டைரக்டர்கள் மட்டும்தான் 80களுக்கு போக வேண்டுமா? நாங்களும் போவோம்ல.

10ம் வகுப்போடு படிப்பை முடித்துக்கொண்டு (சத்தியமா பாசுங்க) வீட்டில் இருந்த காலம். அப்போது ஒரே பொழுதுபோக்கு சினிமாதான். திண்டுக்கல்லில் நாங்கள் இருந்தது இபி காலனியில். இபி காலனி கட்டும்போதுதான் பக்கத்தில் மெயின்ரோடை ஒட்டி கணேஷ் தியேட்டரை கடடினார்கள். வீட்டிலிருந்து ஐந்து நிமிடத்தில் தியேட்டருக்கு சென்றுவிடலாம். காலனியின் பின் பக்கம் என்விஜிபி தியேட்டர். பத்து நிமிடத்தில் சென்றுவிடலாம். இரண்டு தியேட்டர்களுக்கும் நடுவில் போல் (சிறிது தூரம் நடக்க வேண்டும்) ஃ மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம், சோலைஹால் தியேட்டர் இருக்கும். அதற்கு கால்மணி நேரத்தில் போய் விடலாம். சென்ரல் தியேட்டர் ஊரின் நடுவில் இருக்கும். இருபது நிமிடத்தில் சென்றுவிடலாம். சக்தி தியேட்டர் ஊரின் கோடியில் இருக்கும். அதற்கு போவதுதான் சற்று சிரமம். அதனால் இந்த நான்கு தியேட்டர்தான் எங்கள் டார்கெட்.
எல்லாத் தியேட்டரிலும் பெஞ்ச் டிக்கெட் ஐம்பது காசுதான். அதற்கு பின்னால் அதே பெஞ்சில் பின்னால் சாய்மானம் இருக்கும். அதற்கு எழுபத்தைந்து பைசா என்று நினைக்கிறேன். அதற்குப் பின்னால் பாலகனி. என்விஜிபியில் மட்டும் பால்கனி டிக்கெட் கொஞ்சம் அதிகம். கணேஷ் தியேட்டர் புது தியேட்டர் என்பதால் எடுத்துவுடனேயே முன்னால் உள்ள டிக்கெட்டே ஒன்னேகால் ரூபாய். புது தியேட்டர் என்பதால் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

நான் எங்க பாட்டியோடுதான் சினிமாவிற்கு போவேன். ஏன்னா என்னைவிட அதிகம் படம் பார்ப்பது எங்க பாட்டிதான். வயது 85 சக்தி தியேட்டருக்குக்கூட தனியாக நடந்தே போய் படம் பார்த்துவிட்டு வரும். (கரிசல் காட்டில் பாடுபட்டு, கம்மஞ்சோறும், கேழ்வரகு கூழும் குடித்த உடம்பு). எங்கள் கூட அவ்வப்போது என் அக்காவும் சேர்ந்துகொள்வார்கள்.

நான் மாமா வீட்டில்தான் வளர்ந்தேன். மாமாவின் பர்மிஷன் கிடைத்தால்தான் சினிமாவிற்கு போக முடியும். 'ஏ' சர்ட்டிபிகேட் இல்லாத படமா, ஆபாச காட்சிகள் இல்லாத படமா என்று ஆலோசித்துவிட்டுத்தான் மாமா பர்மிஷன் கொடுப்பார். சினிமாவிற்கு போகிற நாள் என்றால் காலையிலேயே மனது சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்துவிடும். வீட்டில் என்ன வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்வேன். மதியம் சாப்பாடு முடிந்தவுடன் கிளம்பிவிடுவோம். இப்போது உச்சகட்ட சந்தோஷத்தில் மனது திளைத்திருக்கும். ஓட்டமும் நடையுமாக தியேட்டருக்கு போவோம். பெஞ்ச் டிக்கெட்டிற்கு பெரிய கியூ நிற்கும், அதனால்தான் வேகவேகமாக செல்வோம். அப்போதெல்லாம் எப்போதுமே கூட்டம் இருக்கும். கூட்டத்தின் அளவு வேண்டுமானால் வித்தியாசப்படும். தியேட்டர் காலியாக இருந்து நான் பார்த்ததில்லை.
எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு சவ்ராஷ்ரா குடும்பம் இருந்தது. அவர்களை பட்டுநூல்காரர்கள் என்று மதுரை, திண்டுக்கல் பகுதிகளில் அழைப்பார்கள். அவர்கள் நெசவுத் தொழில் செய்பவர்கள், அதனால் இந்தப்பெயர். எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் நல்ல வசதியானவர்கள். அவர்கள் வீட்டில் ஒரு பாட்டி உண்டு. அந்தப் பாட்டிக்கு எம்ஜியார் படம் என்றால் உயிர். எந்தத் தியேட்டரிலாவது எம்ஜியார் படம் போட்டால் என்னை துணைக்கு அழைப்பார்கள். (அதிர்ஷ்ட்டம் எப்படி அடிக்கிறது பாருங்கள்). அவர்களுடன் செல்வதென்றால் வீட்டில் பர்மிஷன் கேட்கத் தேவையில்லை. தகவல் சொன்னாலே போதும். அந்தப் பாட்டிக்கு பிரஷர், ஷூகர் போன்றவை உண்டு. அதனால் ரிக்ஷாவில் செல்வோம். அப்போதெல்லாம் ரிகஷாவும், குதிரை வண்டியும்தான் போக்குவரத்திற்கு. நிறைய பேர் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்வார்கள். தியேட்டரில் அந்தப்பாட்டி பால்கனி டிக்கெட் எடுப்பார்கள். ஆனால் நாங்கள் உட்காருவது என்னவோ முன்னால் உள்ள பெஞ்ச் டிக்கெட்டில். பாட்டிக்கு கண்ணு அவுட்.


ஒருமுறை பேப்பரில் அந்த ஆண்டு எத்தனை படங்கள் வெளியாகியுள்ளன என்று படத்தின் பெயரோடு வெளியிட்டிருந்தார்கள். எங்கள் மாமா என்னை அழைத்து அதில் நான் பார்த்த படங்களை என்னிடம் கேட்டு டிக் பண்ணிக்கொண்டே வந்தார். மொத்தம் நூற்றிப்பத்து படம் என்று நினைக்கிறேன். அதில் நான் பார்தது எழுபது படங்கள். (இதில் இந்த எம்ஜியார் படங்கள் கணக்கு கிடையாது). என் மாமாவின் அடுத்த கேள்வி இந்த படங்களில் உனக்கு பிடிக்காத ஒரு படத்தின் பெயரைச்சொல். ஒன்றுமேயில்லை.
இப்போதெல்லாம் டீவியிலேயே பாதி சீன்கள் போட்டுவிடுகிறார்கள். அப்புறம் பைரேட் சிடி வேறு வந்து விடுகிறது. பாட்டு எல்லாம் முதலிலேயே போட்டு விடுகிறார்கள். அதுனால படம் பார்க்கப் போகும் முன்னாலேயே அந்தப் படத்தைப்பற்றி நிறைய விஷயங்கள் தெரிந்துவிடும். படம் பார்ப்பதற்கு அப்போது இருந்த சந்தோஷம் இந்தத் தலைமுறையினரிடம் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. அந்த சந்தோஷம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
This entry was posted on 11/06/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

12 comments:

On November 6, 2009 at 6:41 PM , மிதக்கும்வெளி said...

எனக்கு நினைவு தெரிந்து ஆர்த்தி தியேட்டர்தான் புது தியேட்டராகக் கட்டினார்கள். இன்னமும் திண்டுக்கல்லில்தான் வசிக்கிறீர்களா?

 
On November 6, 2009 at 6:51 PM , rajan said...

neenga dindigula, enakku sontha oor kumkonam, aana na ippo unga oorulathan irukken....

 
On November 6, 2009 at 6:54 PM , சந்தனமுல்லை said...

:-) அந்தகால சினிமா அனுபவங்கள்..சுவாரசியமா இருந்தது..எங்க வீட்டுலே, நாங்க தியேட்டருக்கு போனதுன்னு பார்த்தா விரல் விட்டு எண்ணிடலாம்.

 
On November 6, 2009 at 7:36 PM , Anonymous said...

***
சினிமாவிற்கு போகிற நாள் என்றால் காலையிலேயே மனது சந்தோஷத்தில் திளைக்க ஆரம்பித்துவிடும். வீட்டில் என்ன வேலை சொன்னாலும் மறுக்காமல் செய்வேன்.
***
டிபிகல் நம்மூரு பழக்கம்.

நல்ல நினைவுப் பதிவு.
நன்றி.

 
On November 6, 2009 at 8:04 PM , ஜெயந்தி said...

நன்றி மிதக்கும் வெளி!
எனக்கு திருமணம் ஆனபிறகு ஆர்த்தி, நாகா, லக்ஷ்மி தியேட்டர்கள் கட்டினார்கள். நான் இப்பொழுது வசிப்பது சென்னை.

 
On November 6, 2009 at 8:14 PM , ஜெயந்தி said...

நன்றி ராஜன்!
உங்களைப் போல் நான் இப்போது சென்னையில்.

நன்றி சந்தனமுல்லை!
இப்போது நாங்களும் அப்படித்தான்.

நன்றி bxbybz!

 
On November 6, 2009 at 9:32 PM , செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு

 
On November 7, 2009 at 9:03 PM , அமுதா கிருஷ்ணா said...

முதன்முதலில் கோன் ஐஸ் சாப்பிட்டது கணேஷ் தியேட்டரில் தான்..என் தாத்தா வீடு கணேஷ் தியேட்டரில் இருந்து சோலைஹால் தியேட்டர் போகும் வழியில் நடுவில் இருந்தது. முதல் வசந்தம்,குரு போன்ற படங்கள் கணேஷில் தான்.நாகா தியேட்டரில் இந்திரன் சந்திரன்,சக்தியில் விதி,சோலைஹாலில் தம்பிக்கு எந்த ஊரு,செண்ட்ரலில் மண்வாசனை..........எல்லா லீவிற்கும் திண்டுக்கல் தான்,அண்ணாமலையில் ஒருவருடமும்,அவர்லேடியில் +2வும் படித்தேன்...ஆர்த்தியில் தான் அவ்வை சண்முகி பார்த்தேன்...

 
On November 8, 2009 at 4:55 PM , ஜெயந்தி said...

செ.சரவணக்குமார் ஊக்கத்திற்கு நன்றி!

 
On November 11, 2009 at 7:49 PM , முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க.. ஜெயந்தி..

 
On November 12, 2009 at 7:06 PM , ஜெயந்தி said...

நன்றி முத்துலெட்சுமி!

 
On November 27, 2009 at 3:23 PM , புதுகைத் தென்றல் said...

கொசுவத்தி சூப்பரா இருக்கு