நிறைய சிறு வயது இளைஞர்கள் ப்ளாக் எழுத வந்திருப்பது பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு பேருக்கு நாமளும் எழுதணும்னுற ஆசை வந்திருக்கே. வந்துச்சோ ப்ளாக்கர் வரவச்சதோ எப்படியிருந்தாலும் சந்தோஷம்தான். நிறைய எழுதுங்க எழுத எழுத எழுத்து பழக்கமாகும். சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்னு சொல்ற மாதிரி.
ஆனா அது கூடவே நீங்கள் இன்னொரு காரியமும் பண்ணனும். என்னன்னா நிறைய படிக்கணும். படிக்க படிக்க மனசு பண்படும். உங்களுக்கு எது படிக்க ஆர்வமா இருக்கோ அதையே முதலில் படிங்க. கண்டதைப் படிச்சா பண்டிதனாகளாம்னு ஒரு பழமொழி இருக்கு. கொஞ்ச நாள் பிறகு அதைவிட தரமான எழுத்துக்களை படிக்கத் தொடங்குங்கள். அப்படியே படிப்புத் திறனை வளர்த்துக்கொண்டால் உங்கள் எழுத்துத் திறனும் தரமானதாக மாறிக்கொண்டே இருக்கும்.
என்னோட கதையையும் கொஞ்சம் கேளுங்க. கல்யாணத்துக்கு முன்னால புத்தகங்கள் படித்துக்கொண்டே இருப்பேன். லெண்டிங் லைப்ரயில் சேர்ந்து இருந்தோம். இரண்டு நாளைக்கொருமுறை புத்தகங்கள் எடுத்து வருவார்கள். மூணு நாலு நாவல் வாங்கி இரண்டு நாளில் முடித்துவிடுவேன். படிச்சுக்கிட்டே இருப்பேன். அவ்வளவும் பாக்கெட் நாவல்கள். எங்க மாமா சொல்வார் நீ படிக்கறதெல்லாம் நாலனா புத்தகங்கள். அதுனால ஒரு பிரயோசனமும் இல்லைன்னு சொல்வார். அதுக்கு அர்த்தம் என்னன்னு எனக்கு அப்போ புரியலை. சரி ஏதோ சொல்றாருன்னு பேசாம இருந்துருவேன்.
அவர் பெரிய பெரிய புத்தகங்கள் படிப்பார். நான் அதையெல்லாம் மறந்தும்கூட தொட மாட்டேன். அப்படி இருந்தப்போ கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க. கல்யாணமாகி புதுக்குடித்தனம் போனா அந்த வீட்டுல நிறைய புத்தகம். எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்லை. அவசரப்பட்டு சந்தோஷப்பட்டுட்டேன்னு உடனேயே புரிந்தது. புத்தக அலமாரியை போய் புரட்டிப்பார்த்தேன். நான் படிக்கும் எழுத்தாளர் பெயர் ஒன்றுகூட இல்லை. ஜெயகாந்தன், ஜெயந்தன், ஆர்.சூமாமணி, அம்பை, கி.ராஜநாராயணன், கு.ஆழகிரிசாமி... போன்றவர்களின் புத்தகங்களே. இவங்க பேரக்கூட நான் கேள்விப்பட்டது இல்லை. இது என்னடா ஜெயந்திக்கு நேர்ந்த கொடுமைன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டேன்.
நான் நிறைய படிப்பேன் சொன்னத நம்பி என் கணவர் சொன்னார் எனக்கு எழுத்தாளர்களில் நா.பா. ரொம்பப் பிடிக்கும்னு சொல்லிட்டு அவர் எழுதிய குறிஞ்சி மலர் புத்தகத்தை கையில் கொடுத்து படி என்று சொல்லிவிட்டார். நான் அந்த எழுத்தாளர் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை. சரின்னு படிக்க ஆரம்பிச்சேன். என்னால படிக்கவே முடியல. கணவர் முதன்முதல்ல ஒரு புத்தகத்த கொடுத்து படிக்கச் சொல்லியிருக்காரேன்னு நானும் முக்கி முக்கி படிக்கிறேன். அந்த புத்தகத்த எழுதுன எழுத்தாளர மனசுக்குள்ளயே திட்டுறேன். அவருக்கு வாசகர் கூட்டம் இன்னும் ஒரு குரூப்பு இருக்குது. நான் மனசுக்குள்ள திட்டுனது தெரிஞ்சுச்சு நான் காலி.
இந்த நா.பார்த்தசாரதியோட புத்தகத்தப்பத்தி என்னோட கணவர் சொன்ன தகவல் அந்தப் புத்தகம் வந்த புதுசுல அந்த நாவல படிச்சவங்க வீட்டுல பிறந்த குழந்தைகளுக்கு ஆணாக இருந்தால் அரவிந்தன் என்றும் பெண்ணாக இருந்தால் பூரணி என்றும் பெயர் வைத்தார்களாம். அந்தக் கதையின் நாயகன், நாயகியின் பெயர்கள். அந்தளவுக்கு அந்த நாவல் பேமஸாம். நம்ம துணை முதல்வர் ஸ்டாலின்கூட அரசியலில் நுழைவதற்கு முன் தன்னை மக்களிடம் அறிமுகம் செய்து கொள்ள ஒரு டிவி சீரியலில் நடித்தாரே ஞாபகம் இருக்கிறதா? அது இந்த குறிஞ்சிமலர் நாவல்தான். அரவிந்தனாக ஸ்டாலின் நடித்தார்.
இப்படியெல்லாமா எழுதுவாங்க. பாக்கெட் நாவல் படிச்சுக்கிட்டிருந்தவகிட்ட இலக்கியத்தரமான புத்தகத்தைக் கொடுத்தால் எப்படி இருக்கும். அப்போது எனக்கு வயது வேறு 19. ஒரு வழியா கஷ்டப்பட்டு படிச்சு முடிச்சேன். சரி இதுதான் இப்படி இருந்துச்சேன்னு வேற புக் ஏதாவது படிக்கலாம்னு தேடுனா அங்க இருந்ததெல்லாமே இலக்கியவாதிகளோட எழுத்துக்கள்தானே.
அதுக்கப்பறம் வேற வழியே இல்லாம அங்குள்ள நாவல்களை படிக்கத் துவங்கினேன். அதன் பிறகு என்னால் பாக்கெட் நாவல்களை கிடைத்தாலும் படிக்கவே முடியவில்லை. எங்க மாமா சொன்ன நாலனா புத்தகம் என்ற வார்த்தைக்கு அப்போதுதான் அர்த்தம் தெரிந்தது. அதன் பின் நா.பா.வின் மணிபல்லவம், வலம்புரிசங்கு எல்லாம் படிக்க அவ்வளவு அருமையாக இருந்தது. கல்கியின் சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் விழுந்து விழுந்து படித்தேன். ஜெயகாந்தன், கி.ரா., ஆர்.சூடாமணி, அம்பை, கு.அழகிரிசாமி, ச.தமிழ்செல்வன்... அடுப்பில் பாலை வைத்துவிட்டு ஏதாவது ஒரு புக்கை எடுப்பேன். பாலை சிம்மில்தானே வைத்திருக்கிறோம் என்ற நினைப்பில் புக்கில் மூழ்குவேன். அவ்வளவுதான். பால் தீய்ந்த வாசம் மூக்கைத் துளைக்கும் எழுந்து ஓடி அடுப்பை அணைப்பேன்.
இதை ஏன் சொல்கிறேன் என்றால் நாம் ஒரு நல்ல விஷயத்தை சிரமப்பட்டு பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டால் அது நமக்கு நல்லதையே கொடுக்கும். ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் படிப்புக்குன்னு ஒதுக்குங்க. எவ்வளவோ நேரத்தை நாம வீணாக்குறோம். நல்ல விஷயத்துக்கு ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது ஒன்னும் தப்பில்லைதானே. சில இடங்களில் நாம் காத்திருக்க வேண்டியதிருக்கும். உதாரணமாக ஆஸ்பத்திரி, பேங்க் இது மாதிரி சில இடங்களில் மணிக்கணக்கில் நாம் காத்திருக்க நேரிடும். அது மாதிரி நேரங்களில் கையில் ஒரு புத்தகம் வைத்திருந்தால் படித்த திருப்தியும் கிடைக்கும். நேரமும் சுலபத்தில் போகும்.
சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே படிப்பார்கள். அது ஒன்றும் தப்பில்லை. தமிழிலும் உள்ள எழுத்துக்கள் எப்படி இருக்கிறது என்று படித்துப்பாருங்கள். இலக்கியம்னா சங்க கால இலக்கியத்தைப் படிக்கச் சொல்லவில்லை. சமகால இலக்கியத்தைப் படியுங்கள். சங்க கால இலக்கியத்தைப் படித்தாலும் தவறில்லை. உண்மையான அரசியல் கட்டுரைகளை படித்து நாட்டு நிலைமை தெரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்த படிப்பு ஒன்றே நம்மை சரியான திசையில் பயணிக்க வைக்கும். ஆகவே இளைஞர்களே உங்களுக்கு இந்த அன்பான வேண்டுகோளை வைக்கிறேன்.
30 comments:
Madam
நல்ல அட்வைஸ்..தேவையானதும் கூட
ச.சங்கர்
REDERS ARE LEADERS.......!
வாசிப்பு....அறிவை செதுக்கும் உளி... நல்ல பகிர்வு தோழி...!
சரியான கருத்துக்கள்தான், நானும் ராணி காமிக்ஸில் ஆரம்பித்தவன்தான், இன்றைக்கு நான் படிக்கும் புத்தகங்கள் எனக்கே சற்று புரியாமல் நிறுத்தி பத்து பத்து பக்கமாக படிக்க வேண்டியிருக்கிறது..
ஆனால் பதிவுலகம் என்பது பெரும்பாலும் அரைகுறை எழுத்தாகவே இருப்பதற்கு காரணம், ஏதோ ஒரு ஆர்வத்தில் எழுத வந்துவிட்டு பின்பு தொடர முடியாமல் தெரிந்ததை எல்லாம் எழுதி நீர்த்துப் போய்விடுகிறார்கள்.. காரணம் வாசிக்கும் தன்மை இல்லாததுதான்....
சரிங்க மேடம்
ஆனா நானெல்லாம் ப்ளாக் எழுதுறது என் எழுத்தை வளர்க்கிறதுக்கு இல்லை ஜஸ்ட் டைம் பாஸ்...
இருக்குற ஆயிரத்து சொச்ச எழுத்தாளர்கள் புத்தகங்களை வாசிக்கவே பாதி டைம் காலியாயிடுது...
கே.ஆர்.பி.செந்தில் said...
சரியான கருத்துக்கள்தான், நானும் ராணி காமிக்ஸில் ஆரம்பித்தவன்தான், இன்றைக்கு நான் படிக்கும் புத்தகங்கள் எனக்கே சற்று புரியாமல் நிறுத்தி பத்து பத்து பக்கமாக படிக்க வேண்டியிருக்கிறது..
ஆனால் பதிவுலகம் என்பது பெரும்பாலும் அரைகுறை எழுத்தாகவே இருப்பதற்கு காரணம், ஏதோ ஒரு ஆர்வத்தில் எழுத வந்துவிட்டு பின்பு தொடர முடியாமல் தெரிந்ததை எல்லாம் எழுதி நீர்த்துப் போய்விடுகிறார்கள்.. காரணம் வாசிக்கும் தன்மை இல்லாததுதான்....//
வருங்கால எழுத்தாளர் செந்தில் மாம்ஸ் வாழ்க வாழ்க...
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சங்கர்!
நன்றி தேவா!
நன்றி கே.ஆர்.பி.செந்தில்!
நானும் அதை கவனித்ததால்தான் இந்த இடுகை.
நன்றி பிரியமுடன் வசந்த்!
நாம் நன்றாக எழுத வேண்டும் என்பது இரண்டாம்பட்சம்தான். எழுதுவதும் எழுதாததும் நமது இஷ்டம். ஆனால் படிப்பு எப்போதும் நம்மை செழுமைப்படுத்தும். பிரச்சனைகளில் முடிவெடுக்க நமக்கு ஒரு தெளிவைக்கொடுக்கும்.
நல்ல வேண்டுகோள் முயற்சி செய்றோம்
ரொம்ப நல்ல கருத்து. ஒவ்வொறு புத்தகமும் ஆக்டோபஸின் பலமுனை நீட்சிகளைப் போல பல
பரிமாணங்களை கொண்டிருக்கின்றன. ஒவ்வொறு முறை படிக்கும் போதும் அதன் எதாவது ஒரு கரம் நம்மை கவ்விச் சுவீகரிக்கும். அதே போல் சரியான புத்தகம் சரியான வயதில் தேர்ந்தெடுப்பது அவசியம். என்னுடைய பள்ளி வயதில், யாரோ சொன்னார்கள் என்று ஜே.ஜே.சில குறிப்புகள் புத்தகத்தை எடுத்துவிட்டு அதன் கதை புரியாமல், சமீப காலம் வரை சு.ரா புத்தகம் என்றாலே பயத்துடன் தவிர்த்தேன். அப்புறம் புளியமரத்தின் கதை அவரோடு நெருங்கவைத்தது.
நானும் பாக்கெட் நாவல் மட்டும்தான் படிச்சிட்டிருந்தேன். எங்க தமிழ்வாத்தியார்தான், குறிஞ்சிமலர்,.. இன்னபிறவற்றை அறிமுகப்படுத்தி வெச்சார். கல்லூரியில் இருந்தவரை நூலகத்துலேர்ந்து அள்ளிட்டு வந்துடுவேன்.இங்கே வந்தப்புறம் ரொம்பவே குறைஞ்சுபோச்சு. ஆனாலும் சென்னைலைப்ரரி இருக்கே :-)))
நல்ல விஷயம்..பின்பற்றவேண்டும்...
நல்லதோர் கருத்தை சொல்லியிருக்கீங்க. வாழ்த்துக்கள் தோழி.
நல்ல கருதுக்கள் அனைவரும் பின்பற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
நல்ல பதிவு. பின்பற்ற முயற்சி செய்கிறேன்
நல்ல ஒரு கருத்தை சொல்லி இருக்கிறீர்கள் பதிவுக்கு நன்றி .....
சிலர் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே படிப்பார்கள். அது ஒன்றும் தப்பில்லை. தமிழிலும் உள்ள எழுத்துக்கள் எப்படி இருக்கிறது என்று படித்துப்பாருங்கள். இலக்கியம்னா சங்க கால இலக்கியத்தைப் படிக்கச் சொல்லவில்லை. சமகால இலக்கியத்தைப் படியுங்கள். சங்க கால இலக்கியத்தைப் படித்தாலும் தவறில்லை. உண்மையான அரசியல் கட்டுரைகளை படித்து நாட்டு நிலைமை தெரிந்துகொள்ளுங்கள். ஆழ்ந்த படிப்பு ஒன்றே நம்மை சரியான திசையில் பயணிக்க வைக்கும்.
.....அருமையான அறிவுரை.
இன்றைய இளைய சமுதாயத்துக்கு அவசியமானது. சுட்டிக் காட்டியமைக்கு வாழ்த்துகள்,
எழுத்தின் ஆணிவேர் படிப்புதான்.
நன்றாகச் சொன்னீர்கள்.
இது எல்லோருக்கும் பொருந்தும்.
வாசிப்பு தருகிற அனுபவமும் சுகமும் அதை உணர்ந்தவர்களுக்கே வெளிச்சம்.
ஒரு குடும்பப்பெண் இப்படியொரு கட்டுரை எழுதியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி, இவ்வளவு மேம்பட்ட சிந்தனைகளை சுமந்தபடி எத்தனை பெண்கள் குடும்ப நெருக்கடியில் சிக்கிதவிக்கிறார்களோ தெரியவில்லை... உங்கள் கணவருக்கு எனது வாழ்த்துக்கள்.
Learnng is the wealth of experiences for future.
Thanks for advice!
We 'll try to read and write the best.
ஆரம்பத்தில் எல்லோருமே பாக்கெட் நாவலில் இருந்து தானே படிக்கும் பழக்கத்தை ஆரம்பிக்கிறோம்...
பின்னர் மெதுவாக நம் வாசிப்புத்தன்மையை மாற்றிக்கொண்டால், பொக்கிஷமாக இருக்கும் பல நல்ல நூல்களை படிக்க அது வழி வகுக்கும்...
நல்ல அறிவுரை சொல்லி இருக்கிறீர்கள்...
நல்ல பதிவு..
கேஆர்பி செந்திலண்ணன் சொல்லி உங்க பக்கம் வந்தேன். நிஜமாவே நல்லாருக்கு உங்க ப்ளாக்! நன்றி கேஆர்பிக்கும் உங்களுக்கும்!
நானும் சித்ரா தளவழி வந்தேன், கண்டேன், படித்தேன் சூப்பருங்க.
நல்ல பதிவு.
www.vijisvegkitchen.blogspot.com
நானும் உங்களைப்போலவே ஒரு புத்தகப்புழுதான். உங்கள் பிளாக்கை இப்போதுதான் பார்க்கிறேன். உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.
நல்ல பதிவுங்க.. படிக்கற பழக்கம் ரொம்ப நல்லதுதான்..
சென்னையில் சுற்றிப் பார்க்கக் கூடிய முக்கிய கோவில்கள், இடங்கள் எவை? நியாயமான கட்டணத்தில் சேவை தரும் தரமான ஹோடேல்ஸ், travelrs விபரம் தரமுடியுமா? please send your mails to sivaear2003@epatra.com