இது போன வாரம் நடந்தது.
நானும், வீட்டில் வேலை செய்யும் லட்சுமி அம்மாவும் அமர்ந்து டீவியில் நியூஸ் பார்த்துக்கொண்டிருந்தோம்.
"...மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தலித் மக்களுடன் ஆலய நுழைவு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. பின்னர் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் ஏற்பட்டது..."

லட்சுமி அம்மா என்னிடம் கேட்டார், "தலித்னா காலனிக்காரங்கதான."
"ஆமா" என்றேன்.
"காலனிக்காரங்கல்லா கோயிலுக்குள்ள போகக் கூடாது. இப்பெல்லா ரீஜன்டா (டீசன்ட்) டிரெஸ் பண்ணிக்கிட்டு கோயிலுக்குள்ள போறாங்க. அந்த பாவத்த அவங்கதான் அனுபவிப்பாங்க."
"ஏம்மா அவங்களும் மனுசங்கதான"
"அவங்கள கீழ்சாதின்னு கடவுளே பிரிச்சி வச்சுருக்கான்."
"கடவுள் பிரிக்கல, மனுசங்கதான் அவங்க வசதிக்காக பிரிச்சி வச்சிருக்காங்க. மேல் ஜாதிக்காரங்க அவங்களுக்கு வேலை செய்ய ஆள் வேணும்ங்கிறதுக்காக அப்புடி பிரிச்சி வச்சிருக்காங்க."

"அவங்க இப்ப ரீஜன்டாயிட்டாங்க, அந்தப்பசங்க என்னா பேச்சு பேசுறாங்க தெரியுமா?"
"கொஞ்சம் பேருதான் முன்னேறியிருக்காங்க. இன்னும் நிறையபேர் கஷ்டப்பட்டுட்டுத்தான் இருக்காங்க, எல்லா சாதிக்காரங்களும் பத்து மாசந்தான?"  என்றேன்.
அந்தம்மாவுக்கு கோபம் வந்துவிட்டது, கோபம்னுகூட சொல்ல முடியாது. ஆவேசம்னுதான் சொல்லனும்.
"போன வாரம் நான் அந்த பெரிய வீட்டுல வேல செய்யிறப்ப ஒரு தொழுநோய் வந்த பிச்சைக்காரன் கூப்டான். நான் வீடு பெருக்கிக்கிட்டே வெளிய வந்து அவங்கிட்ட சொன்னே -'வீட்டுல யாரும் இல்லப்பா'
'ஏன் நீ எங்கருந்து வர்ற?'
'செருப்பாலடிப்பேன். நான் வீட்டு வேல செய்யிறவ. வீட்டுக்காரங்க இல்லனா போவியா, திமிரு பேச்சு பேசற?'
'ஏன் நான் பேசக்கூடாதா?'
'நீ என்ன பாவஞ் செஞ்சியோ நோய் வந்து பிச்ச எடுக்கற, நா என்ன பாவஞ் செஞ்சனோ வீட்டு வேல செய்யிறேன். வாய மூடிக்கிட்டு போ'ன்னு சொன்னேன்."

"அப்பற நாலு நாளைக்கு முன்னால எங்க தெருவுல ஒரு வயசான அம்மா மயக்கம் போட்டு விழுந்துருச்சு. நானும் எம் மவனும் அந்த அம்மாவத் தூக்கிதண்ணி தெளிச்சி எழுப்பி விட்டோம் ரெண்டு நாளா சாப்பிடலன்னு சொல்லுச்சு. எம் மவன் பாக்கெட்ல இருந்து பத்து ரூபா எடுத்து குடுத்தான். நானு என்னோட சேல ஒண்ணு, சால்வ ஒண்ணு எடுத்து குடுத்தேன்."

"நேத்து அந்த தெருப் பக்கமா போறேன், மயக்கம் போட்டு விழுந்த அந்தப் பொம்பள அவங்க வீட்டு வாசல்ல நல்லா டிரஸ் பண்ணிக்கிட்டு ஒக்காந்துருக்கு. நான் நல்லா திட்டிட்டேன். பிச்ச வேணும்னா கேட்டு வாங்கனும். பொய் சொல்லக்கூடாது. அந்த பொம்பளய தூக்குறப்ப ஒரே நாத்தம். அவங்க குளிக்கவே மாட்டாங்க. கண்டதையும் திம்பாங்க". என்று சொல்லிக்கொண்டே விர்ரென்று அவங்க வீட்டுக்கு கிளம்பி போய் விட்டார்.

நான் அப்படியே விக்கித்துப்போய் உட்கார்ந்திருந்தேன். வீட்டுக்குப்போயாவது என் மீது உள்ள கோபம் தீர்ந்திருக்குமா என்று தெரியவில்லை.
This entry was posted on 11/04/2009 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

3 comments:

On November 4, 2009 at 8:03 PM , ப்ரியமுடன் வசந்த் said...

ம்ம்..என்ன செய்ய? கோபத்தை அடக்கிகிட்டுத்தான் போக வேண்டியிருக்கு...

 
On November 4, 2009 at 8:23 PM , Raghav said...

ம்.. எனக்குத் தெரிந்தவரை.. மனிதர்களுக்குள் வேறுபாடு உண்டு.. ஆனால் அவை பிறப்பினால் அல்ல.. குணத்தினால் மட்டுமே.

சிலர் துர்பிரச்சாரம் செய்வதைப்போல் முகத்தில் பிறந்தவர்கள் உயர்வு, காலில் பிறந்தவர்கள் தாழ்வு என்பதெல்லாம் சுத்தப் பேத்தல்.. ஒரே உடலில் எப்படி உயர்வு தாழ்வு இருக்க முடியும்.

 
On November 6, 2009 at 5:44 PM , ஜெயந்தி said...

தங்கள் வருகைக்கு நன்றி பிரியமுடன் வசந்த்!

நீங்கள் சொல்வது சரிதான்.

நன்றி ராகவ்!
நீங்கள் சொல்வது போல் ஒரே உடலில் உயர்வு தாழ்வு பார்த்தால் மரணத்தைநோக்கித்தான் போக வேண்டும். நமது சமுதாயமும் அப்படித்தான் போய்க்கொண்டிருக்கிறது.