட்சம் என்ற உணர்வு வரும். இரண்டு பேருக்குள்ளும் பாசம் எல்லாம் இருக்கும். ஆனால் இந்த உணர்வை மட்டும் நம்மால் கடைசி வரை மாற்ற முடியாது.

எனவே பெற்றோர்களே! கொஞ்சம் கவனமாக இருந்து பிஞ்சு மனங்களை பூ வாக்குவோம்!
இந்தப் படத்தைப் (பாகம் 1) பார்க்கும்போது, அந்தப் பையனுக்கு பள்ளியின் மீதும் படிப்பின் மீதும் இருக்கும் வெறுப்பு, அதனால் அவனுக்கு ஏற்படும் உணர்வுகள் போலவே எனக்கும் பள்ளிக்கூட நாட்களில் இருக்கும் என்று என் மகனிடம் கூறினேன். உடனே அவன் சொன்னான் இந்தப் படத்தைப் பார்த்த 90 சதவீதம் பேருக்கு இந்த உணர்வுதான் ஏற்பட்டதாம் என்றான்.

எனக்கு என் பள்ளி நாட்கள் நினைவில் வந்தன. திண்டுக்கல் பக்கத்தில் 5ம் வகுப்பு வரை உள்ள சிறு கிராமம். அங்குதான் 5ம் வகுப்பு வரை படித்தேன். 6ம் வகுப்பிற்கு திண்டுக்கலில் கான்வென்ட் என்று அழைக்கப்படும் (செயின்ட் ஜோசப்ஸ் ஹையர் செகண்ட்ரி ஸ்கூல்) கிறிஸ்துவ பள்ளிக்கூடம். பெரிய பள்ளிக்கூடம். காதல் படத்தில் சந்தியா படிக்கும் பள்ளிதான்.

5ம் வகுப்பு வரை ஆங்கிலத்தில் பிக் ஏபிசிடி மட்டுமே தெரியும். ஸ்மால் ஏபிசிடி என்றால் என்னவென்றே தெரியாது. 6ம் வகுப்பில் 80-90 பக்கமுள்ள ஆங்கிலப் புத்தகம். ஒரு 10 பாடங்களாவது இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு வாரம் தாமதமாக பள்ளியில் சேர்க்கப்பட்டேன். இந்த ஒரு வாரத்தில் அந்த ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பாடம் நடத்திவிட்டார்கள் போல் இருக்கிறது. நான் போன அன்று டிக்டேஷன். எல்லோரும் டீச்சர் வார்த்தைகளைச் சொல்லச் சொல்ல புத்தகத்தைப் பார்க்காமல் எழுத வேண்டும். என் நிலையை யோசித்துப் பாருங்கள். எனக்கு வலது பக்கத்தில் இருந்த பெண் எனது இடதுபுறமுள்ள பெண்ணை பார்த்து எழுதிக்கொண்டிருந்தார். என்னையும் அவ்வாறே எழுதச் சொல்லி சாடை காட்டினார். நான் எனது இடதுபுறமுள்ள பெண் எழுதுவதை பார்த்தேன். ஸ்மால் லெட்டர்சில் வேகவேகமாக எழுதிக்கொண்டிருந்தாள். என்னால் அதைப் பார்த்தே எழுத முடியவில்லை. புரியவேயில்லை. எனக்குத்தான் ஸ்மால் ஏபிசிடியே தெரியாதே.

நல்ல வேளை மற்ற பாடங்கள் எல்லாம் தமிழிலேயே இருந்தன. அதுவும் கஷ்டம்தான். ஆனால் எழுத்துக்கூட்டி படிக்கவாவது முடியுதே. நான் படித்த பத்தாம் வகுப்பு வரையில் ஒருமுறைகூட ஆங்கிலத்தில் பாஸ் ஆனதே கிடையாது. மற்ற பாடங்களிலும் ஒன்று அல்லது இரண்டில் பெயில் ஆகி விடுவேன். தமிழிலும், கணக்கிலும் மட்டும் எப்போதும் பாஸ் பண்ணிவிடுவேன்.

இந்த லட்சணத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு வந்தது. அந்த வருடம்தான் 11ம் வகுப்பை எடுத்துவிட்டு +2 கொண்டுவந்தார்கள். நாங்களும், 11ம் வகுப்பு பசங்களும் ஒன்றாக பொதுத்தேர்வு எழுதினோம். என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எழுதினேன்.

ரிசல்ட் வந்துவிட்டது என்று காலையிலேயே ஊரே அல்லோல கல்லோலப்பட்டது. எங்கள் வீட்டிலும் மாமா பேப்ரில் என் நம்பரை தேடிக்கொண்டிருந்தார். அது எங்கே இருக்கப்போகிறது என்று நானும் பக்கத்திலேயே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஆச்சரியம் என் நம்பர் வந்திருந்தது.

மாமாவிற்கும் அதே ஆச்சரியம்தான். அந்த வருடம் புதிதாக 10ம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு வைத்ததால் 30 சதவீதம் பேர்கூட பாசாகவில்லை என்றதால் பார்டரில் இருந்த கொஞ்சம் பேருக்கு மார்க் போடப்பட்டு பாசாக்கப்பட்டதாக பேப்பரில் செய்தி வந்திருந்தது. உடனே மாமா சொல்லிவிட்டார் நீ எப்படி பாசானேன்னு இப்போ தெரியுது.

டைரக்டர்கள் மட்டும்தான் 80களுக்கு போக வேண்டுமா? நாங்களும் போவோம்ல.

10ம் வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு (சத்தியமா பாசுங்க) வீட்டில் இருந்த காலம். அப்போது ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். திண்டுக்கல்லில் நாங்கள் இருந்தது இபி காலனியில். இபி காலனி கட்டும்போதுதான் பக்கத்தில் மெயின்ரோடை ஒட்டி கணேஷ் தியேட்டரை கடடினார்கள். வீட்டிலிருந்து ஐந்து நிமிடத்தில் தியேட்டருக்கு சென்றுவிடலாம். காலனியின் பின் பக்கம் என்விஜிபி தியேட்டர். பத்து நிமிடத்தில் சென்றுவிடலாம். இரண்டு தியேட்டர்களுக்கும் நடுவில் போல் (சிறிது தூரம் நடக்க வேண்டும்) ஃ மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம், சோலைஹால் தியேட்டர் இருக்கும். அதற்கு கால்மணி நேரத்தில் போய் விடலாம். சென்ரல் தியேட்டர் ஊரின் நடுவில் இருக்கும். இருபது நிமிடத்தில் சென்றுவிடலாம். சக்தி தியேட்டர் ஊரின் கோடியில் இருக்கும். அதற்கு போவதுதான் சற்று சிரமம். அதனால் இந்த நான்கு தியேட்டர்தான் எங்கள் டார்கெட்.




எல்லாத் தியேட்டரிலும் பெஞ்ச் டிக்கெட் ஐம்பது காசுதான். அதற்கு பின்னால் அதே பெஞ்சில் பின்னால் சாய்மானம் இருக்கும். அதற்கு எழுபத்தைந்து பைசா என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னால் பாலகனி. என்விஜிபியில் மட்டும் பால்கனி டிக்கெட் கொஞ்சம் அதிகம். கணேஷ் தியேட்டர் புது தியேட்டர் என்பதால் எடுத்துவுடனேயே முன்னால் உள்ள டிக்கெட்டே ஒன்னேகால் ரூபாய். புது தியேட்டர் என்பதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

நான் எங்க பாட்டியோடுதான் சினிமாவிற்கு போவேன். ஏன்னா என்னைவிட அதிகம் படம் பார்ப்பது எங்க பாட்டிதான். வயது 85 சக்தி தியேட்டருக்குக்கூட தனியாக நடந்தே போய் படம் பார்த்துவிட்டு வரும். (கரிசல் காட்டில் பாடுபட்டு, கம்மஞ்சோறும், கேழ்வரகு கூழும் குடித்த உடம்பு). எங்கள் கூட அவ்வப்போது என் அக்காவும் சேர்ந்துகொள்வார்கள்.

நான் மாமா வீட்டில்தான் வளர்ந்தேன். மாமாவின் பர்மிஷன் கிடைத்தால்தான் சினிமாவிற்கு போக முடியும். 'ஏ' சர்ட்டிபிகேட் இல்லாத படமா, ஆபாச காட்சிகள் இல்லாத படமா என்று ஆலோசித்துவிட்டுத்தான் மாமா பர்மிஷன் கொடுப்பார். சினிமாவிற்கு போகிற நாள் என்றால் காலையிலேயே மனது சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்துவிடும். வீட்டில் என்ன வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்வேன். மதியம் சாப்பாடு முடிந்தவுடன் கிளம்பிவிடுவோம். இப்போது உச்சகட்ட சந்தோஷத்தில் மனது திளைத்திருக்கும். ஓட்டமும் நடையுமாக தியேட்டருக்கு போவோம். பெஞ்ச் டிக்கெட்டிற்கு பெரிய கியூ நிற்கும், அதனால்தான் வேகவேகமாக செல்வோம். அப்போதெல்லாம் எப்போதுமே கூட்டம் இருக்கும். கூட்டத்தின் அளவு வேண்டுமானால் வித்தியாசப்படும். தியேட்டர் காலியாக இருந்து நான் பார்த்ததில்லை.




எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு சவ்ராஷ்ரா குடும்பம் இருந்தது. அவர்களை பட்டுநூல்காரர்கள் என்று மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் அழைப்பார்கள். அவர்கள் நெசவுத் தொழில் செய்பவர்கள், அதனால் இந்தப்பெயர். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் நல்ல வசதியானவர்கள். அவர்கள் வீட்டில் ஒரு பாட்டி உண்டு. அந்தப் பாட்டிக்கு எம்ஜியார் படம் என்றால் உயிர். எந்தத் தியேட்டரிலாவது எம்ஜியார் படம் போட்டால் என்னை துணைக்கு அழைப்பார்கள். (அதிர்ஷ்ட்டம் எப்படி அடிக்கிறது பாருங்கள்). அவர்களுடன் செல்வதென்றால் வீட்டில் பர்மிஷன் கேட்கத் தேவையில்லை. தகவல் சொன்னாலே போதும். அந்தப் பாட்டிக்கு பிரஷர், ஷூகர் போன்றவை உண்டு. அதனால் ரிக்ஷாவில் செல்வோம். அப்போதெல்லாம் ரிகஷாவும், குதிரை வண்டியும்தான் போக்குவரத்திற்கு. நிறைய பேர் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்வார்கள். தியேட்டரில் அந்தப்பாட்டி பால்கனி டிக்கெட் எடுப்பார்கள். ஆனால் நாங்கள் உட்காருவது என்னவோ முன்னால் உள்ள பெஞ்ச் டிக்கெட்டில். பாட்டிக்கு கண்ணு அவுட்.


ஒருமுறை பேப்பரில் அந்த ஆண்டு எத்தனை படங்கள் வெளியாகியுள்ளன என்று படத்தின் பெயரோடு வெளியிட்டிருந்தார்கள். எங்கள் மாமா என்னை அழைத்து அதில் நான் பார்த்த படங்களை என்னிடம் கேட்டு டிக் பண்ணிக்கொண்டே வந்தார். மொத்தம் நூற்றிப்பத்து படம் என்று நினைக்கிறேன். அதில் நான் பார்தது எழுபது படங்கள். (இதில் இந்த எம்ஜியார் படங்கள் கணக்கு கிடையாது). என் மாமாவின் அடுத்த கேள்வி இந்த படங்களில் உனக்கு பிடிக்காத ஒரு படத்தின் பெயரைச்சொல். ஒன்றுமேயில்லை.




இப்போதெல்லாம் டீவியிலேயே பாதி சீன்கள் போட்டுவிடுகிறார்கள். அப்புறம் பைரேட் சிடி வேறு வந்து விடுகிறது. பாட்டு எல்லாம் முதலிலேயே போட்டு விடுகிறார்கள். அதுனால படம் பார்க்கப் போகும் முன்னாலேயே அந்தப் படத்தைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துவிடும். படம் பார்ப்பதற்கு அப்போது இருந்த சந்தோஷம் இந்தத் தலைமுறையினரிடம் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. அந்த சந்தோஷம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இது போன வாரம் நடந்தது.
நானும், வீட்டில் வேலை செய்யும் லட்சுமி அம்மாவும் அமர்ந்து டீவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தோம்.
"...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலித் மக்களுடன் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட்டது..."

லட்சுமி அம்மா என்னிடம் கேட்டார், "தலித்னா காலனிக்காரங்கதான."
"ஆமா" என்றேன்.
"காலனிக்காரங்கல்லா கோயிலுக்குள்ள போகக் கூடாது. இப்பெல்லா ரீஜன்டா (டீசன்ட்) டிரெஸ் பண்ணிக்கிட்டு கோயிலுக்குள்ள போறாங்க. அந்த பாவத்த அவங்கதான் அனுபவிப்பாங்க."
"ஏம்மா அவங்களும் மனுசங்கதான"
"அவங்கள கீழ்சாதின்னு கடவுளே பிரிச்சி வச்சுருக்கான்."
"கடவுள் பிரிக்கல, மனுசங்கதான் அவங்க வசதிக்காக பிரிச்சி வச்சிருக்காங்க. மேல் ஜாதிக்காரங்க அவங்களுக்கு வேலை செய்ய ஆள் வேணும்ங்கிறதுக்காக அப்புடி பிரிச்சி வச்சிருக்காங்க."

"அவங்க இப்ப ரீஜன்டாயிட்டாங்க, அந்தப்பசங்க என்னா பேச்சு பேசுறாங்க தெரியுமா?"
"கொஞ்சம் பேருதான் முன்னேறியிருக்காங்க. இன்னும் நிறையபேர் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்காங்க, எல்லா சாதிக்காரங்களும் பத்து மாசந்தான?"  என்றேன்.
அந்தம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது, கோபம்னுகூட சொல்ல முடியாது. ஆவேசம்னுதான் சொல்லனும்.
"போன வாரம் நான் அந்த பெரிய வீட்டுல வேல செய்யிறப்ப ஒரு தொழுநோய் வந்த பிச்சைக்காரன் கூப்டான். நான் வீடு பெருக்கிக்கிட்டே வெளிய வந்து அவங்கிட்ட சொன்னே -'வீட்டுல யாரும் இல்லப்பா'
'ஏன் நீ எங்கருந்து வர்ற?'
'செருப்பாலடிப்பேன். நான் வீட்டு வேல செய்யிறவ. வீட்டுக்காரங்க இல்லனா போவியா, திமிரு பேச்சு பேசற?'
'ஏன் நான் பேசக்கூடாதா?'
'நீ என்ன பாவஞ் செஞ்சியோ நோய் வந்து பிச்ச எடுக்கற, நா என்ன பாவஞ் செஞ்சனோ வீட்டு வேல செய்யிறேன். வாய மூடிக்கிட்டு போ'ன்னு சொன்னேன்."

"அப்பற நாலு நாளைக்கு முன்னால எங்க தெருவுல ஒரு வயசான அம்மா மயக்கம் போட்டு விழுந்துருச்சு. நானும் எம் மவனும் அந்த அம்மாவத் தூக்கிதண்ணி தெளிச்சி எழுப்பி விட்டோம் ரெண்டு நாளா சாப்பிடலன்னு சொல்லுச்சு. எம் மவன் பாக்கெட்ல இருந்து பத்து ரூபா எடுத்து குடுத்தான். நானு என்னோட சேல ஒண்ணு, சால்வ ஒண்ணு எடுத்து குடுத்தேன்."

"நேத்து அந்த தெருப் பக்கமா போறேன், மயக்கம் போட்டு விழுந்த அந்தப் பொம்பள அவங்க வீட்டு வாசல்ல நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு ஒக்காந்துருக்கு. நான் நல்லா திட்டிட்டேன். பிச்ச வேணும்னா கேட்டு வாங்கனும். பொய் சொல்லக்கூடாது. அந்த பொம்பளய தூக்குறப்ப ஒரே நாத்தம். அவங்க குளிக்கவே மாட்டாங்க. கண்டதையும் திம்பாங்க". என்று சொல்லிக்கொண்டே விர்ரென்று அவங்க வீட்டுக்கு கிளம்பி போய் விட்டார்.

நான் அப்படியே விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தேன். வீட்டுக்குப்போயாவது என் மீது உள்ள கோபம் தீர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.
நேற்று... இன்று... நாளை...
10/28/2009 | Author: ஜெயந்தி
நேற்று...

டீவியின் ரிமோட் யாரால் கைப்பற்றப்படுகிறதோ (அடிதடி ரகளைக்குப்பின்) அவர்களின் விருப்ப சானல் ஓடிக்கொண்டிருக்கும். மகனுக்கு கிரிக்கெட், புட்பால், டென்னிஸ் போன்றவை. மகளுக்கு பிற மொழி சேனல்கள் (ஹிந்தி, தெலுங்கு, மலையாளம்). அம்மாவுக்கு சீரியல்கள். கணவருக்கு நியூஸ் சேனல். நம்மளுக்கு பாட்டு மற்றும் காமெடி சீன்கள்.

மகளுக்கு படிப்பின் மீது கொஞ்சம் (நிறைய) ஆர்வம் அதிகம். "எனக்கு நாளைக்கு டெஸ்ட் இருக்கு அந்த டீவிய ஆஃப் பண்ணுங்க."
"எக்ஸாமுனாலும் பரவாயில்ல டெஸ்டுக்கெல்லாம் ஆஃப் பண்ண முடியாது. வேணும்னா ரூமுக்குள்ள போய் கதவை மூடிக்கிட்டு படி." (வருடம் முழுவதும் ஒன்று டெஸ்ட் இருக்கும் இல்லைன்னா எக்ஸாம் இருக்கும்)
மகளின் புலம்பல்: எல்லா வீட்டுலயும் டீவிய ஆஃப் பண்ணிட்டு புள்ளைங்கள படிக்க வைக்கிறாங்க, இங்க எல்லாமே தலைகீழ்.

இன்று...

ஞாயிற்றுக்கிழமை, கம்ப்யூட்டரை யார் கைப்பற்றுவது என்று காலையில் இருந்தே போர் தொடங்கிவிடும். மகனுக்கு ஆங்கிலப் படங்கள், ஆர்க்குட் ஸ்கிராப்புகள், சாட்டிங்... மகளுக்கு படிப்பு சம்பந்தமான வேலை. காலையில் இருவரும் தொடங்கிவிடுவார்கள். கணவர் ஏதோ வேலையாக வருவது போல் சைடில் கம்ப்யூட்டரை பார்த்தபடி வந்து வந்து போய்க்கொண்டிருப்பார். கொஞ்சம் கேப் கிடைத்தாலும் அம்மா உட்கார்ந்துவிடுவார்கள் (வயது 66. இரண்டு கேம்ஸ் தெரியுமுங்கோ). நமக்குத்தான் ப்ளாகில் நிறைய வேலை இருக்கிறதே. இதற்கு நடுவில் கடைக்காரப் பையன் தண்ணீர் கேன் எடுத்து வருவான். அவன் வரும்போது யார் கம்யூட்டரில் அமர்ந்து இருந்தாலும் எழுந்துவிட வேண்டும். அவனுக்கு ஐந்து நிமிடம் டைம், ஐந்தாவது நிமிடம் அவனுடைய செல்போனுக்கு அவனுடைய கடை ஓனர் மிஸ்டு கால் கொடுப்பார், உடனே ஓடிவிடுவான். அவனுக்கும் கேம்ஸ்.
மகளின் புலம்பல்: படிப்புக்கு கம்யூட்டர குடுக்க மாட்டேங்கறாங்க.

நாளை...