சினிமா விமர்சனம், புத்தக விமர்சனம் போல் வலைப்பூ விமர்சனம் எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே ஞாபகம் வந்தவர் ஆதி மூல கிருஷ்ணன். (ஆதி: அதுக்கு நாந்தானா கெடைச்சேன்.)
இவரது ஃ ப்ளாக்கை என் மகள் சொல்லித்தான் நான் படித்தேன். 'அம்மா இங்க பாறேன், குருவி பத்தி ஒரு விமர்சனம் சூப்பரா இருக்குது, அப்பறம் கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஒரு எச்சரிக்கை எல்லாம் நல்லா இருக்கு படிச்சுப் பாறேன்'.
அப்படி படிக்க ஆரம்பித்து இம்ப்ரஸ்சாகி ஃப்ளாக்கையே தலைகீழாக கொட்டிக் கவிழ்த்தாகிவிட்டது. இவரது அறிவுரை சொல்லமாட்டேன் சொல்லமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே அறிவுரை சொல்வது. கல்யாணம் பண்ணிக்காதீங்க என்று சொல்லிக்கொண்டே கல்யாணம் பண்ணிக்கொள்ள தூண்டுவது இவரது தனிச்சிறப்பு.
இவரது தங்கமணி இடுகைகள் அனைத்தும் அருமை. நீங்கள் தங்கமணிகளை கிண்டல் செய்வதைப் பார்த்து கொதித்துப் போயுள்ள பெண்கள் ரங்கமணிகளைப் பற்றி எழுதப்போவதாக ரகசியத் தகவல். (பெண் பதிவர்களிடம் தனி இடுகையே போட்டு மன்னிப்புக்கேட்டார், ஆனாலும் அவர்கள் கோபம் தீரவில்லை.)
சிக்மா பற்றி எளிய முறையில் புரிய வைத்தது, சுஜதாவை நினைவூட்டியது. அவர்தான் விஞ்ஞானக் கட்டுரைகளைக் கூட எளிமையாக அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுதுவார்.
இவர் வைத்த அயிரை மீன் குழம்பு வாசத்தில் நாக்கில் நீர் சொட்டி, அடுத்த நாள் எங்கள் வீட்டில் மீன் குழம்பு. (அயிரை கிடைக்காததால் சங்கரா மீன்). தக்காளி ரசத்துக்கு ஏனுங்க தக்காளியை வெந்நீரில் போட்டு தோளை உரித்துக்கொண்டு, பச்சையாக புளித்தண்ணீரில் பிசைந்துவிட்டால் போகிறது. நடுநடுவே டிப்ஸ் வேறு தருவார். நாமெல்லாம் இவர் உண்மையிலேயே இதையெல்லாம் செய்வார்னு நம்பனுமாம். ரமா ஏமாறுவதைப் போல் நாங்களெல்லாம் ஏமாந்தவர்களா என்ன?
இவரது எழுத்தின் சிறப்புக்குக் காரணம் இவரது நகைச்சுவை உணர்வுதான். கல்யாண வீடுகள், குடும்ப நிகழ்ச்சிகளில் பார்த்மோமென்றால் ஒரு இடத்தில் ஒரே கூட்டமாக இருக்கும். உள்ளே சென்று எட்டிப்பார்தால் ஒருவர் நடுவில் ஹீரோ போல் அமர்ந்திருப்பார். அவர் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டிருப்பார். கூடி நிற்பவர்கள் சிரித்துக்கொண்டிருப்பார்கள். அதேபோல் இவரது ஃப்ளாக்கைச் சுற்றி ஒரே கூட்டம்.
கதைகளும் நன்றாகத்தான் எழுதுகிறார். இவரின் 'அழுக்கின் அழகு' சிறுகதை மீது எனக்கு உடன்பாடில்லை. கண்டனங்களும் உண்டு. இவர் கடைசியாகப் போட்டுள்ள ஆயுதம் ஆவணப்படம் க்ளாஸ். ஏங்க வடை தட்டையாகத்தானே இருக்கும். போண்டாபோல் உள்ளதை வடை என்கிறீர்களே?
டிஸ்கி : இவரது ரசிகர் மன்றத்தினர் இவருக்கு பட்டம் கொடுப்பதற்காக மொக்கை திலகம், லொள்ளு சக்கரவர்த்தி, குசும்பு தளபதி போன்ற பெயர்களை தேர்வு செய்து கொண்டிருக்கிறார்களாம்.
Showing posts with label வலைப்பூ விமர்சனம். Show all posts
Showing posts with label வலைப்பூ விமர்சனம். Show all posts

