போன இடுகையின் தொடர்ச்சி என்று கொள்ளலாம். சில வலைத்தளங்களை படிக்கும்போது இதை எல்லோரும் படித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும் அந்த மாதிரி தோன்றிய ஒரு மூன்று வலைத்தளங்களை அறிமுகம் செய்யலாம் என்று நினைக்கிறேன். இலக்கியம் ஒன்று விவசாயம் ஒன்று விஞ்ஞானம் ஒன்று.
அழியாச் சுடர்கள்
பொருத்தமான பெயர் வைத்துள்ளார் இந்த ப்ளாக்கர். இந்த ப்ளாக்கை உருவாக்கியிருக்கும் விதமே நன்றாக இருக்கிறது. மேலே வயதில் முதிர்ந்த எழுத்தாளர்களின் படங்கள். அதன் கீழே எழுத்தாளர்களின் பெயர்களினாலான லேபிள். அதை க்ளிக் பண்ணினால் அவர்களின் கதைகளை படிக்கலாம். சாம்பிள் பேக் என்று சொல்வார்களே அதைப்போல் பெரிய பெரிய எழுத்தாளர்களின் சில கதைகளை தொகுத்தளித்துள்ளார். மிகவும் சிறப்பான பணி இவருடையது.
செ.யோகநாதன் என்ற இலங்கை எழுத்தாளருடைய சிறுகதை தொகுப்பு ஒன்றை படித்தேன். அதன் கதைக்களம் 70வதா 80தா என்று தெரியவில்லை. அந்தப்புத்தகம் படிக்கும்போது இலங்கைத் தமிழ் பாதி எனக்கு புரியவில்லை. படிக்கும்போதே அந்த சூழ்நிலையை வைத்து அதன் அர்த்தத்தை நானாக புரிந்துகொண்டேன். முதல் இரண்டு சிறுகதைகளின்போதுதான் இந்தப் பிரச்சனை பிறகு சரியாகிவிட்டது. அந்த ஒவ்வொரு கதையும் கொடுத்த உணர்வு இருக்கிறதே. சொல்ல முடியாது. அங்குள்ள தமிழ்க்குடும்பங்கள் படும்பாடுதான் கதைக்களம். அப்போதுதான் விடுதலைப்புலிகள் உருவாகிக்கொண்டிருக்கும் நேரம் என்று நினைக்கிறேன். அந்த சிறுகதை தொகுதியை படித்துவிட்டு நீண்ட நாட்கள் நிம்மதியில்லாமல் இருந்தேன். கட்டுரைகளோ, புகைப்படங்களோ கொடுக்க முடியாத உணர்வுகளை இலக்கியம் கொடுக்கும். நம்மை அதிர வைக்கும். பிறகு எனக்கு பிரபாகரனை புத்தகத்திலோ டிவியிலோ பார்த்தால் எனக்கு ரியல் ஹீரோவாகத்தான் தெரிவார். அங்குள்ள மக்களுக்கு காவலனாக தெரிந்தார்.
சிறந்த மனிதர் இலக்கியத்தின் மூலம் புரட்சியையும் உருவாக்க முடியும். சக்திவாய்ந்த ஆயுதம் இலக்கியம்.
சின்னச் சின்ன கோபங்கள்
தங்கபாண்டியன் என்பரது வலைப்பூ இது. பதிவர் ஜானகிராமன் மூலம் எனக்கு அறிமுகமானார். இவரது சாயம் போகும் நதிகள் அனைவரும் படிக்க வேண்டிய கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நதிகளின் இன்றைய நிலைமையை எடுத்துச்சொல்லி உள்ளார். மனித வாழ்வுக்கு நீர்தான் ஆதாரம். அதையே இழந்துவிட்டால் என்ன செய்யப்போகிறோம் என்ற பயம் வருகிறது. நீரும் மண்ணும் எப்படி பாழ்படுகிறது என்று படித்துப்பாருங்கள். அடுத்து மலைகள் எப்படி அழிக்கப்படுகின்றன. அதனால் ஏற்படும் விளைவுகளையும் எடுத்துச்சொல்லி உள்ளார். இவர் எழுதியுள்ள ஒவ்வொரு கட்டுரையும் கொஞ்சமாக இருந்தாலும் அற்புதமானவை. அனைவரும் படிக்க வேண்டியவை. சங்கப்பாடல்களை உதாரணம் காட்டி இவர் எழுதும் பாங்கு மிக நன்றாக உள்ளது. படிக்கவும் எளிமையாக உள்ளது.
கணேஷ்
கணேஷ் என்ற இளைஞரது வலைப்பூ இது. இவர் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் மீது ரசிகன், வெறியன், தாசன் என்ன வேண்டுமானால் சொல்லலாம். இவரது வலைத்தளத்தில் விஞ்ஞானம் புகுந்து விளையாடும். ஒரு கட்டுரையில் பூமி தோன்றிய கதையை கூறியுள்ளார். அதில் எதேச்சையான சேர்மங்கள் எதேச்சையாக சேர்ந்ததால் பூமி உண்டானது என்று இருந்தது. அதைப்படித்துவிட்டு எனக்கு கற்பனை சிறகடித்தது. அந்த மாதிரி எதேச்சையாக சேராமல் இருந்திருந்தால்... கொஞ்சம் வித்தியாசமாக சேர்ந்து வித்தியாசமான உயிரினங்கள் தோன்றியிருந்தால்... பிரபஞ்சத்தில் வேறு பல இடங்களில் இதே போல் சேர்மங்கள் சேர்ந்து உயிரினங்கள் இருந்தால்... என்று எனக்கு கற்பனை விரிந்துகொண்டே சென்றது. அறிவியலை, கேலக்ஸியைப் பற்றி கதைகள் மூலம் விளக்குவார். இவரது எழுத்தும் எளிமையாக படிப்பதற்கு இன்ட்ரஸ்டாக இருக்கும். அவசியம் படிக்க வேண்டிய வலைப்பூ.
நிறைய சிறு வயது இளைஞர்கள் ப்ளாக் எழுத வந்திருப்பது பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு பேருக்கு நாமளும் எழுதணும்னுற ஆசை வந்திருக்கே. வந்துச்சோ ப்ளாக்கர் வரவச்சதோ எப்படியிருந்தாலும் சந்தோஷம்தான். நிறைய எழுதுங்க எழுத எழுத எழுத்து பழக்கமாகும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்ற மாதிரி.
ஆனா அது கூடவே நீங்கள் இன்னொரு காரியமும் பண்ணனும். என்னன்னா நிறைய படிக்கணும். படிக்க படிக்க மனசு பண்படும். உங்களுக்கு எது படிக்க ஆர்வமா இருக்கோ அதையே முதலில் படிங்க. கண்டதைப் படிச்சா பண்டிதனாகளாம்னு ஒரு பழமொழி இருக்கு. கொஞ்ச நாள் பிறகு அதைவிட தரமான எழுத்துக்களை படிக்கத் தொடங்குங்கள். அப்படியே படிப்புத் திறனை வளர்த்துக்கொண்டால் உங்கள் எழுத்துத் திறனும் தரமானதாக மாறிக்கொண்டே இருக்கும்.
என்னோட கதையையும் கொஞ்சம் கேளுங்க. கல்யாணத்துக்கு முன்னால புத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பேன். லெண்டிங் லைப்ரயில் சேர்ந்து இருந்தோம். இரண்டு நாளைக்கொருமுறை புத்தகங்கள் எடுத்து வருவார்கள். மூணு நாலு நாவல் வாங்கி இரண்டு நாளில் முடித்துவிடுவேன். படிச்சுக்கிட்டே இருப்பேன். அவ்வளவும் பாக்கெட் நாவல்கள். எங்க மாமா சொல்வார் நீ படிக்கறதெல்லாம் நாலனா புத்தகங்கள். அதுனால ஒரு பிரயோசனமும் இல்லைன்னு சொல்வார். அதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு அப்போ புரியலை. சரி ஏதோ சொல்றாருன்னு பேசாம இருந்துருவேன்.
அவர் பெரிய பெரிய புத்தகங்கள் படிப்பார். நான் அதையெல்லாம் மறந்தும்கூட தொட மாட்டேன். அப்படி இருந்தப்போ கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. கல்யாணமாகி புதுக்குடித்தனம் போனா அந்த வீட்டுல நிறைய புத்தகம். எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவசரப்பட்டு சந்தோஷப்பட்டுட்டேன்னு உடனேயே புரிந்தது. புத்தக அலமாரியை போய் புரட்டிப்பார்த்தேன். நான் படிக்கும் எழுத்தாளர் பெயர் ஒன்றுகூட இல்லை. ஜெயகாந்தன், ஜெயந்தன், ஆர்.சூமாமணி, அம்பை, கி.ராஜநாராயணன், கு.ஆழகிரிசாமி... போன்றவர்களின் புத்தகங்களே. இவங்க பேரக்கூட நான் கேள்விப்பட்டது இல்லை. இது என்னடா ஜெயந்திக்கு நேர்ந்த கொடுமைன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன்.
நான் நிறைய படிப்பேன் சொன்னத நம்பி என் கணவர் சொன்னார் எனக்கு எழுத்தாளர்களில் நா.பா. ரொம்பப் பிடிக்கும்னு சொல்லிட்டு அவர் எழுதிய குறிஞ்சி மலர் புத்தகத்தை கையில் கொடுத்து படி என்று சொல்லிவிட்டார். நான் அந்த எழுத்தாளர் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை. சரின்னு படிக்க ஆரம்பிச்சேன். என்னால படிக்கவே முடியல. கணவர் முதன்முதல்ல ஒரு புத்தகத்த கொடுத்து படிக்கச் சொல்லியிருக்காரேன்னு நானும் முக்கி முக்கி படிக்கிறேன். அந்த புத்தகத்த எழுதுன எழுத்தாளர மனசுக்குள்ளயே திட்டுறேன். அவருக்கு வாசகர் கூட்டம் இன்னும் ஒரு குரூப்பு இருக்குது. நான் மனசுக்குள்ள திட்டுனது தெரிஞ்சுச்சு நான் காலி.
இந்த நா.பார்த்தசாரதியோட புத்தகத்தப்பத்தி என்னோட கணவர் சொன்ன தகவல் அந்தப் புத்தகம் வந்த புதுசுல அந்த நாவல படிச்சவங்க வீட்டுல பிறந்த குழந்தைகளுக்கு ஆணாக இருந்தால் அரவிந்தன் என்றும் பெண்ணாக இருந்தால் பூரணி என்றும் பெயர் வைத்தார்களாம். அந்தக் கதையின் நாயகன், நாயகியின் பெயர்கள். அந்தளவுக்கு அந்த நாவல் பேமஸாம். நம்ம துணை முதல்வர் ஸ்டாலின்கூட அரசியலில் நுழைவதற்கு முன் தன்னை மக்களிடம் அறிமுகம் செய்து கொள்ள ஒரு டிவி சீரியலில் நடித்தாரே ஞாபகம் இருக்கிறதா? அது இந்த குறிஞ்சிமலர் நாவல்தான். அரவிந்தனாக ஸ்டாலின் நடித்தார்.
இப்படியெல்லாமா எழுதுவாங்க. பாக்கெட் நாவல் படிச்சுக்கிட்டிருந்தவகிட்ட இலக்கியத்தரமான புத்தகத்தைக் கொடுத்தால் எப்படி இருக்கும். அப்போது எனக்கு வயது வேறு 19. ஒரு வழியா கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சேன். சரி இதுதான் இப்படி இருந்துச்சேன்னு வேற புக் ஏதாவது படிக்கலாம்னு தேடுனா அங்க இருந்ததெல்லாமே இலக்கியவாதிகளோட எழுத்துக்கள்தானே.
அதுக்கப்பறம் வேற வழியே இல்லாம அங்குள்ள நாவல்களை படிக்கத் துவங்கினேன். அதன் பிறகு என்னால் பாக்கெட் நாவல்களை கிடைத்தாலும் படிக்கவே முடியவில்லை. எங்க மாமா சொன்ன நாலனா புத்தகம் என்ற வார்த்தைக்கு அப்போதுதான் அர்த்தம் தெரிந்தது. அதன் பின் நா.பா.வின் மணிபல்லவம், வலம்புரிசங்கு எல்லாம் படிக்க அவ்வளவு அருமையாக இருந்தது. கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் விழுந்து விழுந்து படித்தேன். ஜெயகாந்தன், கி.ரா., ஆர்.சூடாமணி, அம்பை, கு.அழகிரிசாமி, ச.தமிழ்செல்வன்... அடுப்பில் பாலை வைத்துவிட்டு ஏதாவது ஒரு புக்கை எடுப்பேன். பாலை சிம்மில்தானே வைத்திருக்கிறோம் என்ற நினைப்பில் புக்கில் மூழ்குவேன். அவ்வளவுதான். பால் தீய்ந்த வாசம் மூக்கைத் துளைக்கும் எழுந்து ஓடி அடுப்பை அணைப்பேன்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஒரு நல்ல விஷயத்தை சிரமப்பட்டு பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் அது நமக்கு நல்லதையே கொடுக்கும். ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் படிப்புக்குன்னு ஒதுக்குங்க. எவ்வளவோ நேரத்தை நாம வீணாக்குறோம். நல்ல விஷயத்துக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது ஒன்னும் தப்பில்லைதானே. சில இடங்களில் நாம் காத்திருக்க வேண்டியதிருக்கும். உதாரணமாக ஆஸ்பத்திரி, பேங்க் இது மாதிரி சில இடங்களில் மணிக்கணக்கில் நாம் காத்திருக்க நேரிடும். அது மாதிரி நேரங்களில் கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தால் படித்த திருப்தியும் கிடைக்கும். நேரமும் சுலபத்தில் போகும்.
சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே படிப்பார்கள். அது ஒன்றும் தப்பில்லை. தமிழிலும் உள்ள எழுத்துக்கள் எப்படி இருக்கிறது என்று படித்துப்பாருங்கள். இலக்கியம்னா சங்க கால இலக்கியத்தைப் படிக்கச் சொல்லவில்லை. சமகால இலக்கியத்தைப் படியுங்கள். சங்க கால இலக்கியத்தைப் படித்தாலும் தவறில்லை. உண்மையான அரசியல் கட்டுரைகளை படித்து நாட்டு நிலைமை தெரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்த படிப்பு ஒன்றே நம்மை சரியான திசையில் பயணிக்க வைக்கும். ஆகவே இளைஞர்களே உங்களுக்கு இந்த அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.
பெண் எழுத்தாளர். மிகச் சிறந்த எழுத்தாளர். ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் போன்றவர்களையெல்லாம் விட சிறந்தவரா என்று கேட்பீர்களேயானால் எனது பதில் ஆம். அவரது எழுத்தை படித்தவர்கள் இதை உணர்வார்கள். படிக்காதவர்கள் படித்தீர்களேயானால் உணர்வீர்கள்.
இப்போவெல்லாம் எழுத்தாளர்கள் பிரபலமாவதற்கு குழாயடிச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அவர்களது வாசகர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து அதே சண்டையை தொடர்கிறார்கள்.
ஆனால் சூடாமணி, இவரது கதையைத் தவிர வேறெந்த விவரமும் இவரைப்பற்றி பத்திரிகைகளில் வந்ததில்லை. இவரது போட்டோக்கூட எந்தப் பத்திரிகையிலும் வந்ததில்லை. அவருக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை போலும். அவரது எழுத்துக்கள் மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நினைத்தார் போலும்.
அவர் மறைந்துவிட்டார் என்று எம்.ஏ.சுசீலா அவர்களின் வலைப்பூ மூலமாகவே அறிந்தேன். மற்றபடி பேப்பர், பத்திரிகைகள் என்று நானும் புரட்டிப்புரட்டி பார்க்கிறேன் அவரைப்பற்றி ஒரு செய்தியும் காணோம். அவர் உயிரோடு இருந்தபோது அவரைப்பற்றி வெளியே தெரியாமல் இருந்ததைப்போலவே அவரது மரணமும் வெளியே தெரிய வேண்டியதில்லை என்று அவர் விரும்பியிருப்பாரோ? அல்லது பத்திரிகளுக்கு இவரைப்பற்றி எழுதுவதால் ஆதாயம் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
இவர் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நான்கைந்து நாவல்கள் (எண்ணிக்கை எனக்கு சரியாக தெரியவில்லை) எழுதியுள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடன் நாடகப் போட்டியில் பரிசு பெற்ற நாடகமும் உண்டு. ஆங்கிலத்திலும் சூடாமணி ராகவன் என்கிற பெயரில் எழுதியுள்ளதாக அறிகிறேன்.
அவரது எழுத்துக்கள் நம்மை சிறுகுழந்தைபோல் கையைப்பிடித்து அழைத்துச் செல்லும். அவ்வளவு எளிமையாக இருக்கும். படித்து முடித்தவுடன் அந்தக் கதையைவிட்டு வெளியே வர முடியாது. அம்மாடி எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று மலைப்பு தோன்றும். ஒவ்வொரு கதைக்கும் அதே மலைப்பு எனக்கு தோன்றும். எழுத்து என்பதை வரம் என்று சொல்வார்கள். அந்த வரம் இவருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. பெண்களின் மற்றும் குழந்தைகளின் மன உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்துவார்.
இவருக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பதாய் அறிகிறேன். அதற்கு பதிலாய்த்தான் அவருக்கு அத்தனை அறிவோ.
அவருக்கு சாகித்ய அகாடமி, ஞான பீடம் போன்ற பரிசுகள் கொடுக்கப்படாததால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாள் அந்த விருதுகள் பெருமையடைந்திருக்கும்.
தமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, இது போன்ற அற்புதமான எழுத்துக்களை போற்றிப் பாதுகாத்தாலே தமிழ் நிச்சயம் வாழும்.
இப்போவெல்லாம் எழுத்தாளர்கள் பிரபலமாவதற்கு குழாயடிச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். அவர்களது வாசகர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து அதே சண்டையை தொடர்கிறார்கள்.
ஆனால் சூடாமணி, இவரது கதையைத் தவிர வேறெந்த விவரமும் இவரைப்பற்றி பத்திரிகைகளில் வந்ததில்லை. இவரது போட்டோக்கூட எந்தப் பத்திரிகையிலும் வந்ததில்லை. அவருக்கு அதிலெல்லாம் விருப்பமில்லை போலும். அவரது எழுத்துக்கள் மட்டுமே பேசப்பட வேண்டும் என்று நினைத்தார் போலும்.
அவர் மறைந்துவிட்டார் என்று எம்.ஏ.சுசீலா அவர்களின் வலைப்பூ மூலமாகவே அறிந்தேன். மற்றபடி பேப்பர், பத்திரிகைகள் என்று நானும் புரட்டிப்புரட்டி பார்க்கிறேன் அவரைப்பற்றி ஒரு செய்தியும் காணோம். அவர் உயிரோடு இருந்தபோது அவரைப்பற்றி வெளியே தெரியாமல் இருந்ததைப்போலவே அவரது மரணமும் வெளியே தெரிய வேண்டியதில்லை என்று அவர் விரும்பியிருப்பாரோ? அல்லது பத்திரிகளுக்கு இவரைப்பற்றி எழுதுவதால் ஆதாயம் ஒன்றும் இல்லாமல் இருக்கலாம்.
இவர் 500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் நான்கைந்து நாவல்கள் (எண்ணிக்கை எனக்கு சரியாக தெரியவில்லை) எழுதியுள்ளார். நாடகங்களும் எழுதியுள்ளார். ஆனந்தவிகடன் நாடகப் போட்டியில் பரிசு பெற்ற நாடகமும் உண்டு. ஆங்கிலத்திலும் சூடாமணி ராகவன் என்கிற பெயரில் எழுதியுள்ளதாக அறிகிறேன்.
அவரது எழுத்துக்கள் நம்மை சிறுகுழந்தைபோல் கையைப்பிடித்து அழைத்துச் செல்லும். அவ்வளவு எளிமையாக இருக்கும். படித்து முடித்தவுடன் அந்தக் கதையைவிட்டு வெளியே வர முடியாது. அம்மாடி எப்படி எழுதியிருக்கிறார்கள் என்று மலைப்பு தோன்றும். ஒவ்வொரு கதைக்கும் அதே மலைப்பு எனக்கு தோன்றும். எழுத்து என்பதை வரம் என்று சொல்வார்கள். அந்த வரம் இவருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. பெண்களின் மற்றும் குழந்தைகளின் மன உணர்வுகளை மிக நுட்பமாக வெளிப்படுத்துவார்.
இவருக்கு உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருப்பதாய் அறிகிறேன். அதற்கு பதிலாய்த்தான் அவருக்கு அத்தனை அறிவோ.
அவருக்கு சாகித்ய அகாடமி, ஞான பீடம் போன்ற பரிசுகள் கொடுக்கப்படாததால் அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அந்த விருதுகள் கொடுக்கப்பட்டிருந்தாள் அந்த விருதுகள் பெருமையடைந்திருக்கும்.
தமிழ், தமிழன் என்று சொல்லிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது, இது போன்ற அற்புதமான எழுத்துக்களை போற்றிப் பாதுகாத்தாலே தமிழ் நிச்சயம் வாழும்.
நான் பத்தாம் வகுப்பு வரைதான் படிச்சிருக்கேங்க. இந்த ஊரப்பத்தி உலகத்தப்பத்தியெல்லாம் தெரிஞ்சுக்கணும் அதுனால தினமும் நியூஸ் பாக்கணும்னு எங்க மாமா சொல்வாருங்க. அதுனால நானும் நியூஸ் பாப்பேங்க. எனக்கு சில விஷயங்கள் புரிய மாட்டேங்குதுங்க. அதுனால படிச்சவங்க, விஷயம் தெரிஞ்சவங்க கொஞ்சம் எடுத்துச்சொன்னா புரிஞ்சுப்பேன்ங்க.
விஷயம் என்னன்னா கொஞ்ச வருஷத்துக்கு முந்தி ஈராக்குல பேரழிவு ஆயுதங்கள் இருக்குதுன்னு அமெரிக்கா சொல்லுச்சுங்க. சொல்லிட்டு தன் கூட சில நாட்டு படைகளையும் கூட்டிட்டு ஈராக்குக்குள்ள போனாங்க. அந்த நாட்டு அதிபர பதுங்கு குழிக்குள்ள இருந்து இழுத்து வந்தாங்க. புதிய அதிபர அறிவிச்சாங்க. பழைய அதிபருக்கு தூக்கு தண்டனை கொடுத்தாங்க. அதுக்கு அப்புறமும் படைகள் அங்கே ஏன் இருந்துச்சு. அப்புறம் இப்ப படைகள் அனைத்தையும் வாபஸ் வாங்கப் போவதாக நேத்து அமெரிக்க அதிபர் அறிவிக்கிறார். இப்ப ஏன் வெளியேறுது? இந்த பேரழிவு ஆயுதங்கள தேடுறதுக்குத்தான் நாங்க அடுத்த நாட்டுக்குள்ள போறோம்னு சொன்னாங்க. அங்க எந்த ஆயுதங்களும் கெடைக்கல போலிருக்கு. கெடச்சிருந்தாத்தான் அதுக்கு பின்னால ராணுவத்துக்காரங்க நின்னு போட்டோவோட நியூசுல காட்டியிருப்பாங்களே. இல்லன்னா கண்டுபிடிச்சோம்னாவது சொல்லியிருப்பாங்களே. அப்போ அங்கே எந்த ஆயுதங்களும் இல்லாதபோது ஏன் அங்க போனாங்க. முதல்ல இன்னொரு நாட்டுக்குள்ள போயி ஆயுதத்த தேடுறதுக்கு இவங்களுக்கு என்ன உரிமை இருக்கு.
நம்ம நாட்டுக்கு பக்கத்து நாடு (இலங்கை) ஒரு இனத்தை அழிச்சாங்களே. அவங்க வச்சிருந்த ஆயுதங்களெல்லாம் எந்த வகை ஆயுதங்கள். ஒரு குண்டு போட்டா அங்க இருக்கற ஆக்சிஷன் எல்லாத்தையும் உறிஞ்சி மக்களை மூச்சுத்திணறி சாகடிக்குமாம். மக்கள் லட்சக்கணக்கில் செத்தாங்களே அப்போ யாரும் என்னான்னு கேக்கலையே. அது அவங்க உள்நாட்டு விவகாரம்னு சொன்னாங்களே. ஐநா சபை ஆளுங்களால இப்போகூட இலங்கைக்கு போக முடியலங்கறாங்களே. ஈராக், ஆப்கானிஸ்தான் மாதிரி நாட்டுக்குள்ள அவங்க பாட்டுக்கு போறாங்களே அது எப்படி?
இதே ஈராக் பேரழிவு ஆயுதங்கள் இருக்கறதா வதந்தி பரப்பி எங்கள் நாட்டை சூறையாடிட்டாங்கன்னு சொல்லிட்டு கூட இந்தியா, சைனா போன்ற நாடுகளை துணைக்கு அழைத்துக்கொண்டு அமெரிக்கா மீது படையெடுத்தால், அல்லது போபால் புகழ் ஆண்டர்ஸன்னும் இந்தியாவுல வெடிகுண்டு வைக்கறதுக்கு ப்ளான் போட்டுக்குடுத்த ஹெட்லியோ இட்லியோ அமெரிக்காவுல பதுங்கியிருக்காங்கன்னு சொல்லிட்டு இந்தியா துணைக்கு சில நாடுகளை அழைத்து கூட்டுப்படையுடன் அமெரிக்காவுக்குள்ள நுழைஞ்சு, அதிபருக்கு தண்டனை கொடுத்துடறாங்க. அவங்க சொல் பேச்சு கேக்குற அதிபர ஆட்சியில உட்கார வைக்கிறாங்க. அப்புறம் அங்க பொருளாதாரம் படுத்துருச்சு நாங்க சரி பண்ணுறோம்னு சொல்லி அங்கேயே சில வருஷங்கள் இருக்காங்க. அப்பறம் ஒருநாள் நாங்க வெளியேறுறோம்னு வெளிறேறிருறாங்கன்னு வச்சுக்கங்க இப்போது எல்லாத்தையும் மூடிக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கும் உலகம் அப்போதும் பார்த்துக்கொண்டிருக்குமா?
எனக்கு உள்நாட்டு சட்டங்களும் நியாயங்களுமே சரியாத் தெரியாது. உலக சட்டம் என்னான்னு படிச்சவஙக அறிஞ்சவுங்க தெரிஞ்சவுங்க சொன்னீங்கன்னா கேட்டுக்குவேன்.