ஆதித்தாய். தனது குழுவை தலைமை தாங்கி செல்கிறாள். எப்படி வேட்டையாட வேண்டுமென்று சொல்லித்தருகிறாள். பனிக்கரடிகளை எப்படி வேட்டையாட வேண்டும், மற்ற மிருகங்களை எப்படி வேட்டையாட வேண்டும் என்று சொல்லித்தருகிறாள். வேட்டையாட வியூகம் அமைக்கிறாள். ஆயுதத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறாள். உலகின் சூட்சமங்களை சொல்லித்தருகிறாள். அந்தக் குழு அவள் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படியே செய்கிறார்கள். அந்தக் குழுவிற்கான சட்ட திட்டங்களை வகுக்கிறாள் தலைவி. அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்குள் ஆண், பெண் பேதமில்லை. அவள் ஆணை அடிமையாக நடத்தவுமில்லை. அவர்கள் குகைளில் வாழ்கிறார்கள்.

தலைமைக்கு அவள்தான் சரியானவள் என்று அவள் தலைமையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்த மனித இனத்தில் மாற்றம் ஏற்படுகிறது. நாடோடியாக வாழ்ந்து திரிந்தவர்கள் ஒரே இடத்தில் வாழ பழகுகிறார்கள். விவசாயம் கண்டுபிடிக்கப்படுகிறது. கால்நடைகள் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்படுகின்றன. வாழ்க்கை முறை மாறிவிட்டது. தனக்கு மட்டுமேயான வாரிசுகள் வேண்டுமென ஆண் நினைக்கிறான். பெண்ணை அடிமையாக்கினால்தான் இது நடக்கும் என நினைக்கிறான். திட்டத்தை நிறைவேற்றுகிறான். விளைவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பெண் அடிமையாகிறாள். தான் அடிமையானது தெரியாமலேயே அதிலேயே அமிழ்த்தப்படுகிறாள்.
(ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலில் படித்ததிலிருந்து என் வார்த்தைகளில்)

--------------------------


உலகம் ஆண்களுக்கானதாக மாறிய பிறகு ராஜாக்கள் 60 ஆயிரம் மனைவிகள் வைத்துக்கொண்டார்கள். நடன மங்கையரை சபையில் ஆட விட்டு ரசித்தார்கள். அந்தப்புரங்களை பெண்களாலேயே நிறைத்தார்கள். ஜமீன்தார்கள் நிறைய மனைவிகள் வைத்துக்கொண்டார்கள். குடியானவன் கூட இரண்டு மூன்று மனைவி கட்டிக்கொண்டான். இது பத்தாதென்று பெண்களை கோயில்களுக்கு பொட்டுகட்டிவிடும் தேவதாசி முறை வேறு. இதன் நீட்சி இன்றைய பாலியல் தொழில். பிறகு வந்த காலங்களில் ரெக்கார்ட் டான்ஸ்கள் ஆட விட்டு ரசித்தார்கள். சினிமா வந்த பிறகு விரும்பியபடியெல்லாம் காண்பித்து ரசித்தார்கள். நுகர்வுக் கலாச்சாரத்தின் வெளிப்படாக அழகிப்போட்டிகள் வந்தன. அரைகுறையான ஆடையுடன் பூனை நடை நடக்க விட்டு கிழவன் முதல் குமரன் வரை ஜொள்ளு விட்டார்கள். ஆண்கள் குடிக்கும் சரக்கிலிருந்து சிகரெட்டிலிருந்து ஜட்டி வரை பெண்ணே விளம்பரப்படுத்தப்பட்டாள். ரஞ்சிதாக்கள் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். இது புரியாமல்தான் சிலர் ரஞ்சிதாவிற்காக பரிதாபப்பட்டபோது பலருக்கு கோபம் வந்தது.

இன்றைய பெண்கள் அதிலிருந்து வெளியே வர நினைக்கிறார்கள். தங்களுடைய திறமைகள் தங்களுக்குள்ளேயே அடங்கிவிடக்கூடாது, வெளிவர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கு முன்பும் அவர்களுடைய ஆற்றல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. கட்டிட வேலைகளில் அந்த சாரத்தின்மீது செங்கல்லையும், சிமெண்ட் கலவையையும் தூக்கிச் செல்வது பெண்கள்தான். அதுதான் கடினமான வேலையும்கூட. அதேபோல் வயல்வெளிகளில் களையெடுப்பது, நாற்று நடுவது, கதிர் அறுப்பது, அறுத்த கதிர் கட்டுக்களை தூக்கிச் செல்வது போன்ற கடுமையான வேலைகளையும் செய்கிறாள். நாம் சாப்பிடும் சாப்பாடும், இருக்கும் வீடும் அவளில்லாமல் இல்லை.

இயற்கையில் 1000 ஆண் படைக்கப்பட்டால் 1000 பெண்ணும் படைக்கப்படுகிறாள். இயற்கை தன் கடமையை சரியாகவே நிறைவேற்றுகிறது. மனிதன் அதை மீறுகிறான். பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து எண்ணிக்கையை குறைத்து பல கேடுகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான். இப்போதே திருமணத்திற்கு பெண் கிடைப்பது சிரமமாக உள்ளதாக சொல்கிறார்கள். போன மாதம் உறவினர் வீட்டு திருமணத்திற்காக கோவை சென்றிருந்தபோது காதில் விழுந்த பேச்சுக்கள்,
மாப்பிள்ளையின் அம்மாவிடம் யாரோ கேட்டார்கள் "பொண்ணுக்கு எவ்வளவு நகை போட்டாங்க?"
"25 பவுனு, மாப்பிள்ளக்கி 5 பவுனு" என்று சொல்லிவிட்டு மாப்பிள்ளையின் அம்மா உள்ளே சென்று விட்டார்கள்.
கேட்ட பெண்ணின் அருகிலிருந்த மற்றொரு பெண் சொன்னாள், "பொண்ணு வீட்டுல ஒண்ணுமே போடல. இவுங்கதான் நகை போட்டு கல்யாணமும் பண்ணிக்கிறாங்க. ஏன்னா பொண்ணே கெடைக்க மாட்டேங்குது பாரு"
சில வருடங்களுக்கு முன் சென்ற திருமணங்களில் 100 பவுன், 50 பவுன், கார், ஸ்கூட்டர் என்று கேட்ட காதிற்கு இது புதிதாக இருந்தது. பெண்கள் குறைவினால் வரதட்சணை தொல்லை குறைகிறது என்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இதனால் பெண்களுக்கு எந்தவிதமான புதிய சிரமங்கள் வரப்போகிறதோ என்று நினைக்கையில் கவலையாக இருந்தது.

இயற்கை என்னவோ பெண்ணை ஆணுக்கு சமமாகவே நினைக்கிறது. ஆனால் பெண்ணுக்கோ இன்னும் 33க்கே விடியவில்லை.
|
This entry was posted on 3/18/2010 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

5 comments:

On March 18, 2010 at 4:28 PM , சந்தனமுல்லை said...

நல்லா எழுதியிருக்கீங்க - தலைப்பை ரசித்தேன்!

எழுதறதை கம்மி பண்ணீட்டீங்களா இல்லே நாந்தான் மிஸ் பண்ணிடறேனா?! :-)

 
On March 18, 2010 at 8:25 PM , தமிழ் உதயம் said...

இந்த 33% யாருக்காக... யார் பயனடைய போறாங்க. உழைக்கும் மகளிரா. உட்கார்ந்து சாப்பிடும் மகளிரா. கனிமொழி, கயல்விழி, தமிழச்சி தங்கப்பாண்டியன் போன்றவருக்காக தான் 33%

 
On March 18, 2010 at 10:46 PM , ஜெயந்தி said...

வருகைக்கு நன்றி சந்தனமுல்லலை!
ஆமாம் கொஞ்சம் எதுவது குறைந்துதான் போச்சு.

வருகைக்கு நன்றி தமிழ் உதயம்!
நீங்கள் சொல்வது உண்மைதான். பெண்களுக்காக போராடி உரிமைகள் பெற்றுக்கொடுப்பதைப் போல் உழைக்கும் மகளிருக்கும் 33 கிடைக்க முயற்சிகள் நடக்கும் என்று நம்புவோம்.

 
On March 20, 2010 at 8:05 AM , Anonymous said...

hmm

nala karuthukal...
yesika vendiya visiam...

rumba nalla padivu ethum ellai..yen.
sari padivu oru part of lifethan..
nama lifethan mukiam..

epothum neram kidikiratho apothu
kondipa eluthavendum endru panivoda
ketukolikrom..

nandri
valga valamudan.
complan surya

 
On March 24, 2010 at 9:32 PM , ஜெயந்தி said...

நன்றி காம்ளான் சூர்யா!