பதிவுலகம்
12/04/2010 | Author: ஜெயந்தி
வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். அப்படி ஒரு சூழ்நிலையில்தான் இந்த ப்ளாக் எனக்கு அறிமுகமானது. வேறொரு உலகத்திற்குள் நுழைந்தது போல் இருக்கிறது. பார்க்காமல் பேசிக்கொள்வது, பாராட்டிக்கொள்வது, திட்டிக்கொள்வது, சண்டையிட்டுக்கொள்வது உண்மையிலேயே இது வேறொரு உலகம்தான். இந்த உலகம் எனக்கு மிகவும் பிடித்தமான உலகமாக மாறிப்போனது. எத்தனை எத்தனை உறவுகள். நட்புகள்.

ப்ளாக் தொடங்குவற்கு முன் என்னால் எழுத முடியும் என்று நான் நினைத்ததே இல்லை. என்னையும் எழுத வைத்திருக்கிறது கூகுள். என்னைப்போல் ஆயிரக்கணக்கானவர்களை எழுத வைத்திருக்கிறது. எத்தனை விதமான அனுபவங்கள் எத்தனை விதமான சிந்தனைகள் ஆயிரக்கணக்கில் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான எழுத்துக்கள். பத்திரிகைன்னு எடுத்துக்கொண்டால் ஒரு சிலர் மட்டுமே எழுத முடியும். அதிலும் தரம் என்று ஒன்று வைத்திருப்பார்கள். இங்கே அதெல்லாம் இல்லை. நமக்கு நாமே ராஜா. அதற்காக ப்ளாக் உலகம் ஒன்றும் பத்திரிகை உலகத்திற்கு குறைந்தது என்று நான் நினைக்கவில்லை.

சிலர் எழுத்துக்கள் ரொம்ப நன்றாக இருக்கும். என்னைப்போல் சிலர் எழுத்துக்கள் பரவாயில்லாமல் இருக்கும். அவரவர் படிப்பு, அறிவு, வளர்ந்த விதம், சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரியே எழுத்துக்கள் அமையும். அதனால் எல்லா எழுத்துக்களும் அவர்களது உணர்வுகளே என்ற வகையில் நான் அனைத்தையும் ஒன்றாகவே பார்க்கிறேன்.

நாம் எழுதுவதை இன்னொருவர் பாராட்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நாம் எழுதுவதையும் பாராட்டுகிறார்களே என்று எனக்குத் தோன்றும். நிச்சயம் எல்லோருக்கும் பின்னூட்டம் அதே மகிழ்ச்சியை அளிக்கும் என்று நினைக்கிறேன். நானும் நிறைய பேருக்கு பின்னூட்டமிட நினைப்பேன். என்னுடை வேலைகளுக்கு நடுவே குறைந்த அளவே பின்னூட்டமிட முடிகிறது என்பது எனக்கு மிகப்பெரிய குறையே. ஒருவருக்கு ஒருவர் வாக்களித்துக்கொள்வது, நாம் ஒருவருக்கு வாக்களித்தால்தான் நாமும் நமக்கான வாக்கை எதிர்பார்க்க முடியும். இது ஒன்றும் ஒன்வே இல்லையே.

இப்படியே சந்தோஷமா போயிட்டிருந்த ப்ளாக் உலகத்துல ஒரு சின்ன தேக்கம். சிலபல காரணங்களுக்காக மூன்று மாதங்களுக்கு என்னால் இந்தப்பக்கம் வர முடியாது. மக்களே என்னை மறந்துறாதீங்க. எப்பவாவது நேரம் கிடைத்தால் இந்தப்பக்கம் வருவேன். (யாருப்பா அது அப்பாடான்னு பெருமூச்சு விடறது. சிரிப்பு போலீசும், சவுந்தருமா?)

ஆரஞ்சு கலர் பட்டுப்புடவையை பார்த்தால்
அதை வாங்கிக்கொடுத்த அக்காவின் ஞாபகம்

மயிலிறகைப் பார்த்தால்
சிறுவயது பள்ளித்தோழனோடு
புத்தகத்தில் குட்டிபோட வைத்து
மயிலிறகு வளர்த்த ஞாபகம்

சுவரில் தொங்கும் இயற்கைக் காட்சி படத்தைப்பார்த்தால்
ஆஸ்திரேலியாவில் இருந்து வரும்போது கொடுத்த
தோழி ஞாபகம்

யாருக்காவது எதைப்பார்த்தாவது
என் ஞாபகம் வருமா?

டிஸ்கி: இத நான் கவிதைன்னு சொல்லல. நீங்களா கவிதைன்னு நெனச்சுக்கிட்டா கம்பேனி பொறுப்பில்ல.
சிலர் தமிழ்படங்களை விமர்சிப்பதைப்பார்க்கும்போது எனக்கு பயங்கர கோபம் வரும். நாம் அருமையான படம் என்று நினைத்திருப்போம், அந்தப்படத்தை குறைகூறி கிழித்து தொங்கவிட்டுக்கொண்டிருப்பார்கள். பிறகு நமக்கு கோபம் வராதா? இவர்கள் எந்தப்படத்தைத்தான் நல்ல படம் என்று கூறுவார்கள் என்று தோன்றும். இவர்களுக்கு ரசனையே இல்லையோ என்றும் நினைப்பேன்.

எங்க மாமாவும் அக்காவும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்களிடம் ஏதாவது ஒரு நல்ல படம் பார்க்கலாமா என்று கேட்டேன். அவர்கள் அளித்தபதில் இதேபோல் எனக்கு கோபத்தை ஊட்டியது. எங்களுக்கு தமிழ்படமே பாக்க முடியல என்றனர். ஏதோ பிலிம் சொசைட்டியில் மெம்பராம். வாரம் ஒரு உலகப் படம் போடுவார்களாம். அதைப்பார்த்துவிட்டு தமிழ்படம் பார்க்க முடியவில்லை என்றனர். அது நான் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் மாமா என்பதால் சின்ன கோபத்தோடு போயிற்று.



இப்போது சில வருடங்களாக என் பிள்ளைகளின் தயவில் சில உலகப்படங்கள் நானும் பார்க்கிறேன். ஆங்கில சப் டைட்டிலுக்கே எனக்கு தமிழில் மொழிபெயர்ப்பு செய்யனும். அப்படி சமீபத்தில் பார்த்த படம் The Way Home 2002 - வீடு திரும்பல் என்ற கொரியன் பிலிம். முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு கூன் வளைந்த வாய் பேச முடியாத ஒரு கிழவி, ஒரு 7-8 வயது சிறுவன். அந்தச் சிறுவனின் அம்மா மகனை தன் தாயிடம் (சிறுவனின் பாட்டி) கொஞ்சம் நாட்கள் விட்டுச் செல்கிறார். மலைமேல் அமைந்த கிராமம். அதிலும் அவங்க பாட்டி வீடு இன்னும் மேலே தனியாக இருக்கும்.

சிட்டியில் வளர்ந்த பையன். அவனுக்கு அந்த ஊர், அந்த வீடு, அந்தப்பாட்டி எதுவுமே பிடிக்கவில்லை. ஆனாலும் அவர் அம்மா வலுக்கட்டாயமாக விட்டுச் செல்கிறார். அவன் தன் பாட்டியிடம் பேசவே மாட்டான் அவ்வளவு பிடிக்காது. அந்த சில நாள் பாட்டியுடனான வாழ்க்கை அவனுக்குள் என்ன மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் கதை.

அந்த நாட்களில் அவர்கள் இருவரும் சாதாரணமான வாழ்க்கையில் ஏற்படுவது போன்ற நிகழ்வுகளே இருக்கும். மலையில் விளையும் பொருட்களை பஸ்சில் பக்கத்து ஊருக்கு எடுத்துச்சென்று விற்றுவிட்டு வந்தால்தான் பாட்டிக்கு காசு. சிட்டியில் பீஃசா, பர்கர் என்று சாப்பிட்டு வளர்ந்த பையன். பேரன் மீது பாசம் மட்டுமே காட்டும் பாட்டி. ஊருக்குச் செல்லும் நாள் வரும்போது பாட்டியின் அன்பை புரிந்துகொள்ளும் சிறுவன்.

இதில் வரும் காட்சிகள் அனைத்தும் சாதாரணமாக வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள்தான். திடுக் சம்பவங்களோ, குளோசப் காட்சிகளோ, முகம் துடிக்க, கண்கள் கலங்க நடிக்கும் காட்சிகளோ இல்லை. நாம் நம் வாழ்க்கையில் எப்படி இருப்போம் அதே போன்ற காட்சிகள்தான். மெல்ல அந்த மலைப் பாதையில் நடந்து செல்லும் பாட்டி. படமும் மெதுவாகத்தான் செல்லும். மெதுவாகச் செல்வதால் போர் அடிக்கவில்லை. தொடர்ந்து பார்க்கும் ஆவலைத்தான் தந்தது. படம் முடிந்தவுடன் மனதில் தோன்றும் கனமான உணர்வு. அந்தப் படத்தைப் பார்த்து நான்கு மாதங்கள் ஆகின்றன. இன்னும் அந்தப்பாட்டியும், எனக்குப் புரியாத மொழியில் பேசும் அந்தச் சிறுவனும் என் நினைவில் அடிக்கடி வருகிறார்கள். இதைத்தான் உலகப் படம் என்று கொண்டாடுகிறார்கள்.



இப்படிப்பட்ட படங்களையே பார்ப்பவர்களுக்கு தமிழ்ப்படங்கள் ஏமாற்றத்தைத்தானே அளிக்கும். இந்தப் படங்களைப் பார்த்த பிறகு தமிழ்ப்படங்களை விமர்சிப்பவர்களின் ஆதங்கம் புரிகிறது. அவர்களின் விமர்சனமும் எனக்கு கோபத்தை அளிப்பதில்லை. புரிந்துகொள்ளவும் முடிகிறது.

இப்போ வந்துள்ள நந்தலாலா படத்தின் காட்சிகள் டிவியில் பார்க்கும்போது மேற்சொன்ன படங்களின் சாயல் தெரிகிறது. நம்ம ஊருலயும் உலகப்படமான்னு தோணுது. அந்தப்படத்த வச்சு ரெண்டு விதமான கருத்துக்கள் இணையவெளியில் இருப்பதை அறிகிறேன். இரண்டுமே தவறல்ல. ஒன்று இந்த மாதிரி படங்கள் தமிழில் தேவை. இதைப் பார்த்தாவது மக்களும் சினிமான்னா என்னவென்று தெரிந்துகொள்ளட்டும், ஒன்றிரண்டு இயக்குனர்களாவது இதைப்போல படமெடுக்க முனைவார்கள் என்பது. இவர்கள் நினைப்பு ரொம்ப சரி. இரண்டாவது ஜப்பான் படத்தை முன்மாதிரியாக வைத்து எடுத்துவிட்டு அந்தப் படத்திற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்பது. இதுவும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே. பூ, பேராண்மை போன்ற படங்களில் டைட்டிலில் போட்டிருந்த அந்த ஆங்கிலப்படங்களின் பெயர்களை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. அந்தந்த இயக்குநர்களின் படங்களாகவே பார்த்தார்கள். இவரும் அதைப்போல் போட்டிருக்கலாம். இப்போது அதை வைத்து நடக்கும் சர்ச்சைகளால்தான் இந்த விஷயம் மக்களுக்கு தெரிகிறது. சிறிதாக ஒரு வரி போட்டிருந்தால் மிஷ்கின் படமாகவே அனைவரும் பார்த்திருப்பார்கள்.

டிஸ்கி :  The Way Home 2002 - வீடு திரும்பல் இந்தப் படத்தின் விமர்சனம் பிரசன்னா (கொத்து பரோட்டா) நன்றாக செய்துள்ளார்.
காதல் திருமணம்
11/26/2010 | Author: ஜெயந்தி
சமீபத்தில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தோம். மணமக்கள் மேடைக்கு சற்றுத்தள்ளி சிறிய மேடையில் பாட்டுக்கச்சேரி நடந்துகொண்டிருந்தது. அதில் அப்பா மேல் சிங்கர் (ஆண் பாடகர்), 12 வயது மகள் ஃபிமேல் சிங்கர் (பெண் பாடகர்),  இன்னும் இரண்டு மூன்று ஆண்கள் கீ போர்ட் மற்றும் வாத்தியங்கள் வாசித்தார்கள். அம்மா சவுண்டை சரிபண்ணும் கருவியை மேடை மேல் வைத்துக்கொண்டு மேடைக்கு கீழே சேர் போட்டு அமர்ந்து கொண்டு சவுண்டை சரி பண்ணிக்கொண்டிருந்தார். அவர்களின் மகன் 3-4 வயதிருக்கும் நான்கு மேளங்கள் இணைந்தார்போல் ஒரு இணைப்பை அவன் முன் வைத்து ட்ரம்ஸ் அடிக்கும் குச்சியை வைத்து அடித்துக்கொண்டிருந்தான். அவனும் அம்மாவைப்போலவே ஸ்டேஜுக்கு முன்னால் கீழே அமர்ந்திருந்தான். அந்தப் பையனைப் பார்த்தவுடன் இப்படித்தான் சூப்பர் சிங்கரில் பாடிய ஸ்ரீகாந்தும் உருவாகியிருப்பான் என்றாள் என் மகள்.

ஸ்டேஜில் இருக்கும் அப்பா அம்மாவை கண்களால் அழைத்து மகன் எங்கே என்று கேட்கிறார். திரும்பிப்பார்த்த அம்மாவின் முகத்தில் சின்ன பதற்றம். பக்கத்தில் மகனைக் காணவில்லை. இருவரும் தங்கள் வேலையை பார்த்துக்கொண்டே கண்களால் தேடுகிறார்கள். அப்பா உயரமான இடத்தில் நிற்பதால் மகனை உடனே கண்டுபிடித்துவிடுகிறார். அம்மாவிடம் கண்களாலேயே சுட்டிக்காட்டுகிறார். கல்யாணத்திற்கு வந்த இன்னொரு குழந்தையின் அருகே இருக்கும் சேரில் இந்தக் குழந்தை ஏறமுடியாமல் ஏறி அமர்ந்துகொண்டிருக்கிறது. இருவரும் ஒருவித நிம்மதியுடன் தங்கள் வேலையைத் தொடர்கிறார்கள்.



கண்களால் பேசிக்கொள்ளும் மொழியை எந்த மொழியாலும் வெல்ல முடியாது. இதை எந்த மொழியாலும் அழிக்கவும் முடியாது. காதலர்கள் கண்களாலேயே பேசிக்கொள்வார்களாம்.

கண்களின் வார்த்தைகள் புரியாதோ
காத்திருப்பேன் என்று தெரியாதோ

கண்களின் மொழிகளைப்பற்றிய அருமையான பாடல்களும் உள்ளன.

மணமக்களின் திருமணம் காதல் திருமணம். பெற்றோர் சம்மதத்துடன் நடக்கிறது. சென்னையில் காதல் திருமணங்கள் நிறைய பெற்றோர் சம்மதத்துடனேயே நடக்கிறது. ஆனால் வரதட்சணை வாங்குவது மட்டும் மாறவில்லை.

சாதிகள் தோன்றிய காலத்தில் இருந்தே காதல் மணங்களும் நடந்திருக்கும். எத்தனை எதிர்ப்பு இருந்த போதிலும், காதல் மரணங்கள் இருந்த போதிலும் இந்தக் காதல் மட்டும் எதைப்பற்றியும் கவலைகொள்ளாமல் காலகாலத்திற்கும் தோன்றிக்கொண்டே இருக்கிறது. புதிதாக பிறந்துகொண்டே இருக்கிறது. உலகத்தை வாழ வைப்பதே காதல்தானே.

சாதியை ஒழிக்க வேண்டும் என்று அரசாங்கம் நினைத்திருந்தால் அதற்கேற்ற சட்டங்கள் கொண்டு வந்திருக்கலாம். இத்தனை சாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கிறதே. அவர்களுக்கு நிறைய சலுகைகள் அளித்து சாதியற்ற ஒரு குழுவை உருவாக்கலாம். சாதி மறுப்புத் திருமணம் செய்பவர்கள் மட்டுமல்லாமல் சாதியை வெறுக்கும் அனைவரும் அதில் இணையலாம் என்று கூறலாம். அவர்களுக்கு வேலை, படிப்பு அனைத்திலும் முன்னுரிமை அளிக்கலாம். மெல்ல மெல்ல இந்தக்குழு பல்கிப்பெருகி சாதியில்லாத நிலைமையை உருவாக்கும். சாதியற்ற தமிழகம் உருவாகும். நினைக்கவே நல்லாயிருக்கில்ல. ம்ம்ம்...

டிஸ்கி : கண்களால் பேசிக்கொள்ளும் பாடல்களை பின்னூட்டங்களில் சொல்லுங்களேன்.
ஆதி காலத்துல குகைகளில் நமது வாழ்க்கை இருந்தது. வேட்டையாடி உணவை பச்சையாக உண்டு வாழ்ந்து வந்தோம். பின்னர் அதையே வேக வைத்து உண்ணவும் கற்றுக்கொண்டோம். விவசாயம் வீட்டு விலங்கு வளர்ப்பு என்று காலங்கள் மாறிக்கொண்டே வந்தது. காலத்திற்கு ஏற்றார்போல் நம்மை பண்படுத்தி வந்தமையே பண்பாடு என்கிறோம். அப்படி மாறி வந்த பண்பாடுதான் இன்று நம்மை கணினி முன் அமர வைத்திருக்கிறது.

கலாச்சாரம் என்பது நமக்கான வாழ்க்கை முறைக்கான சட்ட திட்டங்கள். சமூகத்தை சரியான முறையில் வழிநடத்திச் செல்ல இத்தகைய சட்டதிட்டங்கள் தேவையாக இருக்கிறது. இதுவும் ஆதி காலத்தில் இருந்து காலத்திற்கு ஏற்றார்போல் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. இப்போது உள்ளது நம் கலாச்சாரமா? நூறு ஆண்டுக்கு முன் இருந்தது நம் கலாச்சாரமா? என்று தேடிக்கொண்டு போனால் குகைகளில் போய்தான் அடையணும்.

மிருகங்களுக்குக்கூட இத்தகைய சட்டதிட்டங்கள் உண்டு. ஒரு ஒழுங்கு உண்டு. பக்கத்துத்தெரு நாய் நம் தெருவில் நுழைந்துவிடட்டும் அவ்வளவுதான் இந்தியா பாகிஸ்தான் வார்தான் நடக்கும்.

இந்த கலாச்சாரமும் பண்பாடும் ஒவ்வொரு நாட்டிற்க்கும் மாறுபடும். அவர்களின் பூகோள அமைப்பு, தட்பவெப்பம் போன்றவற்றிற்கு ஏற்ப அவரவர் கலாச்சாரத்தை அமைத்துக்கொண்டார்கள். உடையையே எடுத்துக்கொண்டால் தமிழ் நாடு வெப்ப பூமி என்பதால் பருத்தியால் நெய்த வேட்டியை கட்டிக்கொண்டார்கள். அதே வேட்டிதான் பெண்ணுக்கும், மேலே மறைப்பு ஏதும் இல்லாமல். குளிர் பிரதேசங்களில் கோட், சூட். பாலைவனங்களில் மணல் மேலே விழாமல் இருக்க தலையிலிருந்து கால் வரை மறைக்கும் ஆடைகள். பனிப்பிரதேசங்களில் விலங்குகளில் தோல்களினால் ஆன ஆடைகள். இந்த உடைகள் ஆரம்பகாலங்களில் ஆண் பெண் இருபாலாருக்கும் ஒன்றுபோலவே இருந்தது. பின்னர்தான் மாற்றமடைந்தது.

இதில் இந்தக்கலாச்சாரம் மட்டம் இந்தக்கலாச்சாரம் உயர்ந்தது என்பதெல்லாம் இல்லை. அவரவர்களின் வாழ்நிலைக்கேற்ப உருவாக்கப்பட்டதே இவை. அவரவர்களுக்கு அவரவர் கலாச்சாரம் உயர்ந்தது.



நாம் சிந்து சமவெளி நாகரீக காலங்களிலேயே சுட்ட செங்கற்கலால் வீடுகட்டியும் கழிவுநீர் வாய்க்கால் போன்ற வசதிகளுடனுன் வாழ்ந்து வந்த கலாச்சாரம் நமது. இப்போது உலகத்தில் சிறந்த உணவுகளில் முதலாவது இடத்தைப் பிடிப்பது இந்திய உணவுகள்தான். நமக்கு உணவே மருந்து மருந்தே உணவு.

நம் கலாச்சாரங்களில் பிற கலாச்சாரக் கலப்பு என்பது ஆரிய, இஸ்லாமிய, ஆங்கிலேயர் வருகைகளின்போது நடந்திருக்கும். அதுவும் பெரும் அளவில் நம் கலாச்சாரத்தை நாம் விட்டுக்கொடுத்துவிடவில்லை. அவர்களிடமிருந்து சிலவற்றை நாம் எடுத்துக்கொண்டு நம்மிடமிருந்து சிலவற்றை அவர்களுக்கு நாம் அளித்திருக்கிறோம்.

நம் கலாச்சாரத்தில் உள்ள சிக்கல்களை நாம் அவ்வப்போது களைந்துகொண்டேதான் இருக்கிறோம். இப்போதுகூட ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதில் உள்ள அதிகபட்ச சிரமங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு டைவோர்ஸ் செய்துகொண்டு மறுதிருமணம் செய்துகொள்ளலாம் என்ற மாற்றம் வந்துள்ளது. இன்னும் மாற்றங்கள் தேவை. அதை நாம்தான்  செய்துகொள்ள வேண்டும்.

ஆனால் இப்போது நடப்பதைப் பார்க்கும் போது அந்நியக் கலாச்சாரம் நம்மேல் திணிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது. உலகமயமாக்கலுக்குப் பின் நடப்பவை அந்த நினைப்பைத் தருகின்றன. அந்நிய உடை ஏற்கெனவே நுழைந்துவிட்டது, உணவு, விழாக்களும் அவர்களுடையதை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். இதில் ஒன்றும் நமக்கு பெரிய பாதிப்பு இல்லை. ஆனால் இந்த லிவிங் டு கெதர் என்கிற கலாச்சாரம் அப்படி எளிதாக கடந்துவிடக்கூடிய ஒன்றல்ல.

இந்தியில் லிவிங் டு கெதர் வாழ்க்கை பற்றிய படங்கள் நிறைய வருகிறதாம். வட மாநிலங்களில் இந்தக் கலாச்சாரம் புகுந்துவிட்டதாம். தமிழ்நாட்டில்கூட நடந்துகொண்டிருக்கலாம். இதெல்லாம் திட்டமிட்டு நடக்கிறதா? இல்லை தாராளமயக்கொள்கையின் விளைவா?

அவர்கள் நாட்டுக்கு இது சரியான முறையாக இருக்கலாம். அவர்கள் அனைத்து விதிகளையும் சரியாக கடைபிடிப்பவர்கள். லஞ்ச லாவண்கங்களில் மூழ்குவதில்லை. அவர்கள் கலாச்சாரத்தை சரியாக புரிந்துகொண்டு இந்த முறையை பின்பற்றி முதலில் நட்பாக இருந்து பின்னர் சேர்நது வாழ்ந்து பின்னர் துணையாக்கிக்கொள்கிறார்கள். இதைக் கேட்கும்போது மிகச் சிறந்த முறையாகவே தோன்றுகிறது. அப்படி இணைபவர்களால் காலம் முழுவதும் சந்தோஷமாக சேர்ந்துவாழ முடியும். நல்லமுறைதான் ஆனால் அது அவர்கள் நாட்டிற்கு மட்டும்.

நமது நாட்டில் அதுவும் சமீப காலங்களில் சரியாகச் சொன்னால் உலகமயமாக்கலுக்குப்பின் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், (எனது இந்த இடுகையை படிக்கவும்) பணத்தைத் துரத்திச் செல்வது, லஞ்சலாவண்யங்கள் தலைவிரித்தாடுவது போன்றவற்றைப் பார்க்கும்போது மனிதாபிமானத்தைத் தேட வேண்டியிருக்கிறது.

ஒருவனுக்கு ஒருத்தி என்று நம் கலாச்சாரம் இருக்கும்போதே இரண்டு மூன்று மனைவிகளை வைத்துக்கொள்கிறார்கள். குழந்தைகள் பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில் ஓமலூரில் ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் கிணற்றில் விழுந்து இறந்து விட்டாள் என்று சொல்லப்பட்டது. பிறகு அவளது கர்ப்பப்பையில் 50 வயது ஆணின் விந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இப்படியான சூழ்நிலையில் நாம் வாழ்கிறோம். நமக்கு இந்த லிவிங் டு கெதர் சரிப்பட்டுவருமா?

இந்த முறை வந்தால் ஆண்களுக்கு ஏக கொண்டாட்டம்தான். ஆறு மாதத்திற்கு ஒருத்தியுடன் குடும்பம் நடத்தலாம். அவர்களின் வாழ்க்கையே இன்பமாகிவிடும். இதற்காக இதை அவர்கள் வேண்டிவரவேற்கலாம். ஆனால் பெண்களின் நிலை? இரண்டாவது ஒரு ஆணுடன் வேண்டுமானால் சேர்ந்துவாழ முயற்சிப்பார்கள். அதுவும் தோல்வியடைந்தால் தனியாக வாழத் தொடங்கிவிடுவார்கள். அதுவும் குழந்தைகள் எழுதப்படாத நியதியாக தாயிடமே இருக்கும். அவர்களும் குழந்தையை வளர்த்துக்கொண்டு தங்கள் மிச்ச காலத்தை நகர்த்துவார்கள். தகப்பன் இல்லாத குழந்தைகளாக வளரும். நல்ல சம்பளத்தில் வேலைக்குப் போகும் பெண்கள் என்றால் பொருளாதார ரீதியாக சிக்கல் இருக்காது. குறைந்த சம்பளம் அல்லது கூலி வேலை செய்யும் பெண்களின் நிலை கவலைக்கிடமாகிவிடும். இந்த முறை நம் நாட்டைப் பொறுத்தவரை கொள்ளிக்கட்டையை எடுத்து தலையை சொறிந்துகொண்ட கதையாகத்தான் முடியும்.

டிஸ்கி : இது எந்தப்பதிவுக்குமான எதிர்ப்பதிவு அல்ல. என் மனதில் தோன்றியதை எழுதியுள்ளேன்.
என்கவுண்டர்
11/11/2010 | Author: ஜெயந்தி
குழந்தைகளை கொன்றவன் என்கவுண்டரில் கொல்லப்பட்டான் என்ற செய்தியைப் பார்த்தவுடன் மனதில் சந்தோஷமே தோன்றியது. தமிழ்நாட்டில் ஏறக்குறைய அனைவரின் மனநிலையும் அதுவாகவே இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இது உணர்வு ரீதியாக சரி. ஆனால் ஜனநாயக நாட்டில் வாழும் நாம் இதை சரியென்று ஆமோதித்தால் ஜனநாயகத்தை மதிக்காத செயல்போல் இல்லையா? நிச்சயம் இதுபோன்ற குற்றங்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளவோ தாங்கிக்கொள்ளவோ முடியாத குற்றங்கள்தான். இதுபோன்ற குற்றங்கள் நடைபெற்றால் குற்றவாளிகளை அரசாங்கம் உடனடியாக விசாரித்து மரண தண்டனை உட்பட கடுமையான தண்டனைகளை சட்டப்படி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறைவேற்றினால் அதைப்பார்த்து மற்றவர்களுக்கும் பயம் வரும். அதைவிடுத்து இதைப்போன்ற விசாரணையற்ற என்கவுண்டர்கள் தேவையா? இந்த என்கவுணடரில் உண்மையான குற்றவாளி கொல்லப்பட்டான் என்ற அளவில் சரி. இதேபோல் சரியாக விசாக்கப்படாத என்கவுண்டர்களில் குற்றம் செய்யாமல் யாராவது இறக்க நேரிட்டால்?

மக்கள் சில விஷயங்களில் மட்டும் பொங்கி எழுவது ஏன்? இதேபோல நிறைய நிகழ்வுகள் நடக்கும்போதெல்லாம் அவர்கள் அமைதியாக ஏன் இருக்கிறார்கள். எல்லா விஷயங்களிலும் மக்கள் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுத்தாலே அரசாங்கம் பயப்படும். குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை சட்ட ரீதியாக அளிக்கப்படும். குற்றம் செய்ய நினைப்பவர்களும் பயப்படுவார்கள்.



அம்பிகா என்ற இளம் பெண் நோக்கியா கம்பெனியில் பணி நேரத்தின்போது இயந்திரத்தில் மாட்டிக்கொண்டார் என்று சன் டிவியில் செய்தி பார்த்தேன். அதில் அவர்கள் மேலும் சொன்னது மெசினில் மாட்டிக்கொண்ட அம்பிகாவை உடனே வெளியே எடுக்க வேண்டுமென்றால் மெசினை உடைக்க வேண்டும். மெசின் இரண்டு கோடி என்பதால் அதை உடைக்கவில்லை. இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட அம்பிகா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த செய்தியைக் கேட்டவுடன் எனக்கு மனது பதறியது. இரண்டு மணி நேரம் அந்த சிறு பெண் மெசினுக்குள் அணுஅணுவாக இறந்து கொண்டிருந்தாள். சித்ரவதைக்கொலை இல்லையா? உயிரைவிட மெசின் முக்கியமா? இதைப் பார்த்தவுடன் ப்ளாக்கில் எழுத வேண்டும் என்று இருந்தேன். இன்ட்லியில் பார்த்துக்கொண்டு வந்தபோது அம்பிகா பற்றி வினவில் வந்திருந்ததைப் பார்த்தேன்.

அவர்கள் விரிவாக எழுதியிருந்தார்கள். அதில் வந்த அந்தத் தாயின் படம், என்னால் அந்தத் தாயின் படத்தையே பார்க்க முடியவில்லை. அம்பிகாவிற்கு ஜனவரியில் திருமணம் ஏற்பாடாகியிருந்ததாம். அவள் தனது வாழ்க்கையைப் பற்றி எவ்வளவு கனவுகள் கண்டிருப்பாள். அத்தனை கனவும் அந்த மெசினுக்கும் நோக்கியாவிற்கும் அர்ப்பணமா? இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பன்னாட்டுக் கம்பெனிகளும் நம் மக்களின் உயிரை சூறையாடத் தொடங்கிவிடாதா?

விலைவாசி ஏற்றம், பெட்ரோல் டீசல் விலையேற்றம் என்று எதற்கும் யாருமே எந்த ரியாக்சனும் இல்லாமல் இருக்கிறார்களே? யாராவது பந்த் நடத்தினால்கூட கிண்டல் செய்துகொண்டிருக்கிறார்களே இதைப் பற்றியெல்லாம் ஏன் யாருமே கவலைப்படுவதில்லை என்று தோன்றும். இரண்டு நாட்களுக்கு முன் கல்வெட்டு அவர்களின் ப்ளாக்கில்

கதை சொல்லிகளால் வரையப்படும் உங்கள் மனச்சித்திரங்கள்


நாமெல்லாம் டியூன் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நாம் எப்போது கோபப்பட வேண்டும். எதற்காக கோபப்பட வேண்டும், எப்பொழுது சிரிக்க வேண்டும், எதற்கெல்லாம் ஆசைப்பட வேண்டும் என்றெல்லாம் டியூன் செய்து கொண்டிருக்கிறார்கள். மக்களும் அதற்கேற்றார்போலவே நடந்துகொள்கிறார்கள்.

இவ்வளவிலும் எனக்கொரு சந்தோஷம். மக்கள் ஒன்றுதிரண்டு கோபத்தில் கொந்தளிக்கிறார்கள். அவர்களுக்கு கொந்தளிக்கவும் தெரிகிறது. அதைப் பார்த்தவுடன் மனதுக்கு நிறைவாக இருந்தது. என்ன நடந்தாலும் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் ஆட்டு மந்தைகள் போல் இருக்கிறார்களே என்று நினைத்திருக்கிறேன். அவர்களின் இந்தக்கொந்தளிப்பு சந்தோஷத்தையே கொடுத்தது.

ஒன்று நாமாக சிந்தித்து சமுதாயத்தை மாற்ற வேண்டும். அது இந்த சமுதாயத்தில் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு மாற்றுவார்கள் என்று தோன்றவில்லை. நம்மையெல்லாம் நல்ல வழியில் டியூன் செய்து வழி நடத்திச் செல்ல ரட்சகர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி நல்லவர்களால் டியூன் செய்யப்பட்டாவது அனைவருக்கும் நல்ல வாழ்க்கை அமையட்டும்.
சந்தன முல்லை என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்த தலைப்பு இது.

5-ம் வகுப்பு வரை படித்தது திண்டுக்கல் பக்கத்தில் கிராமம். அங்க எப்படின்னா ஐந்து வகுப்புக்கும் சேர்த்து 2 ஆசிரியரே இருப்பார். 1, 2, 3 வகுப்புக்கு ஒரு வாத்தியார். 4, 5ம் வகுப்புக்கு ஒரு வாத்தியார். ஏன்னா இது பெரிய கிளாஸ்னால பாடம் அதிகமா இருக்கும்னு ரெண்டு வகுப்பு. 1,2,3 வகுப்புப் பக்கம் ஒரே போர்க்களம் மாதிரி ஹோன்னு சத்தம் கேட்கும். சின்ன வகுப்புன்றதால பிள்ளங்க அடங்க மாட்டாங்க. 4,5 பிள்ளைங்க வாத்தியார் இருந்தா அமைதியா இருப்பாங்க.

5-ம் வகுப்பு முடிச்சுட்டா பக்கத்து ஊருல ஹை-ஸ்கூல் இருக்கும். ஒரு 4,5 கிலோ மீட்டர் நடந்து போய் படிக்கணும். பெரும்பாலும் பெண் பிள்ளைகள் 5ம் வகுப்போடு நிறுத்தப்படுவார்கள். நான் 5ம் வகுப்பு முடித்தவுடன் குடும்பச் சூழல் காரணமா திண்டுக்கல் இடம் பெயர்ந்தோம். அங்க சென்-ஜோசப்ஸ் ஸ்கூல்ல எங்க மாமா என்ன சேத்துவிட்டுட்டாரு. காதல் படத்துல வருமே ஒரு ஸ்கூல் அதுதான். மதுரைன்னு சொல்லிக்கிட்டு திண்டுக்கல்லதான் எடுத்திருக்காங்க.

ஒரு வாரம் லேட்டாக சேர்க்கப்பட்டேன். அன்று வகுப்பிற்கு போய் முதல் பீரியடோ இரண்டாவது பீரியடோ இங்கிலீஸ். அங்க போயித்தான் பீரியட்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்கிட்டேன். எனக்கு இங்கிலீஸ்ல ஏ,பி,சி,டி மட்டுமே தெரியும். அதுவும் கேப்பிடல் மட்டும். தமிழ் படிக்கத் தெரியும் (எங்க அம்மா புண்ணியத்தில்)



ஒரு வாரத்துல ஒரு பாடம் இங்கிலீசுல நடத்திட்டாங்க போல. அன்னிக்கி டிக்டேசன் நடக்குது. எல்லாரும் டீச்சர் சொல்லச் சொல்ல அந்த வார்த்தைகள எழுதறாங்க. நான் மலங்க மலங்க முழிச்சுக்கிட்டு இருக்குறேன். எனக்கு வலது பக்கம் உள்ள பெண் என்னை இடித்து சைகையால் எனக்கு இடது பக்கம் எழுதும் பெண்ணை பார்த்து எழுதச் சொல்கிறாள். ஏன்னா அவளும் அந்த வேலையைத்தான் செய்து கொண்டிருந்தாள். நானும் திரும்பிப் பார்த்தேன். அவள் எழுதியிருக்கும் எழுத்து எந்த லாங்குவேஜ்ன்னே தெரியல. அவ ஸ்மால் ஏ,பி,சி,டி-யில் எழுதிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த எழுத்தையே பார்க்கிறேன். என்னால் பார்த்துக்கூட எழுத முடியவில்லை. கடைசி வரை ஒரு வார்த்தைகூட எழுதல.

அடுத்த அதிர்ச்சி இங்கிலீஸ் புத்தகம் கிட்டத்தட்ட 8-10 பாடம் + போயம் + கிராமர்னு புத்தகம் ஒரு நாவல் சைஸ்ல இருக்கு. ஏ,பி,சி,டி மட்டுமே தெரிந்த எனக்கு அந்த புத்தகத்த எப்படி படிக்க முடியும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. எனக்கு இன்னிக்கும் ஒரு வரி இங்கிலீஸ்ல ஏதாவது மெயிலோ ஏதோ வந்துருச்சுன்னா பயந்துருவேன். தமிழ் படிச்சு எப்படியும் பாஸ் பண்ணிருவேன். அது எப்படின்னே தெரியல இந்த கணக்கு மட்டும் எனக்கு கொஞ்சம் வந்துருச்சு. இந்த கணம், அல்ஜீப்ரா, க்ராப் எல்லாம் ஓரளவுக்கு வரும் அதைத் தவிர மீதி சப்ஜெக்ட் எல்லாம் கண்டிப்பா பெயில்தான். எப்பவாவது வரலாறு பாஸ் பண்ணுவேன்.

எனக்கு இந்த ஸ்கூல் போறது மாதிரி உலகத்துலயே பிடிக்காத விஷயம் வேற எதுவுமே இல்ல. ஏன்னா நாம மக்குன்னு மனசுக்குள்ளேயே ஒரு தாழ்வு மனப்பான்மை வந்துருதே. நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற எண்ணங்களும் வரும்.

இப்படியே 10-ம் வகுப்பு பொதுத் தேர்வும் எழுதினேன். எப்படியும் பெயில்தான ஆகப்போறம்றதுல எந்த சந்தேகமும் இல்லையே. ஆனா அங்கதான் ஒரு டுவிஸ்ட் இன்னைக்கி வரைக்கும் எனக்கும் என் குடும்பத்தினருக்கும் புரியாத விஷயம் நான் 10-ம் வகுப்பு பாஸ். பாஸானது ஒரு பக்கம் சந்தோஷம்னாலும் இன்னொரு பக்கம் +2 சேத்துவிட்டுருவாங்களோன்னு பயம். நல்ல வேலை அந்த தப்ப எங்க வீட்டுல செய்யல.

நானே இப்படி படிச்சேன். என்னப்பாத்து ஆண்டு விழா அனுபவங்கள எழுதுன்னு சொல்லிட்டாங்களே. மகளே இந்த சந்தனமுல்லை மட்டும் என் முன்னால இருந்துருந்தாங்க அவ்வளவுதான் கொல கேசாகிப்போயிருக்கும்.

ஆண்டு விழான்னா எங்க பள்ளியில நிகழ்ச்சிங்க தொடங்கறதுக்கு முன்னால ஸ்கூல்ல உள்ள பிள்ளைகள் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு எக்ஸசைஸ் மாதிரி பண்ணுவோம். பெரிய கிரவுண்ட் அந்த கிரவுண்ட் முழுக்க நிறைந்திருப்போம். இசைக்கு ஏற்ப நாங்கள் அனைவரும் எக்சசைஸ் பண்ணுவோம். அது பார்க்க ரொம்ப அழகாக இருக்கும். அதில் நான் இருப்பேன். அப்புறம் சுதந்திர தினம் வந்தா திண்டுக்கல்ல இருக்க எல்லா பள்ளிகளும் சேர்ந்து ஒரு நிகழ்ச்சி பண்ணுவாங்க. முன்னால ஒரு லாரியோ வண்டியோ போகும் அதில் பாரதமாதா போல நேதாஜி, காந்தி, பகத்சிங் போல எல்லாம் அலங்கரிக்கப்பட்ட பிள்ளைகள் இருப்பார்கள். பின்னால் அந்த பள்ளியின் பிள்ளைகள் மார்ச் பாஸ்ட் செய்து நடந்து செல்வார்கள். அவர்களுக்கு அடுத்து இன்னொரு பள்ளியின் வண்டி அதன் அந்தப் பள்ளியின் பிள்ளைகள் என அனைத்துப் பள்ளிகளும் கலந்துகொள்வார்கள். அதில் சிறந்த முறையில் பங்கேற்கும் பள்ளிகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுமாம். இதிலும் நான் பங்கேற்பேன் (இங்க பாருங்க இப்படியெல்லாம் சிரிக்கக்கூடாது). எல்லாரும் காந்தி மைதானத்துக்கு போனபின் பூந்திப் பொட்டலம் கொடுப்பார்கள். அப்புறம் அவங்கவங்க வீட்டுக்கு அவரக்காயும் சோத்துக்கு.

நாங்க சென்னை வந்த பின்னர் நான் தீக்கதிரில் வேலைக்கு சேர்ந்தேன். கம்ப்யூட்டரையே அப்போதான் பார்த்தேன். ரொம்ப சீக்கிரம் வேலை கற்றுக்கொண்டு தினசரி செய்தித்தாள் லே-அவுட் டிசைனிங் செய்வேன், விளம்பரம் செய்வேன், புக் ஒர்க் செய்வேன். அந்த நாளிதழின் தவிர்க்க முடியாத ஆழுமையாக நான் இருந்தேன். ம் ஜெயந்தி வந்துருச்சு, இன்னிக்கு பக்கம் பிரச்சனையில்லாம போயிரும்னு ஆசிரியர்ல இருந்து எல்லாரும் நினைப்பாங்க. எனக்கு முன்னால் வேலை கற்றவர்களையும் என்னைவிட அதிகம் படித்தவர்களையும் விட நான் நன்றாக வேலை செய்தேன். இது சுயவிளம்பரத்திற்காக சொல்லவில்லை. நான் ஸ்கூல் படிக்கும்போது நினைத்தேனே நான் ஒரு முட்டாள், அறிவு கம்மி போன்ற நினைப்புகளெல்லாம் தவறென்று அப்போதுதான் உணர்ந்தேன். தப்பு என் மீது இல்லை. நம் கல்வி முறையில் உள்ளது. என்போல் கோடிக்கணக்கான பேர் தாழ்வு மனப்பான்மையோடு வாழ்கிறார்கள். இதற்கு யார் காரணம்?

அரசாங்கப் பள்ளிகளின் கட்டிடங்கள் சரியில்லை, போதிய ஆசிரியர்கள் இல்லை போன்ற பிரச்சனைகள் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைக்கு தனியார் பள்ளியில் குறைந்த சம்பளத்தை வாங்கிக்கொண்டு நன்றாக சொல்லித் தருகிறார்கள். அவர்களுக்கு நெருக்கடி இருக்கிறது. அரசாங்கப் பள்ளிகளில் அந்த நெருக்கடி இல்லாததால் ஆசிரியர்களும் ஏனோ தானோவென்று பாடம் சொல்லித் தருகிறார்கள். இப்போது சில அரசாங்கப் பள்ளி மாணவர்கள் மாநில அளவிலான இடங்களைப் பெறுவதைப் பார்க்கும்போது கடமையை உணர்ந்த ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்துகிறது.

கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகள் ஓரளவுக்கு பரவாயில்லை. அரசாங்கம் அனைத்துப் பள்ளிகளையும் (தனியார் பள்ளிகள் உட்பட) இதேபோல் எய்டட் பள்ளிகளாக மாற்றி அந்தப் பள்ளிகளுக்கு நெருக்கடி கொடுத்து பிள்ளைகள் படிப்பிற்கு உதவ வேண்டும் என்று தோன்றுகிறது. கவர்ன்மென்ட் எய்டட் பள்ளிகளில் மிகக் குறைந்த கட்டணம். அனைவராலும் சிரமமில்லாமல் படிக்க வைக்க முடியும். கல்வியின் தரமும் மேம்படுத்தினால் பிள்ளைகளின் வாழ்க்கை ஒளிமயமாக அமையும்.
ஒரு காதல் கதை
10/19/2010 | Author: ஜெயந்தி
அமமாவும் நானும் அமர்ந்திருந்தோம். அம்மாவின் பலமான யோசனை ஏதோ பழைய ஊர் ஞாபகம் உள்ளுக்குள் ஓடுவதாக தோன்றியது. நான் நினைத்தது சரிதான்.

"இந்த முத்தம்மா மக சந்திரா தெரியும்ல" என்று ஆரம்பித்தார்கள்.

"ஏதோ நிழலாட்டம் ஞாபகம் இருக்கு" என்றேன்.

"சந்திரா வீட்டுக்காரங்க ரொம்ப நல்ல மனுசங்க. கடுமையா உழைப்பாங்க. யாருகிட்டயும் எதுக்கும் கையேந்த மாட்டாங்க. யாரையும் ஒரு வார்த்தை கடிஞ்சு பேச மாட்டாங்க. கொஞ்சம் நிலம் இருக்கு. வெளியிலயும் கூலி வேலைக்குப் போவாங்க. அவங்க உண்டு அவங்க வீடு உண்டுன்னு இருப்பாங்க. அதுவும் இந்த சந்திரா ரொம்ப தைரியசாலி. ஒரு ஆம்பள அவகிட்ட தப்பான நோக்கத்துல பேச முடியாது. ஆம்பளங்களே பயப்படுவாங்க."

35, 40 வருஷத்துக்கு முந்தைய சம்பவம் கண் முன் விரியத் தொடங்கியது.

"பெருமாள் வீட்டு தோட்டம் காடு எல்லாத்துக்கும் சந்திராதான் வேலைக்கு ஆள் கூட்டிட்டுப்போறது, முன்னால நின்னு வேலை செய்றதுன்னு இருந்தா. அவ தலைமையிலதான் பெருமாள் நிலத்துல வேலை நடக்கும். இப்பிடியே இருந்தப்ப ஊருல எல்லாரும் பெருமாளயும் சந்திராவையும் பத்திஒரு மாதிரியா பேசத் தொடங்குனாங்க. அவங்க ரெண்டு பேரும் அந்தப் பேச்சப்பத்தி கவலப்படல. இந்த நெலமையில சந்திரா வீட்டுல மாப்பிள்ள பாக்கத் தொடங்குனாங்க. அவ கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஒரே பிடியா நின்னா. ஆனா அவங்க வீட்டுல என்ன பேசுனாங்களோ தெரியல ஒரு மாப்பிள்ளய பாத்து கல்யாணம் பண்ணி வச்சாங்க. பெருமாள் வீட்டுலயும் ஒரு பொண்ணப்பாத்து கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க."



"ஏன் அவங்கதான் லவ் பண்றாங்கள்ல ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்ல?"

"கிராமத்துல அதெல்லாம் நடக்காது. அதுவும் ரெண்டு பேரும் வேறவேற ஜாதி வேற"

"சந்திராவுக்கு பாத்த மாப்பிள்ளயோட ஊரு பஸ்ச விட்டு எறங்கி 6, 7 மைல் நடக்கணுமாம். இவ ஊருக்கு வரக்கூடாதுன்னு வேணும்னே அப்டி பார்த்தாங்களா இல்ல இவ விஷயம் தெரிஞ்சு வேற எங்கயும் அமையலயான்னு தெரியல. மாப்பிள்ளையும் நல்லாவே இருக்க மாட்டான். கல்யாணம் பண்ணி அனுப்புச்சாங்க மூணாவது நாள் மறுவீட்டுக்கு வந்தவ திரும்ப போகவே மாட்டேன்னு சொல்லிட்டா. அப்பற என்ன பண்ணுறது. இங்கயே ஒரு வீட்டுல ரெண்டு பேரையும் தனிக்குடித்தனமா வச்சாங்க. வீடுன்னா சின்ன குடிசை. ஒரு சின்ன ரூம், ஒரு தடுப்பு வச்ச சமையல்கட்டு. ரெண்டு பேரும் கூலி வேல செஞ்சுக்கிட்டு இருந்துக்கங்கன்னு சொல்லிட்டாங்க. ஆனா சந்திரா புருஷன் கூட ஒரு வார்த்த கூட பேச மாட்டா. அவனும் கொஞ்ச நாள் இருந்து பாத்துட்டு அவங்க ஊருக்கே ஓடிட்டான். அவ அந்த குடிசையிலேயே இருந்துட்டா."

"இந்த நேரத்துல பெருமாளு பொண்டாட்டி பிரசவத்துக்கு போனவ பிரசவத்துல செத்துப்போயிட்டா. பெறந்த கொழந்தய அவங்க மாமனார் வீட்டுலயே பாத்துக்குறேன்னு சொல்லிட்டாங்க. இவனும் அதுக்கப்பறம் வேற கல்யாணம் பண்ணிக்கல."

"ரெண்டு பேரும் எங்க பாத்துக்கறாங்க எப்படி பேசிக்கறாங்கன்னெல்லாம் யாருக்கும் தெரியாது."

"அப்போ ஊருலயெல்லாம் உண்டாகிட்டா கொறத்திய கூப்புடுவாங்க. அவ வந்து குச்சி வப்பா"

"கொறத்தின்னா நரிக்கொறத்தியா?"

"இல்ல. இவங்க பன்னி மேய்க்கறவங்க. ஊருக்குள்ளயே இருப்பாங்க. கொறவர்ன்னு சொல்வாங்க"

"சரி இந்த குச்சி வைக்கறதுன்னா என்ன?"

"எருக்கஞ்செடி இருக்குல்ல அதுதான் இந்த வினாயகர் சதுர்த்திக்குக்கூட எருக்கம்பூ மாலை போடுவாங்களே அந்தச்செடி."

"ம் தெரியும்."

"அதோட எல நல்லா பழுத்த எல. அந்தா அந்தப் பாய் இருக்கு பாரு அந்த மாதிரி மஞ்சக் கலர்ல இருக்கும். அந்த எலைய எடுத்து அது நடுவுல இருக்க காம்பு குச்சிய ஒரு ரெண்டு இஞ்சு நீளத்துக்கு எடுத்துக்குவாங்க. ஒருமுனையில ஒரு துணிய கட்டிருவாங்க. இன்னொரு முனையில ஏதோ மருந்து வைப்பாங்களாம். இந்த குச்சிய துணி வெளியில தொங்குற மாதிரி வச்சுருவாங்க. தீட்டு படத் தொடங்குன ஒடனே அந்த துணிய பிடிச்சு குச்சிய இழுத்துவிட்டுறனும். குச்சி உள்ள போயிருச்சுன்னா அவ்வளவுதான். துணியிலயிருந்து குச்சி கழன்றுகிட்டு உள்ளே போயிருச்சுன்னாலும் அவ்வளவுதான். உயிருக்கே ஆபத்து. யாராலும் காப்பாத்த முடியாது."

"கொறத்தி இருக்காளே அவ என்ன ஆளு தெரியுமா? அவ நைசா இதுக்கு காரணம் யாருன்னு சொல்லு அப்பத்தான் மருந்து பலிக்கும்னு சொல்லி உண்மைய வாங்கிக்குவா? ஆனா யாரு கேட்டாலும் அவ சொல்லவே மாட்டா. யாரும் கேட்க மாட்டாங்க. அதுதான் எல்லாருக்கும் தெரியுமே."

பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ யோசித்த அம்மாவின் வாயிலிருந்து "எவ்வளவு பாவம்ல அந்த சந்திரா" என்ற வார்த்தைகள் வந்தன.

"இப்டியே இருந்தாங்க. அப்பறம் கொஞ்ச நாள்ல நாங்க திண்டுக்கல் வந்துட்டம். அதுப்பறம் எங்க ஊரு தொடர்பே விட்டுப்போச்சு. அப்பறம் என்னாச்சுன்னு தெரியல."

"இந்தா பாரு ஒரு கதை சொன்னா முடிவ சொல்லனும். இப்படி முடிவு கிழிஞ்சுபோன நாவல்மாதிரி கதை சொன்னா என்ன அர்த்தம்"

"நான் எனக்கு தெரிஞ்ச வரைக்கும்தான சொல்ல முடியும். ஊருக்கு போனா தெரியும். என்ன அப்டியேதான் இன்னும் இருப்பாங்க இல்லன்னா ஒரே வீட்டுல இருப்பாங்க. ஏன்னா இப்போ அவங்களுக்கு வயசாகியிருக்கும் யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கல்ல. சொன்னாலும் அவங்களுக்கு கவலையில்லை இல்ல. இல்ல ஊருக்கு பயந்துக்கிட்டு இன்னும் தனித்தனியாத்தான் இருகாங்களோ தெரியல."