காதல் திருமணம்
11/26/2010 | Author: ஜெயந்தி
சமீபத்தில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மணமக்கள் மேடைக்கு சற்றுத்தள்ளி சிறிய மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அதில் அப்பா மேல் சிங்கர் (ஆண் பாடகர்), 12 வயது மகள் ஃபிமேல் சிங்கர் (பெண் பாடகர்),  இன்னும் இரண்டு மூன்று ஆண்கள் கீ போர்ட் மற்றும் வாத்தியங்கள் வாசித்தார்கள். அம்மா சவுண்டை சரிபண்ணும் கருவியை மேடை மேல் வைத்துக்கொண்டு மேடைக்கு கீழே சேர் போட்டு அமர்ந்து கொண்டு சவுண்டை சரி பண்ணிக்கொண்டிருந்தார். அவர்களின் மகன் 3-4 வயதிருக்கும் நான்கு மேளங்கள் இணைந்தார்போல் ஒரு இணைப்பை அவன் முன் வைத்து ட்ரம்ஸ் அடிக்கும் குச்சியை வைத்து அடித்துக்கொண்டிருந்தான். அவனும் அம்மாவைப்போலவே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே அமர்ந்திருந்தான். அந்தப் பையனைப் பார்த்தவுடன் இப்படித்தான் சூப்பர் சிங்கரில் பாடிய ஸ்ரீகாந்தும் உருவாகியிருப்பான் என்றாள் என் மகள்.

ஸ்டேஜில் இருக்கும் அப்பா அம்மாவை கண்களால் அழைத்து மகன் எங்கே என்று கேட்கிறார். திரும்பிப்பார்த்த அம்மாவின் முகத்தில் சின்ன பதற்றம். பக்கத்தில் மகனைக் காணவில்லை. இருவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே கண்களால் தேடுகிறார்கள். அப்பா உயரமான இடத்தில் நிற்பதால் மகனை உடனே கண்டுபிடித்துவிடுகிறார். அம்மாவிடம் கண்களாலேயே சுட்டிக்காட்டுகிறார். கல்யாணத்திற்கு வந்த இன்னொரு குழந்தையின் அருகே இருக்கும் சேரில் இந்தக் குழந்தை ஏறமுடியாமல் ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவித நிம்மதியுடன் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள்.கண்களால் பேசிக்கொள்ளும் மொழியை எந்த மொழியாலும் வெல்ல முடியாது. இதை எந்த மொழியாலும் அழிக்கவும் முடியாது. காதலர்கள் கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம்.

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ

கண்களின் மொழிகளைப்பற்றிய அருமையான பாடல்களும் உள்ளன.

மணமக்களின் திருமணம் காதல் திருமணம். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது. சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும் மாறவில்லை.

சாதிகள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் மணங்களும் நடந்திருக்கும். எத்தனை எதிர்ப்பு இருந்த போதிலும், காதல் மரணங்கள் இருந்த போதிலும் இந்தக் காதல் மட்டும் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் காலகாலத்திற்கும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. புதிதாக பிறந்துகொண்டே இருக்கிறது. உலகத்தை வாழ வைப்பதே காதல்தானே.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் அதற்கேற்ற சட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம். இத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கிறதே. அவர்களுக்கு நிறைய சலுகைகள் அளித்து சாதியற்ற ஒரு குழுவை உருவாக்கலாம். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் சாதியை வெறுக்கும் அனைவரும் அதில் இணையலாம் என்று கூறலாம். அவர்களுக்கு வேலை, படிப்பு அனைத்திலும் முன்னுரிமை அளிக்கலாம். மெல்ல மெல்ல இந்தக்குழு பல்கிப்பெருகி சாதியில்லாத நிலைமையை உருவாக்கும். சாதியற்ற தமிழகம் உருவாகும். நினைக்கவே நல்லாயிருக்கில்ல. ம்ம்ம்...

டிஸ்கி : கண்களால் பேசிக்கொள்ளும் பாடல்களை பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.
ஆதி காலத்துல குகைகளில் நமது வாழ்க்கை இருந்தது. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தோம். பின்னர் அதையே வேக வைத்து உண்ணவும் கற்றுக்கொண்டோம். விவசாயம் வீட்டு விலங்கு வளர்ப்பு என்று காலங்கள் மாறிக்கொண்டே வந்தது. காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை பண்படுத்தி வந்தமையே பண்பாடு என்கிறோம். அப்படி மாறி வந்த பண்பாடுதான் இன்று நம்மை கணினி முன் அமர வைத்திருக்கிறது.

கலாச்சாரம் என்பது நமக்கான வாழ்க்கை முறைக்கான சட்ட திட்டங்கள். சமூகத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல இத்தகைய சட்டதிட்டங்கள் தேவையாக இருக்கிறது. இதுவும் ஆதி காலத்தில் இருந்து காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இப்போது உள்ளது நம் கலாச்சாரமா? நூறு ஆண்டுக்கு முன் இருந்தது நம் கலாச்சாரமா? என்று தேடிக்கொண்டு போனால் குகைகளில் போய்தான் அடையணும்.

மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு. ஒரு ஒழுங்கு உண்டு. பக்கத்துத்தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும்.

இந்த கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு நாட்டிற்க்கும் மாறுபடும். அவர்களின் பூகோள அமைப்பு, தட்பவெப்பம் போன்றவற்றிற்கு ஏற்ப அவரவர் கலாச்சாரத்தை அமைத்துக்கொண்டார்கள். உடையையே எடுத்துக்கொண்டால் தமிழ் நாடு வெப்ப பூமி என்பதால் பருத்தியால் நெய்த வேட்டியை கட்டிக்கொண்டார்கள். அதே வேட்டிதான் பெண்ணுக்கும், மேலே மறைப்பு ஏதும் இல்லாமல். குளிர் பிரதேசங்களில் கோட், சூட். பாலைவனங்களில் மணல் மேலே விழாமல் இருக்க தலையிலிருந்து கால் வரை மறைக்கும் ஆடைகள். பனிப்பிரதேசங்களில் விலங்குகளில் தோல்களினால் ஆன ஆடைகள். இந்த உடைகள் ஆரம்பகாலங்களில் ஆண் பெண் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருந்தது. பின்னர்தான் மாற்றமடைந்தது.

இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம் உயர்ந்தது என்பதெல்லாம் இல்லை. அவரவர்களின் வாழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டதே இவை. அவரவர்களுக்கு அவரவர் கலாச்சாரம் உயர்ந்தது.நாம் சிந்து சமவெளி நாகரீக காலங்களிலேயே சுட்ட செங்கற்கலால் வீடுகட்டியும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற வசதிகளுடனுன் வாழ்ந்து வந்த கலாச்சாரம் நமது. இப்போது உலகத்தில் சிறந்த உணவுகளில் முதலாவது இடத்தைப் பிடிப்பது இந்திய உணவுகள்தான். நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு.

நம் கலாச்சாரங்களில் பிற கலாச்சாரக் கலப்பு என்பது ஆரிய, இஸ்லாமிய, ஆங்கிலேயர் வருகைகளின்போது நடந்திருக்கும். அதுவும் பெரும் அளவில் நம் கலாச்சாரத்தை நாம் விட்டுக்கொடுத்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு நம்மிடமிருந்து சிலவற்றை அவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோம்.

நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது களைந்துகொண்டேதான் இருக்கிறோம். இப்போதுகூட ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதில் உள்ள அதிகபட்ச சிரமங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு டைவோர்ஸ் செய்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்ளலாம் என்ற மாற்றம் வந்துள்ளது. இன்னும் மாற்றங்கள் தேவை. அதை நாம்தான்  செய்துகொள்ள வேண்டும்.

ஆனால் இப்போது நடப்பதைப் பார்க்கும் போது அந்நியக் கலாச்சாரம் நம்மேல் திணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நடப்பவை அந்த நினைப்பைத் தருகின்றன. அந்நிய உடை ஏற்கெனவே நுழைந்துவிட்டது, உணவு, விழாக்களும் அவர்களுடையதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இந்த லிவிங் டு கெதர் என்கிற கலாச்சாரம் அப்படி எளிதாக கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

இந்தியில் லிவிங் டு கெதர் வாழ்க்கை பற்றிய படங்கள் நிறைய வருகிறதாம். வட மாநிலங்களில் இந்தக் கலாச்சாரம் புகுந்துவிட்டதாம். தமிழ்நாட்டில்கூட நடந்துகொண்டிருக்கலாம். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை தாராளமயக்கொள்கையின் விளைவா?

அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிப்பவர்கள். லஞ்ச லாவண்கங்களில் மூழ்குவதில்லை. அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக்கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும்.

நமது நாட்டில் அதுவும் சமீப காலங்களில் சரியாகச் சொன்னால் உலகமயமாக்கலுக்குப்பின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், (எனது இந்த இடுகையை படிக்கவும்) பணத்தைத் துரத்திச் செல்வது, லஞ்சலாவண்யங்கள் தலைவிரித்தாடுவது போன்றவற்றைப் பார்க்கும்போது மனிதாபிமானத்தைத் தேட வேண்டியிருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் கலாச்சாரம் இருக்கும்போதே இரண்டு மூன்று மனைவிகளை வைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில் ஓமலூரில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள் என்று சொல்லப்பட்டது. பிறகு அவளது கர்ப்பப்பையில் 50 வயது ஆணின் விந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இப்படியான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த லிவிங் டு கெதர் சரிப்பட்டுவருமா?

இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.

டிஸ்கி : இது எந்தப்பதிவுக்குமான எதிர்ப்பதிவு அல்ல. என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.
என்கவுண்டர்
11/11/2010 | Author: ஜெயந்தி
குழந்தைகளை கொன்றவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான் என்ற செய்தியைப் பார்த்தவுடன் மனதில் சந்தோஷமே தோன்றியது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைவரின் மனநிலையும் அதுவாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது உணர்வு ரீதியாக சரி. ஆனால் ஜனநாயக நாட்டில் வாழும் நாம் இதை சரியென்று ஆமோதித்தால் ஜனநாயகத்தை மதிக்காத செயல்போல் இல்லையா? நிச்சயம் இதுபோன்ற குற்றங்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியாத குற்றங்கள்தான். இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை அரசாங்கம் உடனடியாக விசாரித்து மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை சட்டப்படி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றினால் அதைப்பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வரும். அதைவிடுத்து இதைப்போன்ற விசாரணையற்ற என்கவுண்டர்கள் தேவையா? இந்த என்கவுணடரில் உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான் என்ற அளவில் சரி. இதேபோல் சரியாக விசாக்கப்படாத என்கவுண்டர்களில் குற்றம் செய்யாமல் யாராவது இறக்க நேரிட்டால்?

மக்கள் சில விஷயங்களில் மட்டும் பொங்கி எழுவது ஏன்? இதேபோல நிறைய நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவர்கள் அமைதியாக ஏன் இருக்கிறார்கள். எல்லா விஷயங்களிலும் மக்கள் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தாலே அரசாங்கம் பயப்படும். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை சட்ட ரீதியாக அளிக்கப்படும். குற்றம் செய்ய நினைப்பவர்களும் பயப்படுவார்கள்.அம்பிகா என்ற இளம் பெண் நோக்கியா கம்பெனியில் பணி நேரத்தின்போது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டார் என்று சன் டிவியில் செய்தி பார்த்தேன். அதில் அவர்கள் மேலும் சொன்னது மெசினில் மாட்டிக்கொண்ட அம்பிகாவை உடனே வெளியே எடுக்க வேண்டுமென்றால் மெசினை உடைக்க வேண்டும். மெசின் இரண்டு கோடி என்பதால் அதை உடைக்கவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அம்பிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு மனது பதறியது. இரண்டு மணி நேரம் அந்த சிறு பெண் மெசினுக்குள் அணுஅணுவாக இறந்து கொண்டிருந்தாள். சித்ரவதைக்கொலை இல்லையா? உயிரைவிட மெசின் முக்கியமா? இதைப் பார்த்தவுடன் ப்ளாக்கில் எழுத வேண்டும் என்று இருந்தேன். இன்ட்லியில் பார்த்துக்கொண்டு வந்தபோது அம்பிகா பற்றி வினவில் வந்திருந்ததைப் பார்த்தேன்.

அவர்கள் விரிவாக எழுதியிருந்தார்கள். அதில் வந்த அந்தத் தாயின் படம், என்னால் அந்தத் தாயின் படத்தையே பார்க்க முடியவில்லை. அம்பிகாவிற்கு ஜனவரியில் திருமணம் ஏற்பாடாகியிருந்ததாம். அவள் தனது வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கனவுகள் கண்டிருப்பாள். அத்தனை கனவும் அந்த மெசினுக்கும் நோக்கியாவிற்கும் அர்ப்பணமா? இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பன்னாட்டுக் கம்பெனிகளும் நம் மக்களின் உயிரை சூறையாடத் தொடங்கிவிடாதா?

விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலையேற்றம் என்று எதற்கும் யாருமே எந்த ரியாக்சனும் இல்லாமல் இருக்கிறார்களே? யாராவது பந்த் நடத்தினால்கூட கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்களே இதைப் பற்றியெல்லாம் ஏன் யாருமே கவலைப்படுவதில்லை என்று தோன்றும். இரண்டு நாட்களுக்கு முன் கல்வெட்டு அவர்களின் ப்ளாக்கில்

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்


நாமெல்லாம் டியூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போது கோபப்பட வேண்டும். எதற்காக கோபப்பட வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும் என்றெல்லாம் டியூன் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதற்கேற்றார்போலவே நடந்துகொள்கிறார்கள்.

இவ்வளவிலும் எனக்கொரு சந்தோஷம். மக்கள் ஒன்றுதிரண்டு கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அவர்களுக்கு கொந்தளிக்கவும் தெரிகிறது. அதைப் பார்த்தவுடன் மனதுக்கு நிறைவாக இருந்தது. என்ன நடந்தாலும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறேன். அவர்களின் இந்தக்கொந்தளிப்பு சந்தோஷத்தையே கொடுத்தது.

ஒன்று நாமாக சிந்தித்து சமுதாயத்தை மாற்ற வேண்டும். அது இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு மாற்றுவார்கள் என்று தோன்றவில்லை. நம்மையெல்லாம் நல்ல வழியில் டியூன் செய்து வழி நடத்திச் செல்ல ரட்சகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லவர்களால் டியூன் செய்யப்பட்டாவது அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்.