ஒரு காதல் கதை
10/19/2010 | Author: ஜெயந்தி
அமமாவும் நானும் அமர்ந்திருந்தோம். அம்மாவின் பலமான யோசனை ஏதோ பழைய ஊர் ஞாபகம் உள்ளுக்குள் ஓடுவதாக தோன்றியது. நான் நினைத்தது சரிதான்.

"இந்த முத்தம்மா மக சந்திரா தெரியும்ல" என்று ஆரம்பித்தார்கள்.

"ஏதோ நிழலாட்டம் ஞாபகம் இருக்கு" என்றேன்.

"சந்திரா வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மனுசங்க. கடுமையா உழைப்பாங்க. யாருகிட்டயும் எதுக்கும் கையேந்த மாட்டாங்க. யாரையும் ஒரு வார்த்தை கடிஞ்சு பேச மாட்டாங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. வெளியிலயும் கூலி வேலைக்குப் போவாங்க. அவங்க உண்டு அவங்க வீடு உண்டுன்னு இருப்பாங்க. அதுவும் இந்த சந்திரா ரொம்ப தைரியசாலி. ஒரு ஆம்பள அவகிட்ட தப்பான நோக்கத்துல பேச முடியாது. ஆம்பளங்களே பயப்படுவாங்க."

35, 40 வருஷத்துக்கு முந்தைய சம்பவம் கண் முன் விரியத் தொடங்கியது.

"பெருமாள் வீட்டு தோட்டம் காடு எல்லாத்துக்கும் சந்திராதான் வேலைக்கு ஆள் கூட்டிட்டுப்போறது, முன்னால நின்னு வேலை செய்றதுன்னு இருந்தா. அவ தலைமையிலதான் பெருமாள் நிலத்துல வேலை நடக்கும். இப்பிடியே இருந்தப்ப ஊருல எல்லாரும் பெருமாளயும் சந்திராவையும் பத்திஒரு மாதிரியா பேசத் தொடங்குனாங்க. அவங்க ரெண்டு பேரும் அந்தப் பேச்சப்பத்தி கவலப்படல. இந்த நெலமையில சந்திரா வீட்டுல மாப்பிள்ள பாக்கத் தொடங்குனாங்க. அவ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒரே பிடியா நின்னா. ஆனா அவங்க வீட்டுல என்ன பேசுனாங்களோ தெரியல ஒரு மாப்பிள்ளய பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பெருமாள் வீட்டுலயும் ஒரு பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க."



"ஏன் அவங்கதான் லவ் பண்றாங்கள்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல?"

"கிராமத்துல அதெல்லாம் நடக்காது. அதுவும் ரெண்டு பேரும் வேறவேற ஜாதி வேற"

"சந்திராவுக்கு பாத்த மாப்பிள்ளயோட ஊரு பஸ்ச விட்டு எறங்கி 6, 7 மைல் நடக்கணுமாம். இவ ஊருக்கு வரக்கூடாதுன்னு வேணும்னே அப்டி பார்த்தாங்களா இல்ல இவ விஷயம் தெரிஞ்சு வேற எங்கயும் அமையலயான்னு தெரியல. மாப்பிள்ளையும் நல்லாவே இருக்க மாட்டான். கல்யாணம் பண்ணி அனுப்புச்சாங்க மூணாவது நாள் மறுவீட்டுக்கு வந்தவ திரும்ப போகவே மாட்டேன்னு சொல்லிட்டா. அப்பற என்ன பண்ணுறது. இங்கயே ஒரு வீட்டுல ரெண்டு பேரையும் தனிக்குடித்தனமா வச்சாங்க. வீடுன்னா சின்ன குடிசை. ஒரு சின்ன ரூம், ஒரு தடுப்பு வச்ச சமையல்கட்டு. ரெண்டு பேரும் கூலி வேல செஞ்சுக்கிட்டு இருந்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா சந்திரா புருஷன் கூட ஒரு வார்த்த கூட பேச மாட்டா. அவனும் கொஞ்ச நாள் இருந்து பாத்துட்டு அவங்க ஊருக்கே ஓடிட்டான். அவ அந்த குடிசையிலேயே இருந்துட்டா."

"இந்த நேரத்துல பெருமாளு பொண்டாட்டி பிரசவத்துக்கு போனவ பிரசவத்துல செத்துப்போயிட்டா. பெறந்த கொழந்தய அவங்க மாமனார் வீட்டுலயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. இவனும் அதுக்கப்பறம் வேற கல்யாணம் பண்ணிக்கல."

"ரெண்டு பேரும் எங்க பாத்துக்கறாங்க எப்படி பேசிக்கறாங்கன்னெல்லாம் யாருக்கும் தெரியாது."

"அப்போ ஊருலயெல்லாம் உண்டாகிட்டா கொறத்திய கூப்புடுவாங்க. அவ வந்து குச்சி வப்பா"

"கொறத்தின்னா நரிக்கொறத்தியா?"

"இல்ல. இவங்க பன்னி மேய்க்கறவங்க. ஊருக்குள்ளயே இருப்பாங்க. கொறவர்ன்னு சொல்வாங்க"

"சரி இந்த குச்சி வைக்கறதுன்னா என்ன?"

"எருக்கஞ்செடி இருக்குல்ல அதுதான் இந்த வினாயகர் சதுர்த்திக்குக்கூட எருக்கம்பூ மாலை போடுவாங்களே அந்தச்செடி."

"ம் தெரியும்."

"அதோட எல நல்லா பழுத்த எல. அந்தா அந்தப் பாய் இருக்கு பாரு அந்த மாதிரி மஞ்சக் கலர்ல இருக்கும். அந்த எலைய எடுத்து அது நடுவுல இருக்க காம்பு குச்சிய ஒரு ரெண்டு இஞ்சு நீளத்துக்கு எடுத்துக்குவாங்க. ஒருமுனையில ஒரு துணிய கட்டிருவாங்க. இன்னொரு முனையில ஏதோ மருந்து வைப்பாங்களாம். இந்த குச்சிய துணி வெளியில தொங்குற மாதிரி வச்சுருவாங்க. தீட்டு படத் தொடங்குன ஒடனே அந்த துணிய பிடிச்சு குச்சிய இழுத்துவிட்டுறனும். குச்சி உள்ள போயிருச்சுன்னா அவ்வளவுதான். துணியிலயிருந்து குச்சி கழன்றுகிட்டு உள்ளே போயிருச்சுன்னாலும் அவ்வளவுதான். உயிருக்கே ஆபத்து. யாராலும் காப்பாத்த முடியாது."

"கொறத்தி இருக்காளே அவ என்ன ஆளு தெரியுமா? அவ நைசா இதுக்கு காரணம் யாருன்னு சொல்லு அப்பத்தான் மருந்து பலிக்கும்னு சொல்லி உண்மைய வாங்கிக்குவா? ஆனா யாரு கேட்டாலும் அவ சொல்லவே மாட்டா. யாரும் கேட்க மாட்டாங்க. அதுதான் எல்லாருக்கும் தெரியுமே."

பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ யோசித்த அம்மாவின் வாயிலிருந்து "எவ்வளவு பாவம்ல அந்த சந்திரா" என்ற வார்த்தைகள் வந்தன.

"இப்டியே இருந்தாங்க. அப்பறம் கொஞ்ச நாள்ல நாங்க திண்டுக்கல் வந்துட்டம். அதுப்பறம் எங்க ஊரு தொடர்பே விட்டுப்போச்சு. அப்பறம் என்னாச்சுன்னு தெரியல."

"இந்தா பாரு ஒரு கதை சொன்னா முடிவ சொல்லனும். இப்படி முடிவு கிழிஞ்சுபோன நாவல்மாதிரி கதை சொன்னா என்ன அர்த்தம்"

"நான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும்தான சொல்ல முடியும். ஊருக்கு போனா தெரியும். என்ன அப்டியேதான் இன்னும் இருப்பாங்க இல்லன்னா ஒரே வீட்டுல இருப்பாங்க. ஏன்னா இப்போ அவங்களுக்கு வயசாகியிருக்கும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல. சொன்னாலும் அவங்களுக்கு கவலையில்லை இல்ல. இல்ல ஊருக்கு பயந்துக்கிட்டு இன்னும் தனித்தனியாத்தான் இருகாங்களோ தெரியல."
This entry was posted on 10/19/2010 and is filed under , , . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

19 comments:

On October 19, 2010 at 1:23 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Where is the story?

summa. its good

 
On October 19, 2010 at 1:37 PM , Unknown said...

அப்பல்லாம் கிராமங்கள்ள இப்படி செஞ்சு இறந்து போனவங்க நிறைய.. இப்ப நெறைய பாதுகாப்பு சமாச்சாரங்கள் வந்தாலும்.. இப்படி கர்ப்பமாகி அதனை கலைக்க வழி தெரியாமல் தற்கொலை செய்து கொள்வதும், அல்லது பெத்துகொண்டு அவப்பெயருக்கு ஆளாவதும் இன்றும் நடந்து கொண்டும் இருக்கிறது..

 
On October 19, 2010 at 1:41 PM , தினேஷ்குமார் said...

நல்ல கதை

//முடிவில்லைனாலும்
முடிவில் முற்றும்
தொடராக வாழ்க்கை//

 
On October 19, 2010 at 2:40 PM , சி.பி.செந்தில்குமார் said...

நல்ல மண் வாசம் வீசும் கதை

 
On October 19, 2010 at 2:43 PM , சி.பி.செந்தில்குமார் said...

On October 19, 2010 1:23 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Where is the story?

summa. its good


யோவ் ,சிரிப்புப்போலீசு,எங்கே போனாலும் கும்மிதானா?

 
On October 19, 2010 at 2:46 PM , சி.பி.செந்தில்குமார் said...

இடுகையில் மீண்டும் சென்று இடுகைக்கான லேபிளில் அனுபவங்கள்.,வாழ்க்கை நிகழ்வுகள் என சேர்த்தவும்,தமிழ்மணம் முகப்பில் கீழே தனி டைட்டிலில் வரும்,இன்னும் நிறைய பேர் வருவார்கள்

 
On October 19, 2010 at 3:57 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சி.பி.செந்தில்குமார் said...

On October 19, 2010 1:23 PM , ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Where is the story?

summa. its good


யோவ் ,சிரிப்புப்போலீசு,எங்கே போனாலும் கும்மிதானா?
//

hehe

 
On October 19, 2010 at 4:40 PM , அருண் பிரசாத் said...

மனித உணர்வுகள்....

அந்த படம் எங்க பிடிச்சீங்க... சூப்பர்

 
On October 19, 2010 at 5:14 PM , RVS said...

எல்லாக் கதையும் முடிவு தெரிஞ்சுதான் படிக்கனும்ன்னு அவசியம் இல்லை. முடிவு தெரியற வரை வாசிக்கும் சுகம் போதுமே. என்ன நான் சொல்றது... ;-)
பாடினியார் அப்படின்னு தலைப்பு பார்த்ததும் நச்செள்ளை அப்படின்னு நினைச்சேன்.... ;-)

 
On October 19, 2010 at 5:52 PM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

"இந்தா பாரு ஒரு கதை சொன்னா முடிவ சொல்லனும். இப்படி முடிவு கிழிஞ்சுபோன நாவல்மாதிரி கதை சொன்னா என்ன அர்த்தம்"././///
:)))
நல்லாத்தான் கேட்டீங்க..
ஆனாலும் இந்த கதை நல்லாத்தான் இருக்கு..

 
On October 19, 2010 at 6:06 PM , Chitra said...

"இந்தா பாரு ஒரு கதை சொன்னா முடிவ சொல்லனும். இப்படி முடிவு கிழிஞ்சுபோன நாவல்மாதிரி கதை சொன்னா என்ன அர்த்தம்"

....அதானே.....என்ன அர்த்தம்? :-)

 
On October 19, 2010 at 6:34 PM , Unknown said...

நல்ல கதை

 
On October 19, 2010 at 7:00 PM , Gnana Prakash said...

nalla irukku.

 
On October 19, 2010 at 7:36 PM , வார்த்தை said...

ஒவ்வொரு கிராமத்துலும் ஏதோ ஒரு புல்லாங்குழல் வாசிக்க முடியாத ஏதோ ஒரு சோக ராகத்தை வாசித்துக்கொண்டு தான் இருக்கிறது.
அப்படி பட்ட ஒரு சோக ராகத்தை தான் இந்த இடுகையில் நீங்கள்.....

(யார்ரா அது, இது ஏற்கனவே சினிமால‌ வந்த வசனம்னு குரல் கொடுக்குறது..... )
( நல்லபடியா ஒரு பின்னூட்டம் போட விடமாட்டாய்ங்களே...)

 
On October 19, 2010 at 9:33 PM , Myooou Cyber Solutions said...

கதை நன்றாக உள்ளது

 
On October 19, 2010 at 11:12 PM , அம்பிகா said...

ஹூம்....
ஆனால் அப்போதெல்லாம் இதைப் போல நிறைய சோகங்கள், வெளிதெரிந்தும், தெரியாமலும்.
அருமையான நடை.

 
On October 20, 2010 at 11:03 AM , அன்புடன் மலிக்கா said...

அருமையாக எழுதியிருக்கீங்க.
சோகமும் கிராம வசமும் இலையோடுது..

 
On October 20, 2010 at 12:14 PM , Unknown said...

கதை நல்லாயிருக்குங்க..

 
On October 20, 2010 at 12:27 PM , thiyaa said...

அருமையான பதிவு