"பாய் 300 சிக்கன் போடுங்க"
வீட்டு வாசலில் இருந்தது மட்டன் ஸ்டால்.
பாய் லெக் பீஸை வெட்டி எடை போட்டார். வீட்டு வாசலில் கடை என்பதால் பழக்கத்தின் காரணமாக எந்த மாதிரி சிக்கனோ மட்டனோ தேவை என்பதை சொல்லாமலேயே போட்டுவிடுவார்.
"350 இருக்கு. போடவா?"
"நான் 300 தான கேட்டேன்"
"இதுக்குத்தான் சார அனுப்புங்கன்றது. அவர் வந்தாருன்னா புரிஞ்சுக்கிட்டு அமைதியா வாங்கிட்டுப் போயிருவாரு"
"ஆமா வெளியில நல்ல பேரு வாங்க பேசாம வந்துருவாரு. வீட்டுல நல்ல பேரு வாங்கனும்னு நெனக்க மாட்டாரு."
"ஆமா பொம்பளங்க யாரு புருஷன பாராட்டியிருக்கீங்க."
"நாங்க பாராட்டுனம்னா நீங்க அப்படியே ஒக்காந்துருவீங்க பாய்"
"ஆமா நீங்க சொல்றதும் சரிதான். நான் இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா அதுக்கு எங்க வீட்டம்மாதான் காரணம்."
கடையில் கூட்டம் அதிகமிருக்கும் நாட்களில் அவரது மனைவியும் கடைக்கு வருவார். பாய் வெட்டிய கறியை கவரில் வாங்கிக் கொடுப்பது, பணத்தை வாங்கிக்கொண்டு சில்லரை கொடுப்பது, சிக்கன் தீர்ந்துவிட்டால் கோழியை வெட்டி உரித்துக்கொடுப்பது என்று அவருக்கு சரியாக சுழலுவார். இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் இருக்கும். மனைவியை வெடுக்கென்று பேசமாட்டார். மூஞ்சியைக் காட்ட மாட்டார்.
ஒரு ஞாயிறன்று மதிய நேரம் கடைக்குச் சென்றேன். அவரது மனைவி சுவரில் சாய்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.
" என்னங்க பாய் இப்படித் தூங்கறாங்க என்றேன்"
அதற்கு அவர் "ஆமாங்க என்ன செய்றது நான் 11-12 மணிக்கு வீட்டுக்கு போவேன், என் பெரிய மகன் 1 மணிக்கு வருவான். சின்ன மகன் 2 மணிக்கு வருவான். எல்லோருக்கும் சாப்பாடு எடுத்து வைத்து பரிமாறிவிட்டு படுக்கனும். திரும்பவும் காலையில் சீக்கரமே எந்திரிக்கனும். அவங்களும் என்ன பண்ணுவாங்க. தூங்கட்டும்" என்றார். பெண்மையை புரிந்துகொள்பவர்களைக் கண்டால் ஏனோ தலைவணங்கத் தோன்றுகிறது.
ஞாயிறன்று கடைக்கு வந்தால் பாய் நம்மை கண்டுகொள்ள மாட்டார். அவ்வளவு கூட்டம் அவரை மொய்த்திருக்கும். மற்ற நாட்களில் போனால் அவரால் பேசாமல் இருக்க முடியாது. அவரது பேச்சு நியாயமாகவும் எதார்த்தமாகவும் இருப்பதாக எனக்குப்படும்.
"எங்க வீட்டுக்கு வந்த சொந்தக்காரங்க ரெண்டு பேரு எங்க வீட்டுக்கே வந்து என்னையே கொற பேசிட்டுப்போனாங்க. அப்ப நான் கூலி வேலைதான் செஞ்சுக்கிட்டு இருந்தேன். என்ன இருந்தாலும் நீ கூலி வேலதான செய்யுறன்னு பேசுனாங்க. அவங்க பேசறதால நான் அடுத்து என்ன செய்றதுன்னு முயற்சி பண்ணி இந்தக் கடை வச்சேன். அதுனால அவங்க மேல கோபப்படுறதெல்லாம் இல்ல. வேற யாராவது இருந்தா இந்த மாதிரி பேச்சைக்கேட்டு அப்படியே ஒக்காந்துருவாங்க. நான் அந்தப் பேச்சை எடுத்துக்கொண்டு முன்னேறனும்னு நெனப்பேன்"
அவர் பேசிக்கொண்டே கறியை வெட்டிக்கொண்டிருந்தார். திடீரென்று பேச்சு திசை திரும்பியது.
"எங்க தம்பி வந்திருந்தான் அவன் பொண்ண மாப்பிள்ள வீட்டுல சரியா நடத்தலன்னு சொல்றான். ஆறுன சாதம்தான் போடுறாங்களாம். தம்பி வீட்டுல தனிக்குடுத்தனம் அதுனால மூணு வேளையும் சூடா சாப்பிடுவாங்க. மாப்பிள்ள வீட்டுல கூட்டுக்குடும்பம். அதுனால காலையிலேயே சமைச்சுருவாங்க. அது ஆறிப் போயிடுது. அதையெல்லாம் ஒரு குறையா சொல்ல முடியுமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.
"ஆமா பாய் பொண்ணுங்க போற எடத்துல அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும். ஏன்னா அவங்க வீட்டுல ஒரு பழக்கம் இருக்கும் போற இடத்துல வேற மாதிரி பழக்கவழக்கம் இருக்கும். அதுனால அனுசரிச்சுச்தான் போக வேண்டியிருக்கும்" என்றேன்.
"மாப்பிள்ளை சொல்றாரு உங்க பொண்ணு சண்ட போடுறத மட்டும் சொல்றாளே, அவளை வெளிய கூட்டிட்டுப்போறது சந்தோஷமா பேசிக்கிறதயெல்லாம் சொல்றாளான்னு கேக்குறாரு. அவரு சொல்றதும் சரிதானே அவங்க பிரச்சனையில நம்ம தலையிடலாமா? நீங்களே சொல்லுங்க" என்றார்.
"ஆமாம் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் இருக்குற பேரண்ட்ஸ் தலையிடாம இருந்தாலே அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துப்பாங்க" என்றேன்.
"அப்பறம் என் தம்பி நான் கேட்டேன் ஏன்டா உன் பொண்ணு கஷ்டப்படுதுன்னு இவ்வளவு வேதனைப்படுறியே, உன்னையே நம்பி ஒரு பொண்ணு வந்துச்சே அத இன்னிக்கி வரைக்கும் எப்படிடா வச்சிருக்கன்னு கேட்டேன். என்னாங்க நான் சொல்றது"
டிஸ்கி: பத்து நாள் பதிவு போடலன்னா காணாம போயிருவாங்கன்னு சவுந்தர் பயமுறுத்துனதுனால உடனே பதிவு போட்டுட்டேன். (எப்படியெல்லாம் பயமுறுத்துறாங்கப்பா)
22 comments:
"ஆமாம் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் இருக்குற பேரண்ட்ஸ் தலையிடாம இருந்தாலே அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துப்பாங்க" என்றேன்//
இந்த கருத்து மிகவும் அருமை ஆனால் சில விசயங்கள் பேசாமல் இருக்க முடியாது....
தொடர்ந்து பதிவு போடுங்கள்......
இயல்பான நடை
உயர்வான கருத்துகள்
சரி, இது புனைவா? அபுனைவா?
உண்மைதான். பிறர் தவறை சுட்டி காட்டும் நாம் நம் தவறை மறைக்கிறோம் அல்லது மறக்கிறோம்
//"அப்பறம் என் தம்பி நான் கேட்டேன் ஏன்டா உன் பொண்ணு கஷ்டப்படுதுன்னு இவ்வளவு வேதனைப்படுறியே, உன்னையே நம்பி ஒரு பொண்ணு வந்துச்சே அத இன்னிக்கி வரைக்கும் எப்படிடா வச்சிருக்கன்னு கேட்டேன். என்னாங்க நான் சொல்றது"//
:-)))))))))))))))))
//அப்பறம் என் தம்பி நான் கேட்டேன் ஏன்டா உன் பொண்ணு கஷ்டப்படுதுன்னு இவ்வளவு வேதனைப்படுறியே, உன்னையே நம்பி ஒரு பொண்ணு வந்துச்சே அத இன்னிக்கி வரைக்கும் எப்படிடா வச்சிருக்கன்னு கேட்டேன்.//
தனக்கென்று (தன் மகளுக்கு)வரும் வரை இது பலருக்கு புரிவதில்லை தான்...
நல்ல பதிவு இயல்பான நடை...
நன்றி சவுந்தர்!
நன்றி இப்னு ஹம்துன்!
புனைவெல்லாம் இல்லீங்க. உண்மையாகவே வாசல் கடையில் உள்ள பாய் பேசியது.
நன்றி தமிழ் உதயம்!
நன்றி ஜெய்லானி!
நன்றி ஸ்வர்ணரேகா!
உண்மைதான்.
நன்றி ரமேஷ்!
\\ஏன்டா உன் பொண்ணு கஷ்டப்படுதுன்னு இவ்வளவு வேதனைப்படுறியே, உன்னையே நம்பி ஒரு பொண்ணு வந்துச்சே அத இன்னிக்கி வரைக்கும் எப்படிடா வச்சிருக்கன்னு கேட்டேன். என்னாங்க நான் சொல்றது"\\
உண்மைதான. இதை நிறைய பேர் யோசிப்பதே இல்லை .நல்ல பகிர்வு.
எல்லா குடும்பத்துலயும் போற போக்குல சொல்லீட்டிங்களே...மக்கா! சூப்பர்....!
//"ஆமாம் அவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ரெண்டு பக்கமும் இருக்குற பேரண்ட்ஸ் தலையிடாம இருந்தாலே அவங்களே அவங்க பிரச்சனையை தீர்த்துப்பாங்க" என்றேன்.//
இதுதான் உண்மை, பொதுவாகவே கணவன் மனைவி இடையில் மூன்றாம் மனிதன் உள்ளே வரக் கூடாது ...
நன்றி அம்பிகா!
நன்றி தேவா!
நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
//"ஆமா பொம்பளங்க யாரு புருஷன பாராட்டியிருக்கீங்க."
"நாங்க பாராட்டுனம்னா நீங்க அப்படியே ஒக்காந்துருவீங்க பாய்"//
எதார்த்தமான வரிகள் . உயிரோட்டமுள்ளக் கதை. வாழ்த்துக்கள்
எதார்த்தமா இருக்குதுங்க!!!!!!!!
ஊருக்கு உபதேசம் எனக்கில்லைன்ற பழமொழியும் சரியா இருக்கும் ...
சகோதரி,
உங்கள் தளம் இணைக்கப் பட்டுவிட்டது. நன்றி.
விருப்பமிருந்தால் இந்த மகளிர் திரட்டியை மற்ற நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த நமது நிரலியைப் பயன்படுத்தலாம்.
கதை(?) யதார்த்தமா நல்ல இருக்குங்க ஜெயந்தி.
பேச்சில் முஸ்லீம் accent கொண்டுவந்திருக்கலாம்.
தலைப்பு “மட்டன் ஸ்டால்” என்று கூட வைத்திருக்கலாம்.
வாழ்த்துக்கள்!
நல்லா இருக்கு ஜெயந்தி....
எதார்த்தமான வரிகள், அருமையான நடை... பாராட்டத்தக்க கதை....
அருமையா இருக்குதுக்கா.
அருமையா இருக்குதுங்க.. தனக்குன்னு வரும்போதுதான் தலைவலி தெரியும் போலிருக்கு :-))))
நன்றி மதுரை சரவணன்!
நன்றி தெய்வசுகந்தி!
நன்றி பிரியமுடன் வசந்த்!
இணைத்ததற்கு நன்றி கடல்!
நன்றி ரவிஷங்கர்!
கதை மாதிரியா இருக்கு. ரொம்ப நன்றிங்க.
நன்றி ஆர்.கோபி!
நன்றி ஹுசைனம்மா!
நன்றி அமைதிச்சாரல்!