இரங்கல்
11/18/2009 | Author: ஜெயந்தி
கேபிள் சங்கர் அவர்களின் தந்தையார் காலமான செய்தியை இடுகைகளின் மூலமாக அறிந்தேன். அன்னாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.



மாநகரப் பேருந்து


சென்னையில காலையிலயும் மாலையிலயும் பீக் அவர்ஸ்ல மாநகரப் பேருந்தில் பயணம் செய்பவர்கள் பாவம் செய்தவர்கள். பஸ்சில் ஏறுவதற்கே தனி டிரெயினிங் வேண்டும். அதிலும் பெண்கள், இரண்டு மூன்று பேர் இருந்தால் சேர்ந்து ஏறிவிடலாம். தனியாக மாட்டிக்கொண்டால் ஆண்களை தள்ளிக்கொண்டு ஏறவே முடியாது. அவர்களும் பாவம் பார்த்து வழிவிட மாட்டார்கள். அவரவர்களுக்கு அவரவர் அவசரம். இதில் யாரையும் குறை சொல்ல முடியாது.

பேருந்திற்குள் ஏறிவிட்டாலோ மூச்சு முட்டும் கூட்டத்தில் நெருக்கியடித்து நின்றுகொண்டு வர வேண்டும். அதற்குள் விதவிதமான சண்டைகள் நடக்கும். 'அய்யோ என் காலை மிதிக்கிறீங்களே?' 'ஏங்க இப்டி மேல சாய்றீங்களே, கொஞ்ச தள்ளி நில்லுங்க' 'எடம் இருந்தா தள்ளி நிக்க மாட்டாங்களா?' ரெண்டு மூணு சண்டையாவது நடந்துகொண்டிருக்கும். அந்த நெரிசலில் வேர்த்து வடிய பயணம் செய்வோருக்கு இந்த சண்டை சத்தம் பயங்கர டென்ஷனைக் கொடுக்கும். இதில் டிக்கெட் எடுப்பவர்களுக்கு வேறு காசு ஒருபுறமும் டிக்கெட் மறுபுறமும் பாஸ் செய்ய வேண்டும். அதிலும் சில குளறுபடிகள் நடக்கும்.

இதில் பெண்கள் மீது உரசுவதற்கென்றே ஒரு கோஷ்டி வரும். இவர்களை சமாளிப்பதுதான் பெரும்பாடு. பெண்கள் இருக்கைக்கு அருகே உள்ள வரிசையில் நிற்பவர்கள் தப்பித்துவிடுவார்கள். அதற்கு அடுத்த வரிசையில் இருப்பவர்கள் நிலைதான் மோசமாக இருக்கும். நல்ல ஆண்கள் அருகில் நின்றால் எவ்வளவு கூட்டம் இருந்தாலும் அவர்கள் நம்மீது இடித்துவிடாமல் நிற்பார்கள். மீறி பட்டாலும் வேறு வழியில்லாமல்தான்படும். இந்த மாதிரி ஆண்கள் பக்கத்தில் நின்றால் பிழைத்தோம். இடிஅமீன்கள் பக்கத்தில் நிற்க நேர்ந்தால்... தைரியமுள்ள பெண்கள் நன்றாக திட்டிவிடுவார்கள். பயந்த சுபாவம் உள்ள பெண்கள் கூனி குறுகி பக்கத்தில் உள்ள பெண்களின் மீது சாய்ந்துகொண்டே செல்வார்கள். பெண்களின் திட்டும் போனசாக கிடைக்கும். திட்டும் பெண்களுக்கு இடிமாடுகளின் பதில், 'கூட்டம்னா அப்டித்தான். இடிபடாம போகனும்னா ஆட்டோல போங்க, கார்ல போங்க'. அப்படியே அவங்களை நாலு சாத்து சாத்த வேண்டும்போல் இருக்கும். பஸ்ல வந்தா இவங்ககிட்ட இடி வாங்கியே தீர வேண்டுமா என்ன?




அப்பறம் இந்த பஸ்சுல கடைசியா நீளமா ஒரு சீட் இருக்குமே, அது பெண்களுக்கானது. அதில் ஆண்கள் ஏறி வரிசையாக அமர்ந்துகொள்வார்கள். பெண்களுக்கும் அவர்களுக்கும் நடக்கும் சண்டை சுவாரசியமாக இருக்கும்.

"இது லேடீஸ் சீட் எந்திரிங்க"
"ஏம்மா ஆம்பளங்க சீட்டுல நீங்க உட்கார்றீங்க"
"ஆம்பளங்க சீட்டுனு தனியா எதுவும் இல்ல. லேடீஸ் சீட் மட்டும்தான் தனி. மத்ததெல்லாம் பொது சீட்டுதான். யார் வேணும்னாலும் உட்காரலாம்."
"ஆணும் பெண்ணும் சமம்னு சொல்றீங்க, பஸ்சுல மட்டும் தனியா சீட்டு கேக்கிறீங்க?"
"ஆணும் பெண்ணும் சமங்கறத நாங்க படிப்புலயும் வேல செய்யிறதிலயும் காட்டிக்கிறோம். பஸ்சு சீட்டுல காட்ட வேண்டியதில்ல."
"நாங்களும் வேல செஞ்சிட்டுத்தான் வர்றோம். எங்களால எந்திரிக்க முடியாது"

இப்படியாக சண்டை ஓடிக்கொண்டிருக்கும். சில நேரம் இவர்கள் ஜெயிப்பார்கள், சில நேரம் அவர்கள் ஜெயிப்பார்கள்.

பஸ்சுல ஏன் தனி இருக்கைகள் பெண்களுக்கு?
என் மனதில் ஓடியவை.

1. வீட்டிலும் வேலை செய்துவிட்டு அலுவலகத்திற்கும் சென்று பணியாற்ற வேண்டும். இரட்டை பளு.
2. மாதவிடாய் பிரச்சனை. இந்த நேரத்தில் சிலருக்கு வயிறு வலிக்கும். சிலருக்கு தலைவழி, உடல்வழி. எந்த வழியும் இல்லாமல் யாரும் இருக்க மாட்டார்கள்.
3. குழந்தை வயிற்றில் சுமக்கின்ற பெண்கள்.
4. குழந்தை பிறந்து பேருக்கு 3ம் மாதம், ஆனால் ஒரு மாதம்கூட ஆகியிருக்காது. அவர்கள் உடல் பச்சை உடம்பு என்பார்கள்.
5. 40-50 வயது பெண்கள் மாதவிடாய் நிற்கும் காலகட்டம். அவர்கள் உடலை பாடாய் படுத்திவிட்டு நிற்கும்.
6. இடிமன்னர்கள்.

நீங்களே சொல்லுங்கள், பெண்களுக்கு தனி இருக்கைகள் கொடுப்பது தவறா?
This entry was posted on 11/18/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On November 18, 2009 at 6:39 PM , Cable சங்கர் said...

நன்றி பாடினியார்

 
On November 18, 2009 at 7:37 PM , க.பாலாசி said...

தங்களின் மனதில் ஓடியவைக்கான காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.

 
On November 18, 2009 at 8:49 PM , ரோஸ்விக் said...

நீங்கள் கேட்பது சரிதான். ஆனால், அதை பலர் புரிந்துகொள்ள மாட்டார்கள்.

ஆகையால், அங்கு உரிமை கோருவது போல் பேசாமல், உடல் நிலை சரி இல்லை என்று முயன்று பார்க்கலாமோ?? அப்பவாவது உதுவுவார்களா என்று பார்ப்போம்...

 
On November 19, 2009 at 11:51 AM , மதார் said...

நான் தினமும் அனுபவிப்பதை அப்படியே உங்கள் எழுத்தில் காண்கிறேன் , இதிலும் சில நல்ல ஆண்கள் டிக்கெட் எடுத்து தந்து உரிமையாய் நம்மை உரசும்போது பத்திக்கொண்டு வரும் , என்னிடம் திட்டு வாங்கிய ஆண்கள் நிறய உண்டு , என்ன படித்தாலும் ஆண்கள் சிலபேரை திருத்தவே முடியாது ...........!

 
On November 19, 2009 at 11:53 AM , விக்னேஷ்வரி said...

சரியான காரணங்கள் தான்.

 
On November 20, 2009 at 3:43 PM , ஜெயந்தி said...

நன்றி கேபிள் சங்கர்!

ஊக்கத்திற்கு நன்றி க.பாலாசி!

நன்றி ரோஸ்விக்!
முதலில் நீங்கள் சொல்வதுபோல் பணிவாகத்தான் ஆரம்பிக்கும். அது நடக்காதபோதுதான் அடுத்தகட்ட நடவடிக்கையாக சண்டை ஆரம்பமாகும்.

நன்றி மதார்!
//இதிலும் சில நல்ல ஆண்கள் டிக்கெட் எடுத்து தந்து உரிமையாய் நம்மை உரசும்போது பத்திக்கொண்டு வரும்//
நீங்கள் சொல்வது சரிதான்.

ஊக்கத்திற்கு நன்றி விக்னேஸ்வரி.

 
On January 11, 2010 at 7:23 PM , ஊடகன் said...

இந்த இடுகையை வாசிக்கவும்...

ஆண்களுக்கு இடஒதுக்கீடு - (பகுதி-2)

http://oodagan.blogspot.com/2010/01/2.html