செல்வேந்திரன் வீட்டுக்கு யட்சியும், ஆதி வீட்டுக்கு விரலியும் வந்திருப்பதாக அறிந்தேன். நம்ம வீட்டுக்கு யாருமே வரலயேன்னு மனசு முழுக்க சோகம். மொச்சக்கொட்டயும் நெத்திலிக் கருவாடும் போட்டு குழம்பு வைத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று பேச்சுக் குரல் கேட்டது. யாரது? அம்மா ஹால்ல டிவி பார்த்துக்கிட்டிருந்தாங்க. சுத்தி முத்தி பார்த்தேன்.

"நான் இங்கயிருக்கேன். இங்க பாரு"

சமையல் மேடையில டம்ளர் அருகே இருந்துதான் குரல் வந்தது. தெரிந்துவிட்டது. எங்க வீட்டுக்கும் யாரோ வந்துட்டாங்க.

"நீ வந்தது ரொம்ப சந்தோஷம்" என்றேன்.
"இந்த வழியா போயிக்கிட்டிருந்தேன். நீ வச்ச கருவாட்டுக் கொழம்பு வாசம் என்ன இங்க கூட்டிட்டு வந்திருச்சு" என்றாள்.
"உன் பேரென்ன"
"இசக்கி"
" கொஞ்சம் இரு இந்தா வாரேன்"



ஹாலில் டிவியில் இத்தனை கல்யாணம் ஆகியும் இன்னும் கன்னி கழியாத கஸ்தூரியைப் பார்த்து கண் கலங்கிக் கொண்டிருந்த அம்மாவிடம் ஓடினேன்.

"அம்மா இந்த யட்சி வந்து மண் பானைக்குள்ள இருக்கும்னு சொல்றாங்க. விரலி வந்து சீசாவுக்குள்ள இருக்கும்னு சொல்றாங்க. இந்த இசக்கி எங்க இருக்கும்" என்றேன்.

இவ்வளவு நேரம் ஸீரோ வாட் பல்ப் போல இருந்த என் முகம் இப்போது 1000 வாட்ஸ் பல்பு போல மின்னுவதை ஒரு மாதிரியாக பார்த்துக்கொண்டே அம்மா கேட்டாள்
"இப்போ திடீர்னு எதுக்கு அத கேட்குற"
"இல்லம்மா இந்த ப்ளாக் படிக்கிறேன்ல அதுலதான் போட்டுருந்துச்சு. இசக்கிக்கு ஒன்னுமே போடல அதுதான் ஒனக்கு ஏதாவது தெரியுமான்னு கேட்டேன்"
"எனக்கும் சரியாத் தெரியல. பீங்கானா இருக்கலாம்னு நெனக்கிறேன்" என்றாள்.
சமையலறைக்கு ஓடினேன். பீங்கான் டீ கப்பை எடுத்தேன். அதற்குள் இசக்கியை வைத்தேன். அப்போது இசக்கி சொன்னாள்
"கொஞ்ச கேப்பக் கழியும் கிண்டிறு. கருவாட்டுக் கொழம்புக்கு நல்லா இருக்கும்"
"சரி நீ இங்க இரு நான் சமையல முடிச்சிட்டு வர்றேன்"
என்று சொன்னவாறே கப்பை சர்க்கரை டப்பாவின் பின்னே டீ கப்பை மறைத்தேன்.

கேப்பைக் கழி கிண்டும்போது வந்த அம்மா கேட்டாள்,
"இப்ப ஏன் கழி கிண்டுற?"
"இல்ல கருவாட்டுக் கொழம்புக்கு நல்லா இருக்கும்னு. சாப்புடனும் போலஇருந்துச்சு"
அம்மா சந்தேகத்துடன் பார்த்தவாறே குளிக்கச் சென்றாள்.
நான் அவசரமாக ஒரு தட்டில் சோறும் கருவாட்டுக் குழம்பும், ஒரு தட்டில் கேப்பக் கழியும் கருவாட்டுக் குழம்பும் ஊற்றி இசக்கியிடம் தந்தேன். அவள் அதை ருசித்துச் சாப்பிட்டாள்.
"உன்னோட கை பக்குவம் நல்லா இருக்கு. சாப்பாடு ரொம்ப ருசியா இருந்துச்சு" என்றாள்.
இந்த சந்தர்ப்பத்த நாங்க தவற விடுவோமா?
"ஆமா ஆமா என்னோட சமையல சாப்புடுற எல்லாருமே அப்டித்தான் சொல்லுவாங்க" என்றேன்
வயிறு நிறைந்த திருப்தியுடன் இசக்கி கேட்டாள்,
"ஏதாவது கேளு தர்றேன்"
"என்ன கேட்டாளும் தருவியா?"
"தங்கம் வேணுமா? வைரம் வேணுமா? அரண்மனை மாதிரி வீடு வேணுமா? தயங்காம கேளு. எனக்கு யட்சி, விரலிய எல்லாம் விட சக்தி அதிகம்" என்றாள். நான் உற்சாகத்துடன் கேட்கத் துவங்கினேன்.

"இங்க வந்து இந்த மேல் சாதிக்காரங்க கீழ் சாதிக்காரங்கள ரொம்ப கொடுமப்படுத்துறாங்க. அதுனால சாதியே இருக்கக்கூடாது. அப்பறம் இந்த அரசியல்வாதிங்க அவங்க சொந்த லாபத்துக்காக மதச் சண்டைய மூட்டிவிட்டு ஏராளமான பேர சாகடிக்கிறாங்க அதுனால மதமும் இருக்கக் கூடாது. அப்பறம் என்னோட இனம்தான் ஆளனும், வாழனும் அடுத்த இனம் சாகனும்னு நெனக்கிறாங்க. அதுனால இனமும் இருக்கக் கூடாது. அப்பறம் கொஞ்ச பேரு காச வச்சிக்கிட்டு எப்டி செலவு பண்றதுன்னு தெரியாம இருக்குறாங்க. நெறய பேரு சாப்புட சாப்பாடு இல்லாம, இருக்க வீடுகூட இல்லாம பிளாட்பாரத்துல இருக்காங்க. அதுனால எல்லாருக்கும் சமமான அளவுல வசதி இருக்கனும். அப்பறம் கோடுகள் இல்லாத உலகம் வேண்டும்... அய்யய்யோ... இசக்கி... இசக்கி... என்னாச்சு?"

இசக்கி டீ கப்புக்குள்ளேயே மயங்கி சரிந்து கொண்டிருந்தாள்.
ஆண்கள் அழலாமா?
4/02/2010 | Author: ஜெயந்தி
எங்க அம்மா இருக்காங்களே அவங்களால வேலை செய்யாம இருக்கவே முடியாது. வேலை செய்வது ஒன்றே அவர்கள் வாழ்க்கை லட்சியம் என்பதுபோல் எப்போது பார்த்தாலும் ஏதாவது ஒரு வேலை செய்துகொண்டே இருப்பார்கள். வீட்டில் நாங்கள் எல்லோரும் இருந்தாலும் காலிங்பெல் அடித்தால் அவர்கள்தான் ஓடுவார்கள் கதவைத் திறக்க. வயது 65 ஆகிறது.

ஒரு நாள் என்னாச்சு வெளியே மழை பெய்யத் தொடங்கிய சத்தம் கேட்டவுடன் காயப்போட்ட துணிகளை எடுக்க அவசரமாக கட்டிலில் இருந்து இறங்கும்போது கால் இடறி அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள். அவ்வளவுதான். எந்திரிக்கவே முடியவில்லை. எனக்கு அலுவலகத்திற்கு போன் வந்தது. அப்போதே முடிவு செய்துவிட்டேன். அது ஃப்ராக்சராகத்தான் இருக்கும். வீட்டிற்குச் சென்று அம்மாவைத் தூக்கி ஆட்டோவில் திணித்துக்கொண்டு ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கே டாக்டரிடம் அம்மா வலிக்கிறதாகச் சொன்ன இடத்தில் எக்ஸ்-ரே எடுத்தார்கள். அதில் ஒன்றும் அவர்களுக்கு தெரியவில்லை. திரும்பவும் எங்க வலிக்குதுன்னு கேட்டாங்க. அம்மாவும் கால் உடம்போடு சேரும் (முன் பக்கம்) இடத்தைக் காட்டினார்கள். திரும்பவும் ஒரு எக்ஸ்-ரே அப்பவும் அவங்களுக்கு ஒன்னும் கண்டுபிடிக்கமுடியவில்லை. எம்ஆர்ஐ ஸ்கேன் எழுதிக்கொடுத்தார்கள். அதை எடுக்கச் சென்ற இடத்தில் மெசின் ரிப்பேர் ஆகியிருந்தது. நாங்கள் ஒரு முக்கால் மணி நேரம் காத்திருந்து பிறகு ஸ்கேன் எடுத்துச் சென்றோம். அந்த ஸ்கேனில் பார்த்தால் எங்கம்மா சொன்ன இடத்திற்கும் எலும்பு உடைந்திருந்த இடத்திற்கும் சம்பந்தமே இல்லை. அம்மா முன் பக்கத்தைக் காட்டினார்கள். ஆனால் பின் பக்கம் முதுகெலும்பு முடியும் இடத்திற்கு சற்று கீழே தள்ளி இருந்தது. நல்ல வேளை அது ஃப்ராக்சர் இல்லை. கிராக்தானாம். 6 வாரம் பெட் ரெஸ்ட் எடுத்தால் சரியாகிவிடும் என்று வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள்.

அந்த எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கச் சென்றபோது நடந்த நிகழ்ச்சிதான் என் மனதிலேயே நிற்கிறது. ஸ்கேன் மிசின் ரிப்பேர் என்று முக்கால் மணி நேரம் நிற்க வைத்தார்கள் அல்லவா? காத்திருந்தபோது ஒரு அழுகைச் சத்தம் கேட்டது. யாரதுன்னு பார்த்தபோது நாங்கள் நின்ற இடத்திற்கு எதிர்புறத்தில் எங்களைப்போலவே எம்ஆர்ஐ ஸ்கேனிற்காக காத்திருந்த ஒரு ஸ்ரெட்சரின் அருகிலிருந்துதான் அந்த அழுகைச் சத்தம். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு ஆண். வாய்விட்ட அழுகை. ரொம்ப சத்தமாக இல்லை. பத்தடியில் இருந்த எனக்கு தெளிவாகக் கேட்கும் அளவிற்கான அழுகை. விம்மி விம்மி அழுகிறார். அந்த அழுகைச் சத்தம் என் மனதை என்னவோ செய்தது. ஸ்டெச்சரில் இருப்பவரைப் பார்த்தேன். சற்று வயதான பெரியவர். அழுபவரின் தந்தையாக இருக்கலாம். ஸ்ரெச்சரிலேயே பலவித கருவிகள் பொருத்தப்பட்டிருந்தன. மார்பருகே லேப்டாப் மாதிரி ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. சற்று மேலே பலூன் மாதிரி நாம் மூச்சுவிட்டால் ஏறி இறங்குவதைப் போல் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. கையில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. அவர் முகத்தைப்பார்த்தால் அவருக்கு நினைவின்றிக் கிடந்தார். அதற்கு மேல் அவரை என்னால் பார்க்க முடியவில்லை. மகன் கொஞ்சம் நேரம்கூட விடாமல் அழுதுகொண்டே இருந்தார்.

ஆண்கள் அழுவதைப் பார்த்ததில்லை ஆதலால் அவர் அழுதது எனக்கு வித்தியாசமாக இருந்தது. நம் ஊரில் ஆண் அழுதால் எத்தனை விதமான கிண்டல்கள் 'ஏண்டா பொம்பள மாதிரி அழற', அந்தக் கேள்வியிலேயே அசிங்கப்பட்டு அடுத்தமுறை அழுகை வந்தால் அவன் அதை அடக்கிக்கொள்ளப் பழகிக்கொள்கிறான். தன் துக்கத்தை தனக்குள்ளேயே அடக்கி வைத்துக்கொள்கிறான். அப்படி அடக்கி வைப்பதால் ஹார்ட் அட்டாக், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் வருவதாக மருத்துவர்கள் சொல்கிறார்கள். அது ஒரு உணர்ச்சி அத ஏன் அடக்கி வைக்க வேண்டும். சின்னப்பிள்ளைத்தனமாக எதற்கெடுத்தாலும் அழுகச் சொல்லவில்லை. தாங்க முடியாத துயர நேரங்களில் வாய்விட்ட அழுகைதான் துயரத்தின் வடிகாலாக இருக்க முடியும். அழுகையை அடக்குவதில் என்ன கவுரவம் இருக்கிறது என்று தெரியவில்லை.

ஸ்கேன் மிசின் சரியானவுடன் அழுது கொண்டிருந்த அந்த நபரின் தந்தைக்கு முதலில் ஸ்கேன் எடுத்து அனுப்பினார்கள். அங்கிருந்து கிட்டத்தட்ட ஒருமணி நேரமும் விடாமல் அழுதுகொண்டிருந்தார். அவ்வளவு அழுகை அழுவதென்றால் அந்தத் தந்தை எப்பேர்ப்பட்ட தந்தையாக இருக்கு வேண்டும். அல்லது அந்த மகன் எப்பேர்ப்பட்ட மகனாக இருக்க வேண்டும். அல்லது இருவருமா?

-----------------------
சங்கம்
சங்கம் நல்லதுதான் செய்யும்னு சங்கத்த ஆதரிச்சு சேர்ந்துட்டு திரும்பிப் பார்த்தா நெலமையே தலைகீழா மாறியிருக்கு சங்கம் தேவைன்னு கை தூக்கினவங்க எல்லாம் கையை கீழ போட்டுட்டாங்க. அவசரப்பட்டுட்டனோ?

வேலை அதிகமாக இருப்பதால் ஒரு பத்து பதினைஞ்சு நாளைக்கு இந்தப் பக்கம் வர மாட்டேன். நிம்மதியா இருங்க.
--------------------------------------

சங்க இலக்கிய புத்தகம் ஒன்றை தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். அந்த வேலை ஏன் செய்றேன்னு கேட்குறீங்களா? அதுதாங்க நம்ம தொழில். புத்தகமாக்கி பிரிண்டுக்கு அனுப்ப வேண்டும். இதுல என்ன ஒரு வசதின்னா, புத்தகங்கள் படிச்ச மாதிரியும் ஆச்சு, வேலை செஞ்ச மாதிரியும் ஆச்சு. மாடு மேய்ச்ச மாதிரியும் ஆச்சு, அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு. இதுனால ஐ லவ் மை ஜாப். என் வேலையை நான் காதலிக்கிறேன் (ஒண்ணுமில்ல மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி சொல்லிப்பார்த்தேன்).

தலைவன், தலைவி, தோழி, பசலை நோய், ஊடல், கூடல், கார்மேகம், முரசு,தினைப்புனம் இதெல்லாம் என்னன்னு பார்க்குறீங்களா? சங்க இலக்கியத்தோட தாக்கம்.

சங்கம்ன்னு போட்டுட்டு வேற என்னவோ இருக்கேன்னு பார்க்குறீங்களா? விஷயத்துக்கு வர்றேன். நம்ம சங்கத்தையும் (வலைப்பதிவர் சங்கம்) நான் ஆதரிக்கிறேன். (உன் ஆதரவு யாருக்கு வேணும்னு சொல்லீறாதீங்க. அழுதுறுவேன்)

-------------------------------

தொடர் பதிவு
இந்த அங்காடித் தெரு படம் இருக்கே அதப்பத்தி நம்ம வலையுலகத்தில் ஏறக்குறைய எல்லோருமே நல்லாயிருக்குன்னு சொல்லிட்டாங்க. இன்னும் பார்க்கவில்லை. பார்க்கனும்.

நம்ம வலையுலகத்தில் நானும் நுழைந்ததில் இருந்து பார்க்கிறேன், ஏதாவது ஒரு பிரச்சனை உருவாகி விவாதமாக ஓடிக்கொண்டிருக்கும். சிலது சின்னதாக முடிந்துவிடும். சிலது பற்றி எறியும். ஒன்று முடிந்தவுடன் அடுத்தது தயாராக நுழைந்துவிடும்.

இந்த நிலையில்தான் அங்காடித் தெரு ஒட்டுமொத்த வலையுலகின் ஒற்றுமையாக எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. இந்த மாதிரி எல்லா விஷயத்திலும் இருந்தா எப்படியிருக்கும். ரொம்ப போரடிக்குமோ?

தொடர் பதிவு என்னன்னா இதே மாதிரி பதிவுலம் ஒற்றுமையாக ஆதரித்த விஷயங்களை பட்டியலிடலாம். ஒருவர் ஒன்றோ அல்லது அதற்கு மேலாகவோ ஒற்றுமைகளை பதியலாம். பிரியம் இருப்பவர்கள் தொடர் பதிவைத் தொடரலாம்.



ச்சும்மா ஒரு வெளம்பரம்
வால் - இ - wall-e
3/23/2010 | Author: ஜெயந்தி
வால்பையன் பத்தியெல்லாம் இல்லீங்க. இது ஒரு ஆங்கில அனிமேஷன் படம். அதுல வர்ற ஒரு ரோபோட்தான் வால் இ. அப்பாவியா மூஞ்சிய வச்சிக்கிட்டு வால்தானம் செய்றதுல வால்பையனுக்கு கொறஞ்சதில்ல.

படம் தொடங்குறதே மனிதர்கள் யாருமே இல்லாத உலகத்துலதான். பெரிய பெரிய கட்டிடங்கள் மட்டுமே அவர்கள் வாழ்ந்ததற்கு சாட்சியாய். ஒரு புல் பூண்டுகூட செடிகள் கிடையாது. மெல்ல இந்த ரோபோ வரும். மிலிட்டரி டேங்கர் பல்சக்கரம்போல் இரண்டு சிறிய சைஸ் கால்கள். அதன் மேல் ஒரு சதுர டப்பாவை வைத்ததுபோல் ஒரு உடம்பு. இரண்டு கைககள். ஒரு பைனாகுலரை வைத்ததுபோல் ஒரு தலை. இதனை பார்த்தால் காயலான் கடையின் பழைய பொருட்களை வைத்து செய்ததைப்போல் துருப்பிடித்த அழுக்கான தோற்றம். அங்குள்ள குப்பைகளை தன் வயிற்றில் கைகளால் அள்ளி வைத்து பிரஸ் பண்ணி சதுரமான கட்டியாய் ஆக்கி அடுக்கிக்கொண்டிருக்கும். அந்த வேலைக்காக உருவாக்கப்பட்ட ரோபோ. அதனால் உருவாக்கப்பட்ட கட்டிகள் மலைபோல் அங்கங்கே நிறைய மலைகளாக காட்சியளிக்கும். அந்தக் குப்பைக்குள் அதற்கு தேவையானதாக நினைக்கும் பொருட்களை எடுத்து பத்திரப்படுத்திக்கொள்ளும். முள் கரண்டி, வெற்றிக்கோப்பை, நகைப்பெட்டியில் இருக்கும் வைர மோதிரத்தை எடுத்து தூர எறிந்துவிட்டு அந்தப் பெட்டி போன்றவற்றை தனக்கான ஒரு தனியிடத்தில் அவற்றை பத்திரப்படுத்தும். தன்னுடைய உடம்பில் ஏதாவது ஒரு பொருள் சரியில்லை என்றால் தான் தேடி எடுத்து வைத்திருக்கும் பொருளிலிருந்து எது சரியில்லாத இடத்திற்கு பொருந்துகிறதோ அதனை எடுத்து பொருத்திக்கொள்ளும். ஒரு சின்ன டிவி போல ஒரு ஒன்றை ஆன் செய்து பார்க்கும். அதில் மனிதர்கள் ஜோடியாக கைகோர்த்து ஆடும் ஒரு நடனம் பாட்டுடன் ஒரு நிமிடத்திற்கு ஓடும். இதை தினமும் போட்டுப் பார்க்கும். அந்தப் பாட்டையும் தனக்குள் டெக்கார்டு செய்துகொள்ளும். சோலார் எனர்ஜி எடுத்து தன்னை ரீ சார்ஜ் செய்து கொள்ளும். குப்பை அள்ளும்போது ஒரு சின்ன செடி முளைத்திருப்பதைப் பார்த்து அதை மண்ணோடு அள்ளி வந்து தன் வீட்டில் ஒரு ஷீ வில் போட்டு வைக்கிறது.

இதற்கு ஒரு ஃப்ரண்டு கரப்பானபூச்சி. அது இதுமேல ஏறி உள்ளயெல்லாம் போய் வரும். வால் அதன் இடத்திலிருந்து வெளியே வரும்போது இந்த கரப்பான் பூச்சி மேல் தன் சக்கர காலால் ஏறிவிடும். உடனே பதற்றமாகி அது என்னாச்சோன்னு திரும்பிப் பார்க்கும் பாருங்க. என்னா சீன். அப்பறம் அந்த கரப்பான்பூச்சிக்கு ஒன்னும் ஆகலன்னதும் அது பாட்டுக்கு போகும். அது ஒரு ரோபோன்ற உணர்வே நமக்கு தோணாது. படம் முழுவதும் இதே போல் காட்சிகளை வைத்து நாமே புரிந்துகொள்ள வேண்டும். வசனம் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்கும். (இல்லேன்னா என்னைப் போல் ஆட்களெல்லாம் ஆங்கிலப்படம் பார்க்க முடியமா?)

அப்போது விண்ணிலிருந்து ஒரு விண்வெளி ஓடம் வரும். நம்ம வாலு பயந்துபோயி ஒரு ஓரமா நின்னு என்ன நடக்குதுன்னு பார்க்கும். அதுக்குள்ளயிருந்து இன்னொரு ரோபோவை அந்த ஓடம் இறக்கிவிட்டுவிட்டு பறந்து சென்றுவிடும். அந்த ரோபோ பணக்கார பெண் போல் வெண்மையாக பளபளப்பாக இருக்கிறது. கோழிமுட்டை போன்ற வடிவத்தில் இருக்கிறது. அதற்கு வால் இயை விட ஆற்றல் அதிகம். தனக்கு ஏதாவது ஆபத்து என்று அது நினைத்தால் அந்த இடத்தையே சுட்டுபொசுக்கிவிடும். அது இரங்கியவுடன் தன் லேசர் கண் கொண்டு எதையோ தேடிக்கொண்டிருக்கிறது. வால் இ அதை கவனித்துக்கொண்டிருக்கிறது. வால் இயைப் பார்த்த புது ரோபோ மெல்ல அதன் அருகே வருகிறது. உன் பெயர் என்னன்னு கேட்கிட்டே அதப் பார்க்குது. அது மேல வால் இ ன்னு எழுதியிருக்கிறதப் படித்துவிட்டு தன்னுடைய பெயர் ஈவ் என்று சொல்கிறது. வால் இ அதை ஈவா என்று அழைக்கிறது.



தன்னுடைய இருப்பிடத்திற்கு ஈவாவை அழைத்துச் சென்று தான் சேகரித்து வைத்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்ததுக் காட்டுகிறது. (நான் பாரு என்னல்லாம் வச்சிருக்கேன்) ஒரு பல்பை எடுத்துக்காட்டுகிறது ஈவா அதை எரிய வைக்கிறது. வால் இயால் எரிய வைக்க முடியாது. லைட்டரை எடுத்துக்காட்டுகிறது. ஈவா அதை திறந்து பட்டனை அமுக்கி எரிய வைக்கிறது. உடனே வாலுக்கு டிவியில் பார்த்த காதல் பாட்டு ஞாபகம் வந்துவிடுகிறது. அதை போட்டுக்காட்டுகிறது. அதில் அவர்கள் கைகளைக் கோர்த்துக்கொண்டு ஆடிக்கொண்டிருக்கிறார்கள். ஈவாவின் கையைப் பிடிக்க முயற்சிக்கிறது. ஈவா கையை இழுத்துக்கொள்கிறது. அப்புறம் ஒரு சூவில் வைத்திருக்கும் அந்தச் செடியைக் காட்டுகிறது. அவ்வளவுதான் ஈவா அதை வாங்கி தன்னுள் வைத்துக்கொண்டு தன்னை மூடிக்கொண்டு விண்வெளிக்கு தகவல் அனுப்பத் தொடங்குகிறது. வால் அதை ஈர்க்க என்னவெல்லாமோ செய்கிறது. முடியாமல் தன் வேலையைப் பார்க்கப் போய்விடுகிறது. அப்போது விண்வெளியில் இருந்து விண்வெளி ஓடம் வருகிறது. வாலிற்கு புரிந்துவிடுகிறது. ஈவா அதில் போகப் போகிறது. உடனே ஓடுது. பின்னால் வரும் கரப்பான்பூச்சியை அதட்டி அங்கேயே நிறுத்திவிட்டு வருவதற்குள் ஓடம் கிளம்பிவிடுகிறது. நம்ம ஊர் ஹீரோ போல் பாய்ந்து அதன் ஓரத்தை பிடித்துக்கொள்கிறது. இந்த ஓடம் பறந்துபோய் விண்வெளியில் இருக்கும் விண்கப்பலுக்குள் செல்கிறது.



பிரம்மாண்டமான அந்த கப்பலுக்குள் நிறைய ரோபோக்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன. ரோபோக்கள் மட்டுமே வேலை செய்கின்றன. ஒரு புறம் மனிதர்கள் கார்போல் ஓடும் சேரில் அமர்ந்திருக்கிறார்கள். பலூனுக்கு கைகால் முளைத்தாற்போல் குண்டாக சின்னச்சின்ன கைகால்களுடன் இருக்கிறார்கள். சேரில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால் அவர்கள் முன்னால் வெற்றிடத்தில் டிவி போல் படம் ஓடும். கை தட்டினால் ஜுஸ், காபி, சாப்பிட அனைத்தும் அவர்கள் இருக்கும் இடத்திற்கே வரும். அவங்க எதுக்காகவும் சேரைவிட்டு இறங்கவே மாட்டார்கள்போல. அதில் ஒருவர் சேரில இருந்து கீழே விழுந்துவிடுகிறார். தானா எழுந்து சேரில் அமர முடியாமல் திணறும் அவரை நம்ம வால் கைத்தாங்கலாக தூக்கி அமர வைக்கிறது. அவர் நன்றி வால் இ என்கிறார். அவர்தான் அந்த ஷிப்பின் கேப்டன். நம்ம ஈவா அவர் முன் நிறுத்தப்படுகிறது. அது செடி கொண்டு வந்திருப்பதை அறிந்த கேப்டன் ரொம்ப சந்தோஷமாகி பூமிக்கு போவதற்கு ரெடியாகிறார்.

என்னா விஷயம்னா நம்ம ஈவா பூமிக்கு போனது ஏன்னா அங்க ஏதாவது செடி முளைச்சிருக்கானு பார்க்கத்தான். செடி முளைத்தால் உடனே இவர்கள் பூமிக்குப் போகலாம். இல்லாவிட்டால் அங்கேயே இருக்க வேண்டியதுதான். அவர்கள் எவ்வளவு வருடம் விண்வெளியலேயே இருக்காங்கன்னா 2050ல இருந்து 2750 வருஷம் வரை. ஒரு படம் காட்டப்படும் 2050ல் மனிதன், 2150, 2250..... 2270 வரை மனிதர்கள் படம் ஒட்டபட்டிருக்கும். முதல் படத்தில் நம்மைப்போல் உள்ள மனிதன் அடுத்தடுத்த நூறாண்டுகளில் மெல்ல மெல்ல குண்டாகி தோற்றம் மாறி தற்போதைய தோற்றம். ஒரே படத்துல இவ்வளவு விஷயத்தையும் புரிய வைக்கிறார்கள். விண்வெளி கப்பலிடம் அந்தச் செடியை ஒப்படைத்தால்தான் அது பூமியை நோக்கி கிளம்பும். ஈவாவிடம் செடியைக் கேட்கிறார். அது தன்னைத் திறந்து பார்த்தால்... அதுக்குள்ள செடியே இல்ல. உடனே ஈவாவை டிஷ்போஸ் பண்ணிவிட உத்தரவாகிறது. நம்ம ஹீரோ உள்ளே புகுந்து ஈவாவை காப்பாற்றுகிறார். இதுக்கு நடுவுல புதுசா வந்திருக்குற வால அங்குள்ள ரோபோல்லாம் சேர்ந்து பிடிக்கப்பார்க்குது. ஈவா அதக் காப்பாத்துது. இதுக்கு நடுவுல ஒரு ரோபோ சின்சியரா அழுக்கு இருக்கற இடத்தையெல்லாம் துடைக்குது. அதோட வேலை அதுதான். நம்ம வால்தான் அழுக்கு மூட்டையாச்சே. அது போற இடமெல்லாம் அழுக்காகிக்கொண்டே போக. கிளினிங் ரோபோ துடைத்துக்கொண்டே போகும். ஒரே கலாட்டாவா இருக்கும். வால் இ படம் போட்டு அனைவருக்கும் எச்சரிக்கை அனுப்படுகிறது.



இதுக்கு நடுவுல செடியை வால் கண்டுபிடிக்குது. திரும்ப கேப்டன் கிட்ட கொண்டு போறாங்க. அவரும் அதை வைத்து கப்பலை கிளப்ப முயற்சிக்கிறார். அப்போதான் இவங்க எல்லாத்தையும் கட்டுப்படுத்தற பெரிய சைஸ் சக்கர வடிவிலான ரோபோ அத தடுக்குது. மனுசங்கல்லா பூமிக்குப் போயிட்டா அதுக்கு வேலையில்லாம போயிடுமே. அதுகூட போராடி கேப்டன் வால் எல்லாம் சேர்ந்து கப்பலை எப்படி கிளப்புறாங்கறதுதான் கதை. பெரிய ரோபோகூட போராடும்போது நம்ம வால் நசுங்கி போயிடும்.

அடுத்து விண்வெளி கப்பல் பூமியை அடையும் மனிதர்களெல்லாம் வெளியே வருவாங்க. நமக்கு வால் என்னாச்சோன்னு பதைக்கும். ஈவா அதை எடுத்துக்கொண்டு வாலின் வீட்டிற்கு ஓடும். அங்கேயிருக்கும் பொருட்களில் அதன் உடம்பிற்கு பொருத்தமாக இருக்கும் பாகங்களையெல்லாம் எடுத்து ஒவ்வொன்றாக பொருத்தும். அதன் எக்ஸ் ரே கண் ரொம்ப உதவியாக இருக்கும். கடைசியாக தன்னிடமிருக்கும் பவரிலிருந்து அதற்கு பவர் (உயிர்) கொடுக்கும். நாமும் பதைபதைப்புடன் பார்த்துக்கொண்டிருப்போம். அதற்கு உயிர் வந்துவிடும். அப்பாடா என்றிருக்கும். ஆனால் இப்போதுதான் கிளைமாக்ஸ். வாலுக்கு பழசு எல்லாம் மறந்துவிடும். துஷ்யந்தன் சகுந்தலையை மறந்ததுபோல. (ஷார்ட் டைம் மெமரி லாஸ்?) அதுபாட்டுக்கு குப்பையை அள்ள கிளம்பிவிடும். ஈவா அதுகிட்ட டிவிய போட்டுக்காட்டும், பல்ப எறிய வச்சுக் காட்டும். லைட்டர எறிய வச்சுக் காட்டும். நம்மாளுக்கு எதுவும் ஞாபகம் இருக்காது. ஈவா ரொம்ப சோகமாயிடும். வாலோடு கையோட தன்னுடைய கையை கோர்த்துக்கிட்டு அது மேல தலையை சாய்ச்சிக்கிட்டு சோகமா நிக்கும். என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு. ஒரு ரோபோ நல்லாகனும்னு நமக்கு படபடக்குதேன்னுல்லாம் நமக்குத் தோணவே தோணாது. மெல்ல நம்மாளுக்கு நினைவு வந்து ஈவாவின் கையை இறுக்கிப் பிடிக்கும். இரண்டும் சந்தோஷமாக வாழும். விண்ணைத்தாண்டிய காதல். அதனுடன் இவர்களைப் பிடித்த இவர்களுக்கு உதவி செய்த சில ரோபோக்கள் இவர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். கரப்பான் பூச்சி இரண்டு ரோபோக்குள்ளயும் போய் வந்துகொண்டிருக்கும். மனிதர்கள் அவர்களுடைய உணவிற்கான அடுத்த வேலையைச் செய்யச்சென்றுவிடுவார்கள்.

சயின்ஸ் ஃபிக்சன் அனிமேஷன் படத்தை இவ்வளவு விறுவிறுப்பாக, நம்மை எங்கும் நகர விடாமல் பார்க்க வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு பாராட்டுக்கள்.


ஆதித்தாய். தனது குழுவை தலைமை தாங்கி செல்கிறாள். எப்படி வேட்டையாட வேண்டுமென்று சொல்லித்தருகிறாள். பனிக்கரடிகளை எப்படி வேட்டையாட வேண்டும், மற்ற மிருகங்களை எப்படி வேட்டையாட வேண்டும் என்று சொல்லித்தருகிறாள். வேட்டையாட வியூகம் அமைக்கிறாள். ஆயுதத்தை எவ்வாறு உபயோகிக்க வேண்டும் என்று சொல்லித் தருகிறாள். உலகின் சூட்சமங்களை சொல்லித்தருகிறாள். அந்தக் குழு அவள் சொல்வதையெல்லாம் கேட்டு அதன்படியே செய்கிறார்கள். அந்தக் குழுவிற்கான சட்ட திட்டங்களை வகுக்கிறாள் தலைவி. அனைவரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அவர்களுக்குள் ஆண், பெண் பேதமில்லை. அவள் ஆணை அடிமையாக நடத்தவுமில்லை. அவர்கள் குகைளில் வாழ்கிறார்கள்.

தலைமைக்கு அவள்தான் சரியானவள் என்று அவள் தலைமையை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்த மனித இனத்தில் மாற்றம் ஏற்படுகிறது. நாடோடியாக வாழ்ந்து திரிந்தவர்கள் ஒரே இடத்தில் வாழ பழகுகிறார்கள். விவசாயம் கண்டுபிடிக்கப்படுகிறது. கால்நடைகள் வீட்டு விலங்குகளாக வளர்க்கப்படுகின்றன. வாழ்க்கை முறை மாறிவிட்டது. தனக்கு மட்டுமேயான வாரிசுகள் வேண்டுமென ஆண் நினைக்கிறான். பெண்ணை அடிமையாக்கினால்தான் இது நடக்கும் என நினைக்கிறான். திட்டத்தை நிறைவேற்றுகிறான். விளைவு ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பெண் அடிமையாகிறாள். தான் அடிமையானது தெரியாமலேயே அதிலேயே அமிழ்த்தப்படுகிறாள்.
(ராகுல சாங்கிருத்தியாயனின் 'வால்காவிலிருந்து கங்கை வரை' நூலில் படித்ததிலிருந்து என் வார்த்தைகளில்)

--------------------------


உலகம் ஆண்களுக்கானதாக மாறிய பிறகு ராஜாக்கள் 60 ஆயிரம் மனைவிகள் வைத்துக்கொண்டார்கள். நடன மங்கையரை சபையில் ஆட விட்டு ரசித்தார்கள். அந்தப்புரங்களை பெண்களாலேயே நிறைத்தார்கள். ஜமீன்தார்கள் நிறைய மனைவிகள் வைத்துக்கொண்டார்கள். குடியானவன் கூட இரண்டு மூன்று மனைவி கட்டிக்கொண்டான். இது பத்தாதென்று பெண்களை கோயில்களுக்கு பொட்டுகட்டிவிடும் தேவதாசி முறை வேறு. இதன் நீட்சி இன்றைய பாலியல் தொழில். பிறகு வந்த காலங்களில் ரெக்கார்ட் டான்ஸ்கள் ஆட விட்டு ரசித்தார்கள். சினிமா வந்த பிறகு விரும்பியபடியெல்லாம் காண்பித்து ரசித்தார்கள். நுகர்வுக் கலாச்சாரத்தின் வெளிப்படாக அழகிப்போட்டிகள் வந்தன. அரைகுறையான ஆடையுடன் பூனை நடை நடக்க விட்டு கிழவன் முதல் குமரன் வரை ஜொள்ளு விட்டார்கள். ஆண்கள் குடிக்கும் சரக்கிலிருந்து சிகரெட்டிலிருந்து ஜட்டி வரை பெண்ணே விளம்பரப்படுத்தப்பட்டாள். ரஞ்சிதாக்கள் உருவாவதில்லை. உருவாக்கப்படுகிறார்கள். இது புரியாமல்தான் சிலர் ரஞ்சிதாவிற்காக பரிதாபப்பட்டபோது பலருக்கு கோபம் வந்தது.

இன்றைய பெண்கள் அதிலிருந்து வெளியே வர நினைக்கிறார்கள். தங்களுடைய திறமைகள் தங்களுக்குள்ளேயே அடங்கிவிடக்கூடாது, வெளிவர வேண்டும் என்று நினைக்கிறார்கள். இதற்கு முன்பும் அவர்களுடைய ஆற்றல் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. கட்டிட வேலைகளில் அந்த சாரத்தின்மீது செங்கல்லையும், சிமெண்ட் கலவையையும் தூக்கிச் செல்வது பெண்கள்தான். அதுதான் கடினமான வேலையும்கூட. அதேபோல் வயல்வெளிகளில் களையெடுப்பது, நாற்று நடுவது, கதிர் அறுப்பது, அறுத்த கதிர் கட்டுக்களை தூக்கிச் செல்வது போன்ற கடுமையான வேலைகளையும் செய்கிறாள். நாம் சாப்பிடும் சாப்பாடும், இருக்கும் வீடும் அவளில்லாமல் இல்லை.

இயற்கையில் 1000 ஆண் படைக்கப்பட்டால் 1000 பெண்ணும் படைக்கப்படுகிறாள். இயற்கை தன் கடமையை சரியாகவே நிறைவேற்றுகிறது. மனிதன் அதை மீறுகிறான். பெண் குழந்தைகளை கருவிலேயே அழித்து எண்ணிக்கையை குறைத்து பல கேடுகளை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான். இப்போதே திருமணத்திற்கு பெண் கிடைப்பது சிரமமாக உள்ளதாக சொல்கிறார்கள். போன மாதம் உறவினர் வீட்டு திருமணத்திற்காக கோவை சென்றிருந்தபோது காதில் விழுந்த பேச்சுக்கள்,
மாப்பிள்ளையின் அம்மாவிடம் யாரோ கேட்டார்கள் "பொண்ணுக்கு எவ்வளவு நகை போட்டாங்க?"
"25 பவுனு, மாப்பிள்ளக்கி 5 பவுனு" என்று சொல்லிவிட்டு மாப்பிள்ளையின் அம்மா உள்ளே சென்று விட்டார்கள்.
கேட்ட பெண்ணின் அருகிலிருந்த மற்றொரு பெண் சொன்னாள், "பொண்ணு வீட்டுல ஒண்ணுமே போடல. இவுங்கதான் நகை போட்டு கல்யாணமும் பண்ணிக்கிறாங்க. ஏன்னா பொண்ணே கெடைக்க மாட்டேங்குது பாரு"
சில வருடங்களுக்கு முன் சென்ற திருமணங்களில் 100 பவுன், 50 பவுன், கார், ஸ்கூட்டர் என்று கேட்ட காதிற்கு இது புதிதாக இருந்தது. பெண்கள் குறைவினால் வரதட்சணை தொல்லை குறைகிறது என்பது ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும், இதனால் பெண்களுக்கு எந்தவிதமான புதிய சிரமங்கள் வரப்போகிறதோ என்று நினைக்கையில் கவலையாக இருந்தது.

இயற்கை என்னவோ பெண்ணை ஆணுக்கு சமமாகவே நினைக்கிறது. ஆனால் பெண்ணுக்கோ இன்னும் 33க்கே விடியவில்லை.
மகளிர் தினத்திற்காக...

அவள் என் பக்கத்து பெட்டில் படுத்திருந்தாள். முதலில் கவனிக்கத் தோன்றவில்லை. ஏன்னா அந்த ஹால்ல என்னப்போலவே நிறையப்பேர் கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டு படுத்திருந்தாங்க. முதல் நாள் எல்லோரும் ஒருவித மயக்கத்திலேயே இருந்தோம். ஆப்பரேசனுக்கு கொடுத்த மாத்திரை எபக்ட். அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும்போதே வலி மாத்திரைகளின் எபக்ட் தீர்ந்துபோயிருக்க வலியின் கொடுமையை அனுபவித்துக்கொண்டிருந்தோம். எங்கம்மா ஓடிப்போய் நர்சுகிட்ட வலி மாத்திரை கொடுக்கச்சொல்லி கேட்டுவிட்டு வந்தார்கள். முதல்ல எந்திரிச்சு பாத்ரூம் போயிட்டு, பல் தேய்ச்சிட்டு டிபன் சாப்பிடச்சொல்லுங்க மாத்திரை எடுத்துட்டு வர்றேன்னு அவங்க கறாரா சொல்லிட்டாங்க.

கட்டில்ல இருந்து இறங்குவது பெரிய பிரம்ம பிரயத்தனமா இருந்துச்சு. கால கீழேயே ஊன்ற முடியவில்லை. அம்மா மெல்ல கைத்தாங்கலாக இறக்கி அழைத்துச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சி எல்லோரையும் மிரட்டிவிட்டது. இந்த சின்னப்பொண்ணு கட்டிலில் இருந்து ஜங்கென்று குதித்து, துள்ளலோடு நடந்து சென்றாள். எங்கம்மா அலறிவிட்டார்கள், 'அய்யய்யோ தையல் போட்டிருக்கே?' அவள் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை. அவள்பாட்டுக்கு சென்று பாத்ரூம் போய்விட்டு திரும்பிவந்து ஒன்றுமே நடக்காததுபோல் படுத்துக்கொண்டால். அந்த ஹாலே ஒரு நிமிடம் ஸ்தம்பித்து பிறகு அசைந்தது.

பிறகுதான் அவளை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தார்கள். அவள் அருகில் யாருமே இல்லை. மருந்து வைக்கும் ரேக்கில் பிரட் பாக்கெட் இருந்தது. அதை எடுத்து தின்றுகொண்டால். நர்சு மாத்திரை கொடுத்ததை வாங்கி தின்றுவிட்டு படுத்துக்கொண்டால். எங்கம்மா போய் அவளிடம் பேசினார்கள். 'ஏம்மா நீ எந்த ஊரு' அவளுக்கு அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. 'உனக்கு கல்யாணம் ஆகிருச்சா' ஒரு முறை 'ஆமாம்' என்றால் ஒரு முறை 'இல்லை' என்றாள். 'வேலை பாக்குறியா' 'ஆடு மேய்க்கிறேன்' என்றாள். 'அம்மா அப்பா இருக்காங்களா' என்ற கேள்விக்கு அவளுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அவள் பேச்சு நார்மலாக இல்லை. பிறவிலேயே மனவளர்ச்சி இல்லையா அல்லது சமீபத்தில் இப்படி ஆச்சா என்னவென்று தெரியவில்லை. மதியமும் இரவும் எனக்கு கொண்டு வரும் உணவிலிருந்து அவளுக்கும் அம்மா உணவு கொடுத்தார்கள்.

நர்சிடம் விசாரித்தபோது, பக்கத்தில் மலைகிராமத்தைச் சேர்ந்தவள் என்றும், அங்க காட்டுக்குள்ளேயே சுற்றிக்கொண்டிருப்பாளாம். அப்போது ஒரு கயவனா அல்லது சில கயவர்களா என்று தெரியவில்லை கர்ப்பமாக்கிவிட்டார்களாம். இப்போது கர்ப்பத்தை கலைத்துவிட்டு கருத்தடை ஆப்பரேசன் செய்துவிட்டார்களாம். அதுக்குக் கூட அவளை அழைத்து வந்தவர்கள் கிராம சுகாதார நிலையங்களில் இருக்கும் பணியாளர்கள்தான். நாங்கள் இருந்தது வேலூர் (காட்பாடி).

இவளை அப்படியே விட்டிருந்தாள் என்னவாகியிருக்கும். காட்டில் எங்காவது சுற்றியலையும்போது பிரசவவலி வந்திருந்தால், அல்லது வலி வந்தவுடன் மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாலும் பிறக்கும் அந்தக் குழந்தையின் நிலைமை என்ன? இப்படி உள்ளவர்களை குழந்தைகளுக்கு ஒப்பானவர்கள். இவர்களை இப்படி செய்ய அவர்களுக்கு எப்படி மனம் வருகிறது. அவளுக்கு அம்மா அப்பா இருப்பாங்களா? வீடு இருக்குமா?

அவளுக்கு கர்ப்பம் ஆக்கப்பட்டதும் தெரிந்திருக்காது, கருத்தடை ஆப்பரேசன் செய்யப்பட்டது தெரிந்திருக்காது. அவள் அனுமதி இல்லாமலேயே அவள் உடம்பின் மீது எத்தனை அத்துமீறல்கள். எனக்கு அன்று இரவு தூக்கம் வர நெடுநேரம் ஆகியது.

அடுத்தநாள் காலையில் எல்லோரையும் அனுப்பிவிட்டார்கள். ஒன்பதாம் நாள் வந்து தையல் பிரித்துக்கொள்ளச் சொல்லிவிட்டார்கள். சின்னப்பொண்ணுவை அதே பணியாளர்கள் வந்து அழைத்துச் சென்றார்கள். சின்னப்பொண்ணு செல்வதைப்பார்த்துக்கொண்டிருந்த என் கண்களை கண்ணீர் நிறைத்தது.
எனக்கு பத்து வயதோ பதினொரு வயதோ இருக்கும் என்று நினைக்கிறேன். திண்டுக்கல்லில் வடுகமேட்டு ராசா பட்டி என்ற இடத்தில் இருந்தோம். எனது நெருங்கிய தோழி அமுதா எதிர் வீட்டில் இருந்தாள். நாங்கள் இருவரும் இணைபிரியாத் தோழிகள். பள்ளிக்குச் செல்வதானாலும் இருவரும் சேர்ந்தே செல்வோம், விளையாட்டுகளின் போதும் இருவரும் சேர்ந்திருப்போம். அக்கம் பக்கத்தில் இருக்கும் இன்னும் சில தோழிகள் அவ்வப்போது வந்து எங்களோடு சேர்ந்துகொள்வார்கள்.

சம்பவம் நடந்த அன்று எங்களுடன் இன்னொரு தோழியும் இருந்தாள். அவள் பெயர் இப்போது நினைவில்லை. அமுதாவின் வீட்டில் இந்த கொட்டை முத்து எனப்படும் ஆமணக்கு விதை ஒரு பேப்பர் கூடை நிறைய இருந்தது. அது எதற்கு வாங்கி வைத்திருந்தார்கள் என்று தெரியவில்லை. அமுதா கை நிறைய ஆமணக்கு விதைகளை எடுத்துக்கொண்டு வந்தாள். இத எதுக்கு எடுத்துட்டு வர என்றேன். அதற்கு அவள் இந்த விதையை உரித்தால் உள்ளே வெள்ளை நிறத்தில் பருப்பு இருக்கிறது, அதை தின்றால் ருசியாக இருக்கிறது என்றாள்.

உடனே நாங்களும் உரித்து தின்று பார்த்தோம் நன்றாக தேங்காய் போல் இருந்தது. (விதி யாரை விட்டது) உடனே மூன்று பேருக்கும் ஒரு போட்டி, யார் அதிகமாகத் தின்கிறார்கள் என்று. அந்தப் போட்டியில யார் ஜெயித்திருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? வேற யார் நான்தான். நாற்பது விதைகளை உரித்து தின்றேன். (நாந்தான் நம்பர் ஒன்னா?) எனக்கு அடுத்து அமுதா இருபத்தைந்தோ முப்பதோ. அந்த மூன்றாவது தோழி மிகவும் தாமதம். கம்மியாகத்தான் சாப்பிட்டாள். வீட்டிலிருந்து இரவு உணவு சாப்பிடுவதற்கு அழைப்பு வந்ததால் களைந்து சென்றோம். வீட்டிற்குச் சென்று சாப்பிட்டுவிட்டு படுத்தோம். மெல்ல தூக்கம் கண்ணைக்கட்டியது. ஆரம்பமாயிருச்சு வேலை. வயிற்றைக் கலக்கிக்கொண்டு வாந்தி, வாந்தி முடிந்ததும் பேதி. மாற்றி மாற்றி இரவு முழுவதும் இதே வேலைதான். வடிவேலு சொல்வதுபோல் வயித்துல இருந்து கொடலு குந்தாணியெல்லாம் வெளியே வந்துவிட்டது.

காலையில் மாமா ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போனாரு. நான் தெம்பே இல்லாமல் மிகவும் சோர்ந்துபோய் இருப்பதைப் பார்த்த மாமா பரிதாபப்பட்டு ஏதாவது குடிக்கிறியா என்று கேட்டார். அப்பயெல்லாம் சர்பத் குடிப்பது என்றால் தேவாமிர்தம் குடிப்பது மாதிரி. சந்தப்பத்தை நழுவவிடுவோமா என்ன? சர்பத் கேட்டு வாங்கி ருசித்துக் குடித்தேன். உள்ளே சென்ற அடுத்த நிமிடம் அதுவும் வாந்தி வந்துவிட்டது. சாப்பாடு வாந்தி வந்த போது ஒன்றும் தெரியவில்லை சர்பத் வாந்தி வந்தபோது அழுகையே வந்துவிட்டது. சர்பத்து போச்சே.

ஆஸ்பத்திரிக்குப் போய் மருந்து வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தபோது அம்மா வாந்தி பேதிக்கான காரணத்தை துப்புத்துலக்கி வைத்திருந்தாள் (எங்க அம்மா காரணங்களை துப்பு துலக்கி கண்டுபிடிப்பதில் எக்ஸ்பர்ட்). 'ஆமா நேத்து நீ அமுதா இன்னொரு பொண்ணு மூணு பேரும் முத்துக்கொட்ட சாப்புட்டீங்களா?' இது எப்டி அம்மாவுக்குத் தெரியும்? (இந்த அம்மாவுக்கு நாம என்ன செஞ்சாலும் எப்படியோ தெரிந்துவிடுகிறதே?) ஆச்சரியத்துடன் 'ஆமா' என்றேன். 'அந்த அமுதாவுக்கும் ராத்திரியெல்லாம் வாந்தி பேதியாம். அவங்க அம்மா சொன்னாங்க' என்றாள். ஆனா என்னை விட சற்று கம்மியாம். அந்த இன்னொரு பெண்ணுக்கு சேதாரம் ரொம்பக் கம்மியாம். நான் பேசக்கூட முடியாத மயக்க நிலையில் இருந்ததால் பாவம் பார்த்து திட்டு கிடைக்கவில்லலை.