வேதம் புதுமை செய்
கமலாலயன்
உலகம் நமக்கு எண்ணற்ற கொடைகளை ஒவ்வொரு நாளும் வழங்கிக்கொண்டே இருக்கிறது: நீர், காற்று, உணவு, உடைகள், உறைவிடம், மின்சாரம், போக்குவரத்து வசதிகள், கல்வி, கலைகள், இப்படி இந்தப் பட்டியல் முடிவற்று நீளும் ஒன்று, இவற்றையெல்லாம் உலகிடமிருந்து, அதாவது சமுதாயத்திடமிருந்து-நாம் பெறுகிறோம், திரும்பவும் அந்த உலகிற்கு நாம் எதைத் திருப்பித் தந்திருக்கிறோம்? ஒரு தனிநபர் என்ற முறையில் நமது பங்களிப்பு என்ன?
இந்த கேள்விதான் பலரை ஞானத் தேடலில் ஈடுபடச் செய்திருக்கிறது. தனி நபருக்கு முன்னால் வீசப்படுகிற இக்கேள்வியை இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டிற்கு முன் வீச முடியமா? முடியுமென்றால் இந்த நாட்டின் பதில் என்ன?
"இந்தியா, உலகிடமிருந்து எவற்றைப் பெற்றுக்கொண்டிருக்கிறதோ, அவற்றுக்கு ஈடாகத் தானும் பலவற்றைக் கொடையளிககும், கடந்த காலத்தில் இந்தியா உலகிற்களித்து வந்திருப்பதைப் போன்றே, இன்றும், இனியும் உலகிற்கு அளிக்கிறது அளிக்கும்!" இதை மிகுந்த நம்பிக்கையுடனும், மன உறுதியுடனும் உலக நாடுகளின் அவை ஒன்றில் முழங்கியவர் விவேகானந்தர்.
பகத் சிங்கையும், பாரதியையும் போன்று விவேகானந்தரும் குறுகிய காலமே இந்த மண்ணில் வாழ்ந்து மறைந்தவர். மொத்தமே 39 ஆண்டுகள். அவர் போதித்தது வெற்று வேதாந்தமும், சனாதன தர்மங்களும் மட்டுமேயாக இருந்திருக்கும் பட்சத்தில் அவரது இந்த 39 ஆண்டுகால வாழ்க்கை, இந்த உலகப் பெருங்கடலில் கரைந்த பெருங்காயமாய் என்றைக்கோ மணமிழந்து போயிருக்கும். இந்த நாட்டில், சன்னியாசிகளுக்கா பஞ்சம்? ஆனால், விவேகானந்தர் முன் வைத்த வேதாந்தத்தின் தன்மை முற்றிலும் வேறுபட்ட ஒன்று. பசித்த வயிறுகளுக்குத் தேவை, சப்பாத்திகளும் சோறுமே தவிர மதமோ, வேதாந்தமோ ஏன், கடவுளோகூட அல்ல என்று திட்டவட்டமாகச் சொன்னவர் அவர்.
இன்று, இந்துத்துவ வாதிகள், பகத்சிங்கையே தமது இரகசிய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற உதவும் திருவுருவங்களுள் ஒன்றாக ஆக்கிவிட முயன்று வருகிற சூழலில், விவேகானந்தரைப் போன்ற சன்னியாசியின் நிலைமை என்ன என்பதை விவரிக்கவே வேண்டியதில்லை. ஆனால், அவர்கள் முன்னிறுத்துகிற விவேகானந்தரையல்ல நாம் காண வேண்டியது. இந்திய வரலாற்றில் மிக ஆழமான தடம் பதித்த ஒரு வீரத் துறவி மட்டுமல்ல. இந்த நாட்டின் கோடானுகோடி மக்கள், வயிற்றுக்குச் சோறும், உடுத்த உடையும், இருக்க இடமும் இன்றி வேதனைப்படுகின்றனரே என்று கண்ணீர் சிந்தியவர் அவர். வாடிய பயிரையும், நீடிய பிணியால் வருந்துகின்றோரையும், ஈடீல் மானிகளான ஏழையரையும் கண்ட போதெல்லாம் வாடித் துயருற்ற நமது வள்ளலாரின் அகில இந்தியப் பதிப்பே விவேகானந்தர்.
1863-ம் ஆண்டு, ஜனவரி மாதம் 12-ம் நாளில் பிறந்தவர் இவர். தாயார் புவனேஸ்வரி தேவியும், தந்தை விஸ்வநாத் தத்தாவும் இவருக்கு வைத்த பெயர் நரேந்திரநாத். 1881-ல் முதன் முறையாக இராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்கிறார். அனைத்து மதங்களையும் சமமானவையாகப் பார்க்கும் 'சர்வமத சமரச'ப் பார்வையுடையவர் இராமகிருஷ்ணர். அத்வைதத்தை, அதாவது கடவுளும்-மனித ஆன்மாவும் வேறுவேறல்ல என்கிற ஓர்மையை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்கோ-கலாச்சாரத்திற்கோ மட்டும் சொந்தமானதாக்கி விடாதவர்களாக இராமகிருஷ்ணரும், அவரது சீடரான விவேகானந்தரும் இருந்தவர்கள். தனது மதம் எது என்று ஒற்றை வரியில் சொன்னவர் விவேகானந்தர்: "உண்மை ஒன்று மட்டுமே எனது கடவுள்: இந்த ஒட்டுமொத்த உலகமே எனது நாடு"
சிகாகோவில் நடைபெற்ற உலகளாவிய அனைத்து மதங்களின் மாநாட்டில் அவர் ஆற்றிய உரையையும், அவரது குரு இராமகிருஷ்ணரின் மேல் கொண்டிருந்த பக்தியையும் முன்னிறுத்தி இன்று விசுவஹிந்து பரிஷத் போன்ற அமைப்புகள் அவரை ஓர் 'இந்து முன்னணி வீரராக'ச் சித்தரிக்கின்றன. ஆனால், 1885-ல் அவர் எழுதிய ஒரு கடிதத்தின் வரிகள், அவர் முன் வைத்த கொள்கை எதுவென்று காட்டுகின்றன:
"இந்த நிமிடத்தில் நான் இந்துயிஸம் குறித்து எந்த ஒரு புத்தகத்தையும் எழுதிக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு மதமும் ஒரு வகை வெளிப்பாடு. ஒரே உண்மையை வெளிப்படுத்துகிற ஒரு மொழி. ஒவ்வொருவரிடமும் நாம் அவரவர் சொந்த மொழியில் மட்டுமே பேச வேண்டும். நாம் இந்துயிஸம் பற்றி பின்னால் ஏதாவது ஒரு சமயத்தில் பார்த்துக்கொள்ளலாம். நமது குரு இராமகிருஷ்ணரின் மதம் இந்து மதமென்று ஹிந்துக்கள் வைத்துக்கொல்லட்டும்... மற்றவர்கள் அவரவர் விருப்பப்படி ஏதாவது பெயர் வைத்துக்கொள்ளட்டும். நமது ஆசிரியர் இந்தியாவுக்கு மட்டுமா சொந்தம்? நமது இந்தியாவின் சீர்குலைவிற்கு இத்தகைய குறுகிய அணுகுமுறைகளை ஒழிக்காமலிருக்கும் வரையில் எந்தவித சாதகமான பலனும் கிடைப்பது முடியாத காரியம்." -இதைவிடவும் தெளிவாக வேறொரு கடிதத்தில் "இந்து, கிறிஸ்தவர் என்று வெவ்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதெல்லாம் ஒரே உண்மையின் வெவ்வேறு பெயர்கள் மட்டுமே. மனித உயிர்களுக்கிடையே நிலவ வேண்டிய தோழமையுணர்வுக்கு இவை தடைகளே. இவற்றை உடைத்து நொறுக்குவதற்குத்தான் நாம் முதலில் முயற்சி செய்ய வேண்டும்." என்று திருமதி புல் (BULL) என்பவருக்கு எழுதியிருக்கிறார்.
சர்வ மதங்களின் அவையில், சிகாகோவில் அவர் நிகழ்த்திய பிரிவுபசார உரையின்போது தெள்ளத் தெளிவாக அவர் கூறுவதைக் கேளுங்கள்: "மதங்களுக்கு இடையே ஏற்பட வேண்டிய ஒற்றுமைக்குப் பொதுவான ஓர் அடித்தளம் குறித்து இந்த அவையில் ஏராளமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், இன்றைக்கு இந்த உலகில் பின்பற்றப் படுகிற ஏராளமான மதங்களுள் ஏதேனும் ஒன்று மட்டுமே வெற்றி பெற்று தலைமையேற்க வேண்டுமென்றும், மற்றவை அனைத்தும் அழிக்கப்பட வேண்டும் என்றும் அப்படி நடந்தால்தான் மதங்களிடையே ஒற்றுமை நிலவுமென்றும் யாராவது இங்கு நம்பியிருக்கும்பட்சத்தில், அவரிடம் நான் சொல்லுவேன்: 'சகோதரா, உன் நம்பிக்கை தவறானது' என்று. கிறிஸ்தவர்களெல்லாரும் இந்துக்களாகிவிட வேண்டுமென நான் விரும்புகிறேனா? கடவுள் அதைத் தடுக்கட்டும்! யாரேனும் ஒரு ஹிந்து அல்லது பெளத்தர் கிறிஸ்தவராகிவிட வேண்டுமென நான் விரும்புகிறேனா? கடவுள் அதைத் தடுக்கட்டும்!"
அவர் முன் வைத்த இத்தகைய தெளிவான கருத்துக்களையும், வேறுபல முற்போக்கான, மனித நேயமிக்க விமர்சனங்களையும், மெல்ல மெல்ல மக்களின் முன் வைக்காமல் மறைத்துக் கொண்டிருக்கிற இந்துத்துவ அமைப்புகளின் வரிசையில், சமீபகாலமாக இராமகிருஷ்ண மிஷனும் கூட இணைந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அவருடைய வாழ்நாளிலேயேகூட, அவரது கருத்துக்களையும், அவர் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணத்தையும் வைதீக இந்துக்களின் அதிகார மையங்கள் ஏற்றுக்கொண்டதில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். பிராமணரல்லாதவரான விவேகானந்தர் எப்படி இந்துமதத்தின் அங்கீகரிக்கப்பட்ட துறவியாக ஏற்கப்பட முடியும் என்று சனாதனிகள் கொந்தளித்திருந்துள்ளனர். கடல் கடந்து அவர் மேற்கொண்ட பயணம் சாஸ்திர விரோதமானதென்றும், அயல்நாட்டிலிருந்தபோது உட்கொண்ட உணவு விஷயங்களிலும் அவர் சாஸ்திர விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். இந்த விமர்சனங்களுக்கு அவரது பதில் மிகத் தெளிவானது: "நான் எப்போது வைதீக புராணிக இந்துவாக இருந்திருக்கிறேன்? நமது சாஸ்திர விதிகளைக் கவனமாகப் படித்து ஆராய்ந்து பார்த்தேன். ஆன்மிக விடுதலையும், மதமும் சூத்திரர்களுக்கு அல்ல என்ற உண்மையைக் கண்டறிந்தேன். ஒரு சூத்திரன் உணவு தொடர்பான மற்றும் எல்லா சாஸ்திர விதிகளையும் அனுசரித்து நடப்பதாகவே வைத்துக்கொண்டாலுங்கூட வெளிநாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டாலும்கூட அவனுக்கு ஒன்றும் பெருமை கிடைத்துவிடப் போவதில்லை. அவையெல்லாம் வீண் முயற்சிகளே. நானொரு சூத்திரன் மிலேச்சன். நான் எதற்காக அந்த சாஸ்திர விதிகள் எல்லாவற்றையும் குறித்து கவலைப்பட வேண்டும்."
அவர் மற்ற துறவிகளைப் போல கங்கைக் கரையில், தபோவனங்களில், இமயமலைச் சரிவுகளில் ஆசிரமங்களில் தங்கி 'ஆன்மிக விவாதத்'தில் மூழ்கியிருந்தவரல்ல கடவுளை கங்கைக் கரையில் தேடிக் கொண்டிருக்காதீர்கள்: விளிம்பு நிலை மக்களிடம் சென்று அவர்களுக்குச் சேவை செய்வதன் மூலம் கடவுளை அவர்களின் வடிவில் தரிசியுங்கள்' என்றவர் அவர். கிராமங்களுக்குப் போய், படிப்பறிவற்ற ஏழை மக்களுக்கு எழுத்தறிவையும் அடிப்படை அறிவியலையும், புவியியலையும் கற்றுக்கொடுக்க முன் வருமாறும், சிங்கம் போன்று வீறுகொண்டு எழுந்து வருமாறும் ஆயிரமாயிரம் இளம் ஆண்களையும்-பெண்களையும் நோக்கி அறைகூவி அழைத்தவர் விவேகானந்தர்.
"ஒரு விதவையின் கண்ணீரைத் துடைக்க முடியாத ஒருதாயின் பசியைத் தீர்க்க ரொட்டித் துண்டைத் தரத் தவறுகிற எந்தக் கடவுளையும் நாம் நம்பத் தயாராயில்லை; அத்தகைய கடவுள்களைத் தூக்கி இந்துமகா சமுத்திரத்தில் போடுங்கள்" என்று முழக்கமிட்டவர் அவர். தனது காலத்திய சனாதன இந்து தர்மம் 'தீண்டாமையின் மதம்'தான் எனக்குறிப்பிட்ட அவர், படித்த இந்துக்களின் மீது வைக்கிற விமர்சனங்கள் இவை! "சாதிப் பிளவுகளின், மூட நம்பிக்கைகளின் கொடிய சக்கரங்களில் சிக்கி சிதைந்து போனவர்கள்; ஒரு துளியளவு தர்மமும் இல்லாத போலித்தனமான கோழைகள்!"
1880-ம் ஆண்டு தொடங்கி 1893 வரையிலான பதிமூன்றாண்டு காலம், விவேகானந்தர் இந்தியாவின் பல முக்கியமான பகுதிகளில் ஒரு சூறாவளியைப்போன்று அலைந்து திரிந்த காலம், உத்தரப்பிரதேசம், இராஜஸ்தான், குஜராத், மகாராஸ்ட்ரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஹைதராபாத் மற்றும் கேரளா முதலான பகுதிகளில் சுற்றியலைந்தார் அவர். இந்தியாவின் உழைக்கிற மக்களின் வாழ்க்கை அவலங்களை மிக நெருக்கமாகவும், நேரடியாகவும் இந்தப் பயணங்களின் போது அவர் கண்டறிந்திருக்கிறார். கன்னியாகுமரிக்கு 1892-ல் வந்த அவர், அங்கு கடற்கரையிலிருந்து படகில் சென்று சேர வேண்டிய தூரத்திலிருந்த பெரும் கடற் பாறைகளுள் ஒன்றின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் தொடர்ச்சியாகத் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். மீணடும் அவர் கடற்கரைக்குத் திரும்பியபோது, சிகாகோவில் நடைபெறப் போகிற அனைத்து மதங்களின் பேரவையில் கலந்துகொள்வதற்காகவும், இந்தியாவின் கோடானுகோடி எளிய மக்களுக்கு உதவுமாறு மேற்குலகின் காதுகளுக்கு எட்டும் வகையில் உரத்துப் பேசுவதற்காகவும் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதென்று தீர்மானித்திருக்கிறார்; தரித்திரர்களே உங்கள் கடவுள் என்பதே விவேகானந்தர் முன்வைத்த செய்தி. அவரது காலத்தைத் தாண்டி மிக முன்னோக்கிச் சிந்தித்தவர் அவர். இந்தியாவிலிருந்து மிக விரிவான அளவில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்ட முதல் இந்தியர் அவராகவே இருக்கக்கூடும்.
பெண்களை அடிமையாக நடத்தி, புறக்கணித்துக் கொண்டிருப்பவர்கள் - அதாவது சமகால இந்தியர்கள், பயங்கரமான பாவிகள் என்றார் அவர். "பலபத்து லட்சம் மக்கள் பசியினாலும், வறுமையினாலும் உழன்று கொண்டிருக்கையில், அவர்களுடைய உழைப்பின் பயனை அறுவடை செய்து படித்துவிட்டு, வளமாக வாழ்ந்தாலும் அவர்களின்பால் கடைக்கண் பார்வையைக்கூடத் திருப்பாமலிருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் துரோகி என்றே கொள்வேன்" என்கிறார் அவர்.
சிகாகோ உரையின் மூலம் பெரும் புகழ் பெற்றவராக அவர் பல நாடுகளிலும் சுற்றுப் பயணம் செய்து ஏராளமான அறிஞர்கள், பல்வேறு மத நம்பிக்கையாளர்கள் உட்பட வெவ்வேறு விதமான மக்கள் பிரிவினரின் கவனத்தை வெகுவாக ஈர்த்தார். காரணம், அவர் காலத்தில் மிகவும் கலகத்தன்மையுடையவராகவும், மரபுகளை மீறியவராகவும் விவேகானந்தர் இருந்ததே காரணம். 1896, நவம்பர் 1-ம் தேதியன்று அவர் மேரி ஹேலுக்கு எழுதிய கடிதமொன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
"நான் ஒரு சோஷலிஸ்ட். காரணம் அது மிகச் சரியான அமைப்பு என்று நினைப்பதால் அல்ல. ஒன்றுமில்லாமல் பட்டினி கிடப்பதைவிட அரை ரொட்டித் துண்டு மேல் என்பதே காரணம். மற்ற அமைப்பு முறைகளை நாம் முயன்று பார்த்து அவற்றின் போதாமையையும் உணர்ந்துவிட்டோம். இதையும் முயன்று பார்த்துவிடலாமே!"
பல சந்தர்ப்பங்களில் கையில் சல்லிக்காசு இல்லாமல் பசியினால் வீடுதோறும் இரந்து திரிய வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. களைப்பும், பசியும் மேலிட்ட நேரங்களில், எவராவது ஒரு நல்ல மனிதர் அல்லது மனுஷியின் உதவியுடன் அவர் மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்திருப்பது பல நிகழ்ச்சிகளிலிருந்து தெரிய வருகிறது. சொகுசான அயல்நாட்டு மாளிகை அறைகளில் வசிக்கும் வாய்ப்பும், நல்ல உணவும், புகைத்தல் பழக்கமும் வாய்க்கப்பெற்றவராகவும் இருந்திருக்கிறார் விவேகானந்தர். மிகவும் எதிர்பாராமல், 1902-ம் ஆண்டு ஜுலை 4-ம் தேதி அவரின் மறைவு நிகழ்நதது. தொடர்ந்து அவர் நீண்ட காலம் வாழ்ந்திருக்கும் பட்சத்தில், அளப்பரிய சாதனைகளை அவர் நிகழ்த்தியிருக்கவும் வாய்ப்புண்டு.
150-வது ஆண்டு நிறைவையொட்டி, விவேகானந்தரின் சிந்தனைகளில் இன்றைக்கும் பொருந்துகிறவை நிறைந்து இருக்கின்றன. அவற்றைச் சரியான விதத்தில் பயின்று, புரிந்துகொண்டு, இன்றைய தேவைகளுக்கேற்ப பிரயோகிப்பதில்தான் நாம் கூர்மையான கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கியம்!
(நன்றி: அறிவுக்கடலே அருட் புனலே ரா.கணபதி ஞானதீபம்-தொகுதி. ஃப்ரண்ட் லைன் பிப்-8-2013)
நன்றி : இளைஞர் முழக்கம்