மனம் என்னும் பெருவெளி
7/30/2010 | Author: ஜெயந்தி

ஐம்புலன்களையும் அடக்கி ஆழத் தெரிந்தவனே வெற்றி பெறுவான் என்று பெரியவர்கள் சொல்வார்கள். அது முற்றிலும் உண்மை. கோபத்தை அடக்கி ஆண்டு சரியான இடங்களில் சரியான நேரங்களில் வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் கோபத்திற்கும் மதிப்பு இருக்கும்.

வரவே கூடாத உணர்ச்சிகள் பொறாமை, பேராசை, பழிவாங்கும் குணம், அடுத்தவரை கெடுக்கும் குணம், வன்மம் இவையெல்லாம் தோன்றும்போதே முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அவைகள் நம்மை சாப்பிட்டுவிடும்.சில உணர்வுகள் வந்தால் அவர்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. செய்யவும் மாட்டார்கள். அதுதாங்க இந்த காதல். காதல் வயப்பட்டவர்கள் தங்கள் வசமிழந்திருப்பார்கள். அந்த உணர்வுக்குள்ளே மூழ்கிக்கிடப்பார்கள். அது அழகான உணர்வு யாரையும் துன்புறுத்தாத உணர்வு என்பதால் எல்லோராலும் அனுமதிக்கப்பட்ட உணர்வு. காதலர்களை காற்று வெளியில் மிதக்கச் செய்யும் உணர்வு.

இன்னும் சில உணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும். அதன் கட்டுப்பாட்டிலிருந்து நாம் மீள்வது மிகவும் கடினமான செயல். நம்மை முழுமையாக ஆட்சி செய்யும்.

உதாரணத்திற்குச் சொல்வதென்றால் இரண்டு வருடத்திற்கு முன் எங்கள் அம்மாவிற்கு ஏற்பட்ட எலும்பு முறிவைச் சொல்லலாம். ஆஸ்பத்திரியில் காலில் வெயிட்கட்டித் தொங்கவிட்டு அசையாமல் படுக்க வைத்திருந்தார்கள். அங்கு வந்த ஹவுஸ் சர்ஜன்ஸ்களை அடுத்து என்ன செய்வார்கள் என்று கேட்டபோது அவர்கள் சொன்னது ஆப்பரேஷன் செய்து ஸ்குரூ போடுவார்கள் என்றனர். செலவு எவ்வளவு ஆகும் என்றதற்கு 50 ஆயிரம் வரை ஆகும் என்றனர். நமக்கு மனதிற்குள் இந்த ஆப்பரேஷனை வயதான காலத்தில் அவர்களால் தாங்க முடியமா? அப்புறம் பணத்திற்கு என்ன செய்வது? இதே பிரச்சனை மனதுக்குள் சூறாவளியாக சுழன்றடிக்கும். வேறு எந்த நினைவும் வராது. மற்ற நேரங்களில் பெரியதாக தெரியும் பிரச்சனைகள் எல்லாம் அப்போது ஒன்றுமே இல்லாததுபோல் தோன்றும்.

அப்புறம் ஒரு வாரம் கழித்து பெரிய டாக்டர் வந்து பார்த்துவிட்டு ஒன்றுமில்லை இது கிராக்தான் ஆறு வாரங்கள் அசையாமல் படுக்கையில் இருந்தால் எலும்பு கூடிவிடும் என்று சில மாத்திரைகள் எழுதிக்கொடுத்தபோது ஏற்படுமே ஒரு உணர்வு. அந்த நிம்மதியை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியாது.

சில பிரச்சனைகள் நம்மை ஆற்றாமலே போய்விடும். காலம்தான் ஆற்றவேண்டும். அப்போது கொதிக்கும் மனசை எதைக்கொண்டு ஆற்ற முடியும். எந்த மூடி போட்டு மூடி வைக்க முடியும்.

இப்படிப்பட்ட மனநிலையிலேயே பூவரசிக்கு வந்த பெருங்கோபம் கண்ணை மறைத்து அது பழிவாங்கும் செயல்வரை கொண்டுபோய் விட்டது. அவர் முதலிலேயே விழித்திருக்க வேண்டும், குறைந்தபட்சம் பழிவாங்கும் எண்ணம் தோன்றியபோதாவது இதன் விளைவு என்னவாக இருக்கும் என்று யோசித்திருக்க வேண்டும். டிவியில் அவள் புத்திகெட்டுப்போய் செஞ்சிட்டேன் என்று அழுவதைப் பார்க்கும்போது தோன்றுகிறது இவள் எல்லாம் முடிந்தவுடன் அறிவுக்கண்ணைத் திறந்து பார்க்கிறாள். இதை அவள் முன்பே செய்திருந்தால் இதன் விளைவு என்னவாக இருக்கும்? நாம் உதாரணம் காட்டப்படுவோமே என்றெல்லாம் யோசித்திருப்பாள். இவருக்கு மனநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். சில நிமிடங்கள் உணர்ச்சியை அடக்கி ஆண்டு மூளைக்கு வேலை கொடுத்திருப்பாளேயானால் இந்த விளைவைத் தடுத்திருக்கலாம். (நூற்றுக்கணக்கில் பிள்ளைகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று அவர்கள் சதையையும் சமைத்துச் சாப்பிட்ட கயவன் இதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எல்லாம் என் வேலைக்காரன் செய்தது என்று சொல்லி வேலைக்காரனை தண்டனை பெற வைத்துவிட்டு வெளியிலே சுதந்திரமாக திரிகிறவன் காரணமில்லாமல் ஞாபகத்திற்கு வருகிறான்.)

சூறாவளியடிக்கும் மனநிலையின் போதுதான் மக்கள் பிற நம்பிக்கைகளை நாடுகிறார்கள். வேண்டுதல், பிரார்த்தனை, குறி கேட்பது, பரிகாரம் செய்வது போன்ற எதிலாவது தன் மனதை கட்டுப்படுத்த முடியுமா என்கிற ஆசைதான்.

நம்மை கட்டுப்படுத்தும் மனநிலையையும் வென்றெடுக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய புயலடிக்கும் மனநிலையாக இருந்தாலும். அப்படி ஒரு மனதை தன்னம்பிக்கையாலும் அறிவை வளர்த்துக்கொள்ளும் திறனாலும் வென்றெடுப்போம்.

டிஸ்கி: சூறாவளியடிக்கும் மனநிலையில் இரண்டு வாரங்களாக இருந்தேன். அதனால்தான் பதிவு எதுவும் போட முடியவில்லை. இப்போது அமைதியான மனநிலை.

திருமணம் ஆனவுடன் வேலூரில் தனிக்குடித்தனம் வைத்துவிட்டார்கள். அங்கிருந்து ஊருக்கு (திண்டுக்கல்) வருவதென்றால் அநேகமாக நான் மட்டும்தான் அதிகமுறை வந்து செல்வேன். அப்போவெல்லாம் பஸ் பயணம்னு பார்த்தா கவர்ண்மென்ட் பஸ்கள்தான் அதிகம். அதிகம்னு சொல்றதவிட முழுவதும்னு சொல்லலாம். தனியார் பஸ்ச பார்ப்பதே கடினம். திருவள்ளுவர் போக்குவரத்துக்கழகம், பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை சத்யா, கட்டபொம்மன், ராணி மங்கம்மா என்று போக்குவரத்துக்கழகங்களுக்கு பெயர் இருக்கும். பின்னர் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என்று ஆகி அப்புறம் மாநகரம், நகரம் என்று ஆகிவிட்டது.

ஊருக்குச் செல்வதென்றால் திருவள்ளுவர் போக்குவரத்ததுக்கழகத்தில் ஒரு வாரம் முன்னாலேயே ரிசர்வ் செய்தால்தான் டிக்கட் கிடைக்கும். பஸ் பயணம் பாதுகாப்பாக இருக்கும். பயமே கிடையாது. அதிக தூரப் பயணம் என்றால் நடுவழியில் டிரைவர், கண்டக்டர் மாறுவார்கள். என்ன ஒரு சிரமம்னு பார்த்தா இப்ப மாதிரி புஷ்பேக் சீட்டெல்லாம் கிடையாது. பின்னால கொஞ்சம் உயரம் அதிகமான சாய்மானம் இருக்கும் அவ்வளவுதான். நீண்ட தூரம் போவதென்றால் கொஞ்சம் கஷ்டம்தான். ஆனா டிரெயினவிட பஸ்சுல டிக்கட் சார்ஜ் கம்மி. இரவு 8.30க்கு வேலூரில் ஏறி அமர்ந்தால் காலை 5.30 லிருந்து 6 மணிக்குள் திண்டுக்கல் போய்விடலாம். 8.30ன்னா கரெக்டா 8.30க்கு வண்டியை எடுத்துவிடுவார்கள்.

அங்கிருந்து திரும்பும்போதுதான் பிரச்சனையே. வரும் தேதியை முன்கூட்டியே தீர்மானிக்க முடியாததால் டிக்கட் ரிசர்வ் பண்ண முடியாது. டிரெயின் வசதின்னு பார்த்தா ஒரே ஒரு டிரெயின்தான் திண்டுக்கல்லில் இருந்து வேலூர் வழியாகச் செல்லும். திருப்பதி எக்ஸ்பிரஸ். மதுரையில் இருந்து திருப்பதி செல்லும். மீட்டர் கேஜ். வேற டிரெயின்னா சென்னை போயி அங்கயிருந்து வேறு டிரெயின் பிடித்து வேணா வேலூர் போகலாம். தனியாகச் செல்வதால் ஒரே டிரெயின்தான் வசதிப்படும் என்பதால் திருப்பதி எக்ஸ்பிரஸ்தான் போக்குவரத்திற்கு. டிரெயின்ல மட்டும் ரிசர்வேஷன் பண்ணாம போக முடியுமான்னு கேட்குறீங்களா? இந்த டிரெயின் எப்படி போகுமுன்னா தஞ்சாவூர், சிதம்பரம், சீர்காழி என்று திருச்சியில் இருந்து விலகி ஒரு சுற்று சுற்றிச் செல்லும் அதனால் மதியம் 12.30க்கு திண்டுக்கல்லில் ஏறி உட்கார்ந்தால் நடுராத்திரி 1.30க்கு வேலூர் போகும். விடியற்காலையில் திருப்பதி செல்லும். இவ்வளவு நேரம் ஆகுறதுனால இந்த டிரெயினில் கூட்டம் கம்மியாக இருக்கும். ரிசர்வேஷன் இல்லாமலேயே உட்கார இடம் கிடைக்கும். தஞ்சாவூர், சிதம்பரம் இந்தப்பக்கம் போறவங்கதான் நிறைய இருப்பார்கள்.

வேலூரில் இருந்து பஸ்சில் ஏற்றிவிட்டால் காலையில் மாமா வந்து வீட்டுக்கு அழைத்துச்சென்று விடுவார். திண்டுக்கல்லில் இருந்து டிரெயினில் ஏற்றிவிட்டால் கணவர் வந்து அழைத்துச்செல்வார்.

ஒரு முறை 1988லிருந்து 90க்குள் ஏதோ ஒரு வருடம். எனக்கு இரண்டு சின்னச் சின்னக் குழந்தைகள். மாமா டிரெயின் ஏற்றிவிட்டார். லேடீஸ் கம்ப்பார்ட்மெண்ட் பாதுகாப்பாக இருக்கும் என்று எண்ணி அதில் ஏற்றி விட்டார். ஏறும்போது ஓரளவு கூட்டம் இருந்தது. நான் அமர்ந்திருந்த இடத்தில் இரண்டு பக்கமும் (எதிரெதிர் சீட்டுக்களில்) நானும் குழந்தைகளும் மட்டுமே இருந்தோம். வண்டி செல்லச்செல்ல தஞ்சாவூர், சிதம்பரம் பக்கத்துக்காரர்கள் இறங்கிவிட்டார்கள்.இரவு உணவை குழந்தைகளுக்கு கொடுத்து உறங்க வைத்துவிட்டேன். சின்னவன் கைக்குழந்தை. அதன் பிறகுதான் கவனித்தேன் ரயிலில் ஒரு நிசப்தத்தை உணர முடிந்தது. எனக்கு இரண்டு இருக்கைகள் முன்னால் ஒரு பெண் இரண்டு குழந்தைகள் போல பேச்சுக்குரல் மட்டுமே கேட்டது. மெல்ல எழுந்து சென்று பார்த்தேன். ஆம் அந்த பெட்டியில் என்னையும் அந்தப் பெண்மணியையும் தவிர கம்ப்பார்ட்மெண்டே காலியாக இருந்தது. மெல்ல அவர் அருகில் சென்று அமர்ந்தேன். அவருக்கும் இரண்டு பிள்ளைகள். சற்று பெரியவர்கள்.
"என்னங்க டிரெயின் காலியா இருக்கு" இது நான்.
"ஆமாம் காலியாதான் இருக்கு" இது அந்தப்பெண்.
"நீங்க எங்க போறீங்க"
"திருக்கோவிலூர்"
"அதுக்கு எவ்வளவு தூரம் இருக்கு"
"அடுத்து திருக்கோவிலூர்தான்"

எனக்கு பகீர் என்றது. அவர்களும் இறங்கிவிட்டால் மொத்த கம்ப்பார்ட்மெண்டிலும் நானும் குழந்தைகளும் மட்டுமே.

"நீங்க இறங்கீட்டா நான் மட்டும்தான் இருப்பேன். எனக்கு பயமா இருக்கு" என்றேன்.

நான் இப்படி சொன்னவுடனே அந்தம்மாவுக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்துவிட்டது. சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

"இப்படித்தான் ஒரு முறை இதே டிரெயினுல ஒரு பொண்ணு வந்துருக்கு. அந்தப்பொண்ணும் ஒரு பையனும் லவ் பண்ணியிருக்காங்க. வீட்டுல ஒத்துக்கல. அதுனால திருப்பதியில போயி கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்காங்க. அந்தப் பையன் முதல்ல போயி திருப்பதியில இந்தப்பெண்ணுக்காக காத்திருக்கான். இவள் இந்த டிரெயினுல ஏறி வர்றா. இதே மாதிரி கம்ப்பார்ட்மெண்ட் காலியாகி அவ மட்டும் இருந்துருக்கா. இத கவனிச்ச ஒரு நாலு பேரு (ஆண்கள்) அவங்க ரயில்வேல வேலை செய்றவங்க. அந்தப் பெட்டியில ஏறிட்டாங்க. அந்தப்பொண்ணு அவ்வளவு அழகா இருக்குமாம். இப்டியும் அப்டியுமா நடக்குறானுங்க. அப்பற நாலு பேரு சேர்ந்து அவள நாசப்படுத்திட்டாங்க. இதெல்லாம் எனக்கு எப்படி தெரியும்னா என்னோட வீட்டுக்காரர் ஸ்டேஷன் மாஸ்டர்"

அந்தப் பெண் இந்த சம்பவத்தை என்னிடம் சொல்லிக்கொண்டிருக்கிறாள். எனக்கு எப்படி இருந்திருக்கும்னு யோசன பண்ணிப்பாருங்க. இந்த மாதிரி சம்பவத்தை வீட்டிலோ அல்லது பாதுகாப்பான இடத்திலோ இருந்துகொண்டு கேட்பதற்கும் இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் இருந்து கேட்பதற்கு உள்ள வித்தியாசம் புரியுதா? எனக்கு அப்படியே நாக்கு வறண்டு, நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்குது. மனசுக்குள்ள அந்தம்மாவ திட்டிக்கிட்டிருக்கேன். நான் கேட்டனா. இப்போ போயி இந்த சம்பவத்தை சொல்லுறீயேன்னு மனசுக்குள்ள திட்டுறேன்.

மெள்ள அவங்கிட்ட கேட்டேன் "ஏங்க என்னய ஜெனரல் கம்ப்பார்ட்மெண்ட்ல ஏத்திவிட்டுறீங்களா?"

ஏன்னா ரெண்டு குழந்தைகள். இரண்டும் தூங்குது. துணி இருக்கற பெட்டி அப்பறம் ஊருலருந்து ஏதாவது கொடுத்துவிடுவாங்களே அந்தப் பைகள் எல்லாவற்றையும் தனியாக இறக்கி ஏற்ற முடியாது. அதுவும் திருக்கோவிலூரில் எவ்வளவு நேரம் ரயில் நிற்கும் என்றும் தெரியாது.

"பயப்படாதீங்க. உங்கள நான் ஏத்திவிடறேன்" அந்தம்மா சொன்னாங்க.

அப்படா என்று நிம்மதியானது.
அப்பறம் திருக்கோவிலூரில் ரயில் நின்றவுடன் எங்களை இறக்கி ஜெனரல் கம்ப்பார்ட்மெண்டில் ஏற்றிவிட்டு அங்கே அவர்களுக்குத் தெரிந்தவர்கள் ஒரு கணவன் மனைவி இருந்தார்கள். அவர்களும் ரயில்வேயில் வேலை செய்பவர்கள். அவர்களிடம் அந்தம்மா சொல்லி இவங்களை வேலூருல இறக்கிவிட்டுருங்க. பாத்துக்கங்க என்று சொல்லிவிட்டுச் சென்றார்கள்.

எனக்கு எப்போது அந்த ரயில் பயணம் நினைவு வந்தாலும் அந்த ஸ்டேஷன் மாஸ்டர் மனைவியும், அந்த முகம் தெரியாத பெண்ணும் நினைவுக்கு வருவார்கள்.
குற்றாலக்குறவஞ்சி
7/14/2010 | Author: ஜெயந்தி
குற்றாலக்குறவஞ்சியை எழுதியவர் திரிகூட ராசப்ப கவிராயர் என்பவர். இவர் தென்காசி அருகிலுள்ள மேலகரம் என்ற ஊர்ல பிறந்தவராம். குற்றாலத்தில் உள்ள குற்றாலநாதரைப்பற்றியும் அவரது மனைவி வசந்தவல்லியைப்பற்றியும் பாடியுள்ளார். அதோட அந்த மலையின் வளம், அவர்களின் நாகரீகம் அவர்களின் கடவுள், பழக்கவழக்கங்கள் என்பதை பாடலின் வாயிலாக அறிந்துகொள்ளலாம். குறவஞ்சி என்றால் குறத்தி வாயிலாக பாடுவதுபோல் அமைக்கப்பட்டுள்ளதால் இதன் பெயர் குறவஞ்சி. குற்றாலத்தைப்பற்றி பாடுவதால் குற்றாலக் குறவஞ்சி. குறத்தி திருக்குற்றாலநாதருக்கும் வசந்தவல்லிக்கும் உள்ள காதலை அறிந்து அதனை வசந்தவல்லியிடம் பாடலாகப் பாடி பரிசு பெறுவதுபோல் அமைந்துள்ளது.இந்தப்பாடல்களைப் படித்த மதுரை மன்னர் முத்துவிசயர்ஙக சொக்கநாத நாயக்கர் பாடலில் மயங்கி புலவருக்கு குறவஞ்சி மேடு என்ற நிலப்பகுதியை பரிசளித்தாராம். இதிலுள்ள எதுகை மோனை இந்தப் பாடல் வரிகளில் இருக்கும் அழகு இந்தப்பாடல்கள் நம்மைக் கவர்கின்றன.

குறத்தி மலை வளம் கூறுதல் என்ற பகுதியில் இருந்து இரண்டு பாடல்கள். முதல் பாடல் நான் பள்ளியில் படிக்கும்போது மனப்பாடப் பகுதியில் வந்தது. அப்போது படித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.இதன் பொருள்:
திருக்குற்றாலமலையில் உள்ள ஆண் குரங்குகள் பலவகையான பழங்களைப் பறித்து மந்திகளுக்கு கொடுத்துக் கொஞ்சி மகிழும். அப்பழங்களைத் தின்றும் சிதைத்தும் பெண் குரங்குகள் விளையாடும். இவ்வாறு மந்தி சிந்திய பழங்களை வான் உலகில் வாழும் தேவர் கூட்டம் மிக வேண்டி விரும்பிக்கேட்கும்.

காடுகளில் வாழும் வேடர்கள் தங்கள் கண் பார்வையாலேயே உற்று நோக்கித் தேவர்களை அழைப்பார்கள். வான் வழியாகச் செல்லும் சித்தர்கள் கீழிறங்கி இம்மலைக்கு வந்து உடலுக்கு நன்மை அளிக்கும் யோகங்கள் என்னும் சித்து வேலையைச் செய்வார்கள். இம்மலையிலுள்ள தேன்கலந்த மலை அருவியின் அலைகள் மேல் நோக்கி உயர்ந்து பாய்ந்து வானத்தில் இருந்து வழிந்து ஓடும். அதனால் செந்நிறச் சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைக் கால்களும் தேர்ச் சக்கரமும் வழுக்கி விழும்.

வளைந்த இளம் பிறையைச் சூடிய சடை முடியையும் உடையவர் திருக்குற்றாலநாதராகிய சிவபெருமான். அவர் எழுந்தருளியுள்ள சிறப்பு மிக்கது திருக்குற்றாலமலை. அம்மலையே எங்களுக்கு உரியது என்று குறத்தி மலைவளம் கூறுவதாக இப் பாடல் அமைந்துள்ளது.

இன்னொரு பாடல்

கொல்லிமலை எனக்குஇளைய செல்லிமலை அம்மே
கொழுநனுக்குக் காணிமலை பழநிமலை அம்மே
எல்உலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே
இமயமலை என்னுடைய தமையன்மலை அம்மே
சொல்அரிய சாமிமலை மாமிமலை அம்மே
தோழிமலை நாஞ்சிநாட்டு வேள்விமலை அம்மே
செல்இனங்கள் முழவுகொட்ட மயில்இனங்கள் ஆடும்
திரிகூடமலை எங்கள் செல்வமலை அம்மே.இதன் பொருள்:
கொல்லி மலையானது எனக்குப் பின்பிறந்த செல்லி என்பவளுக்கு உரிய மலை ஆகும். அவள் கணவனாகிய குமாரக் கடவுளுக்குக் குடிக்காணி ஆட்சியாக இருப்பது பழநி மலை ஆகும். ஞாயிறு மேல் எழும்பிச் செல்கின்ற விந்தை என்னும் மலையே என் தந்தைக்கு உரிய மலை ஆகும். இமயமலை என்னுடைய தமையனுக்கு உரிய மலை ஆகும்.

சொல்வதற்கு அரிய சுவாமிமலை என் மாமியாருக்கு உரிய மலை ஆகும். நாஞ்சில் நாட்டில் உள்ள வேள்வி மலை என் தோழிக்கு உரிய மலை ஆகும். மேகக்கூட்டங்கள் மிருதங்கம் போன்று இனிய ஓசையை எழுப்ப, அதற்கேற்ப மயில்கள் நடனம் ஆடுகின்ற திரிகூடம் என்னும் திருக்குற்றால மலையே எங்களுக்குச் செல்வப் பொருளாக இருக்கின்ற மலை ஆகும்.

குறவர்களின் வாயிலாக இந்தப்பாடலை ஏன் பாடல் ஆசிரியர் அமைத்துள்ளார். ஒருவேளை குறவர்கள் அந்தக்காலத்திலேயே கலப்புமணம் புரிந்தவர்கள் என்பதாலா? அதுதாங்க முருகனுக்கு வள்ளியை திருமணம் செய்து வைத்தார்கள் அல்லவா?

டிஸ்கி: இப்போ எதுக்கு குற்றாலக்குறவஞ்சின்னு கேட்குறீங்களா? கணவர் என்னை குற்றாலத்திற்கு அழைத்துச் செல்வதாக சொல்லியிருந்தார். அதனால் இந்தபாடல்களை தயார் பண்ணி குற்றாலத்திற்கு கிளம்புவதற்கு முன்பாவது போய்வந்த பின்பாவது போடலாம் என்றிருந்தேன். என்னாச்சுன்னா அவரு அல்வா கொடுத்துட்டாரு. குற்றாலம் போகாமலேயே பாடலைப்போட்டுவிட்டேன். என் வாயில் புகை வருவது தெரியுதா? வயிறு அவ்வளவு எரியுது.

முஸ்கி: நம்ம மங்குனி ப்ளாக்குல இந்த முஸ்கியப் பாத்துட்டு நம்மளு எப்படியாவது இந்த முஸ்கியப் போடனும்னு இருந்தேன். இன்னக்கி போட்டுட்டேன். (ங்கொய்யால நாங்களும் போடுவம்ல)
மக்களே கலைஞர் டிவியில் மேட்ரிக்ஸ்-ன்ற ஆங்கிலப்படத்த தமிழ்ல போடுறாங்க. நாளைக்கு (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு. என்ன மாதிரி இங்கிலீஸ் தெரியாவங்கல்லாம் பார்த்து பயனடையுங்கள். இங்கிலீஸ்லயே ஒருமுறை பார்த்துட்டேன். என் பிள்ளைகளின் உதவியுடன். படம் நல்லாயிருக்கும் பாருங்க.
காற்றில் வரும் கீதம்
7/09/2010 | Author: ஜெயந்தி
எனக்கு பாட்டுன்னா ரொம்பப் பிடிக்கும். வேலை செய்யும்போதுகூட பாட்டுக்கேட்டுக்கொண்டே வேலை செய்தால் வேலையின் சிரமம் தெரியாது. அதேபோல் மனதிற்கு கஷ்டமாக இருக்கும் நேரங்களில் பாட்டுக்கேட்டால் மனசு லேசாகும். என்னவோ எனக்கு சின்ன வயதிலிருந்தே பாட்டுன்னா உயிர்.

"காற்றினிலே வரும் கீதம்"ன்னு தொடங்கற பாட்டுக்கள் எல்லாமே எப்படி ரொம்ப அருமையா அமைஞ்சிருக்கு. எப்போக் கேட்டாலும் இனிமையா இருக்கும்.எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் நடித்து பாடிய பாடல் "காற்றினிலே வரும் கீதம்". சாகாவரம் பெற்ற பாடல். பழைய மீரா படத்தில் வரும். இனிமையான பாடல்.

இன்னொரு பாட்டு ஜானி படத்தில் வருமே நம்ம ஸ்ரீதேவி கொட்டும் மழையில் மேடையில் பாடுவாங்களே அந்தப் பாட்டு.
"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே..." அப்பா எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காது. என்னா பாட்டு. இந்தப் படத்தில் வரும் எல்லாப்பாடல்களுமே ரொம்ப நல்லா இருக்கும்.ஒருமுறை ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடகி சித்ரா அவர்கள் சொன்ன ஒரு தகவல் "ராஜா சார் ஒருமுறை சொன்னாரு அவங்க ஊரு தேனிப்பக்கத்தில் கிராமம். அங்கே டூரிங் தியேட்டரில் ராஜா சார் இசையமைத்த படம் ஓடிக்கொண்டிருந்ததாம். டூரிங் கொட்டகைனா திறந்தவெளி அரங்கம்தானே. அருகில் காடு உண்டாம். இந்தப்படத்தில் வரும் ஒரு குறிப்பிட்ட பாடல் வந்தவுடன் அந்தக் காட்டில் இருந்து யானைகள் கிளம்பி வந்து தியேட்டர் அருகே நின்றுவிடுமாம். பாட்டு முடிந்தவுடன் கிளம்பிச் சென்று விடுமாம். அந்தப்படம் ஓடிய அத்தனை நாட்களும் இது நடந்ததாம்." என்று இளையராஜா அவர்கள் சொன்னதாக சித்ரா  சொன்னார்.

பழைய மீரா பாட்டில் வருமே கல்லும் கனியும் கீதம், காட்டு மிருகமும் கேட்கும் கீதம் என்னும் வரும் வரிகள் எத்தனை பொருத்தம் என்று தோன்றியது.

அப்புறம் ஸ்ரீகாந்த், சோனியா அகர்வால் நடித்த படம். பாசில் இயக்கம் என்று நினைக்கிறேன். அந்தப் படத்துல வருமே "காற்றில் வரும் கீதமே எந்தன் கண்ணனை அறிவாயோ" இந்தப்பாடலும் ரொம்ப நல்லா இருக்கும்.

காற்றில் வரும் கீதம் என்று தொடங்கும் பாடல்கள் எல்லாமே இனிமையாக இருப்பதன் காரணம் என்ன?
இந்தத் தலைப்பில் சகோதரர் கே.ஆர்.பி.செந்தில் அவர்கள் தொடர் பதிவுக்கு அழைத்துள்ளார்கள்.

இந்தியா விடுதலை அடைந்தது முதல் வயதுவந்தோர் கல்விக்காக (ஆரம்பத்தில் முதியோர் கல்வி என்று பெயர் இருந்து) எத்தனையோ பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்ட்டிருக்கின்றன. ஆனால், முழு எழுத்தறிவு இயக்கம் என்ற மக்கள் இயக்கம்தான் அகில இந்திய அளவில், வயது வந்தவர்கள் அனைவரும் கல்வி பெற்றே தீர வேண்டியதன் அவசியத்தை மூலை முடுக்குகளில் உள்ள கிராமங்கள், குக்கிராமங்கள், மலைப்பகுதிகள் உட்பட ஒவ்வோர் அணுவிலும் கொண்டு சென்று சேர்த்த மாபெரும் இயக்கம்.

இது ஒரு கவர்ண்மென்ட் ஸ்கீமாக இருந்தாலும் இதை வழி நடத்தியது அறிவியல் இயக்கம் என்ற மக்கள் இயக்கம். அறிவொளி இயக்கத்தையும் மக்கள் இயக்கமாகவே எடுத்துச் சென்றது. மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து மக்களாலேயே மக்களுக்காக நடத்தப்படும் ஒரு இயக்கமாக மாற்றியது. இதில் அரசு அதிகாரிகளையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டது. அரசாங்க மக்கள் நலத்திட்டங்கள் கடைநிலை மக்கள் வரை எப்படி எடுத்துச்செல்வது என்பதற்கு அறிவொளி இயக்கம் ஒரு முன் மாதிரியாக இருந்தது.

இந்தியாவைப் பொருத்தவரை தென் மாநிலங்களில்தான் முழு வீச்சில் அறிவொளி நடைபெற்றது. இதற்குக் காரணம் தென் மாவட்டங்களில் உள்ள பிறருக்கு உதவும் நல்ல எண்ணம் உள்ளதுதான். வட இந்தியாவைப் பொருத்தவரை தன்னார்வம் மிகவும் குறைவு என்பதால் இத்திட்டம் போதுமான அளவு செயல்படவில்லை என்பது த.வி.வெங்கடேஸ்வரனின் கருத்து.

சாதாரண மக்களும், பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்களும் அரசாங்கம் அறிவொளி இயக்கத்திற்காக செலவிட்டதைவிட இரண்டு மடங்குத் தொகை செலவு பண்ணியிருக்காங்க. எப்படின்றீங்களா? அறிவொளி இயக்கத் தொண்டர்கள், வீதி நாடகக் கலைஞர்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்து கொடுப்பது, மேடை, மைக் செட் ஏற்பாடு செய்து கொடுப்பது, நோட்டீஸ் போடுவது போன்ற உதவிகளைச் செய்தனர். அப்பறம் நம்ம கற்போர் எப்ப வேணா நமக்கு எதுக்கு படிப்பு, இனிமே படிச்சு என்னாத்த கிழிக்கப்போறோம்ன்னு சோர்ந்து போயிடுவாங்க. அவங்கள திரும்பவும் உற்சாகமா படிக்க வைக்க அவங்களுக்கு பரிசளிப்பதன் மூலமாக செய்ய முடியும். அந்தப் பரிசுகளை வாங்கித் தருவார்கள்.

முன்னயெல்லாம் பிள்ளைகளை ஏதாவது ஒர்க் ஷாப்பில் விட்டால் பெரிதாகும்போது பெரிய மெக்கானிக்காக வருவான் என்று பெற்றோர் சின்னப்பிள்ளைகளை ஒர்க் ஷாப், கடைகள் என்று வேலைக்குச் சேர்த்துவிடுவார்கள். ஆனா இந்த அறிவொளி இயக்கம் செயல்பட ஆரம்பித்த பிறகு சுமார் 1990 முதல் 2000 வரையிலான பத்தாண்டுகளில் பார்த்தால் தங்கள் பிள்ளைகள் படித்து பெரிய ஆளாக வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்பிய அளவு மிக அதிகம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை குமரி மாவட்டம்தான் முதல் எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தின் மலைவாழ் ம்ககளாகக் கருதப்படும் காணிக்காரர்கள் மத்தியில் கூட இன்று எழுத்தறிவு பரவ முடிந்திருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அறிவொளி இயக்கம்தான் என்று தச்சமலை என்ற மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டர் ஈஸ்வரி கூறியுள்ளார்.

என்னய மாதிரி பத்தாம் வகுப்பு பாசானவங்க எட்டாம் வகுப்பு பாசானவங்க கிட்ட இருந்த தாழ்வு மனப்பான்மையை போக்கி எங்களாலயும் படிப்பு சொல்லிக்கொடுக்க முடியும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டிய இயக்கம். வீட்டு சமையல் அறைகளிலும் கூடங்களிலும் தேங்கிக்கிடந்த லட்சக்கணக்கான பெண்களை முதல் முறையாக வீடுகளை விட்டு பொது வெளிக்கு அழைத்து வந்தது அறிவொளி.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் சில கிராமங்களில் அறிவொளி இயக்கத்தினால் தெளிவடைந்த பெண்கள் குடியும் தங்கள் வறுமைக்கு ஒரு காரணம் என்பதை உணர்ந்து சாராய பானைகளை உடைத்து, சாராயம் விற்பவர்களையே விரட்டிவிட்டனர். கிராமமே ஒன்று சேர்ந்து செய்ததால் சாராய வியாபாரிகளுக்கு ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தச் செய்தி அந்த காலகட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அறிவொளி மூலம் எழுதப்படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் லட்சக்கணக்கானவர்கள். அவர்கள் இப்போது மகளிர் சுயஉதவிக்குழுக்களின் தலைவர்கள், பிரதிநிதகள், ஊக்குநர்கள், உறுப்பினர்களாக இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் அறிவொளி இயக்கம் மூலம் விழிப்புணர்வு பெற்றவர்களாகவே இருப்பார்கள்.

படிப்பு சொல்லித்தர தன்னார்வலர்களாக வந்தவர்களையும் அவர்களும் மேலே படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கி அவர்களும் மேற்படிப்பு படித்து முன்னேறினார்கள். அதுவுமில்லாம அறிவொளி இயக்கத் தொண்டர்களாக இருந்தவர்களின் திறமைகளை வளர்த்தது. அவர்கள் பின்னர் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்களாக, தலைவராக, ஒன்றியப் பிரதிநிதியாக, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாக உயர்த்தியது. கேரளாவில் ஒரு அறிவொளி இயக்கத் தொண்டர் சட்ட மன்ற உறுப்பினராகவே ஆகியிருக்கிறார்.

பட்டப்படிப்பு, பத்தாம் வகுப்பு படித்துவிட்டு தாழ்வு மனப்பான்மையோடு ஒதுங்கியிருந்தவர்களை 10 அறிவொளி மையங்களை மேற்பார்வை செய்யும் உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக (APC), ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களாக (BBC), மாவட்ட மைய ஒருங்கிணைப்பாளர்கள் (CPC) வரை உயர்த்தியது அறிவொளி.

மக்களிடம் இருந்த நாட்டுப்புற பாடல்கள், பழமொழிகள், சொலவடைகள், விடுகதைகள், இதைப்போன்ற வடிவங்களை மக்களிடம் இருந்து திரட்டி தொகுத்துள்ளது. நானும் ஒரு நாட்டுப்புற பாடல் ஒன்றை எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் இருந்து சேகரித்துக்கொடுத்துள்ளேன். இதுவுமில்லாமல் மறைந்துபோன கிராமப்புற பழக்கவழக்கங்கள், விளையாட்டுக்கள், உணவுகள் இப்படி ஏராளமான நாட்டார் கலைச்செல்வங்களையும் திரட்டி தொகுத்துள்ளது அறிவொளி இயக்கம்.

எல்லாவற்றையும் விட, அரசு உயர் அதிகாரிகளை சாதாரண ம்ககளோடு தயக்கமின்றிக் கலந்து பழகச் செய்தது-இவர்கள் இருவருக்குமிடையிலிருந்த பெரும் இடைவெளியைக் குறைத்து நெருக்கமாக்கியது அறிவொளிதான்.

அறிவொளியை ஒரு மக்கள் இயக்கமாகக் கொண்டு சென்றதால் கிடைத்த வெற்றிகள்-அநுபவங்களின் பின்னணியில்தான் இப்போது முழு சுகாதாரத் திட்டம், வாழ்வொளி-கண்ணொளித் திட்டங்கள், ஊரக நலவாழ்வு இயக்கம், ராஜீவ் காந்தி குடிநீர் இயக்கம் போன்ற திட்டங்கள் வடிவம் பெற்றுள்ளன.

1966-ல் கல்வித் தீர்க்கதரிசி டி.எஸ்.கோத்தாரி கூறியது "கட்டாயக் கல்வியால் மட்டும் நம் நாட்டை முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக ஆக்கிவிட முடியாது. கட்டாய இலவச கல்வி ஒரு சர்வரோக நிவாரணி அன்று. எழுதப் படிக்கத் தெரிந்த எல்லா ஆண்களும், பெண்களும் இந்தப் பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபடுத்தப்பட வேண்டும். இதனைவிடக் குறைவான எந்த முயற்சியாலும் தேவையான ஆர்வத்தைத் தூண்டவும் வலுவான வேகத்தைத் தட்டி எழுப்பவும் முடியாது."

உதவி: கமலாலயன்

நான் இருவரை தொடர் பதிவுக்கு அழைக்க வேண்டுமல்லவா?

ரசிகன் செளந்தர் அவர்களை குடி எப்படியெல்லாம் குடிப்பவர்களின் குடும்பத்தை சூறையாடுகிறது என்பதைப்பற்றி எழுத "குடியால் பாதிப்படையும் குடும்பங்கள்" என்ற தலைப்பில் அழைக்கிறேன்.

கண்ணாடி ஜீவன் தமிழ் அமுதனை "தங்கமணியின் திருவிளையாடல்" என்ற தலைப்பில் அழைக்கிறேன்.
காட்சியில் எனது படைப்பு "அஞ்சல் தலை" என்ற பகுதியில் பிரசுரமாகியது. அதை எனது பிளாக்கிலும் மறு பிரசுரம் செய்கிறேன்.

---------------------


நினைவு தெரியாத வயதில் பார்த்திருக்கும் அப்பாவுக்கு, நீங்கள் இப்போது உயிருடன் இருக்கிறீர்களா, இல்லையா என்றே தெரியாத உங்கள் மகள் எழுதிக்கொண்டது,

இங்கு நான், உங்கள் மருமகன், பேரன் மற்றும் பேத்தி அனைவரும் நலமாக உள்ளோம். நீங்கள் நலமாக உள்ளீர்களா?

உங்கள் திருமணம் நடந்தபோது அம்மாவிற்கு வயது 16, உங்கள் வயது 17 என்று அம்மா சொன்னார்கள். மூன்று வருடம் பிள்ளை இல்லாமல் இருந்து கணாக்கருப்புக்கு பொங்கல் வைத்து கடா வெட்டி அருவா அடித்து வைத்து வேண்டிக்கொண்டபின் நான் பிறந்தேன் என்று அம்மா சொல்வார்கள். அப்படி வேண்டி பிறந்த என்னை நீங்கள் கொண்டாடியிருக்க வேண்டாமா அப்பா. வீதியில் எறிந்துவிட்டீர்களே அப்பா.

உங்களிடம் எனக்கு கேட்க சில கேள்விகள் இருக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் அம்மா, அப்பாவுடன் வாழும்போது அவர்கள் குடும்பம் என்பது எவ்வளவு கஷ்டப்படும் குடும்பமாக இருந்தாலும் அதுதான் சொர்க்கம். ஆனால் எனக்கு இன்னொரு குடும்பத்தினரை அண்டி வாழும் வாழ்க்கையை ஏன் கொடுத்தீர்கள்? உங்களின் அறியாமையா, அல்லது சிறுவயதில் திருமணம் முடித்ததினால் அனுபவமில்லாமல் நடந்ததா? தமிழக வழக்கப்படி தாய்மாமா வீட்டில் தஞ்சமடைந்த என்னையும் அம்மாவையும் மாமா எந்தவித குறையும் இல்லாமலேயே கவனித்துக்கொண்டார். இருந்தாலும் அது நம் வீடு என்கிற உரிமை மனதில் தோன்றுமா அப்பா?

பள்ளி செல்லும் வயதில் யாராவது உங்க அப்பா என்ன செய்றாரு, எங்க இருக்காரு போன்ற கேள்விகள் என்னைப்பார்த்து யாராவது கேட்டால் அப்படியே குறுகிப்போய்விடுவேன் அப்பா. அந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்குள் என் ஆவி பாதி போய்விடும் அப்பா. என் வயது பிள்ளைகள் அவர்கள் அப்பாவுடன் விளையாடும்போதோ கையைப் பிடித்துக்கொண்டு எங்காவது வெளியில் செல்லும்போதோ என் மனது எப்படி ஏங்கியிருக்கும் என்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா அப்பா. அப்பா என்ற வார்த்தையே என் வாயிலிருந்து வந்தாக ஞாபகமில்லை. நம் ஊரில் அப்பாவை ஐயா என்றே அழைப்போம். அந்த வார்த்தையும் நான் அறியாத வயதில் என் வாயில் வந்தா என்று நினைவில்லை.

வீட்டில் ஒருமுறை சினிமாவிற்குச் சென்றிருந்தோம். தந்தை மகள் பாசத்தைப் பற்றிய படம். அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்த எனக்கு அடக்க முடியாமல் அழுகை வந்தது. ஏன் அழுகிறாய் என்று வீட்டில் கேட்டபோது பதில் சொல்ல முடியாமல் தேம்பிக்கொண்டிருந்தேன்.

எனக்கு திருமணம் ஆன பிறகு கணவர் பொது வாழ்க்கையில் ஈடுபாடு உள்ளவர் என்பதால் எனது வாழ்க்கை பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்தில் இருந்தது. ரேஷன் அரிசிதான் சாப்பாடு. அப்போது என் வீட்டிற்கு வந்திருந்த அம்மா சொல்லி அழுதார்கள், உன் அப்பா வீட்டில் நெல் விளைந்து வண்டி வண்டியாக ஒருநாளும் தவறாமல் 3 மாதம் வரை வந்துகொண்டேயிருக்கும். அப்படி குடும்பத்தில் பிறந்த உனக்கு இப்படி புழுத்துப்போன அரிசியை தின்ன கொடுத்துவைத்திருக்கிறதே என்று அழுவார்கள். நான் ரேஷன் அரிசி சாப்பிடுவது பற்றி ஒருநாளும் வருந்தியதில்லை. ஏனென்றால் திருமணத்திற்குப் பிறகுதான் எனக்கே எனக்கென்று ஒரு வீடு கிடைத்தது. அது சிறியதாக இருந்தாலும் மிகவும் மகிழ்ச்சியையே கொடுத்தது.

என் பிள்ளைகளுக்கு தாத்தா என்கிற வகையில் உங்களை அறிமுகப்படுத்த வாய்ப்பே எனக்குக் கிடைக்கவில்லையே அப்பா. உங்கள் பேரப்பிள்ளைகள் எவ்வளவு புத்திசாலிகள் தெரியுமா அப்பா? இப்போதும் நீங்கள் இல்லாத அந்த வெறுமையான இடத்தை நோக்கி ஏங்கிக்கொண்டேதான் இருக்கிறேன். இந்தக் கடிதத்தை எழுதும் இந்தக் கணத்தில் என் கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிந்துகொண்டிருக்கின்றன. நான் சாகும் வரை அந்த இடம் வெறுமையாகவே இருக்கும்.

அடுத்த ஜென்மத்திலாவது எனக்கு அப்பா என்கிற பிம்பம் முழுமையாகக் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அப்பா. இந்த கடிதத்தை வாசிக்க நேர்ந்தால் எனக்கு பதில் எழுதுவீர்களா அப்பா?

இப்படிக்கு உங்கள் அன்பே கிடைக்காத மகள்,
ஜெயந்தி