ரத்னா ஸ்டோர்சும் நானும்
4/27/2011 | Author: ஜெயந்தி

நேற்று தனியாக டிநகர் சென்றிருந்தேன். எப்போதும் வீட்டிலிருந்து யாராவது உடன் வருவார்கள். நேற்று அனைவருக்கும் ஏதோ காரணத்திற்காக வரமுடியாத சூழ்நிலை. சரி நம்மளே போயிட்டு வந்திரலாம்னு போயிட்டேன்.

வீட்டிற்குத் தேவையான பாத்திரங்கள் கொஞ்சம் வாங்க வேண்டி இருந்தது. ரங்கநாதன் தெருவில் உள்ள ரத்னா ஸ்டோருக்குச் சென்றேன். நாங்க எப்பவும் அங்கேதான் பாத்திரங்கள் வாங்குவோம். கையில் ஒரு கட்டை பேக். வாங்க வேண்டியசாமான்களுக்கான லிஸ்ட். மணிபர்ஸ் எல்லாம் இருந்தன. லிஸ்ட்டைப் பார்த்து ஒவ்வொரு சாமானாக பார்த்து எடுத்துக்கொண்டிருந்தேன். தேவையான அளவு, பார்க்க நன்றாக இருக்கிறதா என்று தேடித்தேடி வாங்கிக்கொண்டிருந்தேன். எனக்கு கடையில் உள்ள ஒரு பெரியவர் உதவி செய்தார். அவரும் நானுமாக தேவையான பொருட்களையெல்லாம் வாங்கி முடித்தாயிற்று. இன்னொரு பொருள் நான்காவது மாடியில்தான் இருக்கிறது என்றார். நானும் நான்காவது மாடிக்குச் சென்றேன். அங்கே பொருளை வாங்கிவிட்டு பர்சைப் பார்த்தேன். கையில் பர்ஸ் இல்லை.

எங்கேயோ விட்டுவிட்டேன் என்பது புரிந்தது. பாத்திரங்கள் வாங்கிய இடத்தில்தான் விட்டிருக்க வேண்டும். நான்காவது மாடிக்கு வரும்போதே கையில் பர்ஸ் இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே கீழ் தளத்திற்குச் சென்றேன். அந்தப் பெரியவரைப் பார்த்து என்னுடைய பர்ஸ் தொலைந்துவிட்டது என்றேன். அவரும் நானும் நாங்கள் பாத்திரங்கள் எடுத்த இடத்தில் எல்லாம் தேடினோம். கிடைக்கவில்லை. பெரியவர் தேடும்போதே சொல்லிக்கொண்டே வந்தார் "ஏம்மா பர்செல்லாம் பத்திரமா வச்சிக்க வேண்டாமா? இங்க எவ்வளவுபேர் வந்துபோற எடம். எங்கயாவது விழுந்திருந்தா யார் எடுத்தாங்கன்னு தெரியும். இவ்வளவு பேர் வந்துபோற எடத்துல பர்ஸ் விழுந்திருந்தா அங்கயே இருக்குமா? பாத்து வச்சுக்க வேண்டாமா" என்று திட்டிக்கொண்டே வந்தார்.



அவர் சொல்வது உண்மைதானே. நான் கவனமாக இருந்திருக்க வேண்டும். தவறு என்னுடையதே. பர்சைத் தொலைத்த குற்ற உணர்ச்சி ஒரு பக்கம், வாங்கிய பாத்திரங்களுக்கு கொடுக்க காசு இல்லை. இதை வாங்க இன்னொரு முறை வரவேண்டும் என்றெல்லாம் மனதில் ஓடியது. இதையெல்லாம்விட முக்கிய பிரச்சனை பஸ்சுக்கு கையில் காசு இல்லை. சரி ஒரு ஆட்டோ பிடித்துப் போய் வீட்டில் இருந்து காசு எடுத்துக்கொடுத்துவிடலாம் என்று நினைத்துக்கொண்டேன். பர்சு தொலைத்தது ஒரு பக்கமுன்னா ஆட்டோ செலவு ஒரு பக்கமான்னு ஓடியது. சரி என்ன பண்றது தப்பு பண்ணியாச்சு தண்டனை அனுபவிச்சுத்தானே ஆகணும்.

திரும்பவும் அடுத்த ரவுண்டு வரத் துவங்கினோம். பில்லை வாங்கிக்கொண்டு பாத்திரங்கள் கொடுக்கும் பகுதியில் இருந்த ஒருவரிடமும் பர்சு தொலைந்த விஷயத்தை சொன்னோம். அவர் அங்கு வேலை செய்யும் மற்றவர்களிடமும் கேட்கச் சொன்னார். இன்னும் ஒருவரும் எங்களுடன் சேர்ந்து தேடினார். அங்குள்ளவர்களிடமும் கேட்டுக்கொண்டே தேடினோம். ம்ஹும் எங்கும் இல்லை. பெரியவர் சொன்னார் நாலாவது மாடியில ஒருமுறை பாத்திருங்க என்றார். சரி அங்க ஒருமுறை பாத்துட்டு வீடுபோய்ச் சேர வேண்டியதுதான்னு கெளம்பி லிஃப்டு இருக்கும் இடத்தின் அருகே சென்றேன். "இங்க வாங்க"  என்று பெரியவர் அழைத்தார். "கேஷ் கவுண்டர்ல ஒரு பர்சு இருக்காம். உங்களுதா பாருங்க"  என்றார். கேஷ் கவுண்டர் சென்றேன். அங்கே இருந்தவர் உங்க பர்சு அடையாளம் சொல்லுங்க என்றார். என் பர்சு அடையாளத்தைச் சொன்னதும் என் பர்சை எடுத்து என் கையில் கொடுத்தார். அந்த நிமிடம் எப்படி இருந்திருக்கும் சொல்லுங்கள். என் கண்களில் கண்ணீர் அது பாட்டுக்கு வந்துகொண்டிருக்கிறது. வாய் அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்லிக்கொண்டிருந்தது. எங்க கடையில வேலை பாக்குறவங்க கையில கெடச்சா கஷ்டமருக்கு கெடச்சுரும். வேற யாராவது எடுத்துருந்தா எங்களால ஒன்னும் செய்ய முடியாது என்றார் பெரியவர். அங்காடித் தெரு படத்தில் வரும் ஒரு வசனம் ஞாபத்திற்கு வந்தது யானை இருக்கும் காட்டில்தான் எறும்பும் இருக்கிறது. ஊழல் பேர்வழிகள் இருக்கும் நாட்டில்தான் இவர்களைப்போன்றவர்களும் இருக்கிறார்கள்.

கோடிக்கணக்கில் மக்கள் பணத்தை எடுத்து தன் பையில் போட்டுக்கொள்வதையே பார்த்துப்பார்த்து நொந்து போயிந்து கண்களுக்கு இந்த மனிதர்களைப் பார்த்ததும் கண்கணில் தாரைதாரையாக நீர் ஓடியது. அடுத்த நாள் செலவுகளை சமாளிக்க அவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் போராட்டம் நடந்துகொண்டு இருக்கும். ஆனாலும் அடுத்தவர்கள் காசுக்கு ஆசைப்படாமல் இருக்கும் இந்த மனிதர்களால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

இது நடந்தவுடன் இன்னொரு நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது. நாங்கள் சென்னை வந்த புதிது. எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் குடும்பத்தினரும் எங்கள் குடும்பத்தினரும் கோல்டன் பீச் சென்றோம். அங்கே ஒவ்வொரு இடமாக பார்த்துக்கொண்டு வந்து கொண்டிருந்தோம். ஒரு இடத்தில் ஊஞ்சள் இருந்தது. பிள்ளைகள் ஆடத் தொடங்கிவிட்டார்கள். நாங்கள் அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தோம். பிள்ளைகள் விளையாடி முடித்ததும் கிளம்பிவிட்டோம். தமிழ்ச்செல்வன் அமர்ந்திருந்த இடத்திலேயே பர்சை வைத்துவிட்டு வந்துவிட்டார். நாங்கள் ஒரு பத்து நிமிடநேரம் நடந்திருப்போம். அவருக்கு பர்ஸ் மிஸ்சானது தெரிந்துவிட்டது. வந்தவழியே திரும்பி பார்த்துக்கொண்டே சென்றோம். எங்கே அவர் பர்சை வைத்தாரோ அதே இடத்தில் அப்படியே இருந்து. எவ்வளவுபேர் வந்துபோகின்ற இடம்.

நேற்று இன்னொரு சந்தோஷமான நிகழ்ச்சி. ரொம்ப வருஷத்திற்குப் பிறகு வேலூர் கலைச்செல்வியைப் பார்த்தேன். அவங்க பர்சேஸ் முடித்து திரும்பிக்கொண்டிருந்தார்கள். நான் அப்போதுதான் உள்ளே நுழைந்தேன். எதிர் எதிரே பார்த்துக்கொண்டதும் சந்தோஷம் பொங்கியது. ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டோம். 7ம் தேதி திவ்யா கல்யாணத்துல மீதிய பேசலாம்னு சொன்னார். கல்யாணத்துக்கு ஆனந்த், பப்லு எல்லாம் வர்ராங்களாம் என்றார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அறிவொளி இயக்கம் டீம் ஒன்னு கூடப்போகுதுன்னு நினைக்கிறேன்.
மகப்பேறு வரமா? சாபமா?
3/08/2011 | Author: ஜெயந்தி
மகளிர் தினத்திற்காக

ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையில் ஒரு குழந்தையாவது பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்புவாள். பிள்ளை இல்லா பெண்கள் வாழ்நாளெல்லாம் தனக்கு ஒரு பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்திலேயே வாழ்வார்கள்.

அப்படி ஆசையுடன் குழந்தை உருவானபின் பெண்களுக்கு ஏற்படும் உடல்சார்ந்த சிரமங்கள் ஏராளம். ஆனால் பெண் அது அத்தனையும் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டாள். கர்பத்தினால் உண்டாகும் சந்தோஷம் மட்டுமே அவளிடம் எப்போதும் நிலைத்திருக்கும்.

முதல் இரண்டு மாதங்களுக்கு எந்த மாற்றமும் தெரியாது. மூன்றாவது மாதத்தில் இருந்து மசக்கை என்ற வாந்தி மயக்கம் தொடங்கும். சிலருக்கு வாந்தி மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். சிலருக்கு குழந்தை நின்றதிலிருந்து பிறக்கும்வரை வாந்தி இருக்கும். வாந்தி கம்மியாக இருப்பவர்களுக்கும் ஐந்து மாதம் வரை சில வாசனைகளை முகர நேரிட்டால் குமட்டும். ஐந்து ஆறு மாத்திற்கு மேல் முதுகு வலி, இடுப்பு வலி, தொடை வலி எல்லாம் வரும். ஏனென்றால் சுமையை சதா சர்வ நேரமும் சுமந்துகொண்டே இருப்பதால் வரும் வலிகள். குழந்தை பிறக்கும் நேரம் வரும் வலி அம்மம்மா அதை சொல்லி முடியாது. பொருக்க முடியாத வலியாக இருக்கும். ஆனால் ஒவ்வொரு பெண்ணும் அந்த வலியை அனுபவித்தே பிள்ளையை பெற்றெடுக்கிறாள். முதல் பிரசவத்திற்கு அதிக நேரம் வலி இருக்கும். சிலருக்கு ஒரு நாள் முழுக்கக்கூட வலி இருக்கும். குறைந்தபட்சம் 12 மணி நேரமாவது வலி இருக்கும். இரண்டாவது மூன்றாவது டெலிவரி என்றால் வலியின் நேரம் இரண்டிலிருந்து நான்கு மணி நேரம் வரையே இருக்கும். இது சாதாரண பிரசவத்திற்கு அதாவது சுகப்பிரசவம் என்பார்களே அவர்களுக்கு.

சிலருக்கு குழந்தை உருவான பின் பிரஷர், சுகர் போன்றவை வரும். சிலருக்கு அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அம்மா அப்பா நெகடிவ் பாசிட்டிவ் ரத்தங்களாக இருந்தால் குழந்தை உருவானாலும் அம்மாவின் ரத்தமாக இருந்தால் ஒன்றும் ஆகாது. அப்பாவின் ரத்தமாக இருந்தால் அபார்ஷன் ஆகிக்கொண்டே இருக்கும். அதற்கு ஊசி போட்டு டிரீட்மென்ட் கொடுத்து சரியாக பிறக்க வைக்கிறார்கள். எனக்குத் தெரிந்த பெண் ஒருவருக்கு குழந்தை உருவானதிலிருந்து ரத்தப்போக்கு இருந்துகொண்டே இருந்தது. என்னவென்று பார்த்தால், குழந்தைக்கு அம்மாவிடமிருந்து உணவு, காற்று, ரத்தம் அதைத்தையும் எடுத்துச் செல்ல ப்ளாசண்டா எனப்படும் தொப்புள்கொடி இருக்கும். இந்தக் குழந்தை அந்த ப்ளாசண்டாவில் மிதித்து மிதித்து குழந்தைக்குப் போக வேண்டிய ரத்தம் வெளியேறிக்கொண்டிருந்திருக்கிறது. குழந்தை வளர்ச்சி அடையவில்லை. அந்தக்குழந்தையை அபார்ஷன் செய்துவிட்டார்கள். இன்னும் ஸ்கேனில் குழந்தை வளர்ச்சி சரியில்லை என்று தெரிந்தால் அபார்ஷன் செய்துவிடுவார்கள். அபார்ஷன்களும் குழந்தை பிறப்பிற்கு சமமானவை. பெண்களுக்கு இப்படி எத்தனையெத்தனையோ சிரமங்கள்.

சிலருக்கு ஏழாம் மாதம் எட்டாம் மாத்திலேயே குழந்தை பிறந்துவிடும். அதன் பிறகு அந்த குழந்தையை வளர்க்க அவர்கள் அதிக சிரத்தை எடுத்தாக வேண்டும்.

குழந்தை பிறக்கும்போது முதலில் கை, கால் வந்தால் சிரமம், குழந்தை வயிற்றுக்குள்ளேயே மலம் கழித்துவிட்டாலும் சிரமம். இன்னும் கொடி சுற்றிக்கொள்ளுதல் போன்ற நிறைய காரணங்களுக்காக ஆபரேஷன் செய்கிறார்கள். சில மருத்துவமனைகளில் நார்மல் டெலிவரியையே ஆபரேஷன் கேஸாக்கிவிடுவதும் உண்டு. நார்மல் டெலிவரிக்கு ஒருநாள் வேதனை என்றால், ஆபரேஷன் செய்துகொள்பவர்களுக்கு பலநாள் வேதனை. என் உறவுப் பெண்ணுக்கு ஆபரேஷனின்போது கொடுக்கப்படும் குளோரோபாமின் காரணமாக ஐந்துநாள் தலைவலித்தது. அது இல்லாமல் ஆபரேஷன் செய்த வலி. நடமாட முடியாமல் குழந்தையை தூக்க முடியாமல் ரொம்ப அவஸ்தை.

இவை எனக்குத் தெரிந்தவரை உள்ள வேதனைகளே. இன்னும் எனக்குத் தெரியாதவை எவ்வளவு உள்ளதோ. குழந்தை பிறப்பு என்பது தாய்க்கு மறு பிறப்பு என்பார்கள். அதனை மகப்பேறு மருத்துவமனைகளுக்குச் சென்று பார்த்தால் புரிந்துகொள்ளலாம். இத்தனை சிரமங்கள் இருந்தாலும் ஒவ்வொரு பெண்ணும் சந்தோஷமாகவே குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள்.

குழந்தை பிறந்த பின்னும் குழந்தையை வளர்த்து ஆளாக்குவது பெண்களின் தலையிலேயே. சொற்ப ஆண்கள் குழந்தை வளர்ப்பிற்கு சின்னச்சின்ன உதவிகள் செய்வார்கள். சொற்ப ஆண்கள் பிள்ளைகள்மேல் பாசமாக இருப்பது மட்டுமே தங்கள் கடமை என்று நினைப்பார்கள். அதிகபட்சமான ஆண்கள் குழந்தைகளை ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்கள். இன்னும் சிலர் பிள்ளைகளையும் மனைவியையும் விட்டுவிட்டு ஓடிவிடுவார்கள். சிலர் தான் சம்பாதிப்பதையும் குடித்துவிட்டு மனைவி சம்பாதிப்பதையும் அடித்துபிடுங்கிக்குடிப்பார்கள். எப்படி சூழ்நிலையாக இருந்தாலும் தாய்தான் அவர்களை வளர்த்து ஆளாக்க வேண்டும்.

இதில் பெண் குழந்தை பிறந்துவிட்டால் ஏதோ அந்தத் தாயின் மிகப்பெரும் தவறுபோல் தூற்றப்படுவாள். ஆணாகப் பிறக்க வேண்டுமா, பெண்ணாகப் பிறக்க வேண்டுமா என்று தீர்மானிப்பதே ஆண்களின் அணுக்கள்தான்.

மகப்பேறு மருத்துவமனையில் இருந்தபோது ஒரு பெண் மூன்றாவது குழந்தைக்கு ஒருநாளெல்லாம் வலியால் துடித்துக்கொண்டிருந்தாள். "மூணாவது குழந்தையின்னா ஈசியா பெறந்துருமே. இவங்க ஏன் இவ்வளவு சிரமப்படுறாங்க" என்று அங்கே இருந்த நர்சிடம் கேட்டேன். அதற்கு அவர் "அவங்களுக்கு ஏற்கெனவே ரெண்டு பொண்ணு. அதுக்கடுத்து ரெண்டு அபார்ஷன். அதுனால அவங்களுக்கு ஒடம்பு ரொம்ப வீக்கா இருக்கு. அதுனாலதான் அவஸ்தப்படுறாங்க. அவங்க இந்த ஆஸ்பத்திரியிலதான் வேல பாக்குறாங்க" என்று சொன்னார். அபார்ஷன் ஆக்கப்பட்ட இரண்டு கருவும் பெண்ணாக இருந்திருக்கும் என்று புரிந்தது. அந்தப்பெண்ணுக்கு சிசேரியனில் ஆண் குழந்தை பிறந்தது.

அதே நர்ஸ் இதை சொல்லிவிட்டு இன்னொரு தகவலையும் சொன்னார், "இதுவாவது பரவாயில்ல. ஒரு சேட்டு வீட்டு லேடிக்கு ஏழு பொண்ணு. எட்டாவது டெலிவரிக்கு வந்திருந்தாங்க. அவங்க ஒடம்புல ரத்தமே இல்ல. ரத்தம் ஏத்தி டெலிவரி பார்த்தோம். நல்ல வேளை அது ஆண் கொழந்த". இந்தப் பேச்சு நடந்தது 30, 40 வருஷத்துக்கு முன்னால இல்ல. 2011 ஜனவரியில பேசப்பட்டது.

வறுமை நிலையில் இருந்தாலும் தான் சாப்பிடாவிட்டாலும் தன் பிள்ளையை பசியாற்றுவாள் தாய். பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்றென்றால் பதறிப்போவாள். பார்த்துப் பார்த்து கண்ணுக்குள் வைத்து வளர்ப்பாள். பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்த தாய்ப்பாசம். கேட்டால் இது அவர்களுக்குக் கிடைத்த வரம் என்பார்கள். இது வரமா? சாபமா? இதனாலேயே பெண் அடிமையாகிறாள். எல்லா துன்பங்களையும் பொருத்துக்கொள்கிறாள்.

இது உனக்கு கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். கிடைக்காத ஒன்று கிடைத்திருக்கிறது. அதனால் நீ அதை வைத்துக்கொண்டு அடிமையாக இரு. எனக்கு அந்த வரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்துவிடாதே. அந்த வரம் எனக்குக் கிடைத்தால் என்னுடைய சுதந்திரம் சந்தோஷம் எல்லாம் போய்விடும். நான் உலகை ஆளப்பிறந்தவன்.

நீ கேவலமானவள். நான் உயர்ந்தவன் - அந்தக் கேவலங்களால் உருவாக்கப்பட்டவன்தான் நீ.

நீ வலிமையற்றவள். நான் வலிமையானவன் - ஒரு ரோடு ரோலர மேல ஏற விட்டு எந்த சேதாரமும் இல்லாமல் சூப்பர்மேன் மாதிரி எழுவீர்களா? ஒரு சின்ன இரும்புக் கம்பியால் தலையில் அடித்தால் தாங்குவீர்களா?

உனக்கு மாதவிடாய் வருகிறது அதனால் நீ கேவலமானவள் - மகனே அது வரலன்னா நீயே இல்ல. ஒவ்வொரு மாதமும் ஒரு கருமுட்டை உருவாகும். அது கருவாகாவிட்டால் சிதைந்து ரத்ததுடன் வெளியேறும். அடுத்த மாதம் புது கரு உருவாகும். இது மனித இனப்பெருக்கத்திற்கான சுழற்சி. அதையே கேவலமானதாக மாற்றி வைத்திருக்கிறீர்களே.

நீ மாதவிடாய் நேரத்தில் கோவிலுக்கு வரக்கூடாது - அது வரவில்லை என்றால் அந்தக்கோவிலே இல்லையே.

நீ அப்போதுதான் தாயின் வயிற்றில் இருந்து வெளியே வந்திருந்தாலும் நான் பாலியல் பலாத்காரம் செய்வேன் - நீ மனுசனாடா? ஒரு மிருகம்கூட இந்தச் செயலைச் செய்யாது.

நீ எனக்கு பணமும், பொருளும் கொடுத்தால்தான் நான் உனக்கு கணவனாக இருப்பேன் - அது வேசித்தனம்.

நீ எவ்வளவு பணம் நகை கொண்டு வந்திருந்தாலும், வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதித்தாலும் நீ எனக்கு அடிமை என்பதை மறந்துவிடக்கூடாது - ஒரு அடிமையைத்தான் காசு கொடுத்து வாங்குவார்கள். இங்கே தலைகீழாய் மாற்றி வைத்திருக்கிறீர்களே.

நீ வேலைக்குச் சென்றாலும் பிள்ளைகளையும் வளர்த்துக்கொண்டு வீட்டையும் நீதான் கவனிக்க வேண்டும் - நான் வலிமையானவன். நான் சும்மாவே இருப்பேன்.

சரி இப்படியெல்லாம் எங்களை வைத்திருக்கிறீர்களே உலகத்துப் பெண்கள் எல்லாம் ஒருநாள் கூடி நமக்கு இந்த உலகத்துச் சந்தோஷங்கள் சொந்தமில்லை அதனால் நாம் மனித உற்பத்தியை நிறுத்திவிடுவோம் என்று முடிவெடுத்தால் என்ன செய்வீர்கள்.

ஒரு சின்ன கஷ்டம் வந்தாலும் உடனே வீட்டைவிட்டு ஓடிவிடுகிறீர்கள் அல்லது தற்கொலைக்கு முயல்கிறீர்கள். ஆனால் மெலிந்தவர்கள் என்று சொல்லப்படும் பெண் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் அவ்வளவிலும் சமாளித்து பிள்ளைகளை நல்லபடியாக வளர்த்து நிற்பாள்.

இது அனைத்து ஆண்களிடமும் கேட்கப்படுபவை அல்ல. பெண்களை புரிந்துகொண்ட பெண்களும் உலகத்தில் சந்தோஷமாக வாழ வேண்டியவர்களே என்று நினைக்கும் ஆண்களும் இதே உலகத்தில்தான் இருக்கிறார்கள். அவர்களால்தான் நிறையப் பெண்களால் நிம்மததிப்பெருமூச்சு விட முடிகிறது.

டிஸ்கி : இவ்வளவு நாள் இணையப்பக்கம் வரமுடியாத சூழல். இப்போதும் தற்காலிகமாகவே வந்திருக்கிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே முழுமையாக வருவேன் என்று நினைக்கிறேன். எனக்கு பின்னூட்டமிட்டு அன்பை தெரிவித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. நான் இல்லாதபோதும் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய பன்னிக்குட்டி ராமசாமி அவர்களுக்கு நன்றி. எனக்கு விருது வழங்கிய எம்.அப்துல் காதருக்கும் நன்றி. என்னை மறந்துருராதீங்க நண்பர்களே.
பதிவுலகம்
12/04/2010 | Author: ஜெயந்தி
வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த ப்ளாக் எனக்கு அறிமுகமானது. வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது. பார்க்காமல் பேசிக்கொள்வது, பாராட்டிக்கொள்வது, திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக்கொள்வது உண்மையிலேயே இது வேறொரு உலகம்தான். இந்த உலகம் எனக்கு மிகவும் பிடித்தமான உலகமாக மாறிப்போனது. எத்தனை எத்தனை உறவுகள். நட்புகள்.

ப்ளாக் தொடங்குவற்கு முன் என்னால் எழுத முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. என்னையும் எழுத வைத்திருக்கிறது கூகுள். என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்களை எழுத வைத்திருக்கிறது. எத்தனை விதமான அனுபவங்கள் எத்தனை விதமான சிந்தனைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான எழுத்துக்கள். பத்திரிகைன்னு எடுத்துக்கொண்டால் ஒரு சிலர் மட்டுமே எழுத முடியும். அதிலும் தரம் என்று ஒன்று வைத்திருப்பார்கள். இங்கே அதெல்லாம் இல்லை. நமக்கு நாமே ராஜா. அதற்காக ப்ளாக் உலகம் ஒன்றும் பத்திரிகை உலகத்திற்கு குறைந்தது என்று நான் நினைக்கவில்லை.

சிலர் எழுத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைப்போல் சிலர் எழுத்துக்கள் பரவாயில்லாமல் இருக்கும். அவரவர் படிப்பு, அறிவு, வளர்ந்த விதம், சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரியே எழுத்துக்கள் அமையும். அதனால் எல்லா எழுத்துக்களும் அவர்களது உணர்வுகளே என்ற வகையில் நான் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

நாம் எழுதுவதை இன்னொருவர் பாராட்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் எழுதுவதையும் பாராட்டுகிறார்களே என்று எனக்குத் தோன்றும். நிச்சயம் எல்லோருக்கும் பின்னூட்டம் அதே மகிழ்ச்சியை அளிக்கும் என்று நினைக்கிறேன். நானும் நிறைய பேருக்கு பின்னூட்டமிட நினைப்பேன். என்னுடை வேலைகளுக்கு நடுவே குறைந்த அளவே பின்னூட்டமிட முடிகிறது என்பது எனக்கு மிகப்பெரிய குறையே. ஒருவருக்கு ஒருவர் வாக்களித்துக்கொள்வது, நாம் ஒருவருக்கு வாக்களித்தால்தான் நாமும் நமக்கான வாக்கை எதிர்பார்க்க முடியும். இது ஒன்றும் ஒன்வே இல்லையே.

இப்படியே சந்தோஷமா போயிட்டிருந்த ப்ளாக் உலகத்துல ஒரு சின்ன தேக்கம். சிலபல காரணங்களுக்காக மூன்று மாதங்களுக்கு என்னால் இந்தப்பக்கம் வர முடியாது. மக்களே என்னை மறந்துறாதீங்க. எப்பவாவது நேரம் கிடைத்தால் இந்தப்பக்கம் வருவேன். (யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும், சவுந்தருமா?)

ஆரஞ்சு கலர் பட்டுப்புடவையை பார்த்தால்
அதை வாங்கிக்கொடுத்த அக்காவின் ஞாபகம்

மயிலிறகைப் பார்த்தால்
சிறுவயது பள்ளித்தோழனோடு
புத்தகத்தில் குட்டிபோட வைத்து
மயிலிறகு வளர்த்த ஞாபகம்

சுவரில் தொங்கும் இயற்கைக் காட்சி படத்தைப்பார்த்தால்
ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போது கொடுத்த
தோழி ஞாபகம்

யாருக்காவது எதைப்பார்த்தாவது
என் ஞாபகம் வருமா?

டிஸ்கி: இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.
சிலர் தமிழ்படங்களை விமர்சிப்பதைப்பார்க்கும்போது எனக்கு பயங்கர கோபம் வரும். நாம் அருமையான படம் என்று நினைத்திருப்போம், அந்தப்படத்தை குறைகூறி கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருப்பார்கள். பிறகு நமக்கு கோபம் வராதா? இவர்கள் எந்தப்படத்தைத்தான் நல்ல படம் என்று கூறுவார்கள் என்று தோன்றும். இவர்களுக்கு ரசனையே இல்லையோ என்றும் நினைப்பேன்.

எங்க மாமாவும் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏதாவது ஒரு நல்ல படம் பார்க்கலாமா என்று கேட்டேன். அவர்கள் அளித்தபதில் இதேபோல் எனக்கு கோபத்தை ஊட்டியது. எங்களுக்கு தமிழ்படமே பாக்க முடியல என்றனர். ஏதோ பிலிம் சொசைட்டியில் மெம்பராம். வாரம் ஒரு உலகப் படம் போடுவார்களாம். அதைப்பார்த்துவிட்டு தமிழ்படம் பார்க்க முடியவில்லை என்றனர். அது நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மாமா என்பதால் சின்ன கோபத்தோடு போயிற்று.



இப்போது சில வருடங்களாக என் பிள்ளைகளின் தயவில் சில உலகப்படங்கள் நானும் பார்க்கிறேன். ஆங்கில சப் டைட்டிலுக்கே எனக்கு தமிழில் மொழிபெயர்ப்பு செய்யனும். அப்படி சமீபத்தில் பார்த்த படம் The Way Home 2002 - வீடு திரும்பல் என்ற கொரியன் பிலிம். முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு கூன் வளைந்த வாய் பேச முடியாத ஒரு கிழவி, ஒரு 7-8 வயது சிறுவன். அந்தச் சிறுவனின் அம்மா மகனை தன் தாயிடம் (சிறுவனின் பாட்டி) கொஞ்சம் நாட்கள் விட்டுச் செல்கிறார். மலைமேல் அமைந்த கிராமம். அதிலும் அவங்க பாட்டி வீடு இன்னும் மேலே தனியாக இருக்கும்.

சிட்டியில் வளர்ந்த பையன். அவனுக்கு அந்த ஊர், அந்த வீடு, அந்தப்பாட்டி எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் அவர் அம்மா வலுக்கட்டாயமாக விட்டுச் செல்கிறார். அவன் தன் பாட்டியிடம் பேசவே மாட்டான் அவ்வளவு பிடிக்காது. அந்த சில நாள் பாட்டியுடனான வாழ்க்கை அவனுக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை.

அந்த நாட்களில் அவர்கள் இருவரும் சாதாரணமான வாழ்க்கையில் ஏற்படுவது போன்ற நிகழ்வுகளே இருக்கும். மலையில் விளையும் பொருட்களை பஸ்சில் பக்கத்து ஊருக்கு எடுத்துச்சென்று விற்றுவிட்டு வந்தால்தான் பாட்டிக்கு காசு. சிட்டியில் பீஃசா, பர்கர் என்று சாப்பிட்டு வளர்ந்த பையன். பேரன் மீது பாசம் மட்டுமே காட்டும் பாட்டி. ஊருக்குச் செல்லும் நாள் வரும்போது பாட்டியின் அன்பை புரிந்துகொள்ளும் சிறுவன்.

இதில் வரும் காட்சிகள் அனைத்தும் சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள்தான். திடுக் சம்பவங்களோ, குளோசப் காட்சிகளோ, முகம் துடிக்க, கண்கள் கலங்க நடிக்கும் காட்சிகளோ இல்லை. நாம் நம் வாழ்க்கையில் எப்படி இருப்போம் அதே போன்ற காட்சிகள்தான். மெல்ல அந்த மலைப் பாதையில் நடந்து செல்லும் பாட்டி. படமும் மெதுவாகத்தான் செல்லும். மெதுவாகச் செல்வதால் போர் அடிக்கவில்லை. தொடர்ந்து பார்க்கும் ஆவலைத்தான் தந்தது. படம் முடிந்தவுடன் மனதில் தோன்றும் கனமான உணர்வு. அந்தப் படத்தைப் பார்த்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இன்னும் அந்தப்பாட்டியும், எனக்குப் புரியாத மொழியில் பேசும் அந்தச் சிறுவனும் என் நினைவில் அடிக்கடி வருகிறார்கள். இதைத்தான் உலகப் படம் என்று கொண்டாடுகிறார்கள்.



இப்படிப்பட்ட படங்களையே பார்ப்பவர்களுக்கு தமிழ்ப்படங்கள் ஏமாற்றத்தைத்தானே அளிக்கும். இந்தப் படங்களைப் பார்த்த பிறகு தமிழ்ப்படங்களை விமர்சிப்பவர்களின் ஆதங்கம் புரிகிறது. அவர்களின் விமர்சனமும் எனக்கு கோபத்தை அளிப்பதில்லை. புரிந்துகொள்ளவும் முடிகிறது.

இப்போ வந்துள்ள நந்தலாலா படத்தின் காட்சிகள் டிவியில் பார்க்கும்போது மேற்சொன்ன படங்களின் சாயல் தெரிகிறது. நம்ம ஊருலயும் உலகப்படமான்னு தோணுது. அந்தப்படத்த வச்சு ரெண்டு விதமான கருத்துக்கள் இணையவெளியில் இருப்பதை அறிகிறேன். இரண்டுமே தவறல்ல. ஒன்று இந்த மாதிரி படங்கள் தமிழில் தேவை. இதைப் பார்த்தாவது மக்களும் சினிமான்னா என்னவென்று தெரிந்துகொள்ளட்டும், ஒன்றிரண்டு இயக்குனர்களாவது இதைப்போல படமெடுக்க முனைவார்கள் என்பது. இவர்கள் நினைப்பு ரொம்ப சரி. இரண்டாவது ஜப்பான் படத்தை முன்மாதிரியாக வைத்து எடுத்துவிட்டு அந்தப் படத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பது. இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. பூ, பேராண்மை போன்ற படங்களில் டைட்டிலில் போட்டிருந்த அந்த ஆங்கிலப்படங்களின் பெயர்களை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்தந்த இயக்குநர்களின் படங்களாகவே பார்த்தார்கள். இவரும் அதைப்போல் போட்டிருக்கலாம். இப்போது அதை வைத்து நடக்கும் சர்ச்சைகளால்தான் இந்த விஷயம் மக்களுக்கு தெரிகிறது. சிறிதாக ஒரு வரி போட்டிருந்தால் மிஷ்கின் படமாகவே அனைவரும் பார்த்திருப்பார்கள்.

டிஸ்கி :  The Way Home 2002 - வீடு திரும்பல் இந்தப் படத்தின் விமர்சனம் பிரசன்னா (கொத்து பரோட்டா) நன்றாக செய்துள்ளார்.
காதல் திருமணம்
11/26/2010 | Author: ஜெயந்தி
சமீபத்தில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மணமக்கள் மேடைக்கு சற்றுத்தள்ளி சிறிய மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அதில் அப்பா மேல் சிங்கர் (ஆண் பாடகர்), 12 வயது மகள் ஃபிமேல் சிங்கர் (பெண் பாடகர்),  இன்னும் இரண்டு மூன்று ஆண்கள் கீ போர்ட் மற்றும் வாத்தியங்கள் வாசித்தார்கள். அம்மா சவுண்டை சரிபண்ணும் கருவியை மேடை மேல் வைத்துக்கொண்டு மேடைக்கு கீழே சேர் போட்டு அமர்ந்து கொண்டு சவுண்டை சரி பண்ணிக்கொண்டிருந்தார். அவர்களின் மகன் 3-4 வயதிருக்கும் நான்கு மேளங்கள் இணைந்தார்போல் ஒரு இணைப்பை அவன் முன் வைத்து ட்ரம்ஸ் அடிக்கும் குச்சியை வைத்து அடித்துக்கொண்டிருந்தான். அவனும் அம்மாவைப்போலவே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே அமர்ந்திருந்தான். அந்தப் பையனைப் பார்த்தவுடன் இப்படித்தான் சூப்பர் சிங்கரில் பாடிய ஸ்ரீகாந்தும் உருவாகியிருப்பான் என்றாள் என் மகள்.

ஸ்டேஜில் இருக்கும் அப்பா அம்மாவை கண்களால் அழைத்து மகன் எங்கே என்று கேட்கிறார். திரும்பிப்பார்த்த அம்மாவின் முகத்தில் சின்ன பதற்றம். பக்கத்தில் மகனைக் காணவில்லை. இருவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே கண்களால் தேடுகிறார்கள். அப்பா உயரமான இடத்தில் நிற்பதால் மகனை உடனே கண்டுபிடித்துவிடுகிறார். அம்மாவிடம் கண்களாலேயே சுட்டிக்காட்டுகிறார். கல்யாணத்திற்கு வந்த இன்னொரு குழந்தையின் அருகே இருக்கும் சேரில் இந்தக் குழந்தை ஏறமுடியாமல் ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவித நிம்மதியுடன் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள்.



கண்களால் பேசிக்கொள்ளும் மொழியை எந்த மொழியாலும் வெல்ல முடியாது. இதை எந்த மொழியாலும் அழிக்கவும் முடியாது. காதலர்கள் கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம்.

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ

கண்களின் மொழிகளைப்பற்றிய அருமையான பாடல்களும் உள்ளன.

மணமக்களின் திருமணம் காதல் திருமணம். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது. சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும் மாறவில்லை.

சாதிகள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் மணங்களும் நடந்திருக்கும். எத்தனை எதிர்ப்பு இருந்த போதிலும், காதல் மரணங்கள் இருந்த போதிலும் இந்தக் காதல் மட்டும் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் காலகாலத்திற்கும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. புதிதாக பிறந்துகொண்டே இருக்கிறது. உலகத்தை வாழ வைப்பதே காதல்தானே.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் அதற்கேற்ற சட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம். இத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கிறதே. அவர்களுக்கு நிறைய சலுகைகள் அளித்து சாதியற்ற ஒரு குழுவை உருவாக்கலாம். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் சாதியை வெறுக்கும் அனைவரும் அதில் இணையலாம் என்று கூறலாம். அவர்களுக்கு வேலை, படிப்பு அனைத்திலும் முன்னுரிமை அளிக்கலாம். மெல்ல மெல்ல இந்தக்குழு பல்கிப்பெருகி சாதியில்லாத நிலைமையை உருவாக்கும். சாதியற்ற தமிழகம் உருவாகும். நினைக்கவே நல்லாயிருக்கில்ல. ம்ம்ம்...

டிஸ்கி : கண்களால் பேசிக்கொள்ளும் பாடல்களை பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.
ஆதி காலத்துல குகைகளில் நமது வாழ்க்கை இருந்தது. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தோம். பின்னர் அதையே வேக வைத்து உண்ணவும் கற்றுக்கொண்டோம். விவசாயம் வீட்டு விலங்கு வளர்ப்பு என்று காலங்கள் மாறிக்கொண்டே வந்தது. காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை பண்படுத்தி வந்தமையே பண்பாடு என்கிறோம். அப்படி மாறி வந்த பண்பாடுதான் இன்று நம்மை கணினி முன் அமர வைத்திருக்கிறது.

கலாச்சாரம் என்பது நமக்கான வாழ்க்கை முறைக்கான சட்ட திட்டங்கள். சமூகத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல இத்தகைய சட்டதிட்டங்கள் தேவையாக இருக்கிறது. இதுவும் ஆதி காலத்தில் இருந்து காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இப்போது உள்ளது நம் கலாச்சாரமா? நூறு ஆண்டுக்கு முன் இருந்தது நம் கலாச்சாரமா? என்று தேடிக்கொண்டு போனால் குகைகளில் போய்தான் அடையணும்.

மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு. ஒரு ஒழுங்கு உண்டு. பக்கத்துத்தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும்.

இந்த கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு நாட்டிற்க்கும் மாறுபடும். அவர்களின் பூகோள அமைப்பு, தட்பவெப்பம் போன்றவற்றிற்கு ஏற்ப அவரவர் கலாச்சாரத்தை அமைத்துக்கொண்டார்கள். உடையையே எடுத்துக்கொண்டால் தமிழ் நாடு வெப்ப பூமி என்பதால் பருத்தியால் நெய்த வேட்டியை கட்டிக்கொண்டார்கள். அதே வேட்டிதான் பெண்ணுக்கும், மேலே மறைப்பு ஏதும் இல்லாமல். குளிர் பிரதேசங்களில் கோட், சூட். பாலைவனங்களில் மணல் மேலே விழாமல் இருக்க தலையிலிருந்து கால் வரை மறைக்கும் ஆடைகள். பனிப்பிரதேசங்களில் விலங்குகளில் தோல்களினால் ஆன ஆடைகள். இந்த உடைகள் ஆரம்பகாலங்களில் ஆண் பெண் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருந்தது. பின்னர்தான் மாற்றமடைந்தது.

இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம் உயர்ந்தது என்பதெல்லாம் இல்லை. அவரவர்களின் வாழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டதே இவை. அவரவர்களுக்கு அவரவர் கலாச்சாரம் உயர்ந்தது.



நாம் சிந்து சமவெளி நாகரீக காலங்களிலேயே சுட்ட செங்கற்கலால் வீடுகட்டியும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற வசதிகளுடனுன் வாழ்ந்து வந்த கலாச்சாரம் நமது. இப்போது உலகத்தில் சிறந்த உணவுகளில் முதலாவது இடத்தைப் பிடிப்பது இந்திய உணவுகள்தான். நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு.

நம் கலாச்சாரங்களில் பிற கலாச்சாரக் கலப்பு என்பது ஆரிய, இஸ்லாமிய, ஆங்கிலேயர் வருகைகளின்போது நடந்திருக்கும். அதுவும் பெரும் அளவில் நம் கலாச்சாரத்தை நாம் விட்டுக்கொடுத்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு நம்மிடமிருந்து சிலவற்றை அவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோம்.

நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது களைந்துகொண்டேதான் இருக்கிறோம். இப்போதுகூட ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதில் உள்ள அதிகபட்ச சிரமங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு டைவோர்ஸ் செய்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்ளலாம் என்ற மாற்றம் வந்துள்ளது. இன்னும் மாற்றங்கள் தேவை. அதை நாம்தான்  செய்துகொள்ள வேண்டும்.

ஆனால் இப்போது நடப்பதைப் பார்க்கும் போது அந்நியக் கலாச்சாரம் நம்மேல் திணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நடப்பவை அந்த நினைப்பைத் தருகின்றன. அந்நிய உடை ஏற்கெனவே நுழைந்துவிட்டது, உணவு, விழாக்களும் அவர்களுடையதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இந்த லிவிங் டு கெதர் என்கிற கலாச்சாரம் அப்படி எளிதாக கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

இந்தியில் லிவிங் டு கெதர் வாழ்க்கை பற்றிய படங்கள் நிறைய வருகிறதாம். வட மாநிலங்களில் இந்தக் கலாச்சாரம் புகுந்துவிட்டதாம். தமிழ்நாட்டில்கூட நடந்துகொண்டிருக்கலாம். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை தாராளமயக்கொள்கையின் விளைவா?

அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிப்பவர்கள். லஞ்ச லாவண்கங்களில் மூழ்குவதில்லை. அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக்கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும்.

நமது நாட்டில் அதுவும் சமீப காலங்களில் சரியாகச் சொன்னால் உலகமயமாக்கலுக்குப்பின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், (எனது இந்த இடுகையை படிக்கவும்) பணத்தைத் துரத்திச் செல்வது, லஞ்சலாவண்யங்கள் தலைவிரித்தாடுவது போன்றவற்றைப் பார்க்கும்போது மனிதாபிமானத்தைத் தேட வேண்டியிருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் கலாச்சாரம் இருக்கும்போதே இரண்டு மூன்று மனைவிகளை வைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில் ஓமலூரில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள் என்று சொல்லப்பட்டது. பிறகு அவளது கர்ப்பப்பையில் 50 வயது ஆணின் விந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இப்படியான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த லிவிங் டு கெதர் சரிப்பட்டுவருமா?

இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.

டிஸ்கி : இது எந்தப்பதிவுக்குமான எதிர்ப்பதிவு அல்ல. என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.
என்கவுண்டர்
11/11/2010 | Author: ஜெயந்தி
குழந்தைகளை கொன்றவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான் என்ற செய்தியைப் பார்த்தவுடன் மனதில் சந்தோஷமே தோன்றியது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைவரின் மனநிலையும் அதுவாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது உணர்வு ரீதியாக சரி. ஆனால் ஜனநாயக நாட்டில் வாழும் நாம் இதை சரியென்று ஆமோதித்தால் ஜனநாயகத்தை மதிக்காத செயல்போல் இல்லையா? நிச்சயம் இதுபோன்ற குற்றங்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியாத குற்றங்கள்தான். இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை அரசாங்கம் உடனடியாக விசாரித்து மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை சட்டப்படி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றினால் அதைப்பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வரும். அதைவிடுத்து இதைப்போன்ற விசாரணையற்ற என்கவுண்டர்கள் தேவையா? இந்த என்கவுணடரில் உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான் என்ற அளவில் சரி. இதேபோல் சரியாக விசாக்கப்படாத என்கவுண்டர்களில் குற்றம் செய்யாமல் யாராவது இறக்க நேரிட்டால்?

மக்கள் சில விஷயங்களில் மட்டும் பொங்கி எழுவது ஏன்? இதேபோல நிறைய நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவர்கள் அமைதியாக ஏன் இருக்கிறார்கள். எல்லா விஷயங்களிலும் மக்கள் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தாலே அரசாங்கம் பயப்படும். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை சட்ட ரீதியாக அளிக்கப்படும். குற்றம் செய்ய நினைப்பவர்களும் பயப்படுவார்கள்.



அம்பிகா என்ற இளம் பெண் நோக்கியா கம்பெனியில் பணி நேரத்தின்போது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டார் என்று சன் டிவியில் செய்தி பார்த்தேன். அதில் அவர்கள் மேலும் சொன்னது மெசினில் மாட்டிக்கொண்ட அம்பிகாவை உடனே வெளியே எடுக்க வேண்டுமென்றால் மெசினை உடைக்க வேண்டும். மெசின் இரண்டு கோடி என்பதால் அதை உடைக்கவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அம்பிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு மனது பதறியது. இரண்டு மணி நேரம் அந்த சிறு பெண் மெசினுக்குள் அணுஅணுவாக இறந்து கொண்டிருந்தாள். சித்ரவதைக்கொலை இல்லையா? உயிரைவிட மெசின் முக்கியமா? இதைப் பார்த்தவுடன் ப்ளாக்கில் எழுத வேண்டும் என்று இருந்தேன். இன்ட்லியில் பார்த்துக்கொண்டு வந்தபோது அம்பிகா பற்றி வினவில் வந்திருந்ததைப் பார்த்தேன்.

அவர்கள் விரிவாக எழுதியிருந்தார்கள். அதில் வந்த அந்தத் தாயின் படம், என்னால் அந்தத் தாயின் படத்தையே பார்க்க முடியவில்லை. அம்பிகாவிற்கு ஜனவரியில் திருமணம் ஏற்பாடாகியிருந்ததாம். அவள் தனது வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கனவுகள் கண்டிருப்பாள். அத்தனை கனவும் அந்த மெசினுக்கும் நோக்கியாவிற்கும் அர்ப்பணமா? இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பன்னாட்டுக் கம்பெனிகளும் நம் மக்களின் உயிரை சூறையாடத் தொடங்கிவிடாதா?

விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலையேற்றம் என்று எதற்கும் யாருமே எந்த ரியாக்சனும் இல்லாமல் இருக்கிறார்களே? யாராவது பந்த் நடத்தினால்கூட கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்களே இதைப் பற்றியெல்லாம் ஏன் யாருமே கவலைப்படுவதில்லை என்று தோன்றும். இரண்டு நாட்களுக்கு முன் கல்வெட்டு அவர்களின் ப்ளாக்கில்

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்


நாமெல்லாம் டியூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போது கோபப்பட வேண்டும். எதற்காக கோபப்பட வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும் என்றெல்லாம் டியூன் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதற்கேற்றார்போலவே நடந்துகொள்கிறார்கள்.

இவ்வளவிலும் எனக்கொரு சந்தோஷம். மக்கள் ஒன்றுதிரண்டு கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அவர்களுக்கு கொந்தளிக்கவும் தெரிகிறது. அதைப் பார்த்தவுடன் மனதுக்கு நிறைவாக இருந்தது. என்ன நடந்தாலும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறேன். அவர்களின் இந்தக்கொந்தளிப்பு சந்தோஷத்தையே கொடுத்தது.

ஒன்று நாமாக சிந்தித்து சமுதாயத்தை மாற்ற வேண்டும். அது இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு மாற்றுவார்கள் என்று தோன்றவில்லை. நம்மையெல்லாம் நல்ல வழியில் டியூன் செய்து வழி நடத்திச் செல்ல ரட்சகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லவர்களால் டியூன் செய்யப்பட்டாவது அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்.